Sunday, November 11, 2012

39. வீரத்தோழன்





வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய கல்லடுப்புகளில் ஜுவாலை வீசிய நெருப்பின் பேரில் பிரம்மாண்டமான தவலைகளில் கூட்டாஞ்சோறு பொங்கிக் கொண்டிருந்தது. சோறு பொங்கி முடியும் வரையில் பொழுது போவதற்காக அவர்கள் ஆடல் பாடல் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
"இளவரசே! எங்களுக்கு முன்னாலேயே இங்கு வந்த பார்த்திபேந்திர பல்லவனை நாங்கள் பார்த்தோம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆம்; அவர் எதற்காக வந்திருப்பார் என்று உன்னால் ஊகித்துச் சொல்ல முடியுமா?"

"நிச்சயமாகவே சொல்ல முடியும். தங்களைக் காஞ்சிக்கு அழைத்து வரும்படியாக ஆதித்த கரிகாலர் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்."

"அடடே! உனக்குத் தெரிந்திருக்கிறதே! இதோ உன் சிநேகிதன் இவ்வளவு பத்திரமாக கொண்டுவந்து ஒப்புவித்தானே, இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்றும் உனக்குத் தெரியும் போலிருக்கிறது?"

"தங்களை உடனே பழையாறைக்கு வந்து சேரும்படி தங்கள் தமக்கையார் எழுதியிருக்கிறார்கள். இளவரசே!" இவனை வழியிலெங்கும் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாதபடி காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு நான் பட்ட பாட்டைப் புத்தபகவானே அறிவார். அநுராதபுரத்தின் வழியாக வந்திருந்தால் இவன் நிச்சயமாக இங்கு வந்து சேர்ந்திருக்க மாட்டான். வழியில் யாருடனாவது சண்டை பிடித்துச் செத்திருப்பான். அதனாலே காட்டு வழியாக இவனைத் தங்களிடம் பத்திரமாய்க் கொண்டு வந்தேன்!" என்றான்.

"ஓஹோ! அப்படியானால் இவனைப் பத்திரமாகக் கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பதற்காகவே நீ இலங்கைக்கு வந்தாயா, என்ன?"

"இல்லை, ஐயா! என் பங்குக்கு நானும் தங்களுக்கு ஒரு செய்திகொண்டு வந்திருக்கிறேன். முதன் மந்திரி அநிருத்தர் தாங்கள் இலங்கையிலேயே இன்னும் சிறிது காலம் இருப்பது உசிதம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்."

"இப்படி மூன்று மூத்தவர்கள் மூன்று விதமாகச் செய்தி அனுப்பினால் நான் எதையென்று கேட்பது?" என்றார் அருள்மொழிவர்மர்.

இச்சமயத்தில் வந்தியத்தேவன் குறுக்கிட்டு, "இளவரசே! மன்னிக்கவேண்டும்! தாங்கள் கேட்க வேண்டியது தங்கள் தமக்கையாரின் வார்த்தையைத்தான்!" என்றான்.

"ஏன் அவ்விதம் சொல்லுகிறீர்?"

"ஏனெனில், தங்கள் தமக்கையின் வார்த்தைக்கே மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தங்கள் இருதயம் தங்களுக்குச் சொல்கிறது. அப்படித் தாங்கள் அவர் வார்த்தையைக் கேட்காவிட்டாலும், நான் கேட்டே தீர வேண்டும். தங்களை எப்படியும் அழைத்துக் கொண்டு வரும்படியாக இளைய பிராட்டி எனக்குப் பணித்திருக்கிறார்!" என்றான் வந்தியத்தேவன்.

இளவரசர் வந்தியத்தேவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "இத்தகைய ஒரு வீரத்தோழன் கிடைக்க வேண்டுமேயென்று எத்தனையோ நாளாக நான் தவம் செய்துகொண்டிருந்தேன்!" என்றார்.

மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்குள் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டார்கள். சிறிது தூரம் காட்டுப் பாதையில் வந்த பிறகு இராஜபாட்டையை அடைந்தார்கள். வேறு வீரர்கள் யாரையும் இளவரசர் தம்முடன் மெய்க்காவலுக்கு அழைத்து வராதது வந்தியத்தேவனுக்கு வியப்பை அளித்தது. ஆனால் அன்றைய பிரயாணத்தில் அவனுக்கிருந்த உற்சாகத்தைப் போல் அதற்குமுன் என்றுமிருந்ததில்லை.

இச்சமயத்தில் சாலையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு புழுதிப் படலம் தெரிந்தது. பல குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் வரும் சத்தமும் கேட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் சிறிய குதிரைப் படை ஒன்று கண்ணுக்குத் தெரிந்தது. குதிரை வீரர்கள் கையில் பிடித்திருந்த வேல் முனைகள் காலை வெய்யிலில் பளபளவென்று ஜொலித்தன. அவர்களுக்கு மத்தியில் புலிக் கொடி பறந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியானுடைய கவலை நீங்கியது. அவர்களில் முன்னால் வந்த கட்டியக்காரர்கள் பறையறைந்து அறிவித்தார்கள்.

