Sunday, November 11, 2012

78. அந்தபுரத்துச் சிறை



அருள்மொழிவர்மரின் மனம் பெரிதும் கலக்கம் அடைந்திருந்தது. இராஜ்ய உரிமை சம்பந்தமாகச் சோழ நாட்டில் எழுந்த கொந்தளிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்ததே அதற்கு முக்கிய காரணமாகும். அவர் மக்களை அமைதிப்படுத்துவதற்காகப் போன இடங்களிலெல்லாம் மக்களின் ஆவேசந்தான் அதிகமாயிற்று. "பொன்னியின் செல்வரே எங்கள் மன்னர்!" "அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்!" என்பவை போன்ற கோஷங்கள் எங்கெங்கும் எழுந்து நாலாபுறமும் முழங்கி எதிரொலி செய்தன.

இவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, "பழுவேட்டரையர்கள் வாழ்க!" "கொடுங்கோலரான கொடும்பாளூர் வேளார் வீழ்க!" என்பவை போன்ற கோஷங்களும் சிற்சில இடங்களில் கேட்கும். அத்தகைய இடங்களில் அதிக பலம் தேடலாம் என்று இளவரசர் நெருங்கிச் சென்றால், உடனே அங்குள்ளவர்களும், "பொன்னியின் செல்வர் வாழ்க!" என்று முழங்கத் தொடங்கினார்கள். ஏன்? கோட்டைக் காவலுக்காக மாற்றி நியமிக்கப்பட்டிருந்த பழுவூர் வீரர்கள் கூடப் பொன்னியின் செல்வரைக் கண்டதும் தங்கள் பழைய கோஷங்களைக் கைவிட்டு, "அருள்மொழிவர்மரே திருமுடி புனையவேண்டும்!" "ஈழங்கொண்ட வீராதி வீரர், பொன்னியின் செல்வர் நீடூழி வாழ வேண்டும்!" என்று முழங்கலானார்கள்.

இவ்வாறு தம்முடைய முயற்சி பொது மக்களிடையிலும் போர் வீரர்களிடத்திலும் வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி, தம் கருத்துக்கு மாறான சூழ்நிலை பலப்பட்டு வருவதைக் கண்டு பொன்னியின் செல்வர் சங்கடம் அடைந்தார். சில தினங்களாக மதுராந்தகத்தேவர் காணப்படாமல் இருந்தது வேறு அவருடைய கவலையை அதிகமாக்கிற்று. இதன் பொருட்டுச் சின்னப் பழுவேட்டரையர் கொடும்பாளூர் வேளார் மீது குற்றம் கூறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது. அதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. அருள்மொழிவர்மருக்கே அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் இல்லாமற் போகவில்லை. தமக்குப் பட்டம் சூட்டிவிடவேண்டும் என்று கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் ஆகியவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள். அவர்களுடன் முதன்மந்திரி அநிருத்தரும் கலந்து சதி செய்வது போலத் தோன்றியது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் மதுராந்தகத்தேவரை எங்கேனும் மறைத்து வைத்து விட்டார்களோ, என்னமோ? அல்லது ஒருவேளை மதுராந்தகத்தேவரின் உயிருக்கே அபாயம் விளைத்து விட்டார்களோ?

இந்த நிலைமையில் யாரை நம்புவது, தம் அந்தரங்கத்தை யாரிடம் வெளியிட்டு ஆலோசனை கேட்பது என்று அவரால் நிர்ணயம் செய்யமுடியவில்லை. ஏன்? அவரிடம் இணையில்லா அன்பு கொண்டவரும் அவருடைய பக்திக்கு உரியவருமான தமக்கை குந்தவைப் பிராட்டியிடங்கூட அவருக்கு நம்பிக்கை குன்றிவிட்டது. அவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ காரியம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏன்! அவருடைய உயிருக்கு உயிரான வானதிகூட அல்லவா அவருக்குத் தெரியாமல் எதையோ மறைத்து வைக்கப் பார்க்கிறாள்? திருட்டுத்தனமாக எங்கேயோ போய்விட்டு மர்மமான முகபாவத்துடன் திரும்பி வருகிறாள்?....

வேறு எதைப் பொறுத்தாலும் பொறுக்கலாம், வானதியின் மர்மமான நடத்தையை இனிப் பொறுக்க முடியாது என்று அருள்மொழிவர்மர் தீர்மானித்தார். வானதி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு எங்கேயோ தனியாகப் புறப்பட்டுப் போவதை அவர் கவனித்தார். உடனே அவளை அறியாமல் பின்தொடர்ந்து செல்லலானார். அரண்மனையின் மேல் மாடங்களின் தாழ்வாரங்களின் வழியாகச் சென்று, பின்னர்க் கீழ் மாடங்களில் இறங்கிச் சென்று, இருபுறமும் நெடிய சுவர்கள் அமைந்த இரகசியப் பாதை வழியாக வானதி மேலும் மேலும் சென்றாள். மதுராந்தகரை இரகசியமாகச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இடத்துக்குத்தான் அவள் போகிறாள் என்று கருதி அருள்மொழிவர்மர் மிக்க ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.

கடைசியாக, வானதி மற்றொரு பெரிய அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு ஓர் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்த முயன்றாள். அப்போது அருள்மொழிவர்மர் பாய்ந்து சென்று வானதியால் கதவைச் சாத்த முடியாமல் ஒரு காலை அறைக்குள்ளே வைத்தார்.

கதவைச் சாத்த முயன்ற அவளுடைய கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "வானதி! உன் திருட்டுத்தனம் என்னிடம் பலிக்காது! இந்த அறையில் நீங்கள் ஒளித்து வைத்திருப்பது யார்?" என்று கோபமாக வினவினார்.

வானதியோ புன்னகை மலர்ந்த முகத்துடன், "ஐயா, உண்மையில் என் திருட்டுத்தனம் பலித்துவிட்டது! நான் அழைத்திருந்தால் தாங்கள் வந்திருக்க மாட்டீர்கள். உள்ளே வந்து இங்கு இருப்பது யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள்.

மதுராந்தகத்தேவரை எதிர்பார்த்துச் சென்ற அருள்மொழிவர்மர், அங்கே வல்லவரையன் வந்தியத்தேவன் கட்டிலில் படுத்திருப்பது கண்டு வியப்பும், உவப்பும் அடைந்தார்.

அவரைப் பார்த்த வந்தியத்தேவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து "ஐயா! வாருங்கள்! இரண்டு நாளாகத் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்களின் சிறையிலிருந்து என்னை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்!" என்றான்.

பொன்னியின் செல்வர் விரைந்து சென்று வந்தியத்தேவன் அருகில் அமர்ந்து, "நண்பா! இது என்ன? இங்கு எப்படி வந்தாய்? பாதாளச் சிறையிலிருந்து தப்பியவன் இந்தப் பெண்களின் சிறையில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? இத்தனை நேரம் நீ ஈழத்தில் இருப்பாய் என்று அல்லவோ நினைத்தேன்? இன்னும் சில நாளைக்கெல்லாம் நானும் அங்கு வந்து உன்னுடனே சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்?" என்றார்.

"ஆம் இளவரசே! இவ்வளவு நேரம் நான் ஈழ நாட்டில் இருக்கவேண்டியவன்தான்! அங்கே பாண்டிய வம்சத்தாரின் மணிமுடியையும், அவர்களுக்கு இந்திரன் தந்த இரத்தின ஹாரத்தையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியவன். சைவப் பைத்தியமான சேந்தன் அமுதனை கொல்லாமல் தடுக்க முயன்று இந்தத் துர்க்கதிக்கு உள்ளானேன். ஈட்டி என் மேல் பாய்ந்ததும் நினைவிழந்து விழுந்தேன். இந்தப் பெண்மணிகளின் சிறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பது தெரியாது. கருணைகூர்ந்து நான் இங்கிருந்து தப்பிச் செல்வதற்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் அருமைச் சகோதரரும், என் அருமைத் தலைவருமான ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என் பேரில் வீண் பழியைச் சுமத்திவிடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

வானதி குறுக்கிட்டு, "ஐயா! இவர் கூறுவது தவறு. இவர் தப்பி ஓடிப்போனால்தான் அத்தகைய பழி இவர் மீது ஏற்படும். உண்மை வெளியாகும் வரையில் இவர் இங்கேயே இரகசியமாக இருக்கவேண்டும் என்பது தங்கள் திருத்தமக்கையின் விருப்பம்" என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டே அச்சமயம் அவ்வறையினுள் பிரவேசித்த குந்தவை, "தம்பி! ஒரு சந்தோஷமான சமாசாரம். அதைத் தெரிவிப்பதற்குத் தான் நான் விரைந்து ஓடி வந்தேன். மறைந்திருந்த மதுராந்தகத் தேவர் வெளிப்பட்டு விட்டார். சோழ குலத்து முன்னோர்கள் செய்த தவம் வீண் போகவில்லை! இராஜ்யம் என்ன ஆகுமோ என்று நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நாம் பிடிவாதம் பிடித்து அவருக்கு மகுடாபிஷேகம் செய்து வைக்கவேண்டும்!" என்றார் இளையபிராட்டி.

அவருடைய உற்சாகம் மற்ற மூவருக்கும் சிறிது வியப்பை அளித்தது. பொன்னியின் செல்வர் அது சம்பந்தமான தம் வியப்பை அடக்கிக்கொண்டு, "தேவி! அவர் எங்கே மறைந்திருந்தார்? எதற்காக? எப்படி வெளிப்பட்டார்?" என்று கேட்டார்.

"நமக்கு அருகிலேயே அவர் இருந்து வந்தும் நம்மாலேதான் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. தம்பி! செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்தவர்தான் சோழ சிங்காதனத்தில் ஏறத் தகுந்தவர். உன் சித்தப்பாவுக்குத்தான் இந்த ராஜ்யம் நியாயமாக உரியது. நீ மகுடம் புனையலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிடு! ஓர் அதிசயத்தைக் கேள்! தம்பி! நாலு நாளைக்கு முன்னால் நம் சித்தப்பாவுக்கு ஒரு பெரிய கண்டம் வந்தது. கொலைகாரன் ஒருவன் அவர் மீது குத்தீட்டியை வீசி எறியக் குறி பார்த்தான். அதை அவன் எறிந்திருந்தால் மதுராந்தகத்தேவரின் உயிர் போயிருக்கும். சோழ குலத்தில் இன்னொரு அகால மரணம் ஏற்பட்டிருக்கும். அப்படி நேராமல் தடுத்த வீராதி வீரர் யார் தெரியுமா? தம் உயிரைக் கொடுக்கத் துணிந்து நம் சித்தப்பாவைக் காப்பாற்றியவர் யார் தெரியுமா?" என்று கூறிக் கொண்டே இளையபிராட்டி தம் விசாலமான கண்களை வந்தியத்தேவன் பேரில் திரும்பினார். அந்தக் கண்களில் ததும்பிய அன்பும் ஆர்வமும், நன்றியும் நன்மதிப்பும், ஆதரவும் அனுதாபமும் வந்தியத்தேவனது நெஞ்சின் அடிவாரம் வரையில் சென்று அவனைத் திக்குமுக்காடச் செய்தன.

பொன்னியின் செல்வரோ வியப்புக் கடலில் ஆழ்ந்தவராக, "இது என்ன அக்கா! எனக்குப் புரியவில்லையே? என் தோழனும் இதுபற்றி எனக்குச் சொல்லவில்லையே?" என்றார்.

"அவர் சொல்லியிருக்க மாட்டார் ஏனெனில் அவர் செய்த காரியத்தின் பெருமையை அவரே உணர்ந்திருக்க மாட்டார். சோழ குலம் அவருக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறது என்று அவருக்கே தெரியாது!"

"அக்கா! புதிர்போடுவது போல் பேசுகிறீர்கள்? எல்லாம் ஒரே மர்மமாயிருக்கிறதே? எங்களை வீண் திகைப்புக்கு உள்ளாக்காமல் விளக்கமாகச் சொன்னால் நல்லது! இந்த வாணர் குல வீரர் மதுராந்தகரை எப்படி, எங்கே, எந்தவித அபாயத்திலிருந்து காப்பாற்றினார்? மதுராந்தகத்தேவர் இப்போது எங்கே?" என்று இளவரசர் கேட்டார்.

"பொன்னியின் செல்வ! இதோ இன்னும் சில வினாடிப் பொழுதில் அவரே இங்கு வந்து விடுவார்! நீ இங்கே வந்திருக்கிறாய் என்பது தெரிந்து, இவ்விடம் அழைத்து வரச் சொல்லியிருக்கிறேன். அவர் வாய்மொழியாகவே கேட்டுத் தெரிந்து கொள். அல்லது எல்லாவற்றையும் கண்ணால் பார்த்த பூங்குழலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்... இதோ அவர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது. ஆம்; அச்சமயம் அறைக்கு வெளியில் காலடிச் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் நாலு பேர் உள்ளே வந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன் ஆகியவர்கள் வந்தார்கள். சேந்தன் அமுதன் மட்டும் வழக்கத்துக்கு மாறாக விசித்திரமாக உடை அணிந்திருந்தான். தலையில் இளவரசுக் கிரீடம் அணிந்து, பட்டுப் பீதாம்பரமும், அரச குலத்துக்குரிய ஆபரணங்களும் புனைந்திருந்தான்.

அறைக்குள் வந்த கோஷ்டியினரை உள்ளே இருந்தவர்கள் சிறிது வியப்புடன் பார்த்தார்கள். "சகோதரி! மதுராந்தகர் வருவார் என்றல்லவோ சொன்னீர்கள்? அவரைக் காணோமே?" என்றார் அருள்மொழி.

"தம்பி! இதோ உன் முன்னால் இளவரசுக் கிரீடம் அணிந்து நிற்கிறாரே, இவர்தான் செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்த, சிவஞான கண்டராதித்தரின் புதல்வர். இவர்தான் நமக்கெல்லாம் சித்தப்பன் முறை பூண்ட சிவபக்திச் செல்வர். இத்தனை காலமும் சேந்தன் அமுதன் என்ற பெயருடன் அஞ்ஞாத வாசம் செய்து வந்தார். சோழர் குலம் செய்த பாக்கியத்தினால் இன்றைக்கு வெளிப்பட்டு வந்தார். இவரைத் தான் நாலு நாளைக்கு முன்னால் கொடியோன் ஒருவன் ஈட்டியினால் குத்திக் கொல்ல முயன்றான். அதைத் தடுத்து இந்த வாணர் குல வீரர் சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி புரிந்தார். நமது முதன்மந்திரியின் சீடரான இந்த வீர வைஷ்ணவர் இவர் சைவர் என்பதையும் பொருட்படுத்தாமல் இவரைக் கோட்டைக்குள் கொண்டு வந்து சேர்த்தார்!..."

இச்சமயத்தில் திருமலை குறுக்கிட்டு, "தேவி! இச்சைவருக்கு நான் எந்தவித உதவியும் செய்யவும் இல்லை. செய்ய விரும்பவும் இல்லை. வல்லத்து இளவரசரைப் பல்லக்கில் கொண்டு வருவது சாத்தியமாகும் பொருட்டு இவருக்கு மாறுவேடம் புனைந்து யானையில் ஏற்றி வந்தேன்" என்றான்.

