சோழர் குல வரலாறு

இடைக்காலச் சோழர் குல கால வரலாற்றில் விஜயாலய சோழன் முதல் முதலாம் ராஜ ராஜ சோழன் வரையில் உள்ள காலத்தின் (கி.பி 848 முதல் கி.பி 1014  வரை) வரலாறு

 சோழ மன்னர்கள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறி மாறிப் புனைந்து கொள்வது வழக்கம். பரகேசரி விஜயாலயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் ராஜகேசரி ஆதித்த சோழன் பட்டத்துக்கு வந்தான். அவன் தந்தைக்குத் தகுந்த தனயனாக விளங்கினான். முதலில் அவன் பல்லவர் கட்சியில் நின்று பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ ராஜ்யத்தை நிலைப்படுத்திக் கொண்டான். பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர் தொடுத்தான். யானை மீது அம்பாரியில் இருந்து போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து அவனைக் கொன்று தொண்டை மண்டலத்தை வசப்படுத்தினான். பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது. ஆதித்தன் சிறந்த சிவபக்தன். காவிரி ஆறு உற்பத்தியாகும் ஸஹ்ய மலையிலிருந்து அப்புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான்.

இராஜகேசரி ஆதித்த சோழனுக்குப் பிறகு பரகேசரி பராந்தகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பத்தாறு ஆண்டு காலம் அரசு புரிந்தான். இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் சோழ வம்சத்தில் மாபெரும் மன்னன் பராந்தகன்தான். வீரநாராயணன், பண்டிதவத்சலன், குஞ்சரமல்லன், சூரசிகாமணி என்பன போன்ற பல பட்டப் பெயர்கள் அவனுக்கு உண்டு. "மதுரையும் ஈழமும் கொண்டவன்" என்ற பட்டமும் உண்டு. இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணாநதி வரையில் பரவியது. ஈழ நாட்டிலும் சிறிது காலம் புலிக்கொடி பறந்தது. தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து புகழ்பெற்ற பராந்தகனும் இவனேதான். இவனுடைய ஆட்சியின் இறுதி நாட்களில் சோழ சாம்ராஜ்யத்துக்குச் சில பேரபாயங்கள் வந்தன. அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை ஒடுக்க முனைந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்திக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. இவர்களில் வீராதி வீரனாக விளங்கியவன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்யன் என்பவன். வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். தன் தந்தையின் பெயர் விளங்கும்படி வீரநாராயண ஏரி எடுத்தான். அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் இராஷ்டிரகூடப் படைகளுக்கும் பயங்கரமான பெரும் போர் நடந்தது. இந்தப் போரில் எதிரிப் படைகளை அதாஹதம் செய்து தன் வீரப் புகழை நிலைநாட்டிய பிறகு, இராஜாதித்யன் போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சொர்க்கம் அடைந்தான். இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால், இவனை "ஆனைமேல் துஞ்சிய தேவன்" என்று கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப் புகழ்கின்றன.

இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால், அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழ சிம்மாசனம் ஏறியிருக்க வேண்டும். இவனுடைய சந்ததிகளே இவனுக்குப் பின்னர் முறையாகப் பட்டத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்துவிடவே, இவனுடைய இளைய சகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி இராஜகேசரி பட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார்.

கண்டராதித்த தேவர் சிம்மாசனத்திலிருந்து பெயரளவில் அரசு புரிந்தபோதிலும், உண்மையில் அவருடைய இளைய சகோதரனாகிய அரிஞ்சயன் தான் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்து வந்தான். இராஜாதித்யனுக்குத் துணையாக அரிஞ்சயன் திருநாவலூர் முதலிய இடங்களில் சைன்யங்களுடன் தங்கியிருந்தான். இராஷ்டிரகூடர்களுடன் வீரப் போர் நடத்தினான். தக்கோலத்தில் சோழ சைன்யத்துக்கு நேர்ந்த பெருந்தோல்வியை விரைவிலேயே வெற்றியாக மாற்றிக் கொண்டான். இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தினான். எனவே, இராஜகேசரி கண்டராதித்த சோழர் தம் தம்பி அரிஞ்சயனுக்கு யுவராஜ பட்டம் சூட்டி, அவனே தமக்குப் பின் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்றும் நாடறியத் தெரிவித்து விட்டார்.

