Sunday, November 11, 2012

35. நந்தினியின் ஓலை





பழுவேட்டரையர் அரண்மனையிலிருந்து லதா மண்டபத்துக்கு வரும் பாதையில் விரைந்து வந்து கொண்டிருந்தார்.

பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, "நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்லவேளையாக வந்துவிட்டீர்கள்!" என்றாள்.

"ஆமாம்; போன காரியம் முடிந்து விட்டது; திரும்பி விட்டேன்" என்றார்.

"இது கிடக்கட்டும். நந்தினி! ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக இப்போது வந்தேன். இலங்கை மாதோட்டத்தில் ஒருவனை ஒற்றன் என்று சந்தேகித்துப் பிடித்திருக்கிறார்களாம். அவனிடம் இளவரசன் அருள்மொழிவர்மனுக்கு ஓலை ஒன்றிருக்கிறதாம். அவன் பெரிய கைகாரனாய்த் தானிருக்க வேண்டும். நம் ஆட்களிடம் அகப்படாமல் தப்பி இலங்கைக்குச் சென்று விட்டான் பார்!" என்றார் பழுவேட்டரையர்.

"நாதா! அவன் தப்பிச் சென்றது எனக்கு ஒன்றும் அதிசயமாய்த் தோன்றவில்லை. தங்கள் சகோதரர் இந்தக் கோட்டைக் காவலுக்குத் தகுதியற்றவர் என்றுதான் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறேனே! அவர் அனுப்பிய ஆட்களும் அப்படித்தானே இருப்பார்கள்?" என்றாள் நந்தினி.

"முன்னெல்லாம் நீ அப்படிச் சொன்னபோது எனக்கு அது சரியாகப் படவில்லை. இப்போது எனக்குக்கூட அப்படித்தான் தோன்றுகிறது. இன்னும் ஒரு விந்தையைக் கேள்! மாதோட்டத்தில் அகப்பட்ட ஒற்றனிடம் நமது பழுவூர் இலச்சினை ஒன்று இருந்ததாம். அது அவனிடம் எப்படிக் கிடைத்தது என்று அவன் சொல்லவில்லையாம்!..."

நந்தினி இலேசாக ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "இது என்ன வேடிக்கை? பனை இலச்சினை அவனிடம் எப்படிக் கிடைத்ததாம்? தங்கள் சகோதரர் இதற்கு என்ன சொல்கிறார்?" என்றாள்.

"அவனா? அவன் சொல்லுவதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு வரும்! அந்தப் பனை இலச்சினை உன்னிடமிருந்துதான் அவனிடம் போயிருக்க வேண்டுமென்கிறான் காலாந்தகன்!" என்று சொல்லிவிட்டுப் பழுவேட்டரையர் இடிஇடியென்று சிரித்தார்.

நந்தினியும் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே, "என் மைத்துனர் இருக்கிறாரே, அவருக்கு இணையான புத்திக் கூர்மை படைத்தவர் இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!" என்றாள்.

"இன்னும் உன் மைத்துனன் என்ன சொல்கிறான் தெரியுமா? நல்ல வேடிக்கை! அதை நினைக்க நினைக்க எனக்குச் சிரிப்பு வருகிறது! தஞ்சைக் கோட்டை வாசலில் நீ பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது உன்னை அவன் சந்தித்துப் பேசினானாம். பிறகு இந்த அரண்மனைக்குள்ளும் அந்த மாயாவி வந்திருந்தானாம். ஆகையால் நீயே அவனிடம் பழுவூர் இலச்சினையைக் கொடுத்திருக்கவேணுமாம்! அப்படியில்லாவிட்டால், உன்னிடம் யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி வருகிறானே, அவன் மூலமாக போயிருக்க வேண்டுமாம்! தன்னுடைய முட்டாள் தனத்தை மறைப்பதற்காக அவன் இப்படியெல்லாம் கற்பனை செய்து உளறுகிறான்!" என்று கூறிப் பழுவேட்டரையர் தமது நீண்ட பற்கள் எல்லாம் தெரியும்படியாக மறுபடியும் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரித்தார்.

"என் மைத்துனருடைய அறிவுக் கூர்மையைப் பற்றி நான் சந்தேகித்தது ரொம்பத் தவறு. அவருடைய அறிவு உலக்கைக் கொழுந்துதான்! சந்தேகமில்லை! ஆனால் இதையெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டு சும்மா இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வியப்பாயிருக்கிறது!" என்றாள் நந்தினி. அவளுடைய முகபாவம் மறுபடியும் மாறி, அதில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடித்தது. கண்ணில் தீப்பொறி பறந்தது.