குந்தவை, "ஆம், ஆம்! திருமலை நம்பி இரு வகையில் பேருதவி புரிந்திருக்கிறார். மதுராந்தகத் தேவருக்கு இளவரசுக் கிரீடம் அணிவித்து யானை மீது ஏற்றிக் கொண்டு வந்தபோது உண்மையிலேயே இந்த நாட்டின் சிங்காதனத்துக்குரியவரை அழைத்து வருகிறோம் என்று தெரிந்திராது. தம்பி! இத்தனை காலமும் மதுராந்தகத்தேவர் என்று நாம் எல்லோரும் எண்ணியிருந்தவர் உண்மையில் மதுராந்தகத்தேவர் அல்ல. இவர்தான் சோழ குலத்தின் தவப்பயனாக மூத்த எம்பிராட்டியின் வயிற்றில் உதித்தவர். நாம் அறிய முடியாத இறைவன் திருவிளையாடல் இவரை இத்தனை காலமும் குடிசையில் வாழ்ந்திருக்கச் செய்தது. ஆயினும் சோழர் தொல்குடியில் பிறந்ததனால் வந்த குணாதிசயங்கள் இவரிடம் குடிகொண்டிருந்ததை நாம் எல்லோரும் ஒவ்வொரு சமயம் பார்த்து வியந்திருக்கிறோம். முன்னொரு சமயம் உன்னை இவரும் பூங்குழலியும் கோடிக்கரையிலிருந்து நாகப்பட்டினம் வரையில் கொண்டு போய்ச் சேர்த்ததை மறக்க முடியுமா? இவர்தான் உண்மையில் நம் சித்தப்பா என்பதை இன்று செம்பியன் மாதேவியின் வாய்மொழியாகவும் அறிந்தோம். இவரும் ஒப்புக்கொண்டார். தம்பி! இந்தப் புண்ணிய தினத்தில் இவரை இவருடைய சொந்த அரண்மனைக்கு வரவேற்கிறேன். இத்தனை காலமும் நம்மைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தவரை இன்று நம் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்துவிடும்படி அழைக்கிறேன். இத்தனை நாளும் பிரிந்திருந்தவர் நம்மோடு வந்து சேர்ந்த வைபவத்தை எவ்வளவோ விமரிசையாகக் கொண்டாட வேண்டும். அதற்குத் தகுதியான காலம் இதுவன்று. இந்தச் செய்தியை எவ்வளவு தூரம் வெளியில் தெரியாமல் நமக்குள் வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஆகையால் நமக்குள்ளேயே இந்த வைபவத்தை நடத்திக் கொள்ளலாம். சித்தப்பா! இப்படி வாருங்கள்! நெடு நாளைய பிரிவுக்குப் பின்னர் இன்று சோழர் குலத்தில் வந்து சேர்ந்ததற்காக எங்கள் மகிழ்ச்சியை வேறு விதத்தில் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. என் அருமைச் சகோதரர்கள் வெளியூர்களுக்குப் போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி, அவர்கள் நெற்றியில் நான் திருநீறு பூசிக் குங்குமத் திலகம் இடுவது வழக்கம். அதுபோலவே இன்று திரும்பி வந்து சேர்ந்த தங்கள் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இடுகிறேன்!"

இவ்விதம் கூறிவிட்டு இளையபிராட்டி குந்தவை தேவி சேந்தன் அமுதன் என்று இத்தனை காலமும் பெயர் வழங்கிய மதுராந்தகன் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார்.

அப்போது முதன்மந்திரி அநிருத்தர் "சோழர் குலத் தோன்றல் இளங்கோ மதுராந்தகத்தேவர் நீடூழி வாழ்க!" என்று ஆசி கூறினார்.

"வாழ்க! வாழ்க!" என்று ஆழ்வார்க்கடியான் நம்பி எதிரொலி செய்தான்.