"ஈழத்துப் போரில் மகிந்தனைப் புறங்கண்ட இலங்கைப் படைகளின் சேநாதிபதி கொடும்பாளூர்ப் பெரிய வேளார்பூதி மகாராஜா விஜயமாகிறார்! பராக்!" என்று ஒரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

"பல்லவ குலத் தோன்றல் - வைகைப் போரில் வீர பாண்டியன் தலை கொண்ட வீராதி வீரர் - வடபெண்ணைப் போரில் வேங்கிப் படையை முறியடித்த பராக்கிரம பூபதி - பார்த்திபேந்திர வர்மர் விஜயமாகிறார்! பராக்" என்ற இன்னொரு இடி முழக்கக் குரல் ஒலித்தது.

இப்படிக் கட்டியம் கூறியவர்களுக்குப் பின்னால் சுமார் முப்பது குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுள் நடுநாயகமாகக் கம்பீரமான வெள்ளைப் புரவிகளின் மீது சேநாதிபதி பெரிய வேளாரும், பார்த்திபேந்திரனும் வீற்றிருந்தார்கள். குதிரை வீரர்களைத் தொடர்ந்து அம்பாரியுடன் ஒரு பெரிய யானை வந்தது. யானை மேல் அம்பாரியிலிருந்து பூங்குழலி கீழே இறங்கினாள்.

இளவரசர் பார்த்திபேந்திர பல்லவரின் சமீபமாகச் சென்று "முக்கியக் காரியமாக இல்லாவிட்டால் தாங்களே புறப்பட்டு வருவீர்களா? இப்போதே செய்தியைத் தெரிவிக்க வேணும்!" என்றார்.

சேனாதிபதி பெரிய வேளார், "நடுச்சாலையில் இத்தனை பேருக்கு நடுவிலே ஒன்றும் பேசமுடியாது. அதோ ஒரு பாழும் மண்டபம் தெரிகிறதே! அங்கே போகலாம்!" என்றார்.

சாலைக்கு அப்பால் கொஞ்ச தூரத்திலிருந்து பாழும் மண்டபத்தை நோக்கி அனைவரும் போனார்கள்.

மேற்கூரையில்லாமல் வேலைப்பாடான கருங்கல் தூண்கள் மட்டும் நின்ற மண்டபத்தை அவர்கள் அடைந்தார்கள். மண்டபத்தின் மத்தியில் ஒரு மேடான பீடமும் இருந்தது. அங்கே சென்று இளவரசரும் சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் அமர்ந்தார்கள். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சற்றுத் தள்ளி நின்றார்கள். இன்னொரு பக்கத்தில் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள்.

"தளபதி! தங்களுடைய யோசனை என்ன? சில நாளைக்கு முன்பு முதன் மந்திரி அநிருத்தப் பிரமராயர் வந்திருந்தார். அவர் என் தந்தையின் மதிப்புக்கும் அபிமானத்துக்கும் உரியவர். அவர் என்னை இலங்கையிலேயே சில காலம் இருக்கும்படி யோசனை சொன்னார். தாங்களும் அதை ஆமோதித்தீர்கள். முதன் மந்திரி இதோ நிற்கும் வைஷ்ணவரிடம் அதே யோசனையைத் திரும்பச் சொல்லி அனுப்பியிருக்கிறார். என் தமக்கை இளைய பிராட்டியிடம் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பது தங்களுக்குத் தெரியும். அவர் இட்ட கோட்டை நான் தாண்ட மாட்டேன். இலங்கைக்கு அவர் வரச் சொல்லித்தான் வந்தேன். இளைய பிராட்டி இதோ இந்த வாணர்குலத்து வீரனிடம் ஓலை அனுப்பியிருக்கிறார். ஒரு விதத்தில் என் தமக்கையின் செய்தியும் பார்த்திபேந்திரர் கூறியதை ஒட்டியிருந்தது. ஆனால் உடனே புறப்பட்டுப் பழையாறைக்கு வரும்படி எழுதி அனுப்பியிருக்கிறார். என் தமையனாரோ காஞ்சிக்கு வரும்படி இவரிடம் கூறி அனுப்பியுள்ளார். சேநாதிபதி! தங்களுடைய கருத்து என்ன?" என்றார் இளவரசர்.

"இளவரசே! இன்று காலை வரையில் தாங்கள் இந்த இலங்கைத் தீவிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துடனேயே நான் இருந்தேன். ஆனால், இன்று அதிகாலையில், அதோ நிற்கிறாளே, அந்தப் பெண் வந்து ஒரு செய்தி சொன்னாள். அதைக் கேட்டது என் கருத்தை மாற்றிக் கொண்டேன். தாங்கள் உடனே காஞ்சிக்குப் போகவேண்டியது அவசியம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது!" என்றார் இலங்கைச் சேநாதிபதி.

தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலியின் மீது இளவரசர் தம் பார்வையைச் செலுத்தினார்.

"அந்தப் பெண் என்னதான் செய்தி கொண்டு வந்திருக்கிறாள்?" என்றார்.

"இளவரசே! தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காகப் பழுவேட்டரையர்கள் இரண்டு பெரிய மரக்கலங்களையும் அவை நிறையப் போர் வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்றுக் கால்வாயில் புகுந்து மறைவான இடத்திலே வந்து நிற்கின்றன!" என்ற சேநாதிபதி தொடர்ந்து பூங்குழலி கூறியதை மேலும் விரிவாகச் சொன்னார்.

சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

பார்த்திபேந்திரன் கொதித்தெழுந்தான். "சேநாதிபதி! என்ன சொன்னீர்? இது உண்மைதானா? என்னிடம் ஏன் இது வரையில் சொல்லவில்லை? இந்தப் பெண்ணை நீர் நம்முடன் கட்டி இழுத்து வந்ததற்குக் காரணம் இப்போதல்லவா தெரிகிறது? மறுபடியும் கேட்கிறேன்; பழுவேட்டரையர்கள் இளவரசரைச் சிறைப்படுத்தி வரக் கப்பல்களை அனுப்பியிருப்பது உண்மையா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா! இந்தப் பெண் கண்ணால் பார்த்ததாகவும், காதால் கேட்டதாகவும் கூறுவதை நம்புவதாயிருந்தால் அது உண்மைதான்!"

"ஆகா! அந்தக் கிழவர், திருக்கோவலூர் மிலாடுடையார், கூறியது உண்மையாயிற்று. பழுவேட்டரையர்களை உள்ளபடி உணர்ந்தவர் அவர்தான்! சேநாதிபதி! இத்தகைய செய்தியை அறிந்த பிறகும் ஏன் சும்மா இருக்கிறீர்? பராந்தக சக்கரவர்த்தியின் குலத்தோன்றலை, சுந்தர சோழரின் செல்வப் புதல்வரை, நாடு நகரமெல்லாம் போற்றும் இளவரசரை இந்த அற்பர்களாகிய பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வர ஆட்களை அனுப்பும்படி ஆகிவிட்டதா? இனியும் என்ன யோசனை? உடனே படைகளுடன் புறப்பட்டுச் சென்று இளவரசரைச் சிறைப்படுத்த வந்தவர்களை அழித்து இந்த இலங்கைத் தீவிலேயே அவர்களுக்குச் சமாதியை எழுப்புவோம்!... பிறகு நாம் போட்ட திட்டத்தின்படி காரியத்தை நடத்துவோம்! கிளம்புங்கள்! இன்னும் ஏன் தயக்கம்?" என்று பார்த்திபேந்திரன் பொரி பொரித்துக் கொட்டினான்.

சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி அவனைப் பார்த்து "பார்த்திபேந்திரா! நீ இப்படித் துடிப்பாய் என்று எண்ணித்தான் நான் முன்னமே இந்தப் பெண் கொண்டு வந்த சேதியை உன்னிடம் சொல்லவில்லை. நன்றாக யோசித்துச் செய்ய வேண்டிய காரியம். அவசரப்படுவதில் பயனில்லை!" என்றார்.

அப்போது இளவரசர், "சேநாதிபதியின் மனத்தில் உள்ளதையும் தெரிந்து கொள்ளலாமே? ஐயா! தாங்கள் எதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறீர்கள்?" என்று எவ்விதப் படபடப்புமின்றி நிதானமாகக் கேட்டார்.

"தங்களைச் சிறைப்படுத்துவதற்கு... இந்த வார்த்தைகளைச் சொல்லவும் என் வாய் கூசுகிறது... ஆனாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களின் சக்கரவர்த்தியின் கட்டளையோடு வந்திருந்தால் நாம் என்ன செய்வது? அப்போதும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதா?"

இதைக் கேட்ட பார்த்திபேந்திரன் கடகடவென்று சிரித்து விட்டு, "அழகாயிருக்கிறது, தங்கள் வார்த்தை! சக்கரவர்த்தி சொந்தமாகக் கட்டளை போடும் நிலையில் இருக்கிறாரா? அவரையேதான் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்களே!" என்றான்

"பூங்குழலி! நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே? மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய்! தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி! சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா? மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்?" என்றார் இளவரசர்.

"அரசே! அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது. தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்தகுருக்களுடன் சேர்ந்து கொண்டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்... இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது."

"நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய்! சக்கரவர்த்தியின் தூதர்களை எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா...? நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா?"

"சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்..."

"ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய்."