Sunday, November 11, 2012

10. அருள்மொழிவர்மர்





இளங்கோ அருள்மொழிவர்மர் தென்திசைச் சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகர் ஆனார். இலங்கைக்கும் போனார், அங்கே படைத் தலைமை வகித்துச் சில காலம் போர் நடத்தினார். ஆனால், போர் எளிதில் முடிகிறதாயில்லை. அவர் போர் நடத்திய முறைக்கும் மற்றவர்களின் போர் முறைக்கும் வித்தியாசம் இருந்தது. தாய்நாட்டிலிருந்து அவர் வேண்டியபடியெல்லாம் தளவாடங்களும் சாமக் கிரியைகளும் சரியாக வந்து சேரவில்லை.  ஆகையால் இடையில் ஒரு தடவை தாய்நாட்டுக்கு வந்திருந்தார். தந்தையிடம் சொல்லித் தம் விருப்பத்தின்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார்.  மறுபடியும் ஈழத்துக்குச் செல்ல ஆயத்தமானார்.

அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவைதேவி பழையாறையின் பிரதான மாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள். அருள்மொழித்தேவர் புறப்பட்ட போது அரண்மனை முற்றத்தில் வெற்றி முரசுகள் முழங்கின; சங்கங்கள் ஆர்ப்பரித்தன; சிறு பறைகள் ஒலித்தன; வாழ்த்து கோஷங்கள் வானை அளாவின. சோழ குலத்துத் தாய்மார்கள் அனைவரும் அரண்மனையின் செல்லக் குழந்தைக்கு ஆசி கூறி, நெற்றியில் மந்திரித்த திருநீற்றை இட்டு, திருஷ்டி கழித்து வழி அனுப்பினார்கள்.

அரண்மனை வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்க வேண்டிய இடத்தில், குந்தவைதேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டு நின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ்பெற்ற சிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவிக்குப் பணிவிடை செய்வதையும் குந்தவைபிராட்டிக்குத் தோழியாக இருப்பதையும் பெறற்கரும் பாக்கியமாகக் கருதி வந்திருந்தவர்கள். அவர்களிலே கொடும்பாளூர் சிறிய வேளானின் புதல்வி வானதியும் இருந்தாள். இளவரசர் சற்றுத் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், அந்தப் பெண்கள் எல்லோருமே மனக்கிளர்ச்சி அடைந்தார்கள். இளவரசர் அருகில் வந்ததும் கையில் ஏந்திய தட்டுகளைச் சுற்றி ஆலாத்தி எடுத்தார்கள்.

அப்போது வானதியின் மேனி முழுதும் திடீரென்று நடுங்கிற்று. கையிலிருந்த தட்டு தவறிக் கீழே விழுந்து 'டணார்' என்ற சத்தத்தை உண்டாக்கியது. "அடடா! இது என்ன அபசகுனம்!" என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உண்டாயிற்று. ஆனால் தட்டு கீழே விழுந்த பிறகும் திரி மட்டும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். 'இது மிக நல்ல சகுனம்' என்றே முதியவர்கள் உறுதி கூறினார்கள்.

எவ்விதக் காரணமும் இன்றிப் பீதியும் கலக்கமும் அடைந்து தட்டை நழுவவிட்ட பெண்ணைப் பார்த்துப் புன்னகை புரிந்துவிட்டு இளங்கோ அருள்மொழிவர்மர் மேலே சென்றார். அவர் அப்பால் சென்றதும் வானதியும் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்து விட்டாள். 'ஆகா! இப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோமே' என்ற எண்ணமே வானதியை அவ்வாறு மூர்ச்சையடைந்து விழும்படிச் செய்து விட்டது. குந்தவையின் கட்டளையின் பேரில் அவளை மற்றப் பெண்கள் தூக்கிச் சென்று, ஓர் அறையில் மேடையில் கிடத்தினார்கள். குந்தவைப்பிராட்டி தம் சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தெளிக்க முயன்றாள். வாசலில் நின்றபடியே வானதி சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம் குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், "விழுந்த பெண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தெளிந்ததா?" என்று விசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவைதேவி, "இளவரசரை இங்கே சிறிது வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!" என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்கையின் சொல்லை என்றும் தட்டியறியாத இளவரசர் அவ்விதமே மீண்டும் அரண்மனைக்குள் வந்தார். வானதியைத் தம் தமக்கை மார்பின் மீது சாத்திக் கொண்டு மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்த காட்சி அவருடைய மனத்தை உருக்கியது.

