Sunday, November 11, 2012

61. கண் திறந்தது!



முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார். வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின. பழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். பொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. 'சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வெளி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.

கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப்பட்டது. அது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப்படைக் கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.

திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். இந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே! இதை எப்படித் தாண்டிச் செல்வது? உடைப்பு வெள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது. அதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான். வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது? அன்று பகல் சென்றது. இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது. தூவானமும் விட்டுவிட்டது. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது.

கடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரம் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. அக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அந்த வழியிலே விரைவாக நடந்தார்.

அது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன.

ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வெளிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வெளிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்தபடியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுந்தின் வெளிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.

அந்த வெளிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வெளிச்சம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார்.

ஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தெளிவாகக் கேட்டது.

"மந்திரவாதி! உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னை யமன் தான் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்!" என்றான் தேவராளன்.

மந்திரவாதி ரவிதாஸன் கடகட வென்று சிரித்தான். "யமன் என்னிடம் ஏன் வருகிறான்? சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளைய தினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்!" என்றான் மந்திரவாதி.

அச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.