இவ்விதம் கண்டராதித்தர் முடிவு செய்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகி விட்டாள். பிறகு வெகு காலம் கண்டராதித்தர் மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இவருடைய தம்பி அரிஞ்சயனுக்கோ அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வன் இருந்தான். பாட்டனாரின் பராந்தகன் என்னும் பெயரையும், மக்கள் அளித்த சுந்தர சோழன் என்னும் காரணப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தான். எனவே, தமக்குப் பிறகு தமது சகோதரன் அரிஞ்சயனும் அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் சுந்தர சோழனும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று கண்டராதித்தர் திருவுளங்கொண்டார். இந்த ஏற்பாட்டிற்குச் சாமந்த கணத்தினர், தண்டநாயகர்கள் பொது ஜனப் பிரதிநிதிகள் எல்லாருடைய சம்மதத்தையும் ஒருமனதாகப் பெற்றுப் பகிரங்கமாக உலகறியத் தெரிவித்தும் விட்டார்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்டராதித்தரின் வாழ்க்கையில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. மழவரையன் என்னும் சிற்றரசன் திருமகளை அவர் சந்திக்கும்படி நேர்ந்தது. அந்த மங்கையர் திலகத்தின் அழகும் அடக்கமும் சீலமும் சிவபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிர்ந்த பிராயத்தில் அந்தப் பெண்மணியை மணந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் விளைவாக உரிய காலத்தில் ஒரு குழந்தையும் உதித்தது. அதற்கு மதுராந்தகன் என்று பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஆனால் அரசர், அரசி இருவருமே இராஜ்யம் சம்பந்தமாக முன்னம் செய்திருந்த ஏற்பாட்டை மாற்ற விரும்பவில்லை. தம்பதிகள் இருவரும் சிவபக்தியிலும், விரக்தி மார்க்கத்திலும் ஈடுபட்டவர்களாதலால் தங்கள் அருமைப் புதல்வனையும் அந்த மார்க்கத்திலேயே வளர்க்க விரும்பினார்கள். கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால், அந்தச் சிவலோக சாம்ராஜ்யத்துக்கு உரியவனாக மதுராந்தகனை வளர்க்க ஆசைப்பட்டார்கள். ஆகையால் கண்டராதித்தர் தமக்குப் பிறகு தம் சகோதரன் அரிஞ்சயனும் அவனுடைய சந்ததிகளுமே சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியவர்கள் என்ற தமது விருப்பத்தைப் பகிரங்கப்படுத்தி நிலைநாட்டினார். எனவே, இராஜாதித்தன், கண்டராதித்தர் என்னும் இரு உரிமையாளர் வம்சத்தைத் தாண்டி அரிஞ்சயன் வம்சத்தாருக்குச் சோழ சிங்காதனம்உரிமையாயிற்று. கண்டராதித்தருக்குப் பிறகு பரகேசரி அரிஞ்சயன் ஒரு வருஷத்திலேயே தமையனாரைப் பின் தொடர்ந்து தம்பியும் கைலாச பதவிக்குச் சென்று விட்டான்.

பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு நாட்டாரும் சிற்றரசர்களும் பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து முடிசூட்டி மகிழ்ந்தார்கள். இராஜகேசரி சுந்தர சோழரும் அதிர்ஷ்டவசத்தினால் தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் பல வீரப் போர்கள் புரிந்து பாண்டிய நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் மீண்டும் வென்றார். இராஷ்டிரக்கூடப் படைகளைத் தென்பெண்ணைக் கரையிலிருந்து விரட்டி அடித்தார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும் அருள்மொழிவர்மரும் தந்தையை மிஞ்சக்கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறுபிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள்.

(மேற்குறிப்பிட்ட வரிகள் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலிலிருந்து)

சோழர் குல வரலாறு
விஜயாலய சோழ வம்சம்








சோழப் பேரரசு வரைபடம் (சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்-கி.பி.1050)