Sunday, November 11, 2012

36. கொடும்பாளூர்ப் பெரிய வேளார்




வந்தியத்தேவன் ஈழத்துக் கடற்கரையோடு நடந்து சென்று பாலாவி நதிக்கரையில் இருந்த மாதோட்ட மாநகரை அடைந்திருந்தான். இராமேசுவரக் கடலுக்கு அப்புறத்தில் ஈழ நாட்டுக் கடற்கரையில் இருந்த அம்மாநகரம் பசுமையான மரங்கள் அடர்ந்த சோலைகளினால் சூழப்பட்டுக் கண்ணுக்கு இனிய காட்சி அளித்தது. மாவும், பலாவும், தென்னையும் அந்தக் கரையைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்தன. தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துப் போருக்கு வந்த படைகள் பெரும்பாலும் அங்கேதான் இறங்கின. திரும்பிச் சென்ற படைகளும் அங்கேதான் கப்பல் ஏறின. நகரம் பல தடவை கைமாறிவிட்டது. சில சமயம் இலங்கை மன்னர்களிடமும், சில சமயம் பாண்டிய அரசர்களிடமும் அது இருந்தது. பராந்தக சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

அத்தகைய நகரத்தின் கோட்டை மதில் வாசலில் ஒரு நாள் வந்தியத்தேவன் வந்து நின்றான். சோழ சேநாதிபதியைப் பார்க்க வேண்டும் என்றான். காவலர்கள் அவனை உள்ளே விட மறுத்தார்கள். அதன் பேரில், காவலர்களைப் பலவந்தமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தான். காவலர்கள் அவனைச் சிறைப் பிடித்துக் கோட்டைத் தலைவனிடம் கொண்டு போனார்கள். வந்தியத்தேவன் கோட்டைத் தலைவனிடம் இளவரசர் அருள்மொழிவர்மருக்கு முக்கியமான ஓலை கொண்டு வந்திருப்பதாகவும், அதைப்பற்றி சோழ சேநாதிபதியிடந்தான் விவரம் சொல்ல முடியும் என்று கூறினான். அவனைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். 'பொன்னியின் செல்வ'னுக்கு ஓர் ஓலையும், பழுவூர் பனை இலச்சினையும் அவனிடம் இருக்கக் கண்டார்கள்.

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி அச்சமயம் இலங்கைப் படையின் சேநாதிபதியாக இருந்தார். அவரிடம் போய்ச் சொன்னார்கள்.

கொடும்பாளூர்ப் பெரிய வேளார் வயது முதிர்ந்த அநுபவசாலி; பல போர்க்களங்களில் பழந்தின்று கொட்டையும் போட்டவர். சோழ குலத்தாருடன் நெருங்கிய நட்பும் உறவும் பூண்டவர். அவருடைய சகோதரராகிய கொடும்பாளூர்ச் சிறிய வேளார் சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைப் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார். அவருடன் சென்ற சைன்யமும் தோல்வியடைந்து திரும்ப நேர்ந்தது. அந்தப் பழியைத் துடைத்துக் கொடும்பாளூரின் வீரப் பிரதாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் பெரிதும் ஆத்திரம் கொண்டிருந்தார். ஆகையாலேயே சற்று வயதானவராயிருந்தும் இலங்கைப் படைக்குத் தலைமை வகித்து அங்கு வந்திருந்தார்.

இலங்கைப் போரை நன்கு நடத்த முடியாமல் பழுவேட்டரையர்களால் விளைந்த இடையூறுகளைப் பற்றி அந்த இரண்டு சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த போட்டியும் பகைமையும் இப்போது அதிகமாய் வளர்ந்திருந்தன. எனவே, பழுவூர் முத்திரையிட்ட இலச்சினையுடன் அகப்பட்டுக் கொண்ட வந்தியத் தேவன் பாடு சேநாதிபதி பெரிய வேளாரிடம் கஷ்டமாகத்தான் போயிருக்கும். வந்தியத்தேவனைப் பற்றிய உண்மையை ஆழ்வார்க்கடியானிடமிருந்து தெரிந்து கொண்ட அநிருத்தர் அவனையே சேநாதிபதி பூதி விக்கிரம கேசரியிடம் சென்று உண்மையைத் தெரியப்படுத்தும்படி அவசரமாக அனுப்பி வைத்திருந்தார்.

வாணர் குலத்து வீரகுமாரனை மேலும் கீழும் உற்றுப் பார்த்த சேநாதிபதி பூதி விக்கிரம கேசரிக்கு அவனிடம் நல்ல அபிப்பிராயம் உண்டாகியிருக்கவேண்டும்.
"தம்பி! பழையாறையில் எங்கள் குலவிளக்கை நீ பார்த்தாயா?"

"பார்த்தேன், ஐயா! இளைய பிராட்டியுடன் இணை பிரியாமல் இருந்து வருகிறவரை எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்?"

