இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே சொல்லத் தொடங்கினார்:-
"என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத் திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் நண்பன் அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். உன் தாயாரிடம் சொல்ல முடியாது. உன்னிடந்தான் சொல்ல வேண்டுமென்று சில காலமாகவே எண்ணியிருந்தேன். அதற்குச் சந்தர்ப்பம் இன்றைக்கு வந்தது. நீ என் நிலையைக் கண்டு சிரிக்கமாட்டாய்; என் மனத்திலுள்ள புண்ணை ஆற்றுவதற்கு முயல்வாய்; என்னுடைய விருப்பம் நிறைவேறவும் உதவி செய்வாய்! - இந்த நம்பிக்கையுடன் உன்னிடம் சொல்கிறேன்...
"அந்தத் தீவிலிருந்து மரக்கலத்தில் ஏறிப் புறப்பட்டேன் கோடிக்கரை சேர்ந்தேன். என் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி இந்தத் தஞ்சை அரண்மனையில் அப்போது தங்கியிருக்கிறார் என்று அறிந்து நேராக இங்கே வந்தேன்."
"நான் தஞ்சை வந்து சேர்ந்தபோது பராந்தக சக்கரவர்த்தி மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் நொந்து போயிருந்தது. நாற்பது ஆண்டு காலத்தில் அவர் நிர்மாணித்த மகாராஜ்யம் சின்னா பின்னம் அடைந்து கொண்டிருந்தது. அவருக்குப் பிறகு பட்டத்தை அடைய வேண்டியவரான இராஜாதித்தர் தக்கோலப் போரில் மாண்டார். அதே போர்க்களத்தில் படுகாயம் அடைந்த என் தந்தை அரிஞ்சயர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற நிலையில் இருந்தார். கன்னர தேவனுடைய படைகள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டு வந்தன. தெற்கே பாண்டியர்கள் தலையெடுத்து வந்தார்கள். இலங்கையில் சோழ சைன்யம் தோல்வியுற்றுத் திரும்பி விட்டது. பல போர்க்களங்களிலும் சோழ நாட்டு வீராதி வீரர் பலர் உயிர் துறந்து விட்டார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் ஒருமிக்க வந்து முதிய பிராயத்துப் பராந்தக சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தித் துயரக் கடலில் ஆழ்த்தியிருந்தன. இந்த நிலையில் என்னைக் கண்டதும் அவருடைய முகம் மலர்ச்சி அடைந்தது. என் பாட்டனாருக்கு நான் குழந்தையாயிருந்த நாளிலிருந்து என் பேரில் மிக்க பிரியம். என்னை எங்கேயும் அனுப்பாமல் அரண்மனையில் தம்முடனேயே வெகுகாலம் வைத்திருந்தார். பிடிவாதம் பிடித்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நான் ஈழ நாட்டுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வந்தவர்களிலே நான் இல்லை என்று அறிந்ததும் என் பாட்டனாரின் மனம் உடைந்து போயிருந்தது. நான் இறந்து விட்டதாகவும் தெரியவில்லையாதலால் என்னைத் தேடிவரக் கூட்டங் கூட்டமாக ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.
"கடைசியில் ஒரு கூட்டம் என்னைக் கண்டுபிடித்தது. நான் தஞ்சை வந்து சேர்ந்ததும், புண்பட்ட அவர் மனத்துக்குச் சிறிது சாந்தி ஏற்பட்டது. அவருடைய அந்தியகாலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த சோழ சாம்ராஜ்யம் மறுபடியும் என்னால் மேன்மையடையும் என்பதாக எப்படியோ அவர் மனத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அதற்குத் தகுந்தாற்போல், அவருக்குப் புதல்வர்கள் நாலு பேர் இருந்தும், அவருடைய அந்திய காலத்தில் பேரன் நான் ஒருவனே இருந்தேன். சக்கரவர்த்தி இறக்கும் தறுவாயில் என்னை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து கண்ணீர் பெருக்கினார். 'அப்பனே! எனக்குப் பிறகு உன் பெரியப்பன் கண்டராதித்தன் சிம்மாசனம் ஏறுவான். அவனுக்குப் பிறகு இந்தச் சோழ ராஜ்யம் உன்னை அடையும். உன்னுடைய காலத்திலேதான் மறுபடி இந்தச் சோழ குலம் மேன்மையடையப் போகிறது' என்று பலமுறை அவர் கூறினார். சோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, அவ்வாறு என்னிடம் வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார்..."
"என் பாட்டனார் என்னிடம் எவ்வளவு பிரியம் வைத்திருந்தாரோ, அவ்வளவு நான் அவரிடம் பக்தி வைத்திருந்தேன். ஆதலின் அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நடப்பதென்று உறுதி கொண்டேன். ஆனாலும் என் உள்ளத்தில் அமைதி இல்லை. கடல் சூழ்ந்த தீவில் கரடிக்கு இரையாகாமல் என்னைக் காப்பாற்றிய கரையர் குலமகளின் கதி என்ன? என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய். முதல் மனைவிக்குக் குழந்தை இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம். பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும்? இதைப் பற்றி ராஜ்யத்தில் சிலர் அப்போதே பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஆனால் அத்தகைய சந்தேகம் யாருக்கும் உண்டாகக்கூடாது என்று மகாத்மாவாகிய என் பெரிய தகப்பனார் விரும்பினார் போலும். பராந்தக சக்கரவர்த்தி காலமான பிறகு கண்டராதித்தருக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அதே சமயத்தில் எனக்கும் யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று என் பெரியப்பா - புதிய சக்கரவர்த்தி - ஏற்பாடு செய்துவிட்டார்...
