Sunday, November 11, 2012

46. செம்பியன் மாதேவி




அன்னை அழைத்துவரச் சொன்னதாகச் சேவகன் வந்து கூறியதன் பேரில் மதுராந்தகன் செம்பியன் மாதேவியைப் பார்க்கச் சென்றான் சிவபக்தியிற் சிறந்த அந்த மூதாட்டியின் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. ஒரு காலத்தில் மதுராந்தகனும் அன்னையிடம் அளவிலாத பக்தி கொண்டிருந்தான். இப்போது அந்தப் பக்தி, கோப வெறியாக மாறிப் போயிருந்தது. பெற்ற மகனுக்குத் துரோகம் செய்து, தாயாதிகளின் கட்சி பேசிய தாயைப்பற்றிக் கதைகளிலே கூடக் கேட்டதில்லையே! தனக்கு இப்படிப்பட்ட அன்னையா வந்து வாய்க்கவேண்டும்?... இதை நினைக்க நினைக்க அவன் உள்ளத்திலிருந்த அன்பு அத்தனையும் துவேஷமாகவே மாறி நாளடைவில் கொழுந்துவிட்டு வளர்ந்திருந்தது.

அபூர்வமான சாந்தம் குடிகொண்ட அன்னையின் முகத்தைப் பார்த்ததும் கொஞ்சம் அவனுடைய கோபம் தணிந்தது. பழைய வழக்கத்தை அனுசரித்து நமஸ்கரித்து எழுந்து நின்றான். "சிவபக்திச் செல்வம் பெருகி வளரட்டும்!" என்று மகாராணி ஆசி கூறி, அவனை ஆசனத்தில் உட்காரச் செய்தார். அந்த ஆசீர்வாதம் மதுராந்தகனுடைய மனத்தில் அம்பைப் போல் தைத்தது.

"மதுராந்தகா! என் மருமகள் சுகமா? உன் மாமனார் வீட்டிலும், தனாதிகாரியின் வீட்டிலும் எல்லோரும் சௌக்கியமா?" என்று அன்னை கேட்டார்.

"எல்லாரும் சௌக்கியமாகவே இருக்கிறார்கள். அதைப் பற்றித் தங்களுக்கு என்ன கவலை?" என்று குமாரன் முணுமுணுத்தான்.

"தஞ்சையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீ சக்கரவர்த்தியைப் பார்த்தாயா? அவருடைய உடல் நலம் தற்சமயம் எப்படியிருக்கிறது?" என்று மகாராணி கேட்டார்.

"பார்த்து விடை பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டேன். சக்கரவர்த்தியின் உடம்பு நாளுக்கு நாள் நலிந்துதான் வருகிறது. உடல் வேதனையைக் காட்டிலும் மனவேதனை அவருக்கு அதிகமாயிருக்கிறது" என்றான் மதுராந்தகன்.

"அது என்ன, குழந்தாய்? சக்கரவர்த்தி மன வேதனைப்படும்படியாக என்ன நேர்ந்தது?"

"குற்றம் செய்தவர்கள், அநீதி செய்தவர்கள்... பிறர் உடைமையைப் பறித்து அனுபவிக்கிறவர்கள் - மனவேதனை கொள்வது இயல்புதானே?"

"இது என்ன சொல்கிறாய்? சக்கரவர்த்தி அவ்வாறு என்ன குற்றம் - அநீதி - செய்துவிட்டார்?"

"வேறு என்ன செய்யவேண்டும்? நான் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் அவர் இத்தனை வருஷங்களாக அமர்ந்திருப்பது போதாதா? அது குற்றம் இல்லையா? அநீதி இல்லையா?"

"குழந்தாய்! பால்போலத் தூய்மையாக இருந்த உன் உள்ளத்தில் இந்த விஷம் எப்படி வந்தது? யார் உனக்குத் துர்ப்போதனை செய்து கெடுத்துவிட்டார்கள்?" என்று இரக்கமான குரலில் அன்னை கேட்டார்.

"தாயே! என்னை, எதற்காக அழைத்தீர்கள். அதைச் சொல்லுங்கள்!"

செம்பியன் மாதேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டார். பிறகு கூறினார்:- "உன்னுடைய குணத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் எனக்குப் பிரமிப்பை உண்டாக்குகிறது. பழுவேட்டரையர் மாளிகையில் இரண்டு வருஷ வாசம் இப்படி உன்னை மாற்றிவிடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. போனால் போகட்டும், என்னுடைய கடமையை நான் செய்ய வேண்டும். உன் தந்தைக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற என்னாலியன்ற வரையில் முயலவேண்டும் மகனே! உன்னை அழைத்த காரியத்தைச் சொல்வதற்கு முன்னால், என்னுடைய கதையை, நான் உன் தந்தையை மணந்த வரலாற்றைக் கூறவேண்டும். சற்றுப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிரு!"

