Sunday, November 11, 2012

45. மதுராந்தகத் தேவர்




வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான்.

இளவரசி குந்தவையிடம், "தாங்கள் கூறிய பணியை நிறைவேற்றிவிட்டேன்" என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும் என்பதையும் நினைத்தான்.

கடைசியாகப் பிற்பகலில் சூரியன் அஸ்தமிப்பதற்கு இரண்டு நாழிகை இருந்தபோதுதான் பழையாறைக் கோட்டையின் பெரிய சுவர் அவனுக்குப் புலப்பட்டது. குதிரையின் வேகத்தை அவன் குறைத்துக்கொண்டு கோட்டை வாசலை நெருங்கியபோது மற்றொரு திசையிலிருந்து ஒரு கூட்டம் வருவதைக் கண்டான். வேல் பிடித்த வீரர்கள், விருதுகளைச் சுமந்தவர்கள், குதிரைகள் ஏறி வந்தவர்கள் - இவ்வளவு பேருக்கும் நடுவில் தாமரைப் பூ வடிவமாக அமைந்த ஒரு தங்க ரதம். ஆஹா! அந்த ரதத்தில் வீற்றிருப்பது யார்? இளவரசர் மதுராந்தகத் தேவர் அல்லவா?

சற்று நேரத்துக்கெல்லாம் பழையாறைக் கோட்டைக் கதவு திறந்தது. மதுராந்தகத்தேவரும் அவருடைய பரிவாரங்களும் வந்தியத்தேவனும் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.

சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு முன்னால் சோழ நாட்டில் அரசு செலுத்தியவர் அவருடைய பெரிய தந்தை கண்டராதித்த சோழர். அவரும், அவருடைய தர்மபத்தினியான மழவரையர் மகள் செம்பியன்மாதேவியும் சிவபக்த சிகாமணிகள். சிவாலயத் திருப்பணிகளிலேயே தங்கள் வாழ்க்கையை அவர்கள் முழுவதும் ஈடுபடுத்தியவர்கள். தமிழ்நாடெங்கும் சிதறிக்கிடந்த தேவாரத் திருப்பதிகங்களைத் தொகுத்துச் சேர்க்கக் கண்டராதித்தர் ஆசை கொண்டிருந்தார். அந்த ஆசை அவர் ஆயுள் காலத்தில் நிறைவேறவில்லை.

கண்டராதித்தருக்குப் போர் செய்து இராஜ்யத்தை விஸ்தரிப்பதில் நம்பிக்கை இருக்கவில்லை போர்களினால் மனிதர்கள் அடையும் துன்பங்களைக் கண்டு வருந்தியவரான படியால் கூடிய வரையில் சண்டைகளை விலக்க முயன்றார்; சமாதானத்தையே நாடினார். இதன் காரணமாக இவர் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகச் சுருங்கலாயிற்று. கண்டராதித்தர் தம் முதிர்ந்த வயதில் மழவரையர் மகளை மணந்து கொண்டார். அவர்களுடைய புதல்வன் மதுராந்தகன், கண்டராதித்தரின் அந்திம காலத்தில் சின்னஞ்சிறு குழந்தை. இராஜ்யத்தைச் சுற்றிலும் எதிரிகள் தலையெடுத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயன் போரில் காயம்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அரிஞ்சயனுடைய குமாரன் சுந்தரசோழன் அதற்குள் காளைப் பருவத்தைக் கடந்து, பல போர்களிலே வெற்றிமுரசு கொட்டி, மகா வீரன் என்று பெயர் பெற்றிருந்தான். ஆதலின் கண்டராதித்தர் தமக்குப் பின்னர் சுந்தரசோழனே பட்டத்துக்கு உரியவன் என்று முடிவுகட்டிக் குடிமக்களுக்கும் அறிவித்து விட்டார். தன்னால் சிம்மாதனம் சம்பந்தமான குடும்பச் சண்டைகள் உண்டாகாதிருக்கும் பொருட்டுச் சுந்தர சோழருடைய சந்ததிகளே பட்டத்துக்கு உரியவர்கள் என்றும் சொல்லி விட்டார்.

தமது குமாரன் மதுராந்தகனைச் சிவ பக்தனாக வளர்த்துச் சிவ கைங்கரியத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தம் மனைவியிடமும் அவர் சொல்லியிருந்தார். இவையெல்லாம் அந்நாளில் நாடறிந்த விஷயங்களாயிருந்தன. செம்பியன் மாதேவி தன் கணவருக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி வந்தாள். மதுராந்தகனுடைய சிறு பிராயத்திலேயே அவன் உள்ளத்தில் சிவபக்தியையும் உலக வாழ்வில் வைராக்கியத்தையும் உண்டாக்கி வளர்த்து வந்தாள்.

ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் மதுராந்தகன் அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தான். இராஜ்ய விவகாரங்களில் அவனுக்குச் சிறிதும் பற்று ஏற்படவில்லை; சோழ சிங்காதனம் தனக்கு உரியது என்ற எண்ணமே அவன் உள்ளத்தில் உதயமாகாமல் இருந்தது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்ததிலிருந்து அவன் மனம் மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இலேசாகத் தலைகாட்டிய ஆசைக்குப் பழுவூர் இளைய ராணி நந்தினி தூபம் போட்டுப் பெரிதாக்கி வந்தாள். சிறிய தீப்பொறி அதிவிரைவில் பெரிய காட்டுத் தீ ஆகிவிட்டது. பல்வேறு காரணங்களினால் சோழநாட்டுச் சிற்றரசர்கள் பலரும் பெருந்தர அதிகாரிகளும் மதுராந்தகனை ஆதரித்துச் சிம்மாசனத்தில் ஏற்றுவதற்குச் சுந்தர சோழர் கண் மூடும் சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஆனால் மதுராந்தகனோ அவ்வளவு காலம் காத்திருப்பதற்கே விரும்பவில்லை. சுந்தரசோழருக்குச் சிம்மாசனத்தில் பாத்தியதை இல்லையென்றும், தனக்கே சோழ சாம்ராஜ்யம் வந்திருக்க வேண்டும் என்றும் அவன் எண்ணத் தொடங்கினான்.