"என் பிரிய மகளே! இன்றைக்கு உன் தம்பி அருள் மொழியின் பேரில் இந்நாட்டு மக்கள் எப்படிப் பிரியமாயிருக்கிறார்களோ, அப்படி அந்த நாளில் என்பேரில் அபிமானமாயிருந்தார்கள். அரண்மனைக்குள்ளே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது வெளியிலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். புதிதாக முடிசூடிய சக்கரவர்த்தியும், யுவராஜாவும் சேர்ந்தாற்போல் ஜனங்களுக்குக் காட்சி தரவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். அவ்விதமே பெரியப்பாவும், நானும் இந்த அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலுக்கு வந்து நின்றோம். கீழே ஒரே ஜன சமுத்திரமாக இருந்தது. அவ்வளவு பேருடைய முகங்களும் மலர்ந்து விளங்கின. எங்களைக் கண்டதும் அவ்வளவு பேரும் குதூகலமடைந்து ஆரவாரித்தார்கள்."
"எங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்ற மலர்ந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்து கொண்டு வந்தேன். அந்த ஜனங்களிலே எல்லோரும் ஒரே களிப்புடன் காணப்பட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு முகம், ஒரு பெண்ணின் முகம், சோகம் ததும்பிய முகம், கண்ணீர் நிறைந்த கண்களினால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த முகம், தெரிந்தது. அத்தனைக் கூட்டத்துக்கு நடுவில், எப்படி அந்த ஒரு முகம், என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்ததென்பதை நான் அறியேன். பிறகு அங்கிருந்து என் கண்களும் நகரவில்லை; கவனமும் பெயரவில்லை. என் தலை சுழன்றது; கால்கள் பலமிழந்தன; நினைவு தவறியது...அப்படியே நான் மயங்கி விழுந்து விட்டதாகவும் பக்கத்திலிருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் பிற்பாடு அறிந்தேன்."
"பிறகு எனக்கு நல்ல நினைவு வந்ததும் என் நண்பன் அநிருத்தனைத் தனியாக அழைத்து, அந்த ஊமைப் பெண்ணின் அடையாளம் கூறி எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டேன். தஞ்சை நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அத்தகைய ஊமைப் பெண் யாரும் இல்லையென்று அநிருத்தன் வந்து சொன்னான். என்னுடைய உள்ளத்தின் பிரமையாக இருக்குமென்றும் கூறினான். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்னேன். அப்படியே பல வழிகளிலும் ஆட்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள். கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப் பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத் தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம். இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு கோடிக்கரைக்குப் புறப்பட்டேன்.
குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு வேகமாகச் செலுத்திக் கொண்டு கோடிக்கரை சேர்ந்தேன். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை; காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிது நேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லையாம்! திடீரென்று 'வீல்' என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம்! பெண் உருவம் ஒன்று விளக்கின் ஊச்சியிலிருந்து கடலில் தலைகீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம். படகுகளைக் கொண்டு வந்து ஆனமட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப் பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க வேண்டியிருந்ததாம். இந்தச் செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சில் ஈட்டியினால் குத்துவது போன்ற வலியும், வேதனையும் உண்டாயின."
"வேதனையுடன் தஞ்சைக்குத் திரும்பினேன். இராஜ்ய காரியங்களில் மனத்தைச் செலுத்தினேன். போர்க்களங்களுக்குச் சென்றேன். உன் தாயை மணந்து கொண்டேன். வீரப் புதல்வர்களைப் பெற்றேன். உன்னை என் மகளாக அடையும் பாக்கியத்தையும் பெற்றேன்... ஆனாலும், மகளே! செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரகாட்சி, - நான் கண்ணால் பாராத அந்தக் காட்சி, - தோன்றி என்னை வருத்திக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என் கனவிலும் கற்பனையிலும் தோன்றிக் கொண்டிருந்தது.
கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில் படுத்திருப்பவர்கள் 'என்ன? என்ன?' என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை கேட்டதுண்டு. ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை. 'ஒன்றுமில்லை' என்று சொல்வேன். நாளடைவில் காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும் என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத் தான் சமீப காலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப் போனவர்கள் அதிகக் கொடுமைக்காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே! ஊமைச்சியின் ஆவி என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித்திருக்கிறது!"
இவ்விதம் சொல்லிவிட்டுச் சுந்தரசோழர் தம் பார்வையை எங்கேயோ தூரத்தில் செலுத்தி வெறித்துப் பார்த்தார். எல்லையற்ற இரக்கம் அவர் பேரில் குந்தவைக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின் மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, "அப்பா! இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது. இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? இனிமேல் தங்கள் உடம்பு சரியாகப் போய்விடும்" என்றாள். சுந்தரசோழர் அதைக் கேட்டுச் சிரித்த சிரிப்பின் ஒலியில் வேதனையுடன் கூட அவநம்பிக்கையும் கலந்திருந்ததேன்?
தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தவை தன் இருப்பிடத்துக்குச் சென்றாள். வழியில் அன்னை வானமாதேவியைச் சந்தித்தாள். "அம்மா! இனிமேல் என் தந்தையை ஒரு கண நேரம்கூட விட்டுப் பிரியாதீர்கள்!" என்றாள்.