Sunday, November 11, 2012

75. "ஒரு நாள் இளவரசர்!"



ஆழ்வார்க்கடியான் தன் ஆட்களுடனே சேந்தன் அமுதனுடைய பூந்தோட்டத்தை நோக்கி நடந்தான். பூந்தோட்டத்துக்குச் சமீபத்தில் ஒரு மரத்தடியில் சற்று மறைவாக மதுராந்தகத் தேவரின் சிவிகையும், அதைத் தூக்கும் ஆட்களும் நின்றார்கள். அவர்களிடம் விசாரித்து இளவரசர் கட்டளைப்படி அவர் திரும்பி வருவதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை அறிந்துகொண்டான். பின்னர் மேலே சென்று பூந்தோட்டத்துக்குள் புகுந்தான். தன்னுடன் வந்தவர்களிடம் மெல்லிய குரலில் அத்தோட்டமெல்லாம் சுற்றித் தேடிப் பார்க்கும்படி கூறிவிட்டுத் தான் மட்டும் குடிசை வாசலில் போய் நின்று கொண்டான். உட்புறம் தாளிட்டிருந்த கதவண்டை காதை வைத்து ஒட்டுக் கேட்கலானான். சேந்தன் அமுதனும் பூங்குழலியும் கவலையுடன் பேசிக் கொள்ளும் குரல்கள் கேட்டன. இடையிடையே யாரோ ஒருவர் மரணாவஸ்தையில் முனகுவது போன்ற சத்தமும் கேட்டது.

தோட்டத்தைச் சுற்றித் தேடப் போனவர்களில் ஒருவன் விரைவில் திரும்பி வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களைத் திருமலை நம்பி கதவிடுக்கின் வழியாக வந்த விளக்கின் ஔதக்கிரணத்தில் உற்றுப் பார்த்தான். அவை இளவரசர் மதுராந்தகத் தேவர் வழக்கமாக அணியும் கிரீடம், இரத்தின ஹாரம், வாகுவலயம் முதலிய ஆபரணங்கள் என்று அறிந்து கொண்டான். அவற்றுடன் மதுராந்தகர் உத்தரீயமாகத் தரிக்கும் பீதாம்பரமும் இருந்தது. இவற்றைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் உண்டான திருப்தி அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது.

"சரி; தேடியது போதும்! மற்றவர்களையும் இங்கே கூப்பிடு. எல்லாரும் கையில் ஆயுதம் ஏந்தி எதற்கும் ஆயத்தமாக நில்லுங்கள்!" என்று கூறிவிட்டு, ஆழ்வார்க்கடியான் குடிசையின் கதவை இலேசாகத் தட்டினான்.

உள்ளிருந்து மறுமொழி வராமற் போகவே, மீண்டும் தடதடவென்று கதவை வலுவாகத் தட்டினான்.

"யார் அங்கே? இங்கு என்ன வேலை?" என்று பூங்குழலியின் குரல் கேட்டது.

"அம்மணி! நான்தான் ஆழ்வார்க்கடியான். தயவு செய்து கதவைத் திறந்து அருள வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

பூங்குழலி குடிசைக் கதவைத் தடால் என்று திறந்தாள். அவளுடைய கயல் விழிகளில் கோபக் கனல் பறந்தது. ஆழ்வார்க்கடியான் மீது தன் கோபத்தைக் காட்ட எண்ணியவள், அவனுக்கு அப்பால் வீரர்கள் சிலர் நிற்பது கண்டு திடுக்கிட்டாள். உடனே, கோபத்தைத் தணித்துக் கொண்டு, "ஐயா! இது என்ன? இவர்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? உம்முடனேதான் வந்தார்களா?" என்றாள்.

"பாதாளச் சிறையிலிருந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு ஏன் உதவி செய்தீர்கள்?" என்று கேட்டான் திருமலை.

பூங்குழலி முகத்தில் வியப்பை வருவித்துக் கொண்டு, "இது என்ன? எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே? யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவே இல்லையே?" என்றாள்.

"கரிகாலரைக் கொன்றவன் என்று குற்றம் சாட்டப்பட்டுப் பாதாளச் சிறையிலிருந்த வந்தியத்தேவனும், மற்றொரு பைத்தியக்காரனும் இன்று தப்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் இந்த நந்தவனம் வரையில் வந்ததாகத் தெரிகிறது. பிறகு, இங்கிருந்து இரண்டு குதிரைகளில் இருவர் ஓடிப் போயிருக்கிறார்கள். இந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஓரிடத்தில் மண்ணில் இரத்தம் சிந்தியிருக்கிறது. பலர் இந்த இடத்துக்கு வந்துபோன அடையாளங்களும் இருக்கின்றன. ஆகையால் நீங்கள்தான் தப்பி ஓடியவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டுமென்று அனுமானிக்கப்படுகிறது. முதன்மந்திரி அநிருத்தருக்கு உங்கள் பேரில் உள்ள அபிமானத்தினால் என்னை அனுப்பி வைத்தார். கொடும்பாளூர் வேளாரின் ஆட்கள் வந்திருந்தால் உங்களை உடனே சிறைப்படுத்தி இருப்பார்கள்?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"சத்தியமாகச் சொல்கிறேன். இங்கிருந்து யாரும் தப்பி ஓடுவதற்கு நாங்கள் உதவி செய்யவில்லை!"

"அப்படியானால், சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த வந்தியத்தேவன் இந்தக் குடிசையிலேதான் இப்போது இருக்க வேண்டும்!" என்றான் திருமலை.

அவன் இவ்விதம் சொல்லி வாய் மூடுவதற்குள் சேந்தன் அமுதன் படுத்திருந்த கயிற்றுக் கட்டிலின் அடியிலிருந்து வேதனை நிறைந்த பரிதாபமான முனகல் சத்தம் கேட்டது.

சேந்தன் அமுதனின் கட்டிலுக்கு அடியிலிருந்து வந்த முனகல் சத்தத்தைக் கேட்டதும், ஆழ்வார்க்கடியான், "ஆகா! அப்படியா சமாசாரம்? என்று சொல்லிக் கொண்டே மேலே போகத் தொடங்கினான்.

இச்சமயத்தில் சேந்தன் அமுதன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து, "பூங்குழலி! இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே!" என்றான்.

"வைஷ்ணவரே! இவர் சரியான சமயத்துக்கு இங்கே வந்து நான் கலியாணம் செய்து கொள்வதற்குள், கைம்பெண் ஆகாமல், காப்பாற்றினார்! வெளியே ஒருவன் நின்று ஈட்டியினால் அமுதனைக் குத்துவதற்குத்தான் குறி பார்த்தான். அப்போது இவர் வந்து குறுக்கிட்டு ஈட்டியைத் தான் ஏற்றுக் கொண்டுக் காப்பாற்றினார்!" என்றாள் பூங்குழலி.

"ஐயா! வைஷ்ணவரே! நீர் எவ்வளவோ கெட்டிக்காரர். முதன்மந்திரி அநிருத்தருக்கே யோசனை சொல்லக் கூடியவர். கொலைகாரனால் படுகாயம் பட்டிருக்கும் இந்த வாணர் குல வீரரைக் காப்பாற்ற ஒரு யோசனை சொன்னால் உமக்குப் புண்ணியம் உண்டு. நாங்கள் இருவரும் என்றென்றைக்கும் உமக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம்!"

"தேவி அது அவ்வளவு சுலபமன்று! முதலில் இதைப் பாருங்கள்!" என்று கூறிவிட்டு ஆழ்வார்க்கடியான் தன்னுடன் கொண்டு வந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவர்களுக்குக் காட்டினான்.

மதுராந்தகர் அணிந்திருந்த கிரீடமும், முத்து மாலைகளும், வாகுவலயங்களும் ஜாஜ்வல்யமாய் ஜொலித்தன. "ஆகா! இவை இளவரசர் மதுராந்தகர் தரித்திருந்தவை அல்லவா? சற்று முன்பு இங்கேயே நாங்கள் பார்த்தோமே?" என்றான் அமுதன்.

"இவை எங்கிருந்து கிடைத்தன?" என்றாள் பூங்குழலி.

"இந்த நந்தவனத்தின் வேலி ஓரத்தில் இருந்து கிடைத்தன. வடவாற்றங்கரையோடு நான் வந்து கொண்டிருந்தபோது இரண்டு குதிரைகளின் மீது இரண்டு பேர் விரைவாகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டேன். அதிவேகமாகச் சென்ற குதிரைகளில் ஒன்றின் மீது அந்தப் பைத்தியக்காரன் இருந்தான். இன்னொரு குதிரை மேலிருந்தவர் இளவரசர் மதுராந்தகர் போலத் தோன்றியது. இங்கு வந்த பிறகு அது நிச்சயமாயிற்று."

"இது என்ன விந்தை? மதுராந்தகர் எதற்காகத் தமது ஆபரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு ஓட வேண்டும்?"

"அதுதான் எனக்கும் தெரியவில்லை. முதன்மந்திரியிடம் சொல்லி ஓடியவர்களைத் தொடர்வதற்கு ஆள்கள் அனுப்பப் போகிறேன். ஆனால் அதற்குள்ளே இங்கு பெரிய விபரீதங்கள் நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன்."

"என்ன விபரீதம் நடந்து விடும்?"

"பழுவேட்டரையர்களும் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த சிற்றரசர்களும் இதோ தஞ்சைக் கோட்டை வாசலை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். கொடும்பாளூர் வேளாரும், முதன்மந்திரியும், மலையமானும் அவர்களை வரவேற்கக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ்ய உரிமை பற்றிச் சமாதானமாகப் பேசி முடிவு செய்ய வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம்; கட்டளை. ஆனால் பழுவேட்டரையர்கள் சமாதானப் பேச்சுத் தொடங்குவதற்கு முன்பு 'மதுராந்தகர் எங்கே?' என்று கேட்பார்கள். அவரைக் காணோம் என்றதும், கொடும்பாளூர் வேளார் மீது பாய்வார்கள்! சேநாதிபதிதான் பொன்னியின் செல்வருக்குப் பட்டத்தை நிச்சயம் செய்து கொள்வதற்காக மதுராந்தகரைக் கொன்று விட்டார் என்பார்கள். பெரிய வேளார் அதற்கு மறுப்புச் சொன்னாலும், அவரால் நிரூபிக்க முடியாது. உடனே பயங்கரமான உள்நாட்டு யுத்தம் ஏற்படும். சோழ நாடு விரைவில் சீர்குலையும்."

"அதற்குள்ளே நாம் இங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவோம்!"

"தேவி! அது முடியாத காரியம்! இந்த கிரீடத்தையும் ஆபரணங்களையும் சற்று நேரம் சேந்தன் அமுதன் அணிந்து கொள்ளட்டும். பொன்னியின் செல்வரை ஏற்றிக் கொண்டு வந்த யானையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் அதில் இவர் ஏறிக் கொள்ளட்டும். என்னுடைய ஆட்களை 'மதுராந்தகர் வாழ்க!' என்று கோஷித்துக் கொண்டு யானைக்கு முன்னும் பின்னும் போகச் சொல்லுகிறேன். மதுராந்தகர் ஏறி வந்த பல்லக்கும் அருகில் இருக்கிறது. அதில் வந்தியத்தேவனைப் போட்டுத் திரையை விட்டு விடுவோம். தேவி! தாங்கள் பல்லக்கின் பக்கமாக நடந்து வாருங்கள். மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"இது என்ன பைத்தியக்கார யோசனை?" என்றான் சேந்தன் அமுதன்.

"இவர் கிரீடத்தை வைத்துக் கொண்டால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா?" என்றாள் பூங்குழலி.

"இராத்திரி வேளையில் யானை மேல் உட்கார்ந்திருப்பவரை யார் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? சந்தேகம் ஏற்பட்டால் அல்லவோ கூர்ந்து பார்க்கப் போகிறார்கள்! உங்களுடனேயே நானும் வரப்போகிறேன். உங்கள் எல்லாரையும் கோட்டைக்குள் முதன்மந்திரியின் வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. இந்த வாணர் குலத்து வீரனைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி ஒன்றுமில்லை!"

இன்னும் சிறிது நேரம் விவாதம் செய்த பிறகு, சேந்தன் அமுதனும் பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானுடைய யோசனைக்கு இணங்கினார்கள்.

கோட்டை வாசலில் ஏதோ கலகலப்பு ஏற்பட்டது. எல்லாருடைய கவனமும் அங்கே சென்றது.

சற்று முன்னால் முதன்மந்திரி அநிருத்தர் தம்மைச் சமிக்ஞையினால் அழைத்த ஆழ்வார்க்கடியானிடம் சென்றிருந்தார். அவன் ஏதோ அவரிடம் இரகசியச் செய்தி கூறினான். அதைக் கேட்டுவிட்டு அவர் பழுவேட்டரையர்களும் பெரிய வேளாரும் நின்ற இடத்தை அணுகி வந்தார்.

"தளபதி! சற்று முன்னால் கூட மதுராந்தகத் தேவரும் அவருடைய அன்னை செம்பியன் மாதேவியும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். திருக்கோயிலுக்குப் புஷ்பகைங்கரியம் செய்யும் சேந்தன் அமுதனைப் பார்க்கப் போயிருந்தார்கள்.." என்று முதன்மந்திரி கூறுவதற்குள் காலாந்தககண்டர் குறுக்கிட்டார்.

"ஆமாம்; தாயும், மகனும் கோட்டைக்கு வெளியே வந்தார்கள். ஆனால் தாய் மட்டுந்தான் கோட்டைக்குள் திரும்பிச் சென்றார்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"ஆகா! அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார் முதன்மந்திரி.

"முதன்மந்திரி! உங்களிடம் மட்டுந்தான் கெட்டிக்கார ஒற்றர்கள் உண்டு என்று நினைத்தார்களா? வெளியே வந்த மதுராந்தகத்தேவர் திரும்பக் கோட்டைக்குள்ளே போகவில்லை. அதன் காரணத்தை நான் அறிய வேண்டும்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

முதன்மந்திரியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதே சமயத்தில் கோட்டை வாசலில், "இளவரசர் மதுராந்தகத்தேவர் வாழ்க! வாழ்க!" என்ற கோஷங்கள் எழுந்தன. எல்லாரும் கோஷங்கள் வந்த அந்தத் திசையை ஆவலோடு நோக்கினார்கள். கோட்டை வாசலுக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த யானையின் மீது இளவரசுக் கிரீடமும் பிற ஆபரணங்களும் அணிந்த 'மதுராந்தகர்' வீற்றிருந்தார். யானைக்குப் பக்கத்தில் மூடுபல்லக்கு ஒன்று ஊர்ந்து சென்றது.

"தளபதி! மதுராந்தகத்தேவர் கோட்டைக்குள் திரும்பிப் போவதற்குச் சிறிது காலதாமதம் நேர்ந்தது. வாணி அம்மையின் மகன் சேந்தன் அமுதன் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவனைப் பல்லக்கில் ஏற்றிக் கோட்டைக்குள் அழைத்து வரும்படியாகச் செம்பியன்மாதேவி சொல்லிவிட்டு முன்னால் சென்றுவிட்டார். அன்னையின் விருப்பத்தை மகன் நிறைவேறி வைக்கிறார். அமுதனைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு தாம் யானை மீது செல்கிறார். விரைவிலே மகுடாபிஷேகம் நடக்கும்போது பட்டத்து யானை மீது ஊர்வலம் வரவேண்டியிருக்குமல்லவா? அதற்கு இப்போதே ஒத்திகை செய்து கொள்கிறார்!" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

கோட்டைக்குள் பிரவேசித்த யானையையும் பல்லக்கையும் காலாந்தககண்டர் சிறிது நேரம் மிகக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அதிசயமா இருக்கிறதே!" என்றார்.

"என்ன அதிசயம்? எது அதிசயம்?" என்று அநிருத்தர் வினவினார்.

"இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் கோட்டைக்குள்ளே போவதுதான்! இளவரசர் மிக்க கூச்சம் உள்ளவராயிற்றே? பல்லக்கின் திரையை விட்டுக் கொண்டு அல்லவா பிரயாணம் செய்வார்?"

"என்றைக்காவது ஒரு நாள் கூச்சம் தெளிந்துதானே ஆக வேண்டும்? சீக்கிரத்தில் முடிசூட்டிக் கொள்ளவேண்டியவராயிற்றே?"

"மதுராந்தகருக்கு முடிசூட்டுவது என்று முடிவு செய்தாகிவிட்டதா? யார் முடிவு செய்தார்கள்?"

"ஏன்? சக்கரவர்த்திதான்! நாம் எல்லாருமாகப் போய்ச் சக்கரவர்த்தியிடம் நம் சம்மதம் தெரிவித்ததும்..."

"சக்கரவர்த்தி முடிவு செய்து, நாம் சம்மதம் கொடுத்து என்ன பயன்? கொடும்பாளூர்ப் படைகள் அல்லவா சம்மதம் கொடுக்க வேண்டும்? அவர்கள் காவல் புரியும் கோட்டைக்குள் இளவரசர் மதுராந்தகர் இவ்வளவு குதூகலமாக யானை மேல் ஏறிப்போவது அதிசயந்தான்!" என்றார் காலாந்தககண்டர்.