Sunday, November 11, 2012

37. யானைப் பாகன்




இராஜபாட்டையில் வருவோரும் போவோரும், வண்டிகளும் வாகனங்களுமாக ஒரே கலகலப்பாக இருந்தது. "இந்த இராஜபாட்டை எங்கிருந்து எங்கே போகிறது? நாம் எங்கே வந்திருக்கிறோம்? எங்கே போகிறோம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"அநுராதபுரத்திலிருந்து சிம்மகிரிக்குப் போகும் இராஜபாட்டையில் வந்து சேர்ந்திருக்கிறோம்." என்றான் ஆழ்வார்க்கடியான்.

"இராஜபாட்டை வழியாகச் சுகமாய் வந்திருக்கலாமே? எதற்காகக் காட்டு வழியாக வந்தோம்?"

"இராஜபாட்டையில் நாம் நெடுகிலும் வந்திருந்தால் நூறு இடத்தில் நம்மை நிறுத்திச் சோதனை செய்திருப்பார்கள். அநுராதபுரத்தில் அடியோடு நிறுத்திப் போட்டிருப்பார்கள். நாம் யாரைத் தேடி வந்திருக்கிறோமோ அவர் சிம்மகிரிக்குப் பக்கம் சென்றிருப்பதாக அறிந்தேன். அதனால்தான் குறுக்குவழியில் வந்தேன். இன்னமும் அவரை நாம் கண்டுபிடிக்கத்தான் போகிறோமோ, இல்லையோ? வேறு எங்கேயாவது போகாதிருக்க வேண்டும்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

இராஜபாட்டையின் இரு பக்கத்திலும் ஏராளமான வீடுகளும், கிராமங்களும், கடைவீதிகளும், கொல்லர், தச்சர் பட்டறைகளும் இருந்தன. அவற்றில் வசித்தவர்களும் தொழில் செய்தவர்களும் பெரும்பாலும் சிங்களவர்களாகத் தோன்றினார்கள். இராஜபாட்டையில் தமிழ்நாட்டுப் போர் வீரர்கள் குறுக்கும் நெடுக்கும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இரு புறமும் வசித்த சிங்களவர்கள் எவ்வித தடையுமின்றி நிர்ப்பயமாய்த் தங்கள் தொழில்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

"இந்தப் பகுதியெல்லாம் இப்போது யாருடைய வசத்தில் இருக்கிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"சோழ சைன்யம் தம்பள்ளை வரையில் கைப்பற்றியிருக்கிறது. அப்பால் சிம்மகிரிக் குன்றும், கோட்டையும் மகிந்தன் வசம் இருக்கின்றன."

"இந்தப் பக்கங்களில் வசிக்கும் ஜனங்கள்?"

"பெரும்பாலும் சிங்களத்தார்கள். 'பொன்னியின் செல்வர்' இங்கே வந்தபிறகு யுத்தத்தின் போக்கே மாறிவிட்டது. சோழ வீரர்களுக்கும் மகிந்தனுடைய வீரர்களுக்குத்தான் சண்டை. அதாவது போர்க்களத்தில் எதிர்ப்படும்போது. மற்றப்படி குடிகள் நிர்ப்பயமாய் வாழலாம். புத்த குருமார்களுக்கு ஒரே கொண்டாட்டாம். அநுராதபுரத்தில் இடிந்துபோன புத்த விஹாரங்களையெல்லாம் நம் இளவரசர் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி கட்டளையிட்டிருக்கிறாராம்!"

சிறிது தூரம் மௌனமாக நடந்தார்கள். அந்த மோனத்தைக் கலைத்துச் சில குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்களுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து அச்சப்தம் வந்தது. சில நிமிஷத்துக்கெல்லாம் நாலு குதிரைகள் வெகுவேகமாக நாலுகால் பாய்ச்சலில் வந்தன. சூறாவளிக் காற்றைப் போல் புழுதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டு வந்த அக்குதிரைகள் மின்னல் மின்னும் நேரத்தில் நம் கால் நடைப் பிரயாணிகளைத் தாண்டிச் சென்றன. ஆயினும் அந்தச் சிறிய நேரத்திலேயே அக்குதிரைகளின் மேலிருந்தவர்களில் ஒருவருடைய முகத்தை வந்தியத்தேவன் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது! ஆகா! பார்த்திபேந்திர வர்மன் அல்லவா இவன்? காஞ்சியிலுள்ள இளவரசர் ஆதித்தரின் அந்தரங்க நண்பன் அல்லவா? இவன் எங்கே வந்துவிட்டு, எங்கே போகிறான்? எதற்காக இவன் இலங்கைக்கு வந்தான்? எப்போது வந்தான்?...

ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், "தம்பி! அந்த மற்ற மூன்று ஆட்களையும் பார்த்தாயா? அவர்களில் யாரையாவது உனக்கு முன்னம் தெரியுமா?" என்று ஆவலோடு கேட்டான்.

"இல்லை, நான் பார்த்ததேயில்லை!" என்றான் வந்தியத்தேவன்.

"ஆம், நீ பார்த்திருக்க முடியாதுதான். அவர்களில் இரண்டு பேரை நான் பார்த்திருக்கிறேன். திருப்புறம்பயம் பள்ளிப்படையில் நள்ளிரவில் பார்த்தேன்! அப்பா! என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்!" என்று கூறிய போது ஆழ்வார்க்கடியானுடைய உடம்பு முழுவதும் நடுங்கிற்று.

"அப்படி என்ன பயங்கரமான சபதம் எடுத்துக் கொண்டார்கள்?"

"சோழர் குலப் பூண்டே இந்த உலகில் இல்லாமல் அழித்து விடுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள்!"

"ஐயையோ!"

"இவர்கள் எப்படி நமக்கு முன்னால் இங்கு வந்து சேர்ந்தார்களோ தெரியவில்லை! கெட்டிக்காரர்கள்! இந்த முரட்டுப் பல்லவனை எப்படியோ பிடித்துக் கொண்டார்கள், பார்!" என்று சொல்லிவிட்டு ஆழ்வார்க்கடியான் மௌனமானான்.

வந்தியத்தேவனுக்குக் கோடிக்கரையில் அவன் அறிந்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அவன் கோடிக்கரை வந்ததற்கு முதல்நாள்தான் இரண்டு பேர் அவசரமாக இலங்கைக்குப் போனார்கள் என்றும், பூங்குழலியின் தமையன் அவர்களைப் படகில் ஏற்றிச் சென்றான் என்றும் கேள்விப்பட்டான் அல்லவா. இவர்களில் அந்த இரண்டு பேரும் இருப்பார்களோ? அப்படியானால் பார்த்திபேந்திரனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?

"அதோ பார்!"

ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய இடத்தில் அலங்கரித்த பெரிய யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் அம்பாரியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும், உடையும் அவர்கள் சீன யாத்திரிகர்கள் என்று புலப்படுத்தின. யானைப்பாகன் ஒருவன் கையில் அங்குசத்துடன் யானையின் கழுத்தின் மீது வீற்றிருந்தான். யானையைச் சுற்றிச் சூழ்ந்து வந்த ஜனங்கள் பலவித ஆரவார கோஷங்களைக் கிளப்பினார்கள். யானையையும், யானையைச் சூழ்ந்து நின்ற கூட்டத்துக்கும் பின்னால் சற்றுத் தூரத்தில் இவர்களும் தொடர்ந்து போனார்கள்.

ஒரு புத்த விஹாரத்தின் வாசலில் வந்ததும் யானை நின்றது. பிறகு யானைப் பாகன் ஏதோ சொல்லவும் யானை மண்டியிட்டுப்படுத்தது. யாத்திரீகர்கள் இறங்கினார்கள். புத்த விஹாரத்தின் வாசலில் கும்பலாக நின்ற புத்த பிக்ஷுக்கள் சீன யாத்திரீகர்களை வரவேற்றார்கள். சங்கங்கள் முழங்கின; விஹாரத்தின் மேன் மாடத்திலிருந்து மலர் மாரி பொழிந்தது. "புத்தம் சரணம் கச்சாமி" என்ற கோஷம் வானளாவியது. சீன யாத்திரீகர்கள் இருவரும் விஹாரத்துக்குள் சென்றார்கள். கூட வந்தவர்களிலும் பெரும்பாலோர் அவர்களைத் தொடர்ந்து விஹாரத்துக்குள்ளே சென்றார்கள்.

யாத்திரீகர்கள் இறங்குவதற்கு முன்பே யானையின் கழுத்திலிருந்து இறங்கிவிட்ட யானைப் பாகன் யானையை எழுப்பி நடத்திக்கொண்டு சென்றான். சற்றுத் தூரத்தில் நின்றிருந்த நாலு பேரில் ஒருவனிடம் யானையை ஒப்புவித்தான். இன்னும் ஒருவனிடம் ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு சிறிது நேரத்தில் வீதியின் ஒரு திருப்பத்தில் திரும்பி மறைந்தான்.

யானைப் பாகன் எந்த ஆளுக்கு ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டினானோ அவன் இவர்கள் நின்ற இடத்தை நோக்கி வந்தான். ஆழ்வார்க்கடியானிடம் மெல்லிய குரலில், "ஐயா! என்னுடன் வருவதற்குச் சம்மதமா?" என்று கேட்டான்.

"அதற்காகவே காத்திருக்கிறோம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அடையாளம் ஏதாவது உண்டா?"

சேநாதிபதி கொடுத்திருந்த கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தை ஆழ்வார்க்கடியான் காட்டினான்.

"சரி, என் பின்னால் வாருங்கள்" என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல, இவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள். ஊரைத்தாண்டி அப்பால் சென்றதும் குறுகிய காட்டுப் பாதை ஒன்று தென்பட்டது. அதன் வழியே சிறிது தூரம் சென்றதும் பாதையிலிருந்து சற்று விலகியிருந்த ஒரு பாழும் மண்டபத்தை அடைந்தார்கள். அதில் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களை அழைத்து வந்தவன் தெரிவித்தான். பிறகு அவன் ஒரு மரத்தின் மேலேறி அவர்கள் வந்த வழியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

அந்தப் பாழும் மண்டபத்தில் பின்னால் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. குதிரைகள் இரண்டுதான் என்பது வந்தியத்தேவனுக்குக் கொஞ்சம் கவலையை உண்டாக்கியது.