வீராதி வீரரும் போர்க்களத்தில் எத்தனையோ வேல் வீச்சுக்களை இறுமாந்து தாங்கியவருமான பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் சிறு கோபத்தைத் தாங்க முடியாமல் தடுமாறினார். அவருடைய தோற்றத்திலும் பேச்சிலும் திடீரென்று ஒரு தளர்ச்சி காணப்பட்டது.

"தேவி! நான் அதையெல்லாம் சும்மா கேட்டுக் கொண்டிருந்தேன் என்றா நினைக்கிறாய்? அவனுடைய கையாலாகாத் தனத்தைப் பற்றி மிகக் கடுமையாகப் பேசி அவனை அழவைத்து விட்டேன். நீ பார்த்திருந்தால் அவன் பேரில் இரக்கம் அடைந்திருப்பாய்!" என்றார்.

"நாதா! நான் தங்களுக்கு எச்சரித்ததை எண்ணிப் பாருங்கள். இந்த இராஜ்யத்தில் உள்ள அவ்வளவு பேரும் சேர்ந்து தங்களை வஞ்சிக்கப் பார்க்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா? இது உண்மை என்பது இப்போதாவது தங்களுக்குத் தெரிகிறதா?"

பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சம் கிளியின் குரலில், "நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!" என்றாள்.

"ஒருநாளுமில்லை நந்தினி! என் கையில் பிடித்த வேலிலும், அரையில் சொருகிய வாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. ஆயினும் உன்னுடைய காரியங்கள் சில எனக்கு அர்த்தமாகவில்லை. ஆதித்த கரிகாலனுக்கு நீ எதற்காக ஓலை கொடுத்து அனுப்புகிறாய்? கடம்பூர் மாளிகைக்கு எதற்காக அவனை அழைக்கச் சொல்கிறாய்? அவன் அல்லவா நம்முடைய யோசனை நிறைவேறுவதற்கு முதல் விரோதி?" என்றார் பழுவேட்டரையர்.

"இல்லை, இல்லை! ஆதித்த கரிகாலர் நம் முதல் விரோதி இல்லை. அந்தப் பழையாறைப் பெண் பாம்புதான் நம் முதல் விரோதி. நாதா! நான் அடிக்கடி சொல்லி வந்திருப்பதை இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இளைய பிராட்டி குந்தவை தன் மனத்திற்குள் ஏதோ ஒரு தனி யோசனை வைத்திருக்கிறாள் என்று சொல்லி வந்தேன் அல்லவா? அது என்னவென்று இப்போது கண்டுபிடித்து விட்டேன். மற்ற எல்லாரையும் விலக்கிவிட்டு, அவளுடைய இளைய சகோதரன் அருள்மொழிவர்மனைத் தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க அவள் தீர்மானித்திருக்கிறாள். அவளுடைய சூழ்ச்சிக்கு எதிர் சூழ்ச்சி செய்து அவளுடைய நோக்கம் நிறைவேறாமல் செய்ய வேண்டும். காஞ்சிக்கு நான் ஓலை அனுப்பியதன் காரணம் இப்போது தெரிகிறதல்லவா?" என்று நந்தினி கேட்டு விட்டுப் பழுவேட்டரையரைப் பார்த்த பார்வை அவருடைய நெஞ்சை ஊடுருவி, அவர் அறிவை நிலை குலையச் செய்தது.

ஒன்றும் தெரியாவிட்டாலும், "ஆம் தெரிகிறது!" என்று குழறினார் அந்த வீரக்கிழவர்.

"நாதா! தாங்களும் தங்கள் முன்னோர்களும் புரிந்த அரும்பெரும் வீரச் செயல்களினாலேயே இன்று இந்தச் சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு பல்கிப் பரவியிருக்கிறது. எந்த விதத்திலாவது தங்களுக்கு என் பேரில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் தங்கள் உடைவாளினால் என்னை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்று விடுங்கள்!" என்றாள் நந்தினி.

"என் கண்ணே! இத்தகைய கர்ண கடூரமான மொழிகளைச் சொல்லி என்னைச் சித்திரவதை செய்யாதே!" என்றார் பெரிய பழுவேட்டரையர்.