Sunday, November 11, 2012

28. மலையமான் ஆவேசம்





"கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது. உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது..."

"தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது?"

"இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அநுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது.......

"தாத்தா! இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன? தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல....."

"மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்."

"தாத்தா! அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்...?"

"சொல்லத்தான் வருகிறேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் - இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம். அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்..." என்று தயங்கினதைப் பார்த்து, "யார், தாத்தா? இன்னொருவன் யார்?' என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.

"உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் - மதுராந்தகத் தேவன்தான்!"

"தாத்தா! இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விட்டுச் சொல்லுங்கள்! பழுவேட்டரையர்கள் என்னதான் விரும்புகிறார்கள்? ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன? மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்?" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

"வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்!" என்றார் மிலாடுடையார்.


"தாத்தா! இப்படியெல்லாம் நாடு நகரங்களில் சிலர் பேசி வருவதாக என் காதிலும் விழுந்தது. அது வெறும் பொய் வதந்தி என்று எண்ணியிருந்தேன். நீங்கள் இவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்களே? தெரிந்து கொண்டுதான் சொல்கிறீர்களா? இப்படியும் நடக்கக்கூடுமா!" என்றான்.

"ஏன் நடக்க முடியாது? உன் பாட்டனாருக்கு முன்னால் உன் பெரிய பாட்டனார் கண்டராதித்த தேவர்தானே சோழ நாட்டை ஆண்டார்! அவருடைய குமாரனுக்கு உங்களைக் காட்டிலும் அதிக உரிமை இந்த ராஜ்யத்தில் உண்டல்லவா?" என்றார் மலையமான் மிலாடுடையார்.

"இல்லவே இல்லை! அந்த முழு அசடன், நாலு வார்த்தை பேசத் தெரியாதவன், கையில் வாள் எடுத்து அறியாதவன், அவனுக்கு இந்த இராஜ்யம் உரிமையா? பால் மணம் மாறாத பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்தவர், வீர பாண்டியன் தலை கொண்ட சிங்கம், தோல்வி என்பதையே அறியாத வீராதி வீரர், ஆதித்த கரிகாலருக்கு உரிமையா?' என்று சீறினான் பார்த்திபேந்திரன்.

அவனைக் கரிகாலன் அதட்டி அடக்கி விட்டு, "தாத்தா! எனக்கு இந்த இராஜ்யம் ஒரு பொருட்டு அல்ல. வேண்டுமானால் என் கை வாளின் உதவி கொண்டு இதைப் போன்ற பத்து இராஜ்யங்களை ஸ்தாபித்துக் கொள்வேன். ஆனால் இதில் நியாயம் எப்படி? முதலிலேயே மதுராந்தகனுக்குத்தான் இராஜ்யம் என்று சொல்லியிருந்தால் நான் குறுக்கே நின்றிருக்க மாட்டேன். நாடு அறிய, நகரம் அறிய மக்கள் எல்லாரும் அறிய எனக்குத் தான் அரசுரிமை என்று இளவரசப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, இப்போது எப்படி மாறலாம்? உங்களுக்கு இது சம்மதமாயிருக்கிறதா?" என்று கேட்டான்.

"எனக்குச் சம்மதமாயில்லை, ஒரு நாளும் நான் சம்மதிக்கப் போவதுமில்லை. நீ சம்மதித்து இராஜ்யத்தை மதுராந்தகனுக்குக் கொடுப்பதாகச் சொன்னால், முதலில் உன்னை இந்த வாளால் கண்டதுண்டமாய் வெட்டிப் போடுவேன். பிறகு உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற உன் தாயை வெட்டிப் போடுவேன். பிறகு உன் தாயைப் பெற்றவனாகிய நானும் என் கையினாலேயே வெட்டிக் கொண்டு சாவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தச் சோழ ராஜ்யம் உன்னை விட்டுப் போக விடேன்!" என்று அந்த வயோதிகர் கர்ஜித்தபோது, அவருடைய மங்கிய கண்களில் மின்னொளி வீசியது. உணர்ச்சி ஆவேசத்தில் தளர்ந்து போயிருந்த அவர் உடம்பெல்லாம் நடுங்கியது.

"அதனால்தான் முதலிலேயே நான் சொன்னேன்; -- பெரிய அபாயம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது என்று!"

"உபாயம் என்ன, தாத்தா! உபாயம் என்ன?"

"முதலில் இலங்கைக்கு நம்பிக்கையான ஆள் ஒருவனை அனுப்ப வேண்டும். அனுப்பி, அருள்மொழியை அழைத்து வரச் செய்ய வேண்டும். அவன் போர்க்களத்தை விட்டு, தன் கீழுள்ள போர் வீரர்களை விட்டு, இலேசில் வரமாட்டான். அவன் மனத்தைத் திருப்பி அழைத்து வரக்கூடிய ஆற்றல் உள்ளவன் ஒருவனை அனுப்ப வேண்டும்......"

பார்த்திபேந்திரன் முன் வந்து, "ஐயா! நீங்கள் சம்மதம் கொடுத்தால் நானே போய் அழைத்து வருகிறேன்!" என்றான்.

"அது கரிகாலன் இஷ்டம்; உன் இஷ்டம்."

"தாத்தா! இதெல்லாம் எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?"

"கடம்பூர் மாளிகை விருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதிலேயே கொஞ்சம் சந்தேகம் உண்டாயிற்று. பிறகு, அங்கு வந்துவிட்டுத் திரும்பி ஊருக்குச் சென்ற குன்றத்தூர்க் கிழாரை வழியில் சிறைப்படுத்தி என் மலைக் கோட்டைச் சிறைக்குக் கொண்டு போனேன். அவரிடமிருந்து அங்கு நடந்தவைகளையெல்லாம் தெரிந்து கொண்டேன். பார்த்திபேந்திரா! நீ நாளைக்கே இலங்கைக்குப் புறப்படுகிறாய் அல்லவா?" என்றார்.

"நண்பா! பாட்டன் சொன்னபடி நீ நாளைக்கே புறப்பட்டு இலங்கைக்குப் போ! என் சகோதரன் அருள்மொழியை எப்படியாவது வற்புறுத்தி இங்கே அழைத்து வா!"