Sunday, November 11, 2012

22. மந்திரவாதி





தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.

நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, "தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு, இங்கே வருவார். வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?" என்று வினவினாள்.

"அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார்; அது உண்மைதானா?" என்று வல்லவரையன் கேட்டான்.

"அதைப் பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?"

"பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?"

நந்தினி சிரித்துவிட்டு, "ஒரு விதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில், ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன்பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!"

"அப்படியானால் சரி! ஆழ்வார்க்கடியார் தங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தி கிருஷ்ணபகவான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்தகோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்!"

நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். "ஆகா! இன்னும் அவருக்கு அந்தச் சபலம் நீங்கவில்லை போலிருக்கிறது! நீ அவரைப் பார்த்தால் எனக்காக இதைச் சொல்லி விடு. என்னை அடியோடு மறந்து விடச் சொல்லு! ஆண்டாளைப் போல் பரமபக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு!

"ஐயா, உம்முடைய பெயர் என்னவென்று இன்னமும் சொல்லவில்லையே!"

"என் சொந்தப் பெயர் வந்தியத்தேவன்; பட்டப்பெயர் வல்லவரையன். ஆழ்வார்க்கடியாரைப் பார்த்துத் தங்கள் மறுமொழியைச் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன சொல்லட்டும்?"

"அவருக்கு 'நந்தினி' என்று ஒரு சகோதரி இருந்தாள்' என்பதை அடியோடு மறந்து விடும்படி சொல்லும்!"

இத்தனை நேரமும் ஒய்யாரமாகப் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த நந்தினி திடீரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை ஒப்புக் கொள்வீரா?" என்று கேட்டாள்.

"சொல்லுங்கள், அம்மணி!"

"நீரும் நானும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். நீர் எனக்கு உதவி செய்ய வேண்டியது. நான் உமக்கு உதவி செய்ய வேண்டியது. என்ன சொல்கிறீர்!"

"அம்மணி! தாங்கள் சோழ மகாராஜ்யத்தில் சர்வ சக்தி வாய்ந்த தனாதிகாரியின் ராணி. நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். நானோ ஒருவிதச் செல்வாக்கும் இல்லாதவன். தங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்ய முடியும்?" என்றான்.

அவன் உள்ளத்திலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று தெரிந்து கொள்ள விரும்பிய நந்தினி தன் கூரிய விழிகளை அவன் மீது செலுத்தினாள்.

வந்தியத்தேவன் அதற்குச் சிறிதும் கலங்காமல் நின்றான்.

"எனக்கு அந்தரங்கமான பணி ஆள் ஒருவர் தேவையாயிருக்கிறது. இந்த அரண்மனையில் உமக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், ஒப்புக் கொள்வீரா?" என்று கேட்டாள்.

"இதே மாதிரி சேவையை இன்னொரு மாதரசிக்குச் செய்வதாக ஏற்கெனவே ஒப்புக் கொண்டு விட்டேன். அவள் வேண்டாமென்று நிராகரித்தால் தங்களிடம் வருகிறேன்."

"அது யார் அவள், என்னோடு போட்டிக்கு வருகிறவள்?"

"இளையபிராட்டி குந்தவை தேவி தான்."

"பொய்! பொய்! அப்படி ஒரு நாளும் இருக்க முடியாது! என்னை வேடிக்கை செய்யப் பார்க்கிறீர்...!"

வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் குந்தவைக்குக் கொடுத்த ஓலையை எடுத்து நீட்டினான்.

நந்தினி ஓலையை விளக்கினடியில் பிடித்துக் கொண்டு படித்தாள். படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வெளிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது; அவனையறியாமல் அவன் உடம்பு நடுங்கியது.

நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து, "ஐயா! நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா?" என்று கேட்டாள்.

"ஆம் அம்மா! அதற்குத்தான் தங்கள் உதவியை நாடி வந்தேன்."

"ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்து விட நான் உதவி செய்யலாகும்."

"நிபந்தனையைச் சொல்லுங்கள்!"

"இந்த ஓலைக்குக் குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ, அதை மறுபடியும் என்னிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும், சம்மதமா?"

"மிக அபாயமான நிபந்தனை போடுகிறீர்கள்!"

அச்சமயம் அருகிலுள்ள தோட்டத்திலிருந்து ஆந்தையின் கடூரமான குரல் கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை கேட்டது.

வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது. நந்தினி தோட்டத்தில் ஆந்தைக் குரல் வந்த இடத்தை நோக்கி, "நிஜ மந்திரவாதியே வந்து விட்டான்!" என்றாள்.

பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, "அவன் எனக்கு இனித் தேவையில்லை. ஆனாலும் இரண்டு வார்த்தை அவனிடம் சொல்லி அனுப்புகிறேன். ஒரு வேளை, உம்மைத் தப்பித்து விடுவதற்கும் அவன் உபயோகமாயிருக்கலாம். சற்று நேரம் நீர் அதோ அந்தப் பக்கம் போய் இருட்டில் மறைந்து நில்லும்!" என்று முன்னம் அவளுடைய தாதிப் பெண் போன திசைக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினாள்.

லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.

தோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.

இருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.

நந்தினி தன்னுடைய புஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.

மந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்தின் மீது விழுந்தது.

திருப்புறம்பியம் பள்ளிப் படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். "ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்று விடுங்கள்!" என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாசன்தான் இவன்.

"நான் இன்று வரப் போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை?"

"அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்து விட்டான். அந்த மூடப் பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்."

"இன்னும் ஒருகணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்..."

"வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லை..."

"காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகி விட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமர்த்தியமாக நடந்து கொள்ள வேண்டும்..."

"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இன்னும் பொன் வேண்டுமா? உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா?"

"பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம்? இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது..."

"இதைச் சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம்? நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்" என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். "இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக் கொண்டு போ! அவர் வரும் நேரமாகி விட்டது!" என்றாள்.

ரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்டபோது, "கொஞ்சம் பொறு! அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியில் கொண்டு போய் விட்டு விடு! அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும்! சுரங்க வழியை அவனுக்கு காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை!" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.

அங்கே ஒன்றும் தெரியவில்லை விரல்களினால் சமிக்ஞை செய்தாள்; இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.

அவளும் ரவிதாசனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.

ஆனால் வந்தியத்தேவனைக் காணவில்லை! சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை!