Sunday, November 11, 2012

25. பழுவேட்டரையரின் ஆட்கள்





பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டு ஓடினான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது. சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். அடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது.

ஓர் அடி எடுத்து வைத்தான். சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான். மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம். தஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும்.

ஆகா! இது என்ன? ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே! வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும்! பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான். நல்லவேளை! இங்கே அவ்வளவு பள்ளமில்லை! வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும்.

இரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது. சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம்! முதலாவது நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம்? அனுமார் அழித்த அசோகவனத்தை அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா! தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்! அடடா! சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்? அவ்வளவும் பாழாய்ப் போய்விட்டதே!

நந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது?... அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது!...ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ? எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும்? குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.

மெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்; "தம்பி! நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

"இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள். குதிரையில் ஏறி உடனே புறப்படு!"

தூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது.

"போ! போ! சீக்கிரம்!" என்றான் அமுதன்.

குதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன். சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான். குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.

குதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள்.

அமுதனின் தாய் கதவைத் திறந்தாள். வாசற்படியில் நின்றாள்.

"இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே? அது என்ன?" என்று இரைந்தான் ஒரு வீரன்.

அமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள்.

"இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன்? உள்ளே போய்ப் பார்க்கலாம்!" என்றான் ஒருவன்.

"அடே! குதிரைச் சத்தம் கேட்கிறதடா!"

"எல்லோரும் ஓடுங்கள்! அவன் எங்கும் போய்விட மாட்டான்." எல்லோரும் ஓடினார்கள். அமுதன் அன்னையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.