"அக்கா! இந்தப் பெண் யார்? இவள் பெயர் என்ன?" என்று இளங்கோ கேட்டார்.

"கொடும்பாளூர்ச் சிறியவேளாரின் மகள்; இவள் பெயர் வானதி; கொஞ்சம் பயந்த சுபாவமுடையவள்!" என்றாள் குந்தவை.

"ஆகா! இப்போது இவள் மூர்ச்சையாகி விழுந்ததின் காரணம் தெரிந்தது. இந்தப் பெண்ணின் தந்தைதானே இலங்கை சென்று மீண்டும் வராமல் போர்க்களத்தில் மாண்டார்? அதை நினைத்துக் கொண்டாள் போலிருக்கிறது!" என்றார் இளவரசர்.

"இருக்கலாம், ஆனால் இவளைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக் கொள்கிறேன்! இலங்கை சென்று விரைவில் வெற்றி வீரனாகத் திரும்பி வா! அடிக்கடி எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிரு!" என்றாள் இளையபிராட்டி.

"ஆகட்டும்; இங்கே ஏதாவது விசேஷம் நிகழ்ந்தாலும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்!" என்றார் இளங்கோ.

இச்சமயத்தில், இளவரசரின் இனிய குரலின் மகிமையினால்தானோ என்னவோ, வானதிக்கு மூர்ச்சை தெளிந்து நினைவு வரத் தொடங்கியது. அவளுடைய கண்கள் முதலில் இலேசாகத் திறந்தன. எதிரில் இளவரசரைப் பார்த்ததும் கண்கள் அகன்று விரிந்தன; பின்னர் முகமும் மலர்ந்தது. அவளது பவழச் செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன. உணர்வு வந்ததும் நாணமும் கூட வந்தது, சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பின்னால் திரும்பிப் பார்த்தாள்; தன்னை இளையபிராட்டி தாங்கிக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு வெட்கினாள், நடந்ததெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது.

"அக்கா! இந்த மாதிரி செய்து விட்டேனே?" என்று கண்களில் நீர்மல்கக் கூறினாள்.

இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், "அதற்காக நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக் காரணமும் இருக்கிறது; அதைத் தான் இளையபிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார்.

வானதிக்குத் தான் காண்பது உண்மையா, கேட்பது மெய்யா என்ற சந்தேகமே வந்துவிட்டது. பெண்களைச் சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்காமலே போகும் வழக்கமுடைய இளவரசரா என்னுடன் பேசுகிறார்? எனக்கு ஆறுதல் மொழி கூறித் தேற்றுகிறார்? என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? ஆகா! உடம்பு புல்லரிக்கிறதே! மறுபடியும் மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறதே!...

இளவரசர், "அக்கா! சேனைகள் காத்திருக்கின்றன, நான் போய் வருகிறேன். நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும்போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள். தாய் தகப்பனில்லாத இப்பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

அன்று முதல் குந்தவைப்பிராட்டி வானதியிடம் தனி அன்பு காட்டத் தொடங்கினாள். இணைபிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தாள். எங்கே போனாலும் அவளைத் தவறாமல் கூட அழைத்துச் சென்றாள். அரண்மனை நந்தவனத்துக்கு வானதியை அடிக்கடி அழைத்துச் சென்று குந்தவைதேவி அவளிடம் அந்தரங்கம் பேசினாள். தன் இளைய சகோதரனுடைய வருங்கால மேன்மையைக் குறித்து, தான் கண்டு வந்த கனவுகளையெல்லாம் அவளிடமும் சொன்னாள்; அதையெல்லாம் வானதியும் சிரத்தையுடன் கேட்டாள்.

மேலே கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு, வானதி இன்னும் நாலைந்து தடவை உணர்வு இழந்து மூர்ச்சையடைந்தாள். அப்போதெல்லாம் குந்தவைப்பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வு வருவித்தாள். மூர்ச்சை தெளியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள்.  குந்தவை அவளைக் கட்டிக் கொண்டு உச்சி மோந்து ஆறுதல் கூறுவாள்.