Sunday, November 11, 2012

9. நந்தினி





ஓடம் அக்கரை சென்றதும் வந்தியத்தேவனுடன் வந்த கடம்பூர் வீரன் பக்கத்திலுள்ள திருப்பனந்தாளுக்குச் சென்று குதிரை சம்பாதித்து வருவதாகச் சொல்லிப் போனான்.  ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஆற்றங்கரையில் அரச மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள்.

வந்தியத்தேவனும் நம்பியும் ஒருவருடைய வாயை ஒருவர் பிடுங்கி ஏதாவது விஷயத்தைக் கிரஹிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது நேரம் சுற்றி வளைத்துப் பேசினார்கள்.

"ஏன், சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

"எதைப் பற்றி?"

"நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி - என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். தொண்டை மண்டலம் வரையில் இந்தப் பேச்சு எட்டியிருக்கிறது. இன்னும் யார் யாரோ பெரிய கைகள் சேர்ந்து, அடிக்கடி கூடி, அடுத்து பட்டத்துக்கு யார் என்று யோசித்து வருகிறார்களாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? - அடுத்து பட்டத்துக்கு யார் வரக்கூடும்?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது, தம்பி! இராஜாங்க காரியங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் வைஷ்ணவன்; ஆழ்வார்களின் அடியார்க்கு அடியான்; எனக்குத் தெரிந்த பாசுரங்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறவன்!"

இவ்வாறு ஆழ்வார்க்கடியான் கூறி, "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்" என்று பாடத் தொடங்கவும், வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "உமக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், நிறுத்தும்!" என்றான்.

"அடடா! தெய்வத் தமிழ்ப் பாசுரத்தை நிறுத்தச் சொல்கிறாயே?"

"ஆழ்வார்க்கடியான் நம்பிகளே! எனக்கு ஒரு சந்தேகம் உதித்திருக்கிறது அதைச் சொல்லட்டுமா?"

"நன்றாய்ச் சொல்லு!"

"உம்முடைய வைஷ்ணவம், பக்தி, பாசுரப் பாடல் - எல்லாம் வெறும் வேஷம் என்று சந்தேகிக்கிறேன்."

"ஐயையோ! இது என்ன பேச்சு? அபசாரம்! அபசாரம்!"

"அபசாரமும் இல்லை, உபசாரமும் இல்லை. உம்முடைய பெண்ணாசையை மறைப்பதற்காக இந்த மாதிரி வேஷம் போடுகிறீர்."

"தம்பி! நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு."

"அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்? அதிலும் இன்னொரு மனுஷன் மணம் புரிந்து கொண்ட பெண்ணிடம் மனதைச் செலுத்தலாமா? நீர் கடம்பூர் மாளிகைக்கு வரவேண்டும் என்று சொன்னதும் அவளைப் பார்ப்பதற்குத்தானே? இல்லை என்று சொல்ல வேண்டாம்!"

"இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீ கூறிய காரணம் தவறு. வேறு தகுந்த காரணம் இருக்கிறது. அது பெரிய கதை."

"குதிரை இன்னும் வரக்காணோம். அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன்! கேட்கலாம்!"

"கதை என்றால், கற்பனைக் கதை அல்ல; உண்மையாக நடந்த கதை. அதிசய வரலாறு! கேட்டால் திகைத்துப் போவாய்! அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?"

"இஷ்டமிருந்தால் சொல்லுங்கள்!"

"ஆம், சொல்லுகிறேன். மறுபடியும் உன்னிடம் ஏதாவது உதவி கோரும்படியிருந்தாலும் இருக்கும். அப்போது தட்டாமல் செய்வாய் அல்லவா?"

"நியாயமாயிருந்தால் செய்வேன். உங்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் ஒன்றும் சொல்ல வேண்டாம்."

