Sunday, November 11, 2012

13. பள்ளிப்படைக் கோயில்





பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற் கோயில்' என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது 'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.

குடந்தை நகருக்கு அரைக்காதம் வடமேற்கில் மண்ணியாற்றுக்கு வடகரையில் திருப்புறம்பயம் என்னும் கிராமத்துக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்தது. இது அந்தப் பிரதேசத்தில் நடந்த ஒரு மாபெரும் போரில் உயிர் நீத்த கங்க மன்னன் பிரிதிவீபதியின் ஞாபகமாக எடுத்தது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை முக்கியம் வாய்ந்தது.

பழையாறைச் சோழ மன்னர்களில் விஜயாலய சோழர் என்பவர் இணையில்லா வீரப்புகழ் பெற்றவர். இவர் பற்பல யுத்த களங்களில் முன்னணியில் நின்று போர் செய்து உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை அடைந்தவர். விஜயாலய சோழர் முதுமைப் பிராயத்தை அடைந்த சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழ நாட்டில் நடைபெற்றன, நடுவில் அகப்பட்டுக் கொள்ளும் சோழ நாடு அவதிப்பட்டது. எனினும் இப்போர்களை விஜயாலய சோழர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது. பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். சோழரும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தார். பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது.எனினும், இம்முறை பாண்டியன் வெற்றி பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும். ஆகையால், பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்ந்திருந்தார்.

கங்க மன்னன் பிரதிவீபதி போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு, தன் புகழுடம்பை அப்போர்க்களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான். அத்தகைய வீரனுடைய ஞாபகார்த்தமாக அப்போர்களத்தில் வீரக் கல் நாட்டினார்கள். பிறகு பள்ளிப்படைக் கோயிலும் எடுத்தார்கள்.  கொடூரமான பயங்கர யுத்தம் நடந்த ரணகளம் சில காலம் புல் பூண்டுகள் முளையாமல் கிடந்தது. அந்தப் பக்கம் மக்கள் போவதேயில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அங்கே காடு மண்ட ஆரம்பித்தது. பள்ளிப்படைக் கோவிலைச் சுற்றிக் காடு அடர்ந்தது, புதர்களில் நரிகள் குடிபுகுந்தன. இருண்ட மரக்கிளைகளில் ஆந்தைகளும் கோட்டான்களும் வாசம் செய்தன. நாளடைவில் அப்பள்ளிப்படைக் கோயிலுக்கு யாரும் போவதை நிறுத்தி விட்டார்கள். எனவே, கோயிலும் நாளுக்கு நாள் தகர்ந்து போய்  பாழடைந்து கிடந்தது.

இத்தகைய பாழடைந்த பள்ளிப்படைக் கோயிலுக்கு இருட்டுகிற நேரத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்தான். பள்ளிப்படைக் கோயில் மண்டபத்தின் மீது தாவி ஏறினான். மண்டபத்தின் மீது கவிந்திருந்த மரக்கிளையின் மறைவில் உட்கார்ந்து கொண்டான். நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் அடர்த்தியான இருளைக் கிழித்துக் கொண்டு பார்க்கும் சக்தியைப் பெற்றிருந்தன. அவனுடைய செவிகளும் அவ்வாறே மிக மெல்லிய இசையையும் கேட்கக்கூடிய கூர்மை பெற்றிருந்தன.

ஆ! அதோ சிறிது வெளிச்சம் தெரிகிறது! சுளுந்து கொளுத்திப் பிடித்துக் கொண்டு இரண்டு பேர் வருகிறார்கள்.  வந்தவர்கள் இருவரும் பள்ளிப்படையைத் தாண்டிக் கொண்டு சிறிது அப்பால் போனார்கள். அடர்ந்த காட்டுக்கு மத்தியில் சிறிது இடைவெளி இருந்த இடத்தில் நின்றார்கள். ஒருவன் உட்கார்ந்து கொண்டான்; கையில் சுளுந்து வைத்திருந்தவன் சுற்றும்முற்றும் பார்த்து கொண்டிருந்தான். யாருடைய வரவையோ அவன் எதிர்பார்த்தான் என்பதில் சந்தேகமில்லை.சற்று நேரத்துக்கெல்லாம் இன்னும் இரண்டு பேர் வந்தார்கள்.

முதலில் வந்தவர்களும் பின்னால் வந்தவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு இன்னும் இரண்டு பேர் வந்தார்கள்; முன்னால் வந்தவர்களும் கடைசியில் வந்தவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். கடைசியாக வந்தவர்களில் ஒருவன் கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வெளிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன.

கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப் போல் சிரித்து, "நண்பர்களே! சோழ நாட்டுப் பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலைவைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தான்.

"ரவிதாஸரே! இரைச்சல் போட வேண்டாம்; கொஞ்சம் மெதுவாகப் பேசலாம்" என்றான் ஒருவன்.

பிறகு அவர்கள் மெல்லப் பேசத் தொடங்கினார்கள். ஆழ்வார்க்கடியானுக்கு அவர்களுடைய பேச்சைக் கேட்டறியாமல் மண்டபத்தின் பேரில் உட்கார்ந்து இருப்பது வீண் என்று தோன்றியது. மண்டபத்திலிருந்து இறங்கி கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் நின்று ஒட்டுக் கேட்டே தீர வேண்டும். அதனால் விளையும் அபாயத்தையும் சமாளித்துக் கொள்ள வேண்டும் - இவ்விதம் எண்ணி ஆழ்வார்க்கடியான் மண்டபத்திலிருந்து இறங்க முயன்றபோது மரக்கிளைகளில் அவன் உடம்பு உராய்ந்ததால் சலசலப்புச் சத்தம் உண்டாயிற்று.

பேசிக் கொண்டிருந்த மனிதர்களில் இருவர் சட்டென்று குதித்து எழுந்து "யார் அங்கே" என்று கர்ஜித்தார்கள்.

ஆழ்வார்க்கடியானுடைய இதய துடிப்பு சிறிது நேரம் நின்று போயிற்று. அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடினாலும் காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்கத்தானே செய்யும்! அவர்கள் வந்து தன்னைப் பிடித்து விடலாம் அல்லவா? அச்சமயத்தில், கோட்டான் ஒன்று சப்பட்டையை விரித்து உயர்த்தி அடித்துக் கொண்டதுடன் "ஊம் ஊம்" என்று உறுமியது.