Sunday, November 11, 2012

24. இருள் மாளிகை





காணாமற்போன வந்தியத்தேவன் இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று மறைந்து நின்றான். மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன் முதலில் காது கொடுத்துக் கேட்க முயன்றான். ஆனால் அவர்களுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக அவனுக்குச் சிரத்தையும் இல்லை.
இதோ இந்த இருள் அடைந்த மாளிகை இருக்கிறதே! இது ஏன் இருளடைந்திருக்கிறது? இதற்குள்ளே என்ன இருக்கும்? இதன் உள்ளே புகுந்தால் இதன் இன்னொரு வாசல் எங்கே கொண்டு போய் விடும்? எல்லாவற்றுக்கும் இதற்குள் புகுந்து பார்த்து வைக்கலாமா?

ஆனால், இதற்குள்ளே எப்படிப் பிரவேசிப்பது? எவ்வளவு பெரிய, பிரம்மாண்டமான கதவு! இதற்கு எவ்வளவு பெரிய பூட்டு! அப்பப்பா! என்ன அழுத்தம்! என்ன கெட்டி! ஆ! இது என்ன? கதவுக்குள் ஒரு சிறிய கதவு போலிருக்கிறதே! கையை வைத்ததும் இந்தச் சிறிய கதவு திறந்து கொள்கிறதே! அதிர்ஷ்டம் என்றால், இதுவல்லவா அதிர்ஷ்டம்! உள்ளே புகுந்து பார்க்க வேண்டியதுதான்!

பெரிய கதவுக்குள்ளே, பார்த்தால் தெரியாதபடி பொருத்தியிருந்த சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் அந்த இருளடைந்த மாளிகைக்குள் புகுந்தான். உள்ளே காலடி வைத்ததும் அவனுக்குத் தோன்றிய முதலாவது எண்ணம், தான் அம்மாளிகைக்குள் புகுந்தது நந்தினிக்குக் கூடத் தெரிய கூடாது என்பதுதான். ஆகையால் சிறிய கதவைச் சாத்தினான். சாத்தியவுடன் உள்ளிருந்த இருள் இன்னும் பன்மடங்கு கனத்து விட்டதாகத் தோன்றியது. கதவு திறந்திருந்த ஒரு வினாடி நேரத்தில் சில பெரிய தூண்கள் நிற்பது தெரிந்தது. இப்போது அதுவும் தெரியவில்லை. இருட்டு என்றால், இப்படிப்பட்ட இருட்டைக் கற்பனை செய்யவும் முடியாது! வெளிச்சத்திலிருந்து இருட்டில் வந்திருப்பதால் முதலில் இப்படித்தான் இருக்கும். சற்று போனால் இருட்டின் கனம் குறைந்து பொருள்கள் மங்கலாகக் கண்ணுக்குப் புலப்படும்.

சற்றுத் தூரம் குருடனைப் போல் கையை முன்னால் நீட்டிக் கொண்டு வந்தியத்தேவன் நடந்தான். அவன் நினைத்தபடியே ஒரு தூண் கைக்குத் தட்டுப்பட்டது! மேலும் கொஞ்ச தூரம் நடந்ததும் இன்னொரு தூண் கைக்கு அகப்பட்டது. ஆனால் இன்னமும் கண்ணுக்கு ஏதும் தெரிந்தபாடாயில்லை. மேலே தூண் ஒன்றும் கைக்கு அகப்படவில்லை! ஏதோ பள்ளத்தில் இறங்குவது போன்ற உண்ர்ச்சி உண்டாகிறது! ஆ! இதோ ஒரு படி! நல்லவேளை, விழாமல் தப்பினோம்! இப்படியே இந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் எத்தனை நேரம், எத்தனை தூரம் போவது?.... எதனாலோ வந்தியத்தேவன் மனத்தில் ஒரு பீதி உண்டாயிற்று. மேலே போகத் துணிவு ஏற்படவில்லை. வந்த வழியில் திரும்ப வேண்டியதுதான்! கதவைத் திறந்து கொண்டு லதா மண்டபத்துக்கே போக வேண்டியதுதான்! இவ்வாறு எண்ணி வந்தியத்தேவன் திரும்பினான்.

