Sunday, November 11, 2012

56."சோழர் குல தெய்வம்"




"மலையமான் மகளே! இவள் யார் என்பது உனக்குத் தெரியுமா?" என்று சுந்தர சோழர் கேட்டார்.

"தெரியும், சுவாமி! இவர் என் குலதெய்வம் சோழர் குலத்துக்கே தெய்வம். என் அருமை மகன் காவேரியில் மூழ்கிப் போய் விடாமல் காப்பாற்றிக் கொடுத்த தெய்வம் அல்லவா? அருள்மொழியைக் காப்பாற்றியது மட்டும் அல்ல, சோழ நாட்டுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த தெய்வமும் இவர்தானே! தாங்கள் பூதத் தீவில் காட்டுக் கரடிக்கு இரையாகாமல் காப்பாற்றிய தெய்வம் அல்லவா?"

"கடவுளே! அதுகூட உனக்குத் தெரியுமா? இவள் இத்தனை நாள் உயிரோடு இருந்து வருகிறாள் என்பதும் தெரியுமா?"

"சில காலமாகத் தெரியும். தெரிந்தது முதல் இத்தேவியை ஈழ நாட்டிலிருந்து அழைத்து வரும்படி முதன்மந்திரியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..."

"அநிருத்தரே! இது என்ன மகாராணி சொல்லுவது? இவள் உண்மையிலேயே அந்தக் கரையர் மகள்தானா? இவள் உயிரோடு தானிருக்கிறாளா? இவள் இறந்துவிட்டாள் என்பது பொய்யா?" என்றார் சக்கரவர்த்தி சுந்தர சோழர்.

"பிரபு! இவர் கரையர் மகள் என்பது உண்மைதான். இவர் இறக்கவில்லை என்பதும் உண்மைதான். சக்கரவர்த்தி! நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை ஆனாலும் தங்கள் கருணையினால் அடியேனை மன்னிக்க வேண்டும்!"

"ஆகா! மன்னிக்க வேண்டுமாம்! சக்கரவர்த்தி என்றும், மன்னர் மன்னன் என்றும் கூறப்பட்ட ஒருவன் என்னைப் போல் ஏமாற்றப்பட்டது இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து நேர்ந்திராது. எனக்குத் தெரியாமல் ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? ஏன் முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது? முதன்மந்திரி! எனக்கு எல்லாம் விளங்குகிறது. நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்!"

"நாங்கள் சூழ்ச்சி செய்தது என்னமோ உண்மைதான். ஆனால் தங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யவில்லை. எப்படியாவது கரையர் மகளைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டுமென்று எண்ணினோம். அவள் கடலில் விழுந்து இறந்தது பற்றித் தங்கள் மனம் மிக்க வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மகாராணியின் மூலமாக அறிந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன். மகாராணியும் அவ்விதம் ஆக்ஞாபித்தார்கள். அவர் உயிரோடிருப்பதாகச் சொன்னால், தாங்கள் நம்புவது சிரமமாயிருக்கும். ஆகையால் எப்படியும் அவரை கொண்டு வந்து சேர்த்த பிற்பாடு தங்களிடம் சொல்ல எண்ணினேன். சக்கரவர்த்தி! அக்குற்றத்துக்காக மன்னிக்கப் பிரார்த்திக்கிறேன்."

"மன்னிப்பதற்கு இது ஒரு குற்றந்தானா? எவ்வளவோ இருக்கிறது! சொல்லுங்கள்! உம்முடைய முகத்திலேயே எழுதியிருக்கிறது. அவள் கடலில் விழுந்து இறந்துவிட்டதாக வந்து சொன்னீரே? அதுவே பொய்! இருபத்தைந்து வருஷங்களாக அந்தப் பொய்யை நீர் சாதித்து வந்தீர். நானும் நம்பி வந்தேன் அநிருத்தரே! உண்மையிலேயே உமது குற்றம் மிகப் பயங்கரமானது!..."

