Sunday, November 11, 2012

44. சூடாமணி விஹாரம்




ஒரு நாழிகை நேரம் படகு கால்வாயில் சென்ற பிறகு, பூங்குழலி படகைக் கரையோரமாக நிறுத்தினாள். கால்வாயின் கரைமீதேறிக் காட்டு வழியில் புகுந்து சென்றாள்.

அது என்ன? ஐயோ! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறதே? யாரோ நம்மைத் தொடர்ந்து வருவது போலிருக்கிறதே? யாராயிருக்கும்? எதற்காக இருக்கும்?

பூங்குழலி கோபத்துடன் திரும்பி நின்ற அதே சமயத்தில், கலகலவென்று சிரித்தாள்.

"அத்தான்! நீதானா?"

"ஆமாம்! பூங்குழலி!"

"இப்படி வா!"

"இதோ வந்துவிட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.

"நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய்! எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்?"

"பூங்குழலி! உன்னைப் பார்ப்பதற்காக தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன்! தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன்."

"அமுதா! நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டாள்.

"பூங்குழலி! கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்."

"ஐயோ! படகு என்ன ஆயிற்று!"

"படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம்!"கூறினான் சேந்தன் அமுதன்.

"அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்! நீ எப்படி இங்கு வந்தாய்? எதற்காக?" என்று பூங்குழலி கேட்டாள்.

"தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார்...."

"இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது."

"ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். பூங்குழலி! நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்."

"நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது?"

"கால்வாய் வழியாகத்தான்!"

"அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே!"

"வேண்டியதில்லை, பூங்குழலி! அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோம். வல்லவரையன் இங்கிருந்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது."

இருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். வந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.

கால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.

இளவரசர் கண் விழித்தார்.

"உடனே நான் பழையாறைக்குப் புறப்பட வேண்டுமே" என்றார் இளவரசர்.

"இல்லை, தங்களை நாகைப்பட்டினத்துக்கு அழைத்துச் செல்லும்படி செய்தி வந்திருக்கிறது."

"யாரிடமிருந்து?"

"இளைய பிராட்டியிடமிருந்துதான்!"

"அது யார் அங்கே, இன்னொருவன்? வந்தியத்தேவனுடன் படகை இழுத்து வருகிறவன்?"

"என் அத்தான் சேந்தன் அமுதன். இளையபிராட்டி அவனிடந்தான் செய்தி அனுப்பியிருக்கிறார். தங்களை நாகைப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விஹாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி."

"பூங்குழலி! வா, போகலாம்!" என்று கூறி இளவரசர் எழுந்து நின்றார்.

அந்த முயற்சியில் திடீரென்று கீழே விழுந்தார். பூங்குழலி அவரைத் தாங்கிக் கொண்டாள்.

படகைக் கரை சேர்ந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். மீண்டும் உணர்ச்சியை இழந்துவிட்ட இளவரசரை அவர்கள் மெதுவாகத் தூக்கிக் கொண்டு போய்ப் படகில் பத்திரமாய்ச் சேர்த்துப் படுக்க வைத்தார்கள்.

கால்வாயில் படகு போக ஆரம்பித்தது. இளவரசரைத் தவிர்த்து, மற்ற மூவரும் இட நெருக்கடியுடன் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.

வந்தியத்தேவன், "பூங்குழலி! நாலுபேரை இந்தப் படகு தாங்குவது கடினம். எப்படியும் நான் உங்களிடம் விடை பெற்றுக் கொள்ள வேண்டியவன். இங்கேயே இறங்கிக் கொள்கிறேன். இளவரசரைப் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்ப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை!" என்று சொன்னான்.

"கோடிக்கரைக் காடு தாண்டிய பிறகு இறங்கிச் செல்லலாமே? என் குதிரையையும் அங்கேதான் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடையாளம் நினைவிருக்கிறதல்லவா?" என்றான் சேந்தன் அமுதன்.

" ஆகட்டும், இளவரசர் மறுபடி விழித்தால் நான் பழையாறைக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள். அங்கிருந்து விரைவில் செய்தி அனுப்புவதாகவும் சொல்லுங்கள். அப்போதுதான் நிம்மதியாக இருப்பார்."

மறுநாள் சூரியோதய நேரத்தில் உலகமே பொன்னிறமாக ஜொலித்த வேளையில், படகு நாகைப்பட்டினத்தை அடைந்தது. நாகைப்பட்டினத்தின் அருகில் அந்த ஓடையிலிருந்து ஒரு கிளை பிரிந்து சூடாமணி விஹாரத்திற்கே நேராகச் சென்றது. அந்தக் கிளை வழியில் படகைக் கொண்டு போனார்கள். புத்த விஹாரத்தின் பின்புறத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

சேந்தன் அமுதன் தட்டுத்தடுமாறி வழி தேடிக்கொண்டு, விஹாரத்தின் வாசற்பக்கம் போய்ச் சேர்ந்தான். அங்கேதான் பொதுமக்கள் வந்து வழிபடுவதற்குரிய புத்தர் பெருமானின் சைத்யம் என்னும் கோயில் இருந்தது. பக்தர்கள் பலர் அந்தக் காலை நேரத்தில் தாமரை மலர்களும் செண்பகப் பூக்களும், மற்ற பூஜைத் திரவியங்களும் நிறைந்த தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள். சேந்தன் அமுதன் புத்த பிக்ஷுக்களிடையே புகுந்து ஆச்சாரியரை அணுக யத்தனித்தான்.

உடனே அவனைப் பலர் தடுத்தார்கள். "இவன் யார்? இங்கே எப்படி வந்தான்?" என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

"ஐயா அடியேன் பெயர் சேந்தன் அமுதன்! தஞ்சையைச் சேர்ந்தவன். உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்! நோயாளி ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன்!"

ஆச்சாரிய பிக்ஷு "வா! அப்பனே" என்று அமுதனை அழைத்துக் கொண்டு சென்றார்.

அருகில் போய் அந்த இளைஞர் யார் என்பதை உற்றுப் பார்த்ததும், பிக்ஷு திகைத்துப் போனார். சந்தேக நிவர்த்திக்காக, "இளவரசர் அருள்மொழிவர்மர் தானா?" என்று சேந்தன் அமுதனைக் கேட்டார்.

மற்ற பிக்ஷுக்களைப் பார்த்து அவர், "இந்தப் பிள்ளைக்கு விஷ சுரம்தான் வந்திருக்கிறது. இவனை வெளியில் அனுப்பினால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வந்துவிடும். ஆகையால் இந்த இளைஞனை என் அறைக்கு அழைத்துப் போய், நானே பணிவிடையும் செய்யப்போகிறேன், இடையில் சுர வேகத்தினால் இவன் ஏதாவது பிதற்றினால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்!" என்றார்.

உடனே தலைமைப் பிக்ஷு இளவரசர் அருகிலே நெருங்கி ஒரு கையினால் அவரை அணைத்துத் தூக்கினார். சேந்தன் அமுதன் இன்னொரு பக்கத்தில் இளவரசரைப் பிடித்துக் கொண்டு உதவினான். எல்லாரும் படிகளில் ஏறிச் சென்றார்கள்.