ஆகா! இது என்ன ஓசை! சடசட வென்ற ஓசை! எங்கேயிருந்து வருகிறது? வௌவால்கள் சிறகை அடித்துக் கொள்ளும் ஓசையாக இருக்க வேண்டும். இல்லை! இது வௌவால் இறகின் சத்தம் மட்டும் இல்லை! காலடிச் சத்தம்! யாரோ நடக்கும் சத்தம்!.... நடப்பது யார்? வந்தியத்தேவனுடைய தொண்டை உலர்ந்து போயிற்று! நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது! காது கொடுத்துக் கேட்டபோது அந்தக் காலடிச் சத்தம் மேலும் மேலும் கேட்டது. வந்தியத்தேவன் நின்ற இடத்திலேயே நின்று உற்றுக் கேட்டான். அதே சமயத்தில் ஓசை வந்த திசையை நோக்கி அவனுடைய கண்களும் உற்றுப் பார்த்தன.

ஆ! வெளிச்சம்! அதோ வெளிச்சம்! கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது! நெருங்கியும் வருகிறது! வெளிச்சத்துடன் புகை! யாரோ தீவர்த்தியுடன் வருகிறார்கள். நந்தினிதான் தன்னைத் தேடிக் கொண்டு வருகிறாளோ, என்னமோ! அப்படியானால் நல்லது. வேறு யாராவதாயிருந்தால்? எல்லாவற்றுக்கும் சிறிது நேரம் ஒளிந்திருந்து பார்க்கலாம். ஒளிந்து நிற்பதற்கு இங்கே இடத்துக்குக் குறைவில்லை! தூரத்திலே வந்த தீவர்த்திக் கொழுந்து அது ஒரு விசாலமான மண்டபம் என்பதைக் காட்டியது. அதில் பெரிய பெரிய தூண்கள் இருந்தன. கீழேயிருந்து ஒரு படிக்கட்டு மேலே வந்து அங்கே ஒரு வளைவு வளைந்து திரும்பி மேலேறிச் சென்றது. அந்தப் படிக்கட்டின் அடிப்பக்கத்திலிருந்துதான் தீவர்த்தி வெளிச்சம் வந்தது என்பதையும் அறிந்து கொண்டான். அடுத்த கணம் ஒரு பெரிய தூணின் மறைவில் போய் நின்று கொண்டான். மகா தைரியசாலியான வந்தியத்தேவனுடைய கைகால்கள் எல்லாம் அச்சமயம் வெலவெலத்துப் போய் நடுநடுங்கின!

படிக்கட்டின் வழியாக மேலேறி மூன்று உருவங்கள் வந்தன. ஒருவன் கையில் தீவர்த்தியிருந்தது. இன்னொருவன் கையில் வேல் இருந்தது. நடுவில் வந்தவன் கையில் ஒன்றும் பிடித்திருக்கவில்லை. தீவர்த்தி வெளிச்சத்தில் அவர்கள் முகங்கள் புலப்பட்டதும் வந்தியத்தேவனுடைய பீதி அடியோடு அகன்றது. பீதியைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான வியப்பு உண்டாயிற்று. அவர்களில் முன்னால் வந்தவன் வந்தியத்தேவனுடைய பிரிய நண்பனாகிய கந்தமாறன்தான்! நடுவில் வந்த உருவம் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அரை குறையாகத் தான் பார்த்த இளவரசர் மதுராந்தகத் தேவர் என்பதை அறிந்து கொண்டான். மூன்றாவதாக, கையில் தீவர்த்தியுடன் வந்தவனை வல்லவரையன் முன்னால் பார்த்ததில்லை. அவன் வாசற் காவலனாகவோ, ஊழியக்காரனாகவோ இருக்க வேண்டும்.

