Sunday, November 11, 2012

1. ஆடித்திருநாள்



தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி (இந்நாளில் 'வீராணத்து ஏரி' ) என்று பெயர்.

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள், வெண்சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.

ஏரிக்கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.

ஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். "ஐயா! இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள்? அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை? என்று கேள்விகளை அடுக்கினான்.

"தம்பி! உனக்குத் தெரியவில்லையா, என்ன? அதோ அந்தப் படகுகளின் நடுப் படகில் ஒரு கொடி பறக்கிறதே! அதில் என்ன எழுதியிருக்கிறது, பார்!" என்றார் பெரியவர்.

"பனைமரம் போல் தோன்றுகிறது."

"பனைமரந்தான்! பனைமரக் கொடி பழுவேட்டரையர் கொடி என்று உனக்குத் தெரியாதா?"

"மகாவீரர் பழுவேட்டரையரா வருகிறார்?" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்ட குரலில் கேட்டான்.

"அப்படிதான் இருக்க வேண்டும்; பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வரமுடியும்?" என்றார் பெரியவர்.

வல்லவரையனுடைய கண்கள் அளவிலா வியப்பினால் விரிந்து படகுகள் வந்த திசையை நோக்கின. பழுவேட்டரையரைப் பற்றி வல்லவரையன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். தெற்கே ஈழநாட்டிலிருந்து வடக்கே கலிங்க நாடு வரையில் அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் என்பவர்களுடைய பெயர்கள் பிரசித்தமாயிருந்தன. உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையில் உள்ள பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப் புகழ்பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை - கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் இவை காரணமாகவும் பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புகள் எல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.

இப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகித்து வந்தார். அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி; தான்யாதிகாரி; தனபண்டாரமும் தான்ய பண்டாரமும் அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி இறை விதித்து வசூலிக்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், "இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்?" என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாகச் சோழ சாம்ராஜ்யத்தில் இப்போது வலிமை மிக்கவர் பழுவேட்டரையர்தான்.

அத்தகைய மகா வீரரும் அளவிலா வலிமையும் அதிகாரமும் படைத்தவருமான, பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் பொங்கியது. ஆனால் அதே சமயத்தில், காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் தன்னிடம் அந்தரங்கமாகச் சொன்ன செய்தி அவனுக்கு நினைவு வந்தது.

"வந்தியத்தேவா! நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது! நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது!"

சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசரும் வடதிசைச் சைன்யத்தின் மகாதண்ட நாயகருமான ஆதித்த கரிகாலர் இவ்விதம் சொல்லியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் நடந்து கொள்ள வேண்டியவிதங்களைப் பற்றியும் படித்துப் படித்துக் கூறியிருந்தார். இவையெல்லாம் நினைவு வரவே, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வல்லவரையன் அடக்கிக் கொண்டான். குதிரையைத் தட்டிவிட்டு வேகமாகச் செல்ல முயன்றான். என்ன தட்டி விட்டாலும் களைப்புற்றிருந்த அந்தக் குதிரை மெதுவாகவே சென்றது. இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கிவிட்டு நாளைக் காலையில் புறப்படும்போது வேறு நல்ல குதிரை சம்பாதித்துக் கொண்டே கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.