Sunday, November 11, 2012

47. "நீயும் ஒரு தாயா?"




"குழந்தாய்! சோழ குலத்துச் சிம்மாசனத்தில் ஏற, நீ ஆசை கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்படுகிறேன். உன் உள்ளத்தை நம் விரோதிகள் அவ்விதம் கெடுத்துவிட்டார்கள் என்று அறிகிறேன். நான் இவ்வாறு கேள்விப்பட்டது உண்மையல்ல என்று நீ கூறினால், என் மனம் நிம்மதி அடையும்!" என்றாள் மூதாட்டி.

மதுராந்தகன் இதுவரை உட்கார்ந்திருந்த பீடத்திலிருந்து எழுந்து நின்றான். அவனுடைய படபடப்பை பார்த்துத் தாயும் எழுந்தாள்.

"என்னுடைய மனத்தை விரோதிகள் யாரும் கெடுக்கவில்லை. என்னைச் சிம்மாசனம் ஏற்ற விரும்புகிறவர்கள் என் விரோதிகளா? எனக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்க முன் வந்திருப்பவர்கள் என் விரோதிகளா? ஒரு நாளும் இல்லை. உண்மையில் என் ஜன்ம விரோதி யார்? என்னைப் பெற்றவளாகிய நீதான்!..." என்று மதுராந்தகன் கூவினான்.

ஆத்திர மிகுதியால் அச்சமயம் அவன் மரியாதையை மறந்தான்; சின்னப் பழுவேட்டரையர் நல்ல வார்த்தைகளினால் அன்னையின் மனத்தை மாற்றும்படி சொல்லியிருந்ததை மறந்து வசைமாரி பொழிந்தான்.

"ஆம்; நீதான் என்ஜன்ம சத்துரு; வேறு யாரும் இல்லை. நீயும் ஒரு தாயா? உலகத்தில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் உரிமைக்காகப் படாதபாடு படுவார்கள். நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? நீ எதற்காக இந்தப் பெரும் துரோகத்தை எனக்குச் செய்கிறாய்? எல்லாவித நியாயங்களினாலும் எனக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தைப் பிடுங்கி இன்னொருவனுக்குக் கொடுப்பதில் உனக்கு என்ன சிரத்தை! என் தந்தையின் விருப்பம் என்று சொல்லுகிறாய். அவருக்கு நீ வாக்குக் கொடுத்ததாகச் சொல்லுகிறாய். அதற்கெல்லாம் அத்தாட்சி என்ன? நான் நம்பவில்லை. எனக்கு யாரோ துர்ப்போதனை செய்துவிட்டதாகச் சொல்கிறாய். இல்லவே இல்லை, உனக்குத்தான் யாரோ துர்ப்போதனை செய்து, உன் மனத்தைத்தான் கெடுத்து விட்டிருக்கிறார்கள். தாயை மகனுக்கு விரோதியாக்கியிருக்கிறார்கள். நியாயமாக எனக்கு உரிய சோழ சிங்காசனத்தை நான் ஒருநாளும் கை விடமாட்டேன். நீ சொன்னாலும் விடமாட்டேன். சிவபதம் அடைந்த என் தந்தையே திரும்பி வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் என்னுடையது; இந்தப் பழமையான சிங்காசனம் எனக்குரியது; அவற்றை நான் அடைந்தே தீருவேன்."

செம்பியன் மாதேவி குரலின் சாந்தத்தில் சிறிதும் மாறுதல் இல்லாமல், "மகனே! சற்று அமைதியாயிரு. நான் வஞ்சக அரக்கியாகவே இருந்தாலும், என் வார்த்தைகளைச் சற்றுச் செவிசாய்த்துக் கேள்!" என்றாள்.

"சோழநாட்டு மக்கள் சுந்தர சோழரின் புதல்வர்களிடம் எவ்வளவு அபிமானம் கொண்டவர்கள் என்பது உனக்குத் தெரியாதா!"

"தாயே! மக்களின் அபிமானத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் அபிமானம் என்னத்துக்கு ஆகும்? மக்கள் ஆளப்படவேண்டியவர்கள், சிம்மாசனத்தில் யார் வீற்றிருந்து அரசு செலுத்துகிறார்களோ, அவர்களிடம் மக்கள் பக்தி செலுத்த வேண்டியவர்கள்!"