வந்தியத்தேவனுடைய மூளை அதிவேகமாக வேலை செய்தது. அவர்கள் அந்தப் பாதாள வழியில் படிக்கட்டு ஏறி வருவதன் மர்மம் என்னவென்பது வெகு விரைவில் அவனுக்கு விளங்கி விட்டது. பழுவூர் இளையராணி பல்லக்கில் ஏறி முதலாவது நாளே வந்து விட்டாள். பெரிய பழுவேட்டரையர் அன்றிரவு தஞ்சைக் கோட்டைக்குத் திரும்பி விட்டார். இருவரும் கோட்டை வாசல் வழியாகப் பகிரங்கமாக வந்து விட்டார்கள். ஆனால், மதுராந்தகத்தேவர் வெளியில் போனதும் தெரியக் கூடாது; திரும்பி வருவதும் தெரியக் கூடாது. அதற்காக இந்த இரகசியச் சுரங்க வழியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இருளடைந்த மாளிகையின் மர்மமே இதுதான் போலும்! கந்தமாறன் தன்னைக் கொள்ளிடக் கரையில் விட்டுப் பிரிந்த பின்னர், வேறு எங்கேயோ ஓரிடத்தில் பெரிய பழுவேட்டரையருடன் சேர்ந்திருக்கிறான். இந்த அந்தரங்க வேலைக்கு அவனைப் பழுவேட்டரையர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுராந்தகத்தேவரைச் சுரங்க வழியில் அழைத்துச் செல்லத் துணையாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இதற்குள் அந்த மூவரும் படிக்கட்டில் மேலேறிப் போய் விட்டார்கள். வெளிச்சமும் வர வர மங்கத் தொடங்கியது. அவர்களைப் பின்தொடர்ந்து போகலாமா என்று வந்தியத்தேவன் ஒருகணம் நினைத்து, அதையும் உடனே மாற்றிக் கொண்டான். அவர்கள் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்குப் போகிறார்கள் என்பது நிச்சயம். அங்கே தான் திரும்பிப் போவதில் என்ன பயன்? சிங்கத்தின் குகையிலிருந்து தப்பித்து வந்த பிறகு தலையைக் கொடுப்பது போலத்தான்! இனித் திரும்ப நந்தினி இருந்த லதா மண்டபத்துக்குப் போவதிலும் பயன் இல்லை. ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இதற்குள் அங்கு வந்திருக்கலாம். அதுவும் அபாயகரந்தான் வேறு என்ன செய்யலாம்?... ஏன்? இந்தப் படிக்கட்டு வழியாக இறங்கிப் போய்ப் பார்த்தால் என்ன? இவ்விதம் எண்ணி அந்தச் சுரங்கப் படிக்கட்டில் இறங்கினான்.

இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான் சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே! வந்தியத்தேவன் வெளியேற எண்ணினான். ஆனால் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே போனாலும் இருள் என்னும் பூதம் வாயைப் பிளந்து கொண்டிருந்தது.

ஆகா! கதவு திறந்து மூடும் ஓசை!... மறுபடியும் காலடி ஓசை!... இன்றைய இரவின் அதிசயங்களுக்கு முடிவே கிடையாது போலும்! அதிசயங்களுக்கும் அளவில்லை! பயங்கரங்களுக்கும் எல்லையில்லை! இம்முறை வெகு தூரத்திலிருந்து அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டன.

கூத்து மேடையிலிருந்து மிகத் தொலைவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில் தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. அவன் அச்சமயம் இருந்த இடத்துக்கு உயரமான ஓர் இடத்தில், தொலை தூரம் என்று தோன்றிய தூரத்தில் அது நடந்தது. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தில் இரு கரிய உருவங்கள் தெரிந்தன. வந்தியத்தேவன் மேலும் கண் விழிகள் பிதுங்கும்படி உற்றுப் பார்த்து அந்த உருவங்கள் யாருடையவை என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். வந்த இரு உருவங்கள் மதுராந்தகத்தேவரை அழைத்துச் சென்ற கந்தமாறனும் காவலனும்.

கந்தமாறன் படிக்கட்டில் இறங்கினான். அவனுக்குப் பின் கையில் தீவர்த்தியுடன் வந்த காவலனும் கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான். கந்தமாறன் மதுராந்தகத்தேவரை அழைத்து வந்த சுரங்க வழியில் திரும்பிச் செல்கிறான் என்பதில் ஐயமில்லை. இப்போது கந்தமாறன் போகும் வழியைத் தொடர்ந்து சென்றால், எப்படியும் வெளியேறும் வாசலைக் கண்டு கொள்ளலாம். பிறகு ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம். தீவர்த்தி வெளிச்சத்தை விட்டு விடாமல், அதிகமாகவும் நெருங்காமல், காலடி ஓசை கேட்காதபடி மெதுவாக அடிவைத்து நடந்து சென்றான். சுரங்கப் பாதையின் முடிவு வந்து விட்டது. எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது. காவலன் தன் வலது கையிலிருந்த தீவர்த்தியை இடது கைக்கு மாற்றிக் கொள்கிறான். வலது கையினால் சுவரில் ஓரிடத்தில் கைவைத்து திருகாணியைத் திருகுவது போல் திருகுகிறான். சுவரில் மெல்லிய கோடு போல் ஒரு பிளவு தோன்றுகிறது. அப்பிளவு வரவரப்பெரிதாகி வருகிறது. ஓர் ஆள் நுழையும்படியான பிளவாகிறது. காவலன் ஒரு கையினால் அதைச் சுட்டிக்காட்டுகிறான். கந்தமாறன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சுவரில் தோன்றிய பிளவில் ஒரு காலைவைக்கிறான். வந்தியத்தேவன் தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்!