Sunday, November 11, 2012

49. கொலை வாள்




சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார் சென்றார்கள். அந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது. வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள், காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது. கடைசியாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம் எல்லையை அடைந்தது. பள்ளிப் படையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.

நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், 'சக்கரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது.

"ராணி இன்னும் வரவில்லையே?" என்றான் ஒருவன்.

"சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!" என்றான் சோமன் சாம்பவன்.

இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் பாட்டுப் பாடத் தொடங்கினான்.

அது அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது.

கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