Sunday, November 11, 2012

48. காஞ்சிக்கு ஓலை




ஓடையில் வந்த படகில் வீற்றிருந்தது அரசிளங்குமரி குந்தவைதான் என்பதை வந்தியத்தேவன் நன்கு தெரிந்து கொண்டான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்தான். தான் போய்வந்த காரியத்தை மறந்தான். உலகத்தை மறந்தான் தன்னையுமே மறந்தான். சுய நினைவு இல்லாமலே வந்தியத்தேவன் தண்ணீரில் சில அடிகள் இறங்கிச் சென்று, ஓடத்தில் ஏறிக்கொண்டான். இளவரசி ஓடக்காரனைப் பார்த்துச் சமிக்ஞை செய்தாள், ஓடம் நகரத் தொடங்கியது. வந்தியத்தேவனுடைய உள்ளமும் ஊஞ்சலாடத் தொடங்கியது.

"தாங்கள் போன காரியம் என்ன ஆயிற்று; இளவரசரை அழைத்து வந்தீரா, சௌக்கியமா இருக்கிறாரா. எங்கே விட்டு வந்தீர், யாரிடம் விட்டு வந்தீர் என்று முதலில் தெரியப்படுத்தும், பிறகு, இங்கிருந்து புறப்பட்டு முதல் நடந்தவை எல்லாவற்றையும் சொல்லும்!" என்று இளவரசி கூறினாள்.

அதற்கு வந்தியத்தேவன், "தேவி! தங்களிடம் ஒப்புக் கொண்டு போன காரியத்தை வெற்றிகரமாக முடித்திரா விட்டால், தங்களிடம் திரும்பி வந்து என் முகத்தைக் காட்டியிருப்பேனா? இளவரசரை இலங்கையிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தேன். அதற்கேற்பட்ட ஆயிரம் இடையூறுகளையும் வெற்றிகொண்டு அழைத்து வந்தேன். இளவரசர் சுகமாயிருக்கிறார் என்று நான் சொல்லமுடியாது. நான் அவரை விட்டுப் பிரியும்போது அவருக்குக் கடுமையான சுரம். ஆனால் பத்திரமான கைகளில் அவரை ஒப்படைத்து வந்திருக்கிறேன். ஓடக்காரப் பெண் பூங்குழலியிடமும், பூக்காரச் சேந்தன் அமுதனிடமும் இளவரசரை விட்டு வந்திருக்கிறேன்" என்றான்.

"தேவி தங்களுடைய கருணையினால் ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவரவேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது! விடை கொடுங்கள்..."

"ஐயோ! நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"

"நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்..."

இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

"வாணர் குலத்து வீரரே! உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."

வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.

"ஐயா! உம்முடைய பதட்டமான காரியங்களினால் உமது உயிருக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால், என்னுடைய கதி என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாரும்."

"தேவி! தங்களுடைய இதய சிங்காசனத்தில் இடம் பெற்ற இந்தப் பாக்கியசாலி உயிருக்குப் பயந்த கோழையாயிருக்க முடியுமா?"

"கோழைத்தனம் வேறு, ஜாக்கிரதை வேறு, ஐயா! முதன் மந்திரி அநிருத்தருக்குக்கூடத் தங்கள் வீரத்தைப் பற்றி ஐயம் கிடையாது. முதன் மந்திரி, காஞ்சிக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை அனுப்ப விரும்புகிறார். உம்மை அனுப்பலாம், நம்பி அனுப்பலாம் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்."

"என்னைக் காஞ்சிக்கு அனுப்பாதீர்கள், தேவி!"

"ஏன்?"

"அங்கே என் எஜமானர் இருக்கிறார். அவர் கேட்டால் நான் எல்லா விவரங்களையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பழுவேட்டரையர்களும், மற்றச் சிற்றரசர்களும் செய்யும் சதியைப்பற்றி அறிந்தால் உடனே வெகுண்டு எழுவார். சக்கரவர்த்தியைச் சிறைவைப்பது போல் வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தால் உடனே படை எடுத்துக் கிளம்புவார். பொன்னியின் செல்வரைப் பற்றிய செய்தி அவர் காதில் எட்டியிருந்தால் இதற்குள்ளேயே ஒருவேளை புறப்பட்டிருந்தாலும் புறப்பட்டிருப்பார்..."

"அதற்காகவேதான் - உம்மை அனுப்ப விரும்புகிறேன். அவர் காஞ்சியைவிட்டுப் புறப்படாமல் எப்படியாவது தடுத்து விடவேண்டும்."

"நான் காஞ்சியை அடைவதற்குள் அவர் புறப்பட்டிருந்தால்?"

"வழியில் அவர் எங்கே இருந்தாலும் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..."

"சொல்லுங்கள்!"

"பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது..."

"உண்மையில் இளைய ராணிதான் போகிறாளா! அல்லது இளைய ராணியின் பல்லக்கில்..."

"இல்லை; இளைய ராணிதான் போகிறாள். என் சித்தப்பாதான் இன்னும் இங்கே இருக்கிறாரே!"

"எதற்காகப் போகிறார்களாம்?"

"ஆதித்த கரிகாலனையும் கடம்பூருக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். கல்யாணப் பேச்சு என்பது வெளிப்படையான காரணம். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்து வைக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நடந்து வருகிறது."

"என் எஜமானர் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்."

"அதைப் பற்றியெல்லாம் இப்போது எனக்குக் கவலை இல்லை."

"பின்னே என்ன கவலை தேவி!"

"ஐயா! என்னுடைய பயம் என் தமையனைப் பற்றியது; பழுவூர் ராணியைப் பற்றியது. அவர்கள் சந்தித்தால் என்ன நேரிடுமோ என்று எண்ணி என் உள்ளம் கலங்குகிறது. அவர்கள் தனியாகச் சந்திக்க முடியாதபடி நீர் தடை செய்ய வேண்டும்..."

"தேவி! அவர் ஒன்றும் செய்வதற்கு நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?"

"ஐயா! என் தமையனைக் காப்பாற்றும் இரும்புக் கவசம் போல் நீர் உதவவேண்டும். எப்படிச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது. அவர்களை எப்படியேனும் சந்திக்க முடியாதபடி செய்தால் மிக்க நலமாயிருக்கும்."

"தேவி! என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம்" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!" என்றாள் அரசிளங்குமரி.

மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று.  வழியில் ஆழ்வார்க்கடியான் கொள்ளிடக்கரையில் அவனுடன் வந்து சேர்ந்து கொள்வான் என்று சொன்னார்கள்!