"அதற்கு நான் மட்டும் பொறுப்பாளி அல்ல, சக்கரவர்த்தி! கரையர் குல மகளும் பொறுப்பாளிதான்! அவர் கடலில் விழுந்தது என்னமோ உண்மை. பிறகு புனர் ஜன்மம் அடைந்தார். தங்களிடம் அவர் உயிரோடிருப்பதைச் சொல்ல வேண்டாமென்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார்; வாக்குறுதியைக் கொடுக்காவிடில் மறுபடியும் உயிரை விட்டு விடுவேன் என்று சொன்னார். இவையெல்லாம் உண்மையா என்பதைத் தாங்களே அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்."

"கேட்க வேண்டியதே இல்லை! அவ்விதமே இருக்கும்" என்றார் சுந்தர சோழர்.

"நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு இல்லைதான்; மன்னிப்பு நான் கோரவும் இல்லை. ஆனாலும் பல வருஷ காலமாக என் மனத்திலிருந்த பாரம் இன்றைக்கு நீங்கிவிட்டது."

"முதன்மந்திரி! நாகையிலிருந்து இளவரசனை அழைத்துவர உடனே ஏற்பாடு செய்யுங்கள்!"

"அப்படியே செய்கிறேன் ஐயா! யானைப் படைகளும் குதிரைப் படைகளும் அனுப்பிப் பகிரங்கமாக இளவரசரை அழைத்து வரச் செய்யலாமா? அல்லது..."

"மாறு வேடம் பூணச் செய்து இரகசியமாக அழைத்து வரலாமா, என்றுதானே கேட்கிறீர்? பகிரங்கமாக இளவரசன் வந்தால் சோழ நாட்டில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா?"

"நான் எண்ணுவது மட்டும் அல்ல, பிரபு! நிச்சயமாக அறிந்திருக்கிறேன்."

"சுவாமி! சோழர் குலத்துக்கு அபாயம் நெருங்கிக் கொண்டுதானிருக்கிறது. தங்களுடைய சம்மதம் பெறாத சில காரியங்களும் செய்கிறார்கள். சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பங்கு போட்டுக் காவேரிக்குத் தெற்கேயுள்ளதை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கே உள்ள பகுதியைக் கரிகாலருக்கும் கொடுத்து விடுவதென்று யோசனை செய்து வருகிறார்கள். சம்புவரையர் மாளிகையில் இன்றைய தினம் அந்தப் பேச்சு நடந்து வருகிறது. சக்கரவர்த்தி! நூறு வருஷ காலமாகத் தங்கள் முன்னோர்கள் பாடுபட்டு விஸ்தரித்த ராஜ்யத்தை விஜயாலய சோழரும் ஆதித்த சோழரும் மகாபராந்தக சக்கரவர்த்தியும் ஈழம் முதல் கோதாவரி வரையில் நிலைநாட்டிய சோழ மகாராஜ்யத்தை இரண்டாகப் பிளந்து பங்கு போடுவது தங்களுக்குச் சம்மதமா?"

"முதன்மந்திரி! ஒரு நாளும் அதற்கு நான் சம்மதம் கொடேன். இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் ஓர் அங்குல விஸ்தீரணம் கூடக் குறையாமல் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டி வைப்பேன். அதை என் மக்கள் எதிர்த்தாலும் சரி, நான் கேட்கப் போவதில்லை."

"சக்கரவர்த்தி! தங்கள் புதல்வர்கள் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதற்குத் தடை இவையெல்லாம் அல்ல. அந்தத் தடை இன்னும் பெரிய இடத்திலிருந்து வருகிறது. தாங்களும் நானும் இந்தச் சோழ நாட்டு மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தெய்வப் பெண்மணியிடமிருந்து அந்தத் தடை வருகிறது. சில நாளைக்கு முன்பு கூட அவரிடம் பேசிப் பார்த்தேன்..."

"செம்பியன் மாதேவியை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அந்த மாதரசியின் மனத்தையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள். நான் என் புதல்வர்களுக்குப் பட்டம் கட்ட ஆசைப்படுவதாக பெரிய பிராட்டி கருதி வருகிறார். முதன்மந்திரி! அவரை உடனே இங்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் அவருடைய மனதை மாற்றி விடுகிறேன்.."