"இல்லையில்லை! உன்னிடம் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். அந்த பழுவேட்டரையரின் இளம் மனைவி இருக்கிறாளே, நான் ஓலை கொண்டு போகச் சொன்னேனே, அவள் பெயர் நந்தினி. அவளுடைய கதையை நீ கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவாய். உலகில் இப்படியும் அக்கிரமம் உண்டா என்று பொங்குவாய்!" இந்த முன்னுரையுடன் ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பற்றிய கதையை ஆரம்பித்தான்.

ஆழ்வார்க்கடியான் பாண்டிய நாட்டில் வைகை நதிக்கரையில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவனுடைய குடும்பத்தார் பரம பக்தர்களான வைஷ்ணவர்கள். அவனுடைய தந்தை ஒருநாள் நதிக்கரையில் உள்ள நந்தவனத்துக்குப் போனார். அங்கே ஒரு பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி வந்தான்.

நந்தினிக்குப் பிராயம் வளர்ந்து வந்தது போல் பெருமாளிடமும் பக்தியும் வளர்ந்து வந்தது. அவள் மற்றொரு 'ஆண்டாள்' ஆகிப் பக்தர்களையெல்லாம் ஆட்கொள்ளப் போகிறாள் என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை ஆழ்வார்க்கடியானுக்கு அதிகமாயிருந்தது. அப்பெண்ணை வளர்க்கும் பொறுப்பை அவனே ஏற்றுக் கொண்டான். இருவரும் ஊர் ஊராகச் சென்று ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி வைஷ்ணவத்தைப் பரப்பி வந்தார்கள். நந்தினி துளசிமாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் பாசுரம் பாடியதைக் கேட்டவர்கள் மதிமயங்கிப் போனார்கள்.

ஒரு சமயம் ஆழ்வார்க்கடியான் திருவேங்கடத்துக்கு யாத்திரை சென்றான். திரும்பி வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது நந்தினிக்கு ஒரு விபரீதம் நேர்ந்துவிட்டது.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இறுதிப் பெரும்போர் மதுரைக்கு அருகில் நடந்தது. பாண்டியர் சேனை சர்வ நாசம் அடைந்தது. வீரபாண்டியன் உடம்பெல்லாம் காயங்களுடன் போர்க்களத்தில் விழுந்திருந்தான். அவனுடைய அந்தரங்க ஊழியர்கள் சிலர் அவனைக் கண்டுபிடித்து எடுத்து உயிர் தப்புவிக்க முயன்றார்கள். இரவுக்கிரவே, நந்தினியின் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்கள். பாண்டியனுடைய நிலைமையைக் கண்டு மனமிரங்கி நந்தினி அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனால் சீக்கிரத்தில் சோழ வீரர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். நந்தினியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு உட்புகுந்து வீரபாண்டியனைக் கொன்றார்கள். நந்தினியின் அழகைக் கண்டு மோகித்துப் பழுவேட்டரையர் அவளைச் சிறைபிடித்துக் கொண்டு போய்விட்டார்.

இது மூன்று வருஷத்துக்கு முன்னால் நடந்தது. பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியைப் பார்க்கவே முடியவில்லை. அன்று முதல் ஒரு தடவையேனும் நந்தினியைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் அவளை விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை...

இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு, ஏதோ ஒன்று மனத்தில் தடை செய்தது. ஒரு வேளை இந்தக் கதை முழுதும் ஆழ்வார்க்கடியானின் கற்பனையோ என்று தோன்றியது. ஆகையால் கடம்பூர் மாளிகையில் தான் அறிந்து கொண்ட இரகசியத்தைச் சொல்லவில்லை.

அப்போது சற்று தூரத்தில், கடம்பூர் வீரன் குதிரையுடன் வந்து கொண்டிருந்தான்...

குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான்.  குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியானதுறைகள் இருந்தன. சிறிது தூரம் ஆற்றங் கரையோடு சென்றதும், பெண்களின் கைவளை குலுங்கும் சத்தமும், கலகலவென்று சிரிக்கும் ஒலியும் கேட்டன. அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் அரிசிலாற்றங் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. எங்கிருந்து அப்பெண்களின் குரல் ஒலி வருகிறது என்று கண்டுபிடிக்க வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றான்.

திடீரென்று, "ஐயோ! ஐயோ! முதலை! முதலை! பயமாயிருக்கிறதே!" என்ற அபயக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. ஓர் அடர்ந்த நிழல் தரும் பெரிய மரத்தின் அடியில், வேரோடு வேராக, பாதி தரையிலும் பாதி தண்ணீரிலுமாக ஒரு பயங்கரமான முதலை வாயைப் பிளந்து கொண்டிருந்தது. முதலை எவ்வளவு பயங்கரமான பிராணி என்பதையும் கேட்டிருந்தான். ஆகவே இந்த முதலையைப் பார்த்ததும் அவன் உள்ளம் கலங்கி, உடல் பதறிப் போனான். ஏனெனில், அந்த முதலை சற்றுமுன் கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வெகு சமீபத்தில் இருந்தது. வாயைப் பிளந்து கொண்டு, கோரமான பற்களைக் காட்டிக் கொண்டு, பயங்கர வடிவத்துடன் இருந்தது. முதலை இன்னும் ஒரு பாய்ச்சல் பாய வேண்டியதுதான். அந்தப் பெண்களின் கதி அதோகதியாகி விடும்! அந்தப் பெண்களோ, பின்னால் அடர்த்தியாயிருந்த மரங்களினால் தப்பி ஓடுவதற்கும் முடியாத நிலையில் இருந்தார்கள்.

வந்தியத்தேவனுடைய உள்ளம் எவ்வளவு குழம்பியிருந்தாலும் அவன் உறுதி அணுவளவும் குன்றவில்லை. தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றியும் அவன் ஒரு கணத்துக்கு மேல் சிந்திக்கவில்லை. கையிலிருந்த வேலைக் குறி பார்த்து ஒரே வீச்சாக வீசி எறிந்தான். வேல் முதலையின் கெட்டியான முதுகில் பாய்ந்து சிறிது உள்ளேயும் சென்று செங்குத்தாக நின்றது. உடனே உடைவாளை உருவிக் கொண்டு முதலையை ஒரேயடியாக வேலை தீர்த்துவிடுவது என்ற உறுதியுடன் பாய்ந்து ஓடி வந்தான்.

முன்போலவே, அந்தச் சமயத்தில் அப்பெண்கள் கலகலவென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான்.  சற்றுமுன், "ஐயோ ஐயோ!" என்று கத்தியவர்கள் அவர்கள்தான் என்றே நம்ப முடியவில்லை.

அவர்களில் ஒருத்தி கம்பீரமான இனிய குரலில், "பெண்களே! சும்மா இருங்கள், எதற்காகச் சிரிக்கிறீர்கள்?" என்று அதட்டும் குரலில் கூறியது கனவில் கேட்பது போல அவன் காதில் விழுந்தது.

முதலையண்டை பாய்ந்து சென்றவன் வாளை ஓங்கியவண்ணம் தயங்கி நின்றான். முதலையை உற்றுப் பார்த்தான்; அந்தப் பெண்களின் முகங்களையும் இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். அவன் உள்ளத்தை வெட்கி மருகச் செய்த, உடலைக் குன்றச் செய்த, ஒரு சந்தேகம் உதித்தது. இதற்குள்ளாக அந்தப் பெண்மணி மற்றவர்களைப் பிரிந்து முன்னால் வந்தாள். முதலைக்கு எதிர்ப்புறத்தில் அதைக் காப்பாற்றுகிறவளைப் போல் நின்றாள்.

"ஐயா! தங்களுக்கு மிக்க வந்தனம் தாங்கள் வீணில் சிரமப்பட வேண்டாம்!" என்றாள்.