"தம்பி! எங்கள் வீட்டுப் பெண்ணைப்பற்றி, வானதியைப் பற்றி, இளைய பிராட்டி எனக்குச் செய்தி ஒன்றும் அனுப்பவில்லையா?"

"தங்களுக்குச் செய்தி அனுப்பவில்லை. ஆனால்..."

"ஆனால், என்ன?"

"யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பியிருக்கிறார்கள். வானதி தேவியைப் பற்றி இளவரசரிடம் நேரில் சில செய்திகளைச் சொல்லும்படி பணித்திருக்கிறார்கள்..."

"உன்னைப் போன்ற புத்திசாலிப் பிள்ளையை நான் பார்த்ததேயில்லை!" என்று கூறிச் சேநாதிபதி பெரிய வேளார் வந்தியத்தேவனை மார்போடு அணைத்துக்கொண்டார். பின்னர், "சரி; இனி வீண் பொழுது போக்க வேண்டாம்; புறப்படுங்கள்!" என்று சொன்னார்.

"ஐயா! இந்த வீர வைஷ்ணவர் என்னோடு அவசியம் வரத்தான் வேணுமா? இவர் இல்லாமல் நான் தனியே போகக் கூடாதா?"

"இவர் வருவதில் உனக்கு என்ன ஆட்சேபம்?" திருமலை உன்னோடு வராவிட்டால் நீ இளவரசரைக் கண்டுபிடிக்க முடியாது. அவர் இருக்குமிடமே யாருக்கும் தெரியாது. மேலும் இளவரசரிடம் கொடுப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான ஓலை கொண்டு வருகிறான். ஆகையால் இரண்டு பேருமாகச் சேர்ந்து போவதே நல்லது! வழியில் ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள்!"

இவ்விதம் சொல்லிவிட்டுப் பெரிய வேளார் மறுபடியும் வந்தியத்தேவனை அருகில் அழைத்து அவன் காதோடு இரகசியமாகச் சொன்னார்.

"தம்பி! இவனால் உன் காரியத்துக்கு இடைஞ்சல் ஒன்றும் நேராது. ஆனாலும் ஜாக்கிரதையாகவே இரு! இளவரசரிடம் இவன் என்ன செய்தி சொல்லுகிறான் என்பதைத் தெரிந்து வந்து என்னிடம் சொல்லு!"

ஆழ்வார்க்கடியானைத் தனக்கு ஒற்றனாகப் பின்னோடு அனுப்புகிறார்கள் என்று முதலில் வந்தியத்தேவன் எண்ணியிருந்தான். இப்போது அவனுக்குத் தான் ஒற்றன் என்று ஏற்பட்டது. இந்த நிலைமை வந்தியத்தேவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அன்றிரவே புறப்பட்டார்கள். பிரயாணம் தொடங்கி இரண்டு நாள் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். முதலில் கொஞ்சதூரம் ஊர்ப்புறங்களாக இருந்தன. ஓரளவு ஜன நடமாட்டமும் இருந்தது. வர வரக் காட்டுப் பிரதேசமாக மாறி வந்தது. முதலில் குட்டை மரங்கள் நிறைந்த காடாயிருந்தது. பின்னர் வானை அளாவிய பெரிய மரங்கள் அடர்ந்த அரண்யங்களாக மாறின. இடையிடையே ஏரிகள் தென்பட்டன. ஆனால் அவற்றின் கரைகள் பல இடங்களில் இடிந்து கிடந்தன. தண்ணீர் நாலாபுறமும் ஓடிப்போய் ஏரிகள் வறண்டு கிடந்தன. கழனியில் பயிர் செய்யப்படாமல் கிடந்தன. இன்னும் ஓரிடத்தில் விசாலமான பிரதேசத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. பாலாவி நதியின் கரை வெட்டப் பட்டபடியால் அதன் தண்ணீர் நதியோடு போகாமல் வெளியில் கண்டபடி சிதறிச் சென்று அப்படித் தண்ணீர்த் தேக்கம் உண்டானதாகத் தெரிந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு பிரயாணத்திசை மாறியது. கிழக்குத் திசையில் சென்றவர்கள் இப்போது தெற்கு நோக்கித் திரும்பினார்கள். வர வரப் பிரதேசங்கள் அடர்த்தியாகிக் கொண்டு வந்தன. சமவெளிப் பிரதேசம் மாறிப் பாறைகளும் சிறிய குன்றுகளும் எதிர்ப்பட்டன. இன்னும் தூரத்தில் பெரிய மலைத் தொடர்கள் வானை அளாவிய சிகரங்களுடன் தென்பட்டன. காடுகளின் தோற்றம் பயங்கரமாகிக் கொண்டு வந்தது. காட்டுவழியில் எவ்வளவு துரிதமாகப் போக முடியுமோ அவ்வளவு துரிதமாகச் சென்றார்கள். அஸ்தமிக்கும் சமயத்துக்கு இராஜபாட்டையை அடைந்தார்கள்.