இவ்விதம் மதுராந்தகனுக்கு ஏற்பட்டிருந்த அரசுரிமை வெறியைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது இப்போது பழுவேட்டரையர்களின் பொறுப்பாயிருந்தது. அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட அவர்கள் விரும்பவில்லை. சுந்தர சோழரின் இரு புதல்வர்களும் வீராதிவீரர்கள். அவர்களுடைய வீரச் செயல்களினாலும் பிற குணாதிசயங்களினாலும் குடி மக்களின் உள்ளங்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தனர். கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் என்னும் இரு பெரும் தலைவர்கள் சுந்தர சோழரின் புதல்வர்களை ஆதரித்து நின்றார்கள். சைன்யத்திலேயும் ஒரு பெரும் பகுதி வீரர்கள் சுந்தர சோழரின் புத்திரர்களையே விரும்பினார்கள். ஆகையால் சக்கரவர்த்தி உயிரோடிருக்கும் வரையில் பழுவேட்டரையர்கள் பொறுமையுடனிருக்கத் தீர்மானித்தார்கள். இதற்கிடையில், சக்கரவர்த்தியின் மனமும் சிறிதளவு மாறிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார்கள். தமக்குப் பிறகு இளவரசர் மதுராந்தகருக்குத்தான் பட்டம் என்று சுந்தர சோழரே சொல்லிவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. இதற்குக் குறுக்கே நின்று தடை செய்யக்கூடியவர்கள் இளைய பிராட்டியும், செம்பியன் மாதேவியுந்தான். இளைய பிராட்டியின் சூழ்ச்சிகளை மாற்றுச் சூழ்ச்சிகளினால் வென்றுவிடலாம். ஆனால் தமிழ் நாடெங்கும் தெய்வாம்சம் பெற்றவராகப் போற்றப்பட்டு வரும் செம்பியன் மாதேவி தடுத்து நின்றால், அந்தத் தடையைக் கடப்பது எளிதன்று. அந்தப் பெருமாட்டி தாம்பெற்ற புதல்வன் சிம்மாசனம் ஏறுவதை விரும்பவில்லை என்பது எங்கும் பரவியிருந்தது. அன்னையின் வார்த்தையை மீறி மகன் சிங்காதனம் ஏறுவதைக் குடிமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஒன்று, அந்த அம்மாளும் தமது கணவரைப் பின்பற்றிக் கைலாச பதவிக்குச் செல்லவேண்டும். அல்லது அவருடைய மனம் மாறச் செய்யவேண்டும். தாயின் மனத்தை மாற்றக்கூடிய சக்தி, பெற்ற பிள்ளையைத் தவிர வேறு யாருக்கு இருக்கக்கூடும்?

ஆதலின் அன்னையிடம் சொல்லி அவர் மனத்தை மாற்றும்படி மதுராந்தகத் தேவரை அடிக்கடி பழுவேட்டரையர்கள் தூண்டிக் கொண்டிருந்தார்கள். மதுராந்தகர் இந்தக் காரியத்தில் மட்டும் உற்சாகம் காட்டவில்லை. இராஜ்யம் ஆளும் ஆசை அவர் உள்ளத்தில் வெறியாக மூண்டிருந்தது. ஆனால், அன்னையிடம் அதைப் பற்றிப் பேச மட்டும் அவர் தயங்கினார். ஏன் அந்த மூதாட்டியைச் சந்தித்துப் பேசுவதற்கே அவர் அவ்வளவாக விரும்பவில்லை.

இப்போது, செம்பியன் மாதேவியே தஞ்சைக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார். தமது கணவருடைய விருப்பங்களில் முக்கியமானதொரு விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தம் குமாரன் தம்முடன் இருக்கவேண்டும் என்றும் தெரியப்படுத்தியிருந்தார். அதன்படியே சின்னப் பழுவேட்டரையர் மதுராந்தகரைப் பழையாறைக்குப் போய்வரும்படி கூறினார். இச்சந்தர்ப்பத்தில் தஞ்சைச் சிங்காதனத்துக்குத் தமக்குள்ள உரிமைபற்றித் தாயிடம் வாதாடி அவருடைய மனத்தை மாற்ற முயலும் படியும் சொல்லி அனுப்பினார்.

மதுராந்தகத் தேவர் தமது பரிவாரங்களுடன் பழையாறை நகருக்குள் பிரவேசித்தார். அவருடைய பரிவாரங்களும் அரண்மனை வீதியை அடைந்து, செம்பியன் மாதேவியின் மாளிகையை அடைந்தார்கள். அரண்மனை வாசலிலேயே பெரிய பிராட்டி நின்று கொண்டிருந்தார்.

மதுராந்தகர் ரதத்திலிருந்து இறங்கி அன்னையின் அருகில் சென்று வணங்கினார். வணங்கிய மதுராந்தகரை உச்சி முகந்து அன்னை ஆசி கூறினார். "மகனே! சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொண்டு விரைவில் சபாமண்டபத்துக்கு வந்து சேர்!" என்று கூறினார்.