"மகனே! உனக்குப் போதனை செய்திருப்பவர்கள் அரசியல் நீதியின் ஆரம்பத் தத்துவத்தைக்கூட உனக்கு உணர்த்தவில்லை. மக்களின் அபிமானம் இல்லாமல் எந்த அரசனும் நீடித்து அரசு செலுத்த முடியாது. அப்படி அரசு புரிவதில் புண்ணியமும் இல்லை!..."

இவ்வாறு அந்தப் பெருமூதாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது, அரண்மனை வாசலில் ஒரு பெரும் ஆரவாரம் கேட்டது. ஓலக்குரலும், சாபக்குரலும், கோபக் குரலும், கேள்விக் குரலும் ஆயிரக்கணக்கான மனித கண்டங்களிலிருந்து எழுந்து, பெருங்காற்று அடிக்கும்போது சமுத்திரத்தில் உண்டாகும் பயங்கரப் பேரொலியாகக் கேட்டது.

"மகனே! சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதோ பெரும் விபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முதல் அறிகுறிதான் இது. நான் அரண்மனைக்கு வெளியே சென்று, என்ன விஷயம் என்றும் தெரிந்து வருகிறேன். அதுவரையில் நீ இங்கேயே இரு!" என்றாள் அன்னை.

பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப் போய்க்கொண்டிருந்தார்கள். மக்களில் அநேகர் அழுது புலம்பிக் கொண்டு சென்றார்கள். பலர் பழுவேட்டரையர்களை வாயாரச் சபித்துக் கொண்டு சென்றார்கள்.

இப்படி ஏற்பட்ட ஆரவாரத்தைத்தான் செம்பியன் மாதேவி மதுராந்தகனோடு பேசிக் கொண்டிருக்கையில் கேட்டார். குமாரனுடன் வாதாடுவதை அத்துடன் நிறுத்தி விட்டு அரண்மனை மேல் மாடத்தில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தெய்வீகக்களை பொருந்திய அப்பெரு மூதாட்டியின் திருமுகத்தையும், கூப்பிய கைகளுடன் அவர் நின்ற சாந்தமான தோற்றத்தையும் பார்த்ததும் அந்த ஜனசமுத்திரத்தின் ஆரவாரம் அடங்கியது.

இச்சமயத்தில் தஞ்சாவூர் தூதர்கள் இடித்துப் பிடித்து ஜனங்களைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த சேவகர்களில் ஒருவன், "பெருமாட்டி! இவர்கள் தஞ்சாவூரிலிருந்து முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்!" என்றான்.

செம்பியன் மாதேவி ஜனக் கூட்டத்தைப் பார்த்துக் கை அமர்த்திவிட்டுத் தூதர்களை நோக்கி, "என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்.

"தாயே! மிகத் துயரமான செய்தி கொண்டு வந்திருக்கும் அபாக்கியசாலிகள் நாங்கள். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையிலிருந்து கோடிக்கரைக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்தார்; வரும் வழியில் சுழிக்காற்றில் கப்பல் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. துணையாக வந்த கப்பல் உடைந்து முழுகிவிட்டது. அதிலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்தார். பிறகு அகப்படவில்லை. கடலிலும் கடற்கரையெங்கும் தேடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சக்கரவர்த்தியும், மலையமான் மகளாரும் இச்செய்தியைக் கேட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்களையும் மதுராந்தகத் தேவரையும், இளைய பிராட்டியையும் உடனே புறப்பட்டு தஞ்சைக்கு வரும்படி சக்கரவர்த்தி எங்கள் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்!"

இவ்வாறு தூதர்கள் கூறியது செம்பியன் மாதேவியின் காதிலும் விழுந்தது. அதே சமயத்தில் ஜனக் கூட்டத்தின் செவிகளிலும் விழுந்தது. செம்பியன் மாதேவியின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது. அதைப் பார்த்த ஜனங்கள் மேலும் 'ஓ' என்று கதறினார்கள்.