Sunday, November 11, 2012

15. பழுவூர் இளைய ராணி





வந்தியத்தேவன் காவேரி கரையோடு வந்து திருவையாற்றை அடைந்தான். அந்த ஊரின் வளமும் அழகும் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.  இந்த தருணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. மேற்குத் திசையிலிருந்து காவேரிக் கரையோடு ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்குக்கு முன்னாலும் பின்னாலும் சில காவல் வீரர்களும் வந்தார்கள். வந்தியத்தேவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பல்லக்கு அருகில் வருகிற வரையில் அங்கேயே நின்று காத்துக் கொண்டிருந்தான்; அவன் நினைத்தபடியே பல்லக்கை மூடியிருந்த வெளித்திரையில் பனை மரத்தின் இலச்சினைச் சித்திரம் காணப்பட்டது. ஆஹா! கடம்பூரிலிருந்து வருகிற பல்லக்குத்தான் இது! நாம் குடந்தை வழியாக வர, இவர்கள் வேறொரு வழியில் வந்திருக்கிறார்கள்! ஆனால் பழுவேட்டரையரைக் காணோம்! அவர் வேறு எங்கேயாவது வழியில் தங்கிவிட்டார் போலும்.  பல்லக்கு தஞ்சாவூர் இருந்த தென்திசை நோக்கித் திரும்பியது. அவ்வளவுதான், வந்தியத்தேவன் அந்தப் பல்லக்கைப் பின் தொடர்ந்து செல்லத் தீர்மானித்தான்.

என்ன நோக்கத்துடன் அப்படித் தீர்மானித்தான் என்று அச்சமயம் அவனுக்கே தெரிந்திருக்கவில்லை. பல்லக்கில் வீற்றிருப்பது மதுராந்தகத் தேவர் என்று மட்டும் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்தது. பல்லக்கைத் தொடர்ந்து கொஞ்சம் போனால், ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படலாம். பல்லக்கை சுமப்பவர்கள் அதைக் கீழே வைக்கலாம் ஏதேனும் ஒரு காரணத்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா? அதிலும் இராஜாங்கக் காரியங்களில்?

எனவே, பல்லக்கையும் பரிவாரங்களையும் முன்னால் போக விட்டுச் சற்றுப் பின்னாலேயே வந்தியத்தேவன் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டவில்லை. காவேரிக்கும் தஞ்சாவூருக்கும் மத்தியிலிருந்து மற்றும் நாலு நதிகளைக் கடந்தாகிவிட்டது. அப்படியும் பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை; ஒரே மூச்சாகப் போய்க் கொண்டிருந்தது. அதோ சற்றுத் தூரத்தில் தஞ்சாவூர்க் கோட்டை மதிலும் வாசலும் தெரியத் தொடங்கிவிட்டன. கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம் அவன் எண்ணம் கைகூடப் போவதில்லை. அதற்குள் தைரியமாகவும் துணிச்சலாகவும் ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும்.

இதற்கு என்ன வழி என்று அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பல்லக்கோடு சென்ற பரிவாரங்களில் ஒருவன், சற்றுப் பின்தங்கி வந்தியத்தேவனை உற்றுநோக்கினான்.

"நீ யார் அப்பா! திருவையாற்றிலிருந்து எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டான்.

"நான் உங்களைத் தொடர்ந்து வரவில்லை ஐயா! தஞ்சாவூருக்குப் போகிறேன்! இந்தச் சாலைதானே தஞ்சாவூர் போகிறது!" என்றான் வந்தியத்தேவன்.

இப்படிப் பேசிக் கொண்டே வந்தியத்தேவன் பல்லக்கின் அருகில் வந்து விட்டான். உடனே அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும் புலப்பட்டு விட்டது. குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின் தண்டைத் தூக்கியவர்களின் பேரில் விட்டடித்தான். அவர்கள் பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.

வந்தியத்தேவன் உடனே, "மஹாராஜா! மஹாராஜா! பல்லக்குத் தூக்கும் ஆள்கள் என் குதிரையை இடிக்கிறார்கள்! ஐயோ! ஐயோ!" என்று கத்தினான். பல்லக்கை மூடியிருந்த திரை சலசலத்தது.

முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை - பனை மரச் சின்னம் உடைய துணித் திரை - விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக் கையும் தெரிந்தது. வந்தியத்தேவன் இனி, தான் குதிரை மேலிருப்பது தகாது என்று எண்ணி ஒரு நொடியில் கீழே குதித்தான்.

சிவிகையின் அருகில் ஓடி வந்து, "இளவரசே! இளவரசே! பல்லக்குச் சுமக்கும் ஆட்கள்..." என்று சொல்லிக் கொண்டே அண்ணாந்து பார்த்தான்.

மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது.

"இல்லை, இல்லை! தாங்கள்.. பழுவூர் இழவரசி!.. பளுவூர் இரவளசி... உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!..." என்று உளறிக் கொட்டினான்.

