Sunday, November 11, 2012

26. குந்தவைப் பிராட்டி





சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்தது ஓடை, மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை. ஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. படகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான்.

பட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான். இருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்தது.

நீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.

படிக்கட்டுகளுக்குச் சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்.

படகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.

வந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான். பார்த்தது பார்த்தபடியே நின்றான்.

அவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.

அந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி - பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி - வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

ஈசான சிவபட்டர் தொண்டையைக் கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.

"நீர் என்னைத் தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?" என்று குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.

அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன.

"தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னைத் தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!" என்றான்.

"எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?"

"சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலருக்குப் பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமைத் தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்......"

குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, "அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!" என்றாள்.

"அப்படியானால் அரிசிலாற்றங்கரையில் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?" என்றான் வல்லவரையன்.

"ஆமாம், ஆமாம்! அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!"

"மறுபடியும் சந்திப்பதாகச் சொல்வது பொருத்தமில்லை, தேவி!"

"ஏன்?"

"விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை......."

"தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது."

"ஆம்; என்னிடம் அந்தக் குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!"

"பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் பெரும் அபாயங்கள் இருக்கின்றன.....!"

"எந்த அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?"

"தங்களுடைய அருமைச் சகோதரரின் ஓலையுடன் தூதனாக வந்த என்னைத் தஞ்சைக் கோட்டைத் தலைவர் சிறிய பழுவேட்டரையர் பிடித்து வர ஆட்களை ஏவினார். என் குதிரை மேல் இந்தப் பழையாறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அதற்குள் பழுவேட்டரையரின் ஆட்கள் சிலர் எங்களை நெருங்கி வந்து விட்டார்கள். நான் வந்த காரியம் முடிவதற்குள் அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை."

"தாங்கள் வந்த காரியம் என்ன?" என்று இளைய பிராட்டி குந்தவை தேவி கேட்டாள்.

"இதோ நான் வந்த காரியம்; தங்கள் தமையனாரின் ஓலை" என்று வல்லவரையன் கூறி ஓலையை எடுத்து நீட்டினான்.

குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது.

வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, "ஓலையைக் கொடுத்து விட்டீர். இனி என்ன செய்வதாக உத்தேசம்?" என்று கேட்டாள் குந்தவை தேவி.

"தங்களிடம் ஓலையைக் கொடுத்ததுடன் என் வேலையும் முடிந்து விட்டது. இனி, நான் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்."

"உமது வேலை முடியவில்லை; இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது!"

"தாங்கள் சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லை, தேவி!"

"உம்மிடம் அந்தரங்கமான வேலை எதையும் நம்பி ஒப்புவிக்கலாம் என்று இதில் இளவரசர் எழுதியிருக்கிறாரே? அதன்படி நீர் நடந்து கொள்ளப் போவதில்லையா?"

"இளவரசரிடம் அவ்விதம் ஒப்புக் கொண்டுதான் வந்தேன். ஆனால் என்னை நம்பி முக்கியமான வேலை எதுவும் ஒப்புவிக்க வேண்டாம். தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்."

"உமது கோரிக்கை எனக்கு விளங்கவில்லை. ஒன்றை ஒப்புக் கொண்ட பிறகு பின்வாங்குவதுதான் வாணர் குலத்தின் மரபா?"

"பழம் பெருமை பேசுவது வாணர் குலத்தின் மரபு அன்று; ஒப்புக் கொண்டு பின்வாங்குவதும் வாணர் குலத்து மரபு அன்று."

"பின்னர், ஏன் தயக்கம்? இளவரசர் உங்களிடம் இந்த ஓலையைக் கொடுத்தபோது இதில் எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்லவில்லையா?" என்று இளவரசி வினவினாள்.

"தேவி! இளவரசர் விருப்பத்தை நன்கு தெரிந்து கொண்டுதான் புறப்பட்டு வந்தேன். ஆனால் வழியெல்லாம் விரோதிகளைச் சம்பாதித்துக் கொண்டு வந்தேன். நாலாபுறத்திலும் பகைவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தாங்கள் இடும் பணியை நான் நிறைவேற்றுவதாக எப்படி உறுதி சொல்ல முடியும்? இதனால்தான் தயங்குகிறேன். என்னால் தங்கள் காரியம் கெட்டுப் போகக் கூடாதல்லவா?" என்று சொன்னான் வல்லவரையன்.

"யார் யார் அந்தப் பகைவர்கள்? எனக்குத் தெரிவிக்கலாமா?" என்று குந்தவை கவலை தொனித்த குரலில் கேட்டாள்.

"பழுவேட்டரையர்கள் என்னை வேட்டையாடிப் பிடிக்க நாலாபுறமும் ஆட்களை ஏவியிருக்கிறார்கள்."

பழையாறைக்குத் தான் வந்து சேர்வதற்குள்ளாகவே பழுவேட்டரையரின் ஆட்கள் வந்திருப்பார்கள் என்று வந்தியத்தேவன் ஊகித்திருந்தான். நகரத்தின் நுழை வாசல்கள் தோறும் அவர்கள் காத்திருப்பார்கள். சந்தேகம் ஏதேனும் தோன்றினால் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களிடம் சிக்காமல் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பது எப்படி? -- இந்தக் கவலையுடன் வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் சொல்லி அனுப்பியபடி வடமேற்றளி ஆலயத்துக்குச் சென்று ஈசான பட்டரைச் சந்தித்துப் பேசினான். அவர் இளவரசி குந்தவைப் பிராட்டியிடம் முன்னால் தெரிவித்து விட்டு ஓடை வழியாக அழைத்து வந்தார்.

அவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கியது முதலாவது குந்தவைக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அவசரமும் பரபரப்பும் அதிகமாகி வந்தன. "மேலே என்ன?" "அப்புறம் என்ன?" என்று கேட்டுக் துரிதப்படுத்தி வந்தாள்.

இந்த விவரங்களைக் கேட்ட இளவரசி வந்தியத்தேவனை வியப்பினால் மலர்ந்த கண்களைக் கொண்டு பார்த்து, "வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின் கருணை இந்தச் சோழர் குலத்துக்குப் பரிபூரணமாக இருக்கிறது. ஆகையினாலேதான் இந்தச் சங்கடமான நிலைமையில் தங்களை எனக்கு உதவியாகத் தேவி அனுப்பி வைத்திருக்கிறாள்!" என்றாள்.

"அரசி! இன்னும் தாங்கள் எந்த விதப் பணியும் எனக்கு இடவில்லையே? என் பூரண ஆற்றலைக் காட்டக் கூடிய சமயம் இன்னும் கிட்டவில்லையே!" என்றான் வல்லவரையன்.

"அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இது காறும் தமக்கு நேர்ந்திருக்கும் அபாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய அளவு அபாயம் நிறைந்த வேலையைத் தரப் போகிறேன்!" என்றாள்.

அரண்மனை நந்தவனத்தின் மத்தியில் பளிங்கினால் ஆன வஸந்த மண்டபம் ஒன்று இருந்தது. அதை நோக்கிக் குந்தவை நடந்தாள். பட்டரும் வந்தியத்தேவனும் இளவரசியைத் தொடர்ந்து சென்றார்கள்.

மண்டபத்துக்குள்ளிருந்த மணி மாடம் ஒன்றிலிருந்து குந்தவை ஒரு சிறிய பனை ஓலைத் துணுக்கையும் தங்கப் பிடி அமைத்த எழுத்தாணியையும் எடுத்தாள். ஓலைத் துணுக்கில் பின் வருமாறு எழுதினாள்:

"பொன்னியின் செல்வா! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்."

இவ்விதம் எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சிறிய சித்திரம் ஒன்று வரைந்தாள். ஓலையை வந்தியத்தேவன் கையில் கொடுப்பதற்காக நீட்டியவாறு, "சிறிதும் தாமதியாமல் இந்த ஓலையை எடுத்துக் கொண்டு ஈழ நாட்டுக்குச் செல்ல வேண்டும். இளவரசர் அருள்மொழிவர்மரிடம் கொடுத்து அவரைக் கையோடு அழைத்து வர வேண்டும்!" என்றாள்.

வந்தியத்தேவன் ஆனந்தத்தின் அலைகளினால் மோதப்பட்டுத் தத்தளித்தான். நெடு நாளாக அவன் கொண்டிருந்த மனோரதங்கள் இரண்டில் ஒன்று நிறைவேறி விட்டது. சோழர் குல விளக்கான இளைய பிராட்டியைச் சந்தித்தாகி விட்டது. அவர் மூலமாகவே இரண்டாவது மனோரதமும் நிறைவேறப் போகிறது. இளவரசர் அருள்மொழிவர்மரைச் சந்திக்கும் பேறு கிடைக்கப் போகிறது.

"தேவி! என் மனத்துக்குகந்த பணியையே தருகிறீர்கள். ஓலையை எடுத்துக் கொண்டு இப்போதே புறப்படுகிறேன்!" என்று சொல்லி ஓலையைப் பெற்றுக் கொள்வதற்காக வலக் கரத்தை நீட்டினான்.

குந்தவை ஓலையை அவனிடம் கொடுத்த போது காந்தள் மலரையொத்த அவளுடைய விரல்கள் வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டக் கையைத் தொட்டன. அவனுடைய மெய் சிலிர்த்தது; நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. ஆயிரம் பதினாயிரம் பட்டுப் பூச்சிகள் அவன் முன்னால் இறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது விழுந்து நாலா பக்கமும் சிதறின.

இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின.

ஈசான சிவபட்டர் தம் குரலைக் கனைத்துக் கொண்டார்.

வந்தியத்தேவன் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தான்!