மதுராந்தகன் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போவதற்கு அறிகுறியாகக் கால்களை மண்டி போட்டுக் கொண்டு, கைகளைப் பீடத்தில் நன்றாய் ஊன்றிக் கொண்டு உட்கார்ந்தான்.

"உன் தந்தை சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்குப் பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகி விட்டார். மறுபடி கலியாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் மணம்புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது. என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன். எங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அதன் பயனாக உன் பாட்டனார் இழந்திருந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து 'மழவரையர்' என்ற பட்டப் பெயரையும் பெற்றார்..."

"மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம். அதற்கு ஓர் முக்கியம் காரணம் இருந்தது. குழந்தாய்! இதையெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்று நான் கனவிலும் கருதவில்லை. ஆயினும், அத்தகைய அவசியம் நேர்ந்து விட்டதனால் சொல்லுகிறேன். கொஞ்சம் செவி கொடுத்துக் கவனமாகக் கேள்!" இவ்விதம் செம்பியன்மாதேவி கூறி மீண்டும் ஒரு நெடுமூச்சு விட்டார். மதுராந்தகனும் முன்னைக்காட்டிலும் அதிகச் சிரத்தையுடன் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.

சிவபக்தியே உருவெடுத்தாற்போல் விளங்கிய மாதரசி செம்பியன் தேவி தொடர்ந்து கூறினார்:

"மகனே! உன் தந்தை கண்டராதித்த தேவர் சிம்மாசனம் ஏறியபொழுது, சோழ ராஜ்யத்தில் ஒரு சங்கடமான நிலைமை ஏற்பட்டிருந்தது. உன் பாட்டனார் பராந்தகச் சக்கரவர்த்தியின் பெருமையை நீ அறிந்திருக்கிறாய். அவருடைய ஆட்சிக்காலத்தில் சோழ ராஜ்யம் தெற்கே ஈழ நாடு வரையிலும், வடக்கே கிருஷ்ணை நதி வரையிலும் பரவியது. ஆனால், அவருடைய அந்திம காலத்தில் இராஜ்யத்துக்கும், இராஜ குலத்துக்கும் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இரட்டை மண்டலத்துப் படைகள் படை எடுத்து வந்தன. பராந்தகச் சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும், ஒப்புவமையில்லாத வீராதி வீரரும், உன் பெரிய தகப்பனாருமான இராஜாதித்த தேவர் இரட்டை மண்டலத்து மாபெரும் சைன்யத்தை எதிர்க்கப் புறப்பட்டார். வடக்கே தக்கோலம் என்னுமிடத்தில் மாபெரும் போர் நடந்தது, லட்சக்கணக்கான வீரர்கள் மாண்டனர். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இரட்டை மண்டலத்தாரின் சைன்யம் சிதறி ஓடியது ஆனால் அந்தப் போரில் இராஜாதித்த தேவர் பலியாகிவிட்டார். உன்னுடைய சித்தப்பா அரிஞ்சயத் தேவரும் அந்தப் போரில் ஈடுபட்டுப் படுகாயம் அடைந்தார். ஆனால் அவரைப் பற்றி யாதொரு விவரமும் அப்போது தெரியவில்லை. அரிஞ்சய தேவரின் மூத்த புதல்வர் சுந்தர சோழர், - சின்னஞ்சிறு பிராயத்துப் பிள்ளை - ஈழத்துப் போருக்குச் சென்றிருந்தார். அவரைப் பற்றியும் செய்தி கிட்டவில்லை. இராஜ குலத்தில் பிறந்து அச்சமயம் தஞ்சை அரண்மனையில் பராந்தகச் சக்கரவர்த்தியின் அருகில் இருந்தவர் உன் தந்தைதான்.

ஆனால் உன் தந்தையோ இளம் பிராயத்திலேயே இராஜ்ய விவகாரங்களை வெறுத்துச் சிவபெருமானிடம் மனத்தைச் செலுத்தி வந்தவர். அவருக்கு யுத்தம் என்றால் பிடிப்பதில்லை. மன்னர்களின் மண்ணாசை காரணமாக மக்கள் போரிட்டு மடிவானேன் என்று அவர் வருந்தினார். தந்தையிடமும் சகோதரர்களிடமும் அதைக் குறித்து வாதித்தார். சிவஞானச் செல்வர்களான பெரியோர்களின் சகவாசத்திலும், புண்ணிய ஸ்தல யாத்திரையிலும், ஆலய வழிபாட்டிலும் காலத்தைச் செலவிட்டார். வாள், வேல் முதலிய ஆயுதங்களைக் கையினால் தொடவும் அவர் விரும்பவில்லை. யுத்த தந்திரங்களிலும் போர் முறைகளிலும் அவர் பயிற்சி பெறவில்லை. பொய்யும் புனை சுருட்டும், வஞ்சகமும், வேஷமும் சூழ்ச்சிகளும் மறு சூழ்ச்சிகளும், கொலை முதலிய பாவங்களும் நிறைந்தது இராஜரீகம் என்று அவர் நம்பினார்.

