Sunday, November 11, 2012

38. அருள்மொழித்தேவர்




முடிவில்லாத வழியில் குதிரைகள் போய்க் கொண்டிருப்பதாக வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான இருள். எதிரே மூன்று குதிரைகள் போவது சில சமயம் கண்ணுக்கு நிழல் உருவங்களாகத் தெரிந்தது. ஆனால் குதிரைகளின் குளம்புச் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

திடீரென்று வேறு சில சப்தங்கள் கேட்டன. காட்டின் நடுவில் எதிர்பார்க்க முடியாத சப்தங்கள். பல மனிதக் குரல்களின் கோலாகல சப்தம். குதூகலமாக ஆடிப்பாடும் சப்தம். ஆ! அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சம் தென்படுகிறது. சுளுந்துகளின் வெளிச்சத்தோடு பெரிய காளவாய் போன்ற அடுப்புகள் எரியும் வெளிச்சமும் தெரிகிறது. ஆகா! இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டுக் கொண்டு குதூகலமாயிருக்கும் வீரர்கள் யார்? சோழ நாட்டு வீரர்களா? அல்லது பகைவர் படையைச் சேர்ந்த வீரர்களா?

இதைப் பற்றி வந்தியத்தேவன் மிகச் சொற்ப நேரந்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிறிய நேரத்தில் முன்னால் போன குதிரைகள் சட்டென்று நின்றதையும் ஒரு குதிரை பளீர் என்று திரும்பியதையும் வந்தியத்தேவன் கவனிக்கவில்லை. திரும்பிய குதிரை முன்னோக்கி வந்து வந்தியத்தேவன் குதிரையை அணுகியது. அதன்மேலிருந்தவன் வந்தியத்தேவன் பக்கம் சட்டென்று சாய்ந்து ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் கதி கலங்கித் தடுமாறியபோது அவனுடைய ஒரு முழங்காலைப் பிடித்து ஓங்கித் தள்ளினான். வந்தியத்தேவன் தடால் என்று தரையில் விழுந்தான்.

இதற்குள் அவனைத் தள்ளிய வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து வந்தியத்தேவன் அருகில் வந்தான். திக்பிரமை கொண்டவனாய்த் தள்ளாடி எழுந்திருக்க முயன்ற வந்தியத்தேவனுடைய இடையிலிருந்த கத்தியைப் பறித்துத் தூர வீசி எறிந்தான். உடனே வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். இரண்டு கையையும் இறுக மூடிக் கொண்டு வஜ்ரம் போன்ற முஷ்டியினால் தன்னைத் தள்ளிய ஆளைக் குத்தினான். குத்து வாங்கிக் கொண்டவன் சும்மா இருப்பானா? அவனும் தன் கைவரிசையைக் காட்டினான். இருவருக்குள்ளும் பிரமாதமான துவந்த யுத்தம் நடந்தது.

வந்தியத்தேவனுடன் வந்த ஆழ்வார்க்கடியானும், அவர்களுக்கு முன்னால் வந்த வீரர்களும் அந்த அதிசயமான சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் காலடிச் சத்தங்கள் கேட்டன. கையில் கொளுத்தப்பட்ட சுளுந்துகளுடன் வீரர்கள் சிலர் மரக்கிளைகளை விலக்கிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களும் அதிசயத்துடன் அந்தத் துவந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கலானார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது.

கடைசியாக வந்தியத்தேவன் கீழே தள்ளப்பட்டான். அவனைத் தள்ளியவீரன் அவன் மார்பின்பேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடையில் சுற்றியிருந்த துணிச் சுருளை அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த ஓலையைக் கைப்பற்றினான். அதைத் தடுப்பதற்கு வந்தியத்தேவன் ஆனமட்டும் முயன்றும் அவன் முயற்சி பலிக்கவில்லை.

ஓலை அவ்வீரனுடைய கையில் சிக்கியதும் துள்ளிப் பாய்ந்து சுற்றிலும் நின்றவர்கள் பிடித்திருந்த சுளுந்து வெளிச்சத் தண்டை சென்றான். அவன் ஒரு சமிக்ஞை செய்யவும் மற்றும் இரு வீரர்கள் ஓடிவந்து வந்தியத்தேவன் தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் பிடித்துக் கொண்டார்கள்.

வந்தியத்தேவன் சொல்ல முடியாத ஆத்திரத்துடனும் தாபத்துடனும், "பாவி வைஷ்ணவனே! அவனிடமிருந்து அந்த ஓலையைப் பிடுங்கு!" என்று கத்தினான்.

ஆழ்வார்க்கடியான் குதிரையிலிருந்து சாவதானமாக இறங்கி வந்தியத்தேவன் அருகில் சென்று, "அடே அசடே! ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது! ஏன் வீணாகப் புலம்புகிறாய்?" என்றான்.

சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே ஒரு மகத்தான குதூகல ஆரவாரம் அவர்களிடமிருந்து எழுந்தது.

"பொன்னியின் செல்வர் வாழ்க! வாழ்க!" "சோழ குலத் தோன்றல் வாழ்க!" என்பன போன்ற கோஷங்கள் எழுந்து அந்த வனப்பிரதேசமெல்லாம் பரவின.

நன்றாகக் குத்தும் அடியும் பட்ட வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.

'ஆகா! இவர்தானா இளவரசர் அருள்மொழிவர்மர்! இவர் கையிலே தான் எவ்வளவு வலிவு! என்ன விரைவு! குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்களே! குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும்." என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

அருள்மொழித்தேவர் வந்தியத்தேவனை நோக்கிச் சமீபத்தில் வந்தார்.

"அன்பரே! வருக! வருக! அழகிய இலங்கைத் தீவுக்கு வருக! சோழ நாட்டு வீராதி வீரர்களுடனே சேர்வதற்கு இத்தனை தூரம் கடல் கடந்து வந்தீர் அல்லவா? அப்படி வந்த உமக்கு நான் அளித்த வீர வரவேற்பு திருப்தி அளித்திருக்கிறதா?" என்று இளவரசர் கூறிப் புன்னகை பூத்தார்.