Sunday, November 11, 2012

33. கரையர் குலப் பெண்





மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.

"அப்பா! என்பேரில் கோபமா?" என்று கேட்டாள்.

சுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது.

"உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்?" என்றார்.

"தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத் தான்!"

"ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?"

"தந்தையே, சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"

"சில சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே! அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்து வந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்..."

"ஆம்; தந்தையே! இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்..."

"பார்த்தாயா? நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே? நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே?" என்றார் சக்கரவர்த்தி.

"கேட்கவேண்டுமா, அப்பா! உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா? தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா?" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.

"எனக்குத் தெரியும், மகளே! அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்!" என்றார் சுந்தர சோழர்.

நாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில் எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில் நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு "அப்பா! பிழைத்தோம்!" என்று பெருமூச்சு விட்டான்.

அந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள்.

திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில் காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று அவனுக்குத் தோன்றவில்லை. மரக்கிளையில் சாய்ந்து உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.

திடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்த தூரம் குறுகிக் கொண்டிருந்திருந்தன. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது நேரம் இருக்கவில்லை. வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான். கரடி அந்தப் பெண்ணை நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது. அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல் என்று ஒரு சத்தம் போட்டு விட்டுத் திரும்பியது. பெண் பிழைத்தாள், ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப் பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த வாலிபனே வெற்றி பெற்றான்.

வெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும் தேடின. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் வியப்பும், முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண். உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன. ஆனால் அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று சொல்லும்படியிருந்தாள். அருகில் நெருங்கினான். எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து ஓடினாள். சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான். அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.

"இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க வேண்டும்? மறுபடியும் பார்க்காமலா போகிறோம்!" என்று கருதி நின்றுவிட்டான். கடற்கரையோரமாகச் சென்று தெள்ளிய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் 'கரையர்' என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின் மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.

இதைக் கேட்டதும் தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.

வாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது. கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது.

"திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்" என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத் தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு கண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்...

"குந்தவை! அந்த வலைஞர் குலப் பெண் அப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண் முன் தோன்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக் காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் சொல்லட்டுமா?" என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.

உருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின் அருமைக் குமாரி "சொல்லுங்கள், அப்பா" என்றாள்.