"வைஷ்ணவரே! அந்த யானைப் பாகன் யார்?"

"யாராயிருக்கும்? நீயே ஊகித்துப் பார், தம்பி!"

"யானைப் பாகன்தான் பொன்னியின் செல்வரா?"

"அவருடைய கண்களில் ஒரு கணம் ஜொலித்த பிரகாசத்திலிருந்து அப்படித்தான் தோன்றியது."

திடீரென்று குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்கள் இருந்த இடத்தை நோக்கிச் சப்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மரத்தின் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் அவசரமாகக் கீழே இறங்கினான். இரண்டு குதிரைகளையும் பிடித்துக்கொண்டு வந்தான். ஒன்றில் தான் ஏறிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானை இன்னொன்றின் மேல் ஏறிக் கொள்ளச் சொன்னான். "சற்று நேரத்தில் இந்தப் பாதையுடன் சில குதிரைகள் போகும். அவற்றின் பின்னோடு நாமும், தொடர்ந்து போகவேண்டும்" என்றான்.

வந்தியத்தேவன் "எனக்குக் குதிரை?" என்று கேட்டான்.

"இவரை மட்டுந்தான் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!"

"இளவரசரை நான் உடனே பார்த்தாக வேண்டும். மிக முக்கியமான செய்தி கொண்டுவந்திருக்கிறேன்."

"அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஐயா!"

ஆழ்வார்க்கடியான், "தம்பி! கொஞ்சம் பொறுமையாயிரு! நான் போய் இளவரசரிடம் சொல்லி உன்னையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றான்.

"வைஷ்ணவரே! நான் கொண்டு வந்திருக்கும் செய்தி மிக முக்கியமானது, மிக அவசரமானது என்று உமக்குத் தெரியாதா?"

"அந்த ஓலையை என்னிடம் கொடு; நான் கொடுத்து விடுகிறேன்."

"அது முடியாது."

"அப்படியானால் கொஞ்சம் பொறுத்திரு, வேறு வழி இல்லை!"

"வேறு வழி இல்லையா?"

"இல்லவே இல்லை!"

வந்தியத்தேவனுடைய உள்ளம் குமுறியது. ஆழ்வார்க்கடியானை இளவரசரிடந்தான் அழைத்துப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'ஆழ்வார்க்கடியான் அவரிடம் என்ன சொல்கிறான்' என்பதைச் சேநாதிபதி கவனிக்கச் சொல்லியிருக்கிறார். அது முடியாமற் போய்விடுமே? குதிரைகள் நெருங்கி வந்தன; அவர்கள் இருக்கும் இடத்தைக் கடந்து சென்றன; மின்னல் மின்னும் வேகத்தில் பறந்து சென்றன.

மண்டபத்தில் குதிரைகள் மீது ஆயத்தமாயிருந்த இருவரும் குதிரையின் முகக் கயிற்றை இழுத்துக் குலுக்கிப் புறப்படத் தூண்டினார்கள். அச்சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. குதிரை மேலிருந்த மனிதனுடைய ஒரு காலை வந்தியத்தேவன் பிடித்து ஒரு எத்து எத்தித் தள்ளினான். அந்த மனிதன் தடால் என்று விழுந்தான். வந்தியத்தேவன் குதிரை மீது தாவி ஏறினான்; குதிரை பறந்தது. தொடர்ந்து ஆழ்வார்க்கடியானுடைய குதிரையும் பறந்தது. கீழே விழுந்த வீரன் கூச்சலிட்டு விட்டு உறையிலிருந்த கத்தியை எடுத்து எறிந்தான். வந்தியத்தேவன் தலை குனிந்து குதிரையின் முதுகோடு ஒட்டிப் படுத்துக் கொண்டான். வீரன் எறிந்த கத்தி வேகமாகச் சென்று ஒரு மரத்தில் ஆழமாய்ப் பாய்ந்தது. குதிரைகள் இரண்டும் காற்றாய்ப் பறந்து சென்றன.

முன்னால் சென்ற மூன்று குதிரைகளையும் பின்தொடர்ந்து ரொம்பவும் நெருங்காமலும், ரொம்பவும் பின் தங்காமலும் இந்த இரண்டு குதிரைகளும் சென்றன. "நல்ல வேலை செய்தாய், தம்பி!" என்று ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை உற்சாகப்படுத்தினான். ஆனால் வந்தியத்தேவன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதன் முடிவு என்ன ஆகப் போகிறதோ என்று அவன் உள்ளம் கவலையில் ஆழ்ந்திருந்தது. குதிரைகள் வாயு வேக, மனோ வேகமாய்க் குறுகிய காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தன.