மகனே! விதிவசத்தால் அப்படிப்பட்ட கொள்கையுடைய உன் தந்தை இந்தச் சோழ நாட்டின் பாரத்தை வகிக்கும்படியாக நேர்ந்துவிட்டது. பராந்தகச்சக்கரவர்த்தி, இராஜ்யத்துக்கு நேர்ந்த பல விபத்துக்களினாலும், இராஜாதித்தரின் மரணத்தினாலும் மனம் நொந்து மரணத்தை எதிர்பார்த்திருக்கும் வேளையில் உன் தந்தையை அழைத்து, 'இராஜ்ய பாரத்தை நீ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றார். உன் தந்தை மரணத்தறுவாயிலிருந்த உன் பாட்டனாரின் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பாமல் ஒப்புக்கொண்டார். உன் தந்தையை எனக்கு முன்னால் மணந்திருந்த பாக்கியவதியான வீரநாராயணி தேவி அதற்கு முன்னரே சிவபதம் அடைந்து விட்டார். நானோ அப்போது உன் தந்தையைப் பார்த்ததே இல்லை. ஆகையால் உன் தந்தையின் காலத்துக்குப் பிற்பாடு சோழ மகாராஜ்யம் என்ன ஆவது என்ற கவலை உன் பாட்டனாருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் உன் சிறிய தந்தையின் குமாரரைத் தேடுவதற்காக ஈழத்திற்குப் போனவர்கள், அங்கே ஒரு தீவிலிருந்த சுந்தர சோழரைக் கண்டுபிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்தி சுந்தர சோழரிடம் அளவிலாத பிரியம் வைத்திருந்தார். குழந்தையாயிருந்த நாளிலிருந்து, மடியில் வைத்துத் தாலாட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். பெரியோர்கள் பலர், சுந்தரசோழரின் மூலமாய்ச் சோழகுலம் மகோன்னதம் அடையப் போகிறது என்று சொல்லியிருந்தார்கள்.

இத்தகைய காரணங்களினால் உன் பாட்டனாருக்குச் சுந்தர சோழர் மீது அபாரமான பிரேமை. ஆகையால், உன் தந்தை சிம்மாசனம் ஏறும்போது, சுந்தர சோழருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடவேண்டும் என்றும், அவருடைய சந்ததியர்கள் தான் சோழ நாட்டை ஆண்டு வரவேண்டும் என்றும் சொல்லி விட்டுச் சிவபதம் அடைந்தார். இந்த விவரங்களையெல்லாம் உன் தந்தை என்னிடம் கூறினார். பராந்தகச் சக்கரவர்த்தி மரணத் தறுவாயில் வெளியிட்ட விருப்பத்தை நிறைவேற்ற அவர் உறுதிகொண்டிருந்தார். சுந்தர சோழரும் அவருடைய சந்ததியாரும் பட்டத்துக்கு வருவதில் எவ்வித இடையூறும் நேரிடக் கூடாதென்று எண்ணினார். உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை. அவருடைய உள்ளம் சதாசர்வ காலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தமது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தர சோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு மறுபடியும் மணம் செய்துகொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால் அவருடைய மன உறுதியைக் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நானும் சிவபக்தியில் ஈடுபட்ட 'பிச்சி' என்று அறிந்ததனாலேயே அவர் என்மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரைத் தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. அப்படிப்பட்ட புண்ணிய புருஷருடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் நீயும் கடமைப்பட்டவர்கள்...!"

அன்னை இவ்விதம் கூறி நிறுத்தியபோது, கேட்டுக் கொண்டிருந்த மகனுடைய உடல் பதறிக்கொண்டிருந்தது. அவனுடைய உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.

"அது எப்படி, தாயே! என் தந்தை என்னிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லையே? நான் என்ன கடமைப்பட்டிருக்கிறேன்? எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கிறேன்?" என்றான் மதுராந்தகன்.

"மகனே! கேள்! உன் தந்தை சிவபெருமானுடைய பாத மலர்களை அடைந்தபோது நீ சின்னஞ்சிறு பிள்ளை. ஆகையால், உன்னிடம் அவர் ஒன்றும் தெரியப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுப் போனார்; அவருடைய வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை என்மீது சுமத்திவிட்டுப் போனார். மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால், சில நாளாக நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன். அப்படிப்பட்ட பேச்சைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு புண்ணாகிறது. நான் கேள்விப்படுவதெல்லாம் பொய்யென்று நீ உறுதி சொல்லி, என் நெஞ்சில் உள்ள புண்ணை ஆற்றமாட்டாயா?" என்று அன்னை செம்பியன்மாதேவி கெஞ்சினாள்.

"தாயே! தங்களுடைய மர்மமான வார்த்தைகள் என்னுடைய நெஞ்சையும் புண்ணாக்குகின்றன. தாங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்; என்னிடம் என்ன உறுதி கேட்கிறீர்கள்?" என்று மதுராந்தகன் சீறினான்.