Sunday, November 11, 2012

73. நிச்சயதார்த்தம்



நந்தவனத்து நடுவில் இருந்த குடிலில் சேந்தன் அமுதன் நோய்ப்பட்டுப் படுத்திருந்தான். பூங்குழலி அவனுக்கு அன்புடன் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். வாணி அம்மை பாகம் செய்து கொடுத்த கஞ்சியைக் கொண்டு வந்து அவனை அருந்தும்படிச் செய்தாள்.

சற்று முன்னாலேதான் வைத்தியர் வந்து சேந்தன் அமுதனைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார். போகும்போது அவரிடம் பூங்குழலி தனியாக விசாரித்தாள்.

"அமுதனுக்கு எப்படியிருக்கிறது, பிழைத்து எழுந்து விடுவானா?" என்று கேட்டாள்.

"அவன் மனத்தில் ஏதோ கவலை வைத்துக் கொண்டிருக்கிறான். அதனாலேதான் உடம்பு குணமடைவது தடைப்படுகிறது!" என்றார் வைத்தியர்.

இதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு பூங்குழலி, "அமுதா, உன் மனத்தில் என்ன கவலை? ஏன் உற்சாகமே இல்லாமலிருக்கிறாய்? உன் மனக் கவலையினால்தான் உன் உடம்பு குணப்படுவது தாமதமாகிறது என்று வைத்தியர் சொல்கிறாரே?" என்றாள்.

"என்னுடைய கவலையெல்லாம் என் உடம்பு சீக்கிரமாகக் குணமாகிவிடப் போகிறதே என்றுதான். என் உடம்பு குணமாகிவிட்டால் நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாய் அல்லவா? அதை எண்ணித்தான் கவலைப்படுகிறேன், பூங்குழலி!"

பூங்குழலியின் முகம் காலைப் பனித்துளிகளுடன் ஒளிர்ந்த மலர்ந்த செந்தாமரை போல் விளங்கியது. அவள் இதழ்களில் புன்னகை விரிந்தது. கண்களில் கண்ணீர் துளித்தது.

"அமுதா! நான் தீர்மானம் செய்து விட்டேன். உன்னுடைய அன்பு கோடி மடங்கு எனக்குப் பெரிது. உன்னையே நான் மணந்து கொள்வேன்..."

சேந்தன் அமுதன் பரவச நிலையை அடைந்தான். "பூங்குழலி! பூங்குழலி! எனக்கு இப்போது சுரம் அடிக்கவில்லையே? நான் கனவு காணவில்லையே? இப்போது நீ சொன்ன வார்த்தைகள் என் காதில் தவறாக விழவில்லையே?" என்றான்.

"அமுதா! உனக்கு உடம்பு சரியானதும் இருவரும் கோடிக்கரை செல்வோம். கோடிக்கரைக் குழகருக்குப் புஷ்பத் திருப்பணி செய்வோம். சில சமயம் படகில் ஏறிக் கடலில் செல்வோம். அமுதா! இதற்கெல்லாம் உனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லையே?"

வாசற் கதவை யாரோ இலேசாகத் தட்டும் சத்தம் கேட்டது. "அம்மா கதவைத் தட்டுகிறாள் திறந்து விடு! அம்மாவிடம் இந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொல்வோம்" என்றான் அமுதன்.

பூங்குழலி போய்க் கதவைத் திறந்தாள், வாசலில் கண்ட காட்சி அவளைச் சிறிது வியப்புறச் செய்தது.

அவள் எதிர்பார்த்தபடி கதவைத் தட்டியவள் வாணி அம்மை அல்ல. அரண்மனைச் சேவகன் ஒருவன் கதவைத் தட்டியிருக்க வேண்டுமென்று தோன்றியது. கதவு திறந்ததும், சேவகன் ஒதுங்கி நின்றான்.

அப்பால், செம்பியன் மாதேவியும், இளவரசர் மதுராந்தகரும் நின்றார்கள். இன்னும் சிறிது தூரத்துக்கு அப்பால், பல்லக்குகள் இரண்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தன. சிவிகை தூக்கிகளும், காவலர்களும் மரத்தடியில் நின்றார்கள். அவர்களில் ஒருவன் பிடித்துக் கொண்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் இவ்வளவு காட்சியையும் கண்ட பூங்குழலி செம்பியன் மாதேவியின் முன்னால் தலை வணங்கிக் கும்பிட்டு, "தாயே வரவேண்டும்!" என்றாள்.

"உன் அத்தை மகனுக்கு உடம்பு எப்படியிருக்கிறது. பூங்குழலி! வாணி அம்மை எங்கே?" என்று கேட்டுக் கொண்டே மழவரையன் மாமகளாகிய முதிய எம்பெருமாட்டி அந்தக் குடிசைக்குள்ளே பிரவேசித்தாள்.

மதுராந்தகன் வெளியிலேயே நின்றான். ஆனால் அவனுடைய குரோதம் ததும்பிய கண்கள் ஆர்வத்துடன் குடிசைக்கு உள்ளே நோக்கின. வருகிறவர் சிவபக்த சிரோமணியும், தங்களுக்கு மானியம் அளித்துக் காப்பாற்றி வருகிறவருமான செம்பியன் மாதேவி என்று அறிந்ததும் சேந்தன் அமுதனும் எழுந்தான்.

"தாயே! நல்ல சமயத்தில் வந்தீர்கள். முதன் முதல் சந்தோஷமான செய்தியைத் தங்களிடம் தெரிவித்து ஆசிபெறும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியிருக்கின்றது. சிவபெருமானுடைய திருவருளாலேயே இது நடந்திருக்க வேண்டும். இன்னும் என் அன்னையிடம் கூடச் சொல்லவில்லை. அன்னையே! இத்தனை காலம் கழித்துப் பூங்குழலி மனமிரங்கி என்னை மணம் புரிந்து கொள்ள இசைந்திருக்கிறாள் . தாங்கள்தான் கூட இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு கோடிக்கரைக் குழகர் கோயிலுக்குப் போய் அங்கே பூமாலைக் கைங்கரியம் செய்ய எண்ணியிருக்கிறோம்!" என்றான்.

செம்பியன் மாதேவியின் இதழ்களில் மகிழ்ச்சிப் புன்னகை தோன்றியது. ஆனால் கண்களிலோ கண்ணீர் ததும்பி நின்றது.

அமுதனும் பூங்குழலியும் அவர் முன்னால் வணங்கிய போது, மாதரசி தழுதழுத்த குரலில், "குழந்தைகளே! இறைவன் அருளால் உங்கள் இல்வாழ்க்கை இன்பமயமாக இருக்கட்டும்!" என்று ஆசி கூறினார்.

அந்தச் சமயம் வாணி அம்மை அங்கே வந்து சேர்ந்தாள். அவளிடம் செம்பியன் மாதேவி சமிக்ஞையினால் அமுதனுடைய உடம்பைப் பற்றி தெரிந்து கொள்ள வந்ததாகக் கூறினார். வந்த இடத்தில் அவர்களுக்குத் திருமணம் நடக்கப் போகிற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். அச்சமயம் வாணி அம்மையின் முகபாவமும் கலக்கத்தையும், களிப்பையும் ஒருங்கே காட்டுவதாயிருந்தது.

மேலும் சிறிது நேரம் சேந்தன் அமுதனுடனும், பூங்குழலியுடனும் பேசிக்கொண்டிருந்த பிறகு செம்பியன் மாதேவி வெளிக் கிளம்பினார்.

அவரும், மதுராந்தகனும் பல்லக்குகள் இரண்டும் இறக்கி வைத்திருந்த இடம் நோக்கிச் சென்றார்கள்.

வழியில் ஒரு மரத்தடியில் முதிய பிராட்டியார் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவரும் இல்லை என்பதைக் கண்ட பிறகு, மதுராந்தகனை நோக்கி, "பார்த்தாயா, மதுராந்தகா! என் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகன் அதோ அக்குடிசையில் வாழும் சேந்தன் அமுதன். அவனுக்கு ஐந்து வயதானபோதே எனக்கு இச்செய்தி தெரிந்துவிட்டது. அவன் எட்டு நாள் குழந்தையாயிருந்தபோது மூச்சுப் பேச்சற்றுக் கிடந்ததைப் பார்த்து இறந்து விட்டதாக எண்ணினேன். பிள்ளைப் பாசத்தினால் உன்னை என் குழந்தையாக ஏற்றுக் கொண்டு இவனைக் கொண்டுபோய்ப் புதைத்து விடச் சொன்னேன். இவனை எடுத்துப் போன வாணி வெகுகாலம் திரும்பி வரவே இல்லை. ஐந்து ஆண்டு கழிந்த பிறகு இவளையும், இப்பிள்ளையையும் பார்த்ததும் உண்மை தெரிந்து கொண்டேன். ஆயினும், உன்னை நான் கைவிடவில்லை. அவன் என் வயிற்றில் பிறந்த மகன் என்பதற்காக அவனை அரண்மனைக்கு வரவழைத்துக் கொள்ளவுமில்லை. எல்லாம் இறைவன் திருவிளையாடல் என்று எண்ணி உன்னை என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் பதின் மடங்கு அருமையாக வளர்த்து வந்தேன். அதற்காகவெல்லாம் எனக்கு இப்போது இந்த வரத்தை நீ கொடு! சோழ சிங்காதனம் வேண்டாம் என்று சொல்லிவிடு! நீ சிங்காதனம் ஏறுவதற்குக்கூட நான் ஆட்சேபிக்க மாட்டேன். ஆனால் உன் வம்சத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஊமையாக இருந்துவிட்டால் என்ன செய்கிறது என்றுதான் அஞ்சுகிறேன்!" என்றார்.

இவ்விதம் செம்பியன் மாதேவி கூறி வந்தபோது மதுராந்தகனுடைய முகம் பேயடித்த முகமாகக் காணப்பட்டது. அவன் மணம் செய்துகொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரின் மகளுக்கு ஒரு பெண் மகவு பிறந்திருந்தது. அதற்கு இரண்டு பிராயம் ஆகியும் இன்னும் பேசத் தொடங்கவில்லை என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது.

பிரமை பிடித்து மரத்தோடு மரமாக நின்ற மதுராந்தகனைப் பார்த்து, அவனை வளர்த்த அன்னையாகிய மாதரசி, "குழந்தாய்! ஏன் இப்படியே நின்று விட்டாய்? வா போகலாம்!" என்றாள்.

மதுராந்தகன் தட்டுத்தடுமாறி, "தாயே! யோசிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. தாங்கள் போங்கள்! என்னுடைய இடத்தில் அரண்மனையில் வளர்ந்திருக்க வேண்டிய தங்கள் குமாரனிடம் சிறிது பேசிவிட்டுப் பிறகு வருகிறேன்!" என்றான்.

"அப்படியே செய்! வரும்போது பல்லக்கின் திரைகளை நன்றாக மூடிக்கொண்டு வா! கொடும்பாளூர் வீரர்கள் உன்னைப் பார்த்து விட்டால் ஏதேனும் கூச்சல் போட்டாலும் போடுவார்கள்!" என்று சொல்லிவிட்டு அம்மாதரசி மேலே பல்லக்கை நோக்கி நடந்தார்.

மதுராந்தகனுடைய முகம் முன்னைவிடக் குரோதமும், மாற்சரியமும் நிறைந்த பயங்கர மாறுதலை அடைந்ததை அப்பெருமாட்டி கவனியாமலே அங்கிருந்து சென்று விட்டார்.