Sunday, November 11, 2012

54. அநிருத்தரின் குற்றம்




காலையில் அநிருத்த பிரம்மராயர் பூஜை, புனஸ்காரம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாளிகையில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தம்மைக் காண்பதற்கு யாரார் வந்து காத்திருக்கிறார்கள் என்று சேவகனைப் பார்த்துகொண்டு வரச் செய்தார். காத்திருந்தவர்களில் ஆழ்வார்க்கடியான் ஒருவன் என்று தெரிந்ததும், அவனை உடனே கூட்டி வரும்படி ஆக்ஞாபித்தார். ஆழ்வார்க்கடியான் தன் குருநாதரின் முன்னால் விரைந்து வந்து பயபக்தி வினயத்துடன் நின்றான்.

"குருதேவரே! நேற்று மாலை இங்கு அடித்த புயல் சோழ நாட்டுக் கடற்கரை ஓரமாக அதாஹதம் செய்து விட்டிருக்கிறதாம்! தங்கள் அரண்மனை வாசலில் நாலாபுறமிருந்தும் தூதர்கள் வந்து காத்திருக்கிறார்கள். நாகைப்பட்டினத்துக்குப் பெரிய ஆபத்து என்று கேள்விப்படுகிறேன். கடல் பொங்கி வந்து நகரையே மூழ்க அடித்து விட்டதாகச் சொல்கிறார்கள்! அதைப் பற்றித் தங்களிடம் விசாரிப்பதற்கு இளையபிராட்டியே இங்கே வந்தாலும் வரக்கூடும்" என்று முடித்தான் ஆழ்வார்க்கடியான்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே அரண்மனை வாசலில் ஜயகோஷத் தொனிகள் கேட்டன. "திருமலை, நீ எப்போது ஞான திருஷ்டி பெற்றாய்? இளையபிராட்டிதான் வருகிறார் போலிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு அநிருத்தர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

அதற்குள் அதே வாசல் வழியாகக் குந்தவை தேவியும் வானதியும் உள்ளே பிரவேசித்தார்கள்.

"தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா? இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன? சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.

குந்தவை முதன்மந்திரியைப் பார்த்து, "சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா! ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்! "ஐயா! வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது!" என்றாள் இளையபிராட்டி குந்தவை.

"இதோ வந்துவிடுகிறேன், தாயே! எனக்கும் தங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது!" என்று சொல்லி விட்டு அநிருத்தர் சென்றார்.

முதன்மந்திரி தம் அரண்மனை ஆசார வாசலில் காத்திருந்தவர்களைப் பார்த்துப் பேசி அனுப்பிவிட்டு விரைவிலேயே திரும்பி வந்தார்.

"ஐயா! அந்த ஊமைத் தாயை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்களா?" என்றாள் குந்தவை.

"தாயே! அந்த மாதரசியைப் பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரிந்தது?" என்றார் அநிருத்தர்.

"ஐயா! சில தினங்களுக்கு முன்பு சக்கரவர்த்தியே என்னிடம் அந்த மாதரசியைப் பற்றிச் சொன்னார்."

"என்ன? அவள் உயிரோடிருப்பதாகச் சொன்னாரா, என்ன?"

"இல்லை, ஐயா! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னார். அவள் இறந்து போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். அதனாலேதான் அவருடைய சித்தம் கலங்கிப் போயிருக்கிறது. அந்த ஊமைத்தாய் கடலில் விழுந்து இறந்து போய்விட்டதாகத் தாங்கள் தானே தெரிந்து கொண்டு வந்து என் தந்தையிடத்தில் சொன்னீர்களாம்? பின், அந்த மாதரசி உயிரோடிருக்கும் செய்தி தங்களுக்கு எப்படித் தெரிந்தது?"

"தேவி! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அது எனக்குத் தெரிந்த விஷயந்தான்."

"என்ன? என்ன? இருபத்தைந்து வருஷங்களாகத் தெரிந்துமா என் தந்தையிடம் தாங்கள் சொல்லவில்லை? ஐயா! அவள் இறந்துவிட்டாள் என்ற எண்ணத்தினால் என் தந்தை எத்தனை மனோவேதனைக்கு உள்ளானார் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியாதா?"

"தெரியும் தாயே! தெரியும்."

"தெரிந்துமா அவரிடம் உண்மையைச் சொல்லாதிருந்தீர்கள்?"

அநிருத்தர் ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். அவர் உள்ளத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது என்பதை அவருடைய முகம் எடுத்துக்காட்டியது பின்னர் அவர் கூறினார்:


"தேவி! இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் ஒரு குற்றம் செய்தேன். முதன்முதலாக அதை இப்போது தங்களிடந்தான் சொல்லுகிறேன். கரையர் மகளைத் தேடி வரும்படி தங்கள் தந்தை என்னை அனுப்பினார் அல்லவா? விரைவாகக் குதிரை மீது செல்லும் ஆட்களுடன் நானும் போனேன். கோடிக்கரை போய்ச் சேர்ந்தோம். அங்கே கொந்தளித்துக் கொண்டிருந்த கடலில் அவள் கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து விழுந்துவிட்டாள் என்பதை அறிந்தோம். அந்தப் பயங்கரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள். தியாக விடங்கரே நடுங்கிய குரலில் நாக்குழறக் கூறினார். அதைத்தான் நானும் தஞ்சாவூருக்கு வந்து என் நண்பரிடம் தெரிவித்தேன்..."

"இதில் தங்கள் குற்றம் என்ன, ஐயா?" என்றாள் குந்தவை.

"குற்றம் இதுதான்; கரையர் மகள் கடலில் விழுந்தாளே தவிர, அதிலே முழுகிச் சாகவில்லை. அந்தக் கொந்தளித்த கடலில் படகு விட்டுக் கொண்டு வந்த வலைஞன் ஒருவன் அவளைக் கண்டெடுத்துப் படகில் ஏற்றிக் காப்பாற்றிவிட்டான். கோடிக்கரைக்கு வெகு தூரத்தில் அப்பால் அவன் வந்து கரையேறினான். திரும்பி வரும் வழியில் நான் அந்தக் கரையேறும் படகைப் பார்த்தேன். அதில் இருந்த பெண் யார் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் படகுக்காரனிடம் நிறையப் பணம் கொடுத்து அவளைப் பத்திரமாக இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்படியும் அங்கேயே இருக்கும்படியும் கூறினேன். அவனும் சம்மதித்துச் சென்றான். நான் திரும்பித் தஞ்சைக்கு வந்து கரையரின் மகள் கடலில் விழுந்து மாண்டு விட்டதாகக் கூறினேன். தங்கள் தந்தைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் மனமறிந்து அத்தகைய குற்றத்தைச் செய்தேன். அந்தக் குற்றம் இத்தனை காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு விபரீதமான விளைவை உண்டாக்குமென்று எதிர்பார்க்கவில்லை..."

இளையபிராட்டி குந்தவை அப்போது குறுக்கிட்டு, "ஐயா! தாங்கள் செய்தது குற்றமாயிருந்தாலும் என் தந்தைக்கு நன்மை செய்யும் எண்ணத்துடனேயே செய்தீர்கள். பிறகு, அக்கரையர் மகளைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டு வந்தீர்களா?" என்று கேட்டாள்.

"ஏன்? அடிக்கடி கேள்விப்பட்டுத்தான் வந்தேன். இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும், சுந்தர சோழர் மதுரைப் போர் முனைக்குப் போனார். நான் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்றேன். சில ஆண்டுகள் அங்கேயே தங்கி வேதாகம சாத்திரங்கள் பயின்றுவிட்டுத் திரும்பி வந்தேன். அப்போது பழையாறையில் ஈசான பட்டரின் தந்தை அந்தக் கரையர் மகளோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தேன். அவர் ஒரு அதிசயமான செய்தியைச் சொன்னார். அந்தக் கரையர் மகள் பெரிய பிராட்டியின் அரண்மனைத் தோட்டத்தில் வந்து சில நாள் தங்கியிருந்ததாகவும், இரட்டைக் குழந்தைகள் பெற்று அங்கேயே போட்டுவிட்டு ஓடிப் போனதாகவும் கூறினார். எப்போதாவது நினைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்ப்பதற்காக அவள் இரகசியமாக வருவதுண்டு என்றும் தெரிவித்தார். குழந்தைகள் என்ன ஆயின என்று கேட்டேன், அவர் சொல்ல மறுத்து விட்டார். அது செம்பியன் மாதேவிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று கூறினார். நானும் அதைப்பற்றி அதிகம் கிளறாமலிருப்பதுதான் நல்லது என்று சும்மா விட்டு விட்டேன் தேவி! அருள்மொழி குழந்தைப் பிராயத்தில் காவேரி நதியில் விழுந்து விட்டபோது, அவனைக் காவேரி அன்னை காப்பாற்றினாள் என்று எல்லாரும் சொல்லுவார்கள் அல்லவா? அப்படிக் காப்பாற்றியவள் உண்மையில் கரையர் மகள்தான் என்று என் மனத்தில் அச்சமயமே தோன்றியது...."

"தங்கள் உள்ளத்தில் தோன்றியது உண்மைதான், ஐயா! அருள்மொழி ஈழ நாட்டில் அந்த மாதரசியைப் பார்த்துவிட்டு வந்து அவ்வாறுதான் சொன்னான். ஐயா! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்தக் கரையர் மகள் இறந்துவிடவில்லை. உயிரோடிருக்கிறாள் என்பதைத் தந்தைக்குத் தெரிவித்துவிட்டால் அவருடைய துன்பம் தீர்ந்து மன அமைதி ஏற்பட்டு விடும்" என்றாள் இளையபிராட்டி.

"ஆம், அம்மா! நானும் அத்தகைய முடிவுக்குத்தான் வந்திருந்தேன். மந்தாகினிதேவி உயிரோடிருக்கும் விவரத்தைச் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடத் தீர்மானித்து விட்டேன். ஆனால் வெறுமனே சொன்னால் அவர் நம்ப மாட்டார். முன்னே நான் கூறியது பொய், இப்போது சொல்வதுதான் உண்மை என்று எவ்விதம் அவரை நம்பச் செய்வது? அதற்காகவே அந்தத் தேவியை இங்கே அழைத்து வரச் செய்த பிறகு சொல்ல எண்ணினேன். நேரிலே பார்த்தால் நம்பியே தீரவேண்டும் அல்லவா?" என்றார் அநிருத்தர்.

"ஐயா! அந்த மாதிரி திடீரென்று கொண்டு போய் நிறுத்தினால் தந்தைக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டாலும் நேரிடலாம். முன்னால் தெரிவித்து விட்டுத்தான் அவர்களைப் பார்க்கச் செய்யவேணும்!" என்றாள் இளையபிராட்டி.

"ஆம், ஆம் அவ்வாறுதான் செய்ய உத்தேசித்திருக்கிறேன்!" என்றார் முதன்மந்திரி.

"சக்கரவர்த்தி விரும்பினால் ஒரு முறை அருள்மொழிவர்மர் இரகசியமாகத் தஞ்சைக்கு வந்துவிட்டுத் திரும்பிப் போகலாம்!"

"ஆம், ஆம்! மந்தாகினி தேவியும் அருள்மொழியும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை ஒருமுறை கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டால்தான் சக்கரவர்த்தியின் உள்ளம் அமைதி அடையும்.