இதெல்லாம் கண் மூடித் திறக்கும் நேரத்துக்குள் நடந்தது. பல்லக்கின் முன்னும் பின்னும் சென்ற வேல் வீரர்கள் ஓடி வந்து, வல்லவரையனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள் என்பது வல்லவரையனுக்கும் தெரிந்தது. அவனுடைய கையும் இயல்பாக உறைவாளிடம் சென்றது. ஆனால் கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில் ஒளிர்ந்த மோகனாங்கியின் சந்திர பிம்ப வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை!

ஆம்; வல்லவரையன் எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்போது அப்பல்லக்கில் அவன் கண்டது ஒரு நிஜமான பெண்ணின் வடிவந்தான்! பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண்! பார்த்தவர்களைப் பைத்தியமாக அடிக்கக்கூடிய இத்தகைய பெண்ணழகு இவ்வுலகில் இருக்கக்கூடும் என்று வந்தியத்தேவன் எண்ணியதே இல்லை! நல்லவேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று அசைந்தது. அதிசயமான ஓர் எண்ணம் அவன் உள்ளத்தில் உதயமாயிற்று. அதை உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான்.

ஒரு பெருமுயற்சி செய்து, தொண்டையைக் கனைத்து, நாவிற்குப் பேசும் சக்தியை வரவழைத்துக் கொண்டு, "மன்னிக்க வேண்டும்! தாங்கள் பழுவூர் இளையராணிதானே! தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இத்தனை தூரம் வந்தேன்!" என்றான்.

பழுவூர் இளையராணியின் பால் வடியும் முகத்தில் இளநகை அரும்பியது. அந்தப் புன்முறுவலின் காந்தி நமது இளம் வீரனைத் திக்குமுக்காடித் திணறச் செய்தது. அவனருகில் வந்து நின்ற வீரர்கள் தங்கள் எஜமானியின் கட்டளைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்ததாகத் தோன்றியது. அந்தப் பெண்ணரசி கையினால் ஒரு சமிக்ஞை செய்யவே, அவர்கள் உடனே அகன்று போய்ச் சற்றுத் தூரத்தில் விலகி நின்றார்கள். இரண்டு வீரர்கள் பல்லக்கின் மீது மோதிக் கொண்டு நின்ற குதிரையைப் பிடித்துக் கொண்டார்கள்.

பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தேவனை நோக்கினாள்.

வந்தியத்தேவனுடைய நெஞ்சில் இரண்டு கூரிய வேல் முனைகள் பாய்ந்தன!

"ஆமாம்; நான் பழுவூர் இளைய ராணிதான்!" என்றாள் அப்பெண்மணி. "சற்று முன்னால் நீ என்ன சொன்னாய்? ஏதோ முறையிட்டாயே? சிவிகை சுமக்கும் ஆட்களைப் பற்றி?"

காசிப்பட்டின் மென்மையும், கள்ளின் போதையும், காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும் ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா?.. அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே!

"பல்லக்கைக் கொண்டு வந்து அவர்கள் உன் குதிரை மீது மோதினார்கள் என்றா சொன்னாய்?"...

பழுவூர் ராணியின் பவள இதழ்களில் தவழ்ந்த பரிகாசப் புன்னகை, அந்த வேடிக்கையை அவள் நன்கு ரசித்ததாகக் காட்டியது. இதனால் வந்தியத்தேவன் சிறிது துணிச்சல் அடைந்தான்.

"ஆம், மகாராணி! இவர்கள் அப்படித் தான் செய்தார்கள்! என் குதிரை மிரண்டு விட்டது!" என்றான்.

"நீயும் மிரண்டு போய்த்தானிருக்கிறாய்! துர்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு! பயம் வெளியட்டும்!"

இதற்குள் வந்தியத்தேவனுடைய பயம் நன்கு வெளிந்து விட்டது; அவனுக்குச் சிரிப்புச் கூட வந்து விட்டது.

பழுவூர் ராணியின் முகபாவம் இப்போது மாறிவிட்டது; குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று.

"வேடிக்கை அப்புறம் இருக்கட்டும்; உண்மையைச் சொல்! எதற்காகப் பல்லக்கின் மேல் குதிரையைக் கொண்டு வந்து மோதி நிறுத்தினாய்?"

இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லாவிட்டால்...? நல்லவேளையாக, ஏற்கெனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாகியிருந்தது.

சற்றுத் தணிந்த குரலில், பிறர் கேட்கக் கூடாது என்று வேண்டுமென்றே தணித்த அந்தரங்கம் பேசும் குரலில், "தேவி! நந்தினி தேவி! ஆழ்வார்க்கடியார்...அவர் தான், திருமலையப்பர்... தங்களைச் சந்திக்கும்படி சொன்னார். அதற்காகவே இந்தச் சூழ்ச்சி செய்தேன்; மன்னிக்க வேண்டும்!" என்றான்.

இவ்விதம் சொல்லிக் கொண்டே பழுவூர் ராணியின் முகத்தை வந்தியத்தேவன் கூர்ந்து கவனித்தான். தன்னுடைய மறுமொழியினால் என்ன பயன் விளையப் போகிறதோ என்னும் ஆவலுடன் பார்த்தான். கனி மரத்தின் மேல் கல் எரிவது போன்ற காரியந்தான். கனி விழுமா? காய் விழுமா? எறிந்த கல் திரும்பி விழுமா? அல்லது எதிர்பாராத இடி ஏதாவது விழுமா? பழுவூர் ராணியின் கரிய புருவங்கள் சிறிது மேலே சென்றன.கண்களில் வியப்பும் ஐயமும் தோன்றின. மறுகணத்தில் அந்தப் பெண்ணரசி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

"சரி; நடுச்சாலையில் நின்று பேசுவது உசிதம் அல்ல; நாளைக்கு நம் அரண்மனைக்கு வா! எல்லா விஷயமும் அங்கே விவரமாகச் சொல்லிக் கொள்ளலாம்" என்றாள். வந்தியத்தேவனுடைய உள்ளம் பூரித்தது. நினைத்த காரியம் வெற்றி பெற்றுவிடும் போல காண்கிறது! ஆனால், முக்கால் கிணறு தாண்டிப் பயனில்லை; மற்றக் காற்பங்குக் கிணற்றையும் தாண்டியாக வேண்டும்.

"தேவி! தேவி! கோட்டைக்குள் என்னை விட மாட்டார்களே! அரண்மனைக்குள்ளும் விட மாட்டார்களே? என்ன செய்வது?" என்று பரபரப்புடன் சொன்னான்.

பழுவூர் ராணி உடனே பல்லக்கில் தன் அருகில் கிடந்த ஒரு பட்டுப் பையைத் திறந்து, அதற்குள்ளிருந்து ஒரு தந்த மோதிரத்தை எடுத்தாள்.

"இதை காட்டினால் கோட்டைக்குள்ளும் விடுவார்கள்; நம் அரண்மனைக்குள்ளும் விடுவார்கள்!" என்று சொல்லிக் கொண்டே கொடுத்தாள்.

வந்தியத்தேவன் அதை ஆவலுடன் வாங்கிக் கொண்டான். ஒருகணம் பனை இலச்சினை பொறித்த அந்தத் தந்த மோதிரத்தைப் பார்த்தான். மறுபடி நிமிர்ந்து ராணிக்கு வந்தனம் கூற எண்ணிய போது பல்லக்கின் திரைகள் மூடிக் கொண்டிருந்தன.

"இனியாவது என்னைப் பின் தொடர்ந்து வராதே! அபாயம் நேரும்; நின்று மெதுவாக வா!" என்று பல்லக்குத் திரைக்குள்ளிருந்து பட்டுப் போன்ற குரல் கேட்டது. பிறகு பல்லக்கு நகர்ந்தது; வீரர்கள் முன்போலவே அதன் முன்னும் பின்னும் சென்றார்கள்.

வந்தியத்தேவன் குதிரையின் தலைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சாலையோரமாக ஒதுங்கி நின்றான். பழுவூர் ஆள்களில் தன்னை அணுகி வந்து பேசியவன், இரண்டு மூன்று தடவை திரும்பித் திரும்பிப் பார்த்ததை அவனுடைய கண்கள் கவனித்து உள்மனதுக்குச் செய்தி அனுப்பின. ஆம்; அவனுடைய வெளி மனம் பல்லக்கிலிருந்த பழுவூர் ராணியின் மோகன வடிவத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இத்தனை நேரம் கண்டது, கேட்டது எல்லாம் உண்மைதானா? அல்லது ஒரு மாய மனோகரக் கனவா? இப்படியும் ஓர் அழகி, ஒரு சௌந்தரிய வடிவம், இந்தப் பூவுலகில் இருக்க முடியுமா!

அரம்பை, ஊர்வசி, மேனகை என்றெல்லாம் தேவமாதர்கள் இருப்பதாகப் புராணங்களில் சொல்வதுண்டு. அவர்களுடைய அழகு, முற்றும் துறந்த முனிவர்களின் தவத்தையும் பங்கம் செய்ததாகக் கேட்டதுண்டு. ஆனால் இந்த உலகத்தில்...பெரிய பழுவேட்டரையர் இந்த மோகினியின் காலடியில் அடிமை பூண்டு கிடப்பதாக நாடு நகரங்களில் பேசுவதெல்லாம் உண்மையாகவே இருக்கலாம். இருந்தால், அதில் வியப்பு ஒன்றும் இராது! நரை திரை மூப்புக் கண்டவரும், தேகமெல்லாம் போர்க் காயங்களுடன் கடூரமான தோற்றங் கொண்டவருமான பழுவேட்டரையர் எங்கே? சுகுமாரியும், கட்டழகியுமான இந்த இளம் மங்கை எங்கே? இவளுடைய ஒரு புன்னகையைப் பெறுவதற்காக அந்தக் கிழவர் என்ன காரியந்தான் செய்யமாட்டார்?... வெகு நேரம் சாலை ஓரத்தில் நின்று இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த பிறகு, வந்தியத்தேவன் குதிரை மேல் ஏறிக் கொண்டு மெள்ள மெள்ள அதைத் தஞ்சைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான்.  சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அடைந்தான்.