Sunday, November 11, 2012

19. "நம் விருந்தாளி"





புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள்.

அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.

"பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?" என்று கேட்டார்.

"பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார்; ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!..."

"பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக் கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக் கூடாது. சக்கரவர்த்தி! அரண்மனை வைத்தியர் தங்களுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் இந்தச் சிறு பிள்ளை தங்களிடம் ஏதோ அபாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்...."

"ஆ! இவன் காஞ்சி நகரிலிருந்து வந்த பிள்ளைதானே? ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான்; எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி? என்னுடைய நிலையைப் பற்றியா?"

வல்லவரையனுடைய மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. 'அபாய'த்தைப் பற்றித் தான் எச்சரித்ததாக ஒப்புக் கொண்டால் சந்தேகங்கள் ஏற்பட்டுத் தனக்கு அபாயம் நேருவது நிச்சயம். அந்த இக்கட்டிலிருந்து தப்ப வேண்டும். நல்லது; ஓர் உபாயம் செய்து பார்க்கலாம். இலக்கணத்தைத் துணையாகக் கொண்டு நெடிலைக் குறில் ஆக்கலாம்!

"சக்கரவர்த்திப் பெருமானே! அபாயத்தைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும்? 'அபயம்' 'அபயம்' என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன்தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப்புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள்புரிய வேண்டும். அரசர்க்கரசே! அபயம்! அபயம்! இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்!" என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.

இதைக் கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.

பிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, "தளபதி! இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான்.அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம்!" என்றார்.

"தங்கள் சித்தம் எப்படியோ, அப்படியே செய்கிறது!" என்றார் கோட்டைத் தளபதி.

"ஆ! என்னுடைய சித்தம் எப்படியோ அப்படி நீர் நடத்துவீர். ஆனால் என் கால்கள் மறுக்கின்றன. காஞ்சிக்குப் பிரயாணம் செய்வது இயலாத காரியம். அரண்மனைப் பெண்டுகளைப் போல் பல்லக்கில் ஏறித் திரைபோட்டுக் கொண்டு யாத்திரை செய்வதென்பதை நினைத்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கிறது. ஆதித்த கரிகாலனை இங்கே வந்து விட்டுப் போகும்படிதான் மறு ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்..."

"இளவரசர் இச்சமயம் காஞ்சியை விட்டு இங்கு வரலாமா? வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே!"

"பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். இளவரசன் இச்சமயம் இங்கே என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்கிறது. அது மட்டுமல்ல; ஈழ நாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவையும் உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்ய விரும்புகிறேன். காஞ்சிக்கும் நாளைய தினம் ஓலை எழுதி அனுப்பலாம். இந்தப் பிள்ளையினிடமே அந்த ஓலையையும் கொடுத்தனுப்பலாம் அல்லவா?"

"இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயே தங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைக் கொடுத்தனுப்பலாம்."

"அப்படியே செய்க. இளவரசன் வருகிற வரையிலே கூட இவன் இங்கேயே இருக்கலாம்!"

இச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், "இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது!" என்று சொன்னார்.

"தளபதி! இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனைத் தமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்!" என்றாள் மலையமான் மகள்.

"நான் கவனித்துக் கொள்கிறேன், தாயே! தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர். அப்போது அவரை அறியாமலே அவருடைய ஒரு கை மீசையைத் தொட்டு முறுக்கிற்று.

சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. "அபாயம்! அபாயம்!" என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. "அபயம்" என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் "அபாயம்" என்று விழுந்திருக்கக்கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது.

சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்த ஏவலாளர்களில் ஒருவனைப் பார்த்து, "இந்தப் பிள்ளையை நமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ! விருந்தாளி விடுதியில் வைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துப் பார்த்துக்கொள்! நான் வரும் வரையில் அங்கேயே இரு!" என்றார்.

வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தர சோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.

ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டிருப்பது என்னவோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப்பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்து விடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத்தான் வெளியேற முடியும்!

ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளையராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய் விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறி விட்டால் போதும்! ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி?

"தளபதி! இந்தத் தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பார்க்கலாம் அல்லவா?"

"தாராளமாகப் பார்க்கலாம். இதோ இவர்கள் இருவரும் உன்னோடு வந்து கோட்டைக்குள் எல்லா இடங்களையும் காட்டுவார்கள்.கோட்டைக்கு வெளியில் மட்டும் போக வேண்டாம். சாயங்காலம் கோட்டைக் கதவுகளைச் சாத்திவிடுவார்கள்! வெளியில் போய்விட்டால் திரும்பி இரவு வரமுடியாது. கோட்டைக்குள்ளே உன் விருப்பப்படி சுற்றி அலையலாம்!" -- இவ்விதம் கூறிவிட்டு இரண்டு ஆட்களைச் சின்னப் பழுவேட்டரையர் தம் அருகில் அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர் சொன்னது என்னவாயிருக்கும் என்று வந்தியத்தேவன் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டான்.