Sunday, November 11, 2012

8. வழிநடைப் பேச்சு





சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்?  சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.

"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா?" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, "மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்!" என்று சொன்னான்.

வந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, "குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா! இவ்வளவு நேரம் ஆகி விட்டதே! உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே! உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா! குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு!" என்றான்.

"அழகாயிருக்கிறது! அதற்குள்ளே நீ புறப்படுவதாவது? என்ன அவசரம்? பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்" என்றான் கந்தமாறன்.

"இல்லை, அப்பனே! தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.

"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்."

"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு!"

"அவ்வளவு அவசரப்படாதே! காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்."

"அது எப்படி முடியும்? யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு.."

"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை!.." என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். "வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்!" என்றான்.

"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்" என்றான் வந்தியத்தேவன்.

ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாணம் மிகவும் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; "கந்தமாறா! உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.  ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய்! அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது! நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது. கந்தமாறா! உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்?"

"மணிமேகலை!"

"அடடா! என்ன இனிமையான பெயர்! பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்.."

கந்தமாறன் குறுக்கிட்டு, "நண்பா! உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே!" என்றான்.

"இது என்ன, கந்தமாறா! ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே!"

"என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்!"

வந்தியத்தேவன் மனத்திற்குள் "மணிமேகலை வாழ்க!" என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்!

சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.

ஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஹோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.

தோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள்.

கரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "சாமி படகில் வரப் போகிறீர்களா? என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.

"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து!" என்றான் கந்தமாறன்! இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.

"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே? இந்தக் குதிரையை என்ன செய்வது? படகில் ஏற்ற முடியுமா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்!" என்றான் கந்தமாறன்.

"ஆஹா! எவ்வளவு முன்யோசனை? நீ அல்லவா உண்மை நண்பன்!" என்றான் வந்தியத்தேவன்.

இரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.

கந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.

படகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, "நிறுத்து! நிறுத்து! படகை நிறுத்து!" என்று ஒரு குரல் கேட்டது.

ஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.

கூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.

வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, "கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும்! படகில் நிறைய இடம் இருக்கிறதே! ஏற்றிக் கொண்டு போகலாம்!" என்றான்.

ஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.