Sunday, November 11, 2012

3. கடம்பூர் மாளிகை




"தம்பி! நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.  "ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது.."

"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன? நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்?"

"இதில் என்ன அதிசயம்? இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்."

"மெய்யாகவா?" என்று வந்தியத்தேவன் தன் வியப்பை வெளியிட்டான்.

"மெய்யாகத்தான்! அது உனக்குத் தெரியாதா, என்ன? யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம், எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்."

வந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

"தம்பி! எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.

"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்க முடியும்? இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்."

"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ!"

"எதற்காக? அங்கே யாராவது வீரசைவர் வருகிறாரா? சிவன் பெரிய தெய்வமா? திருமால் பெரிய தெய்வமா? என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா?"

"இல்லை, இல்லை சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை!

"அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்?"

"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது."

"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை, சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும், நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது."

"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்று போகவில்லையென்று சொல்லு!"

"ஒருவகையில் அழைப்பு இருக்கிறது, சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்."

"இவ்வளவுதானா? அப்படியானால் உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாத்தான் இருக்கும்!"

இருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"தம்பி! ஆனால் இப்போது எனக்கு ஒரு உதவி செய்வாயா, சொல்லு!"

"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே? "

"இது வேறு விஷயம்; ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்."

"யாரிடம்?"

"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்!"

"நம்பிகளே! என்னை யார் என்று நினைத்தீர்கள்? இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன்? தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்..."

"தம்பி! படபடப்பு வேண்டாம்! உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா! ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா!"

வந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.