"சக்கரவர்த்தி! அது அவ்வளவு சுலபம் அல்ல. மகான் கண்டராதித்தர் தமது தர்மபத்தினிக்கு அவ்விதம் கட்டளை இட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய மரண தறுவாயில் நான் அவர் அருகில் இருந்தேன். 'மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டக் கூடாது என்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது; அது என் துணைவிக்குத் தெரியும்' என்று தங்கள் பெரிய பாட்டனார் சொன்னார்..."

"முதன்மந்திரி! அப்படிப்பட்ட தடை உண்மையில் இருக்கிறதா? அது இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா?"

"தெரிந்திருந்தால், தாங்கள் கேட்கும் வரையில் காத்துக் கொண்டிருப்பேனா? பெரிய பிராட்டியை அழைத்து வரச் செய்து தாங்கள்தான் அதைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்..."

"ஆமாம்; அந்த ஒரு விஷயந்தான் எனக்கும் தொல்லை கொடுத்து வருகிறது. பெரிய பிராட்டியை உடனே அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட தடையாயிருந்தாலும் அதை நான் நிவர்த்தி செய்கிறேன்."

சுந்தர சோழர் முதன்மந்திரியைப் பார்த்து, "அநிருத்தரே! செம்பியன் மாதேவி தங்களிடம் மிக்க நம்பிக்கையும் மரியாதையும் உள்ளவர். ஆகையால் தாங்களே நேரில் சென்று பெரிய பிராட்டியை எப்படியாவது கையோடு அழைத்து வாருங்கள்! போகும்போது புயலினால் கஷ்டத்திற்குள்ளான மக்களைப் பற்றியும் கவனியுங்கள்" என்றார் சக்கரவர்த்தி.

"இல்லை, பிரபு! அதை நான் மறக்கவே இல்லை. எல்லாக் காரியங்களும் சரிவர நடைபெறும்; தாங்கள் நிம்மதியாயிருக்கலாம்" என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி விடை பெற்றுச் சென்றார்.

அன்றிரவு சுந்தர சோழர் உண்மையிலேயே இத்தனை காலமும் அனுபவியாத நிம்மதியை அடைந்திருந்தார். கரையர் குலத்து மந்தாகினி இறக்கவில்லை என்னும் செய்தி மெய்யாகவே அவருடைய நெஞ்சில் வெகு காலமாகக் குடிகொண்டிருந்த ஒரு பெரும் பாரத்தை அகற்றிவிட்டது. அருள்மொழிவர்மன் நாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்ற செய்தியும் அவருக்கு ஆறுதல் அளித்திருந்தது. சூடாமணி விஹாரம் மிகப் பலமான கட்டிடமாதலால் அதில் உள்ளவர்க்கு அபாயம் ஒன்றும் நேருவதற்கில்லை என்ற தைரியமும் அவருக்கு இருந்தது.

அன்றிரவு சுந்தர சோழ சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்கினார். கனவுகள் கூட அதிகம் காணவில்லை. அவருக்குப் பக்கத்து அறையிலே படுத்துறங்கிய அரண்மனைப் பெண்டிர்களும் நிம்மதியாகவே தூங்கினார்கள். அவர்களிலே நிம்மதியில்லாமலும் நன்றாகத் தூங்காமலும் இருந்தவள் மந்தாகினி ஒருத்திதான். இன்று நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவளுடைய மனதில் பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தன. தூங்கா விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

நள்ளிரவு கழிந்தது; பின்னிரவு தொடங்கியது. மூன்றாவது ஜாமம் ஏறக்குறைய முடியும் நேரம் ஆகிவிட்டது. அப்போது மேல் மாடத்தின் சாளரம் ஒன்றில் ஒரு தோற்றம் அவளுக்குத் தென்பட்டது. அகோர பயங்கர முகம் ஒன்று அந்தச் சாளரத்தை ஒட்டினாற் போலிருந்த அந்த அறைக்குள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்றாள். மறுபடியும் அந்தச் சாளரத்தை உற்றுப் பார்த்தாள். அங்கே அந்த முகத்தைக் காணவில்லை. பக்கத்து அறை வாசற்படி வரையில் மெள்ள நடந்து சென்று எட்டிப் பார்த்தாள். அங்கே சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்குவதைக் கண்டாள். அந்த அறையில் மேல் மாடச் சாளரங்களையும் உற்றுப் பார்த்தாள் ஒன்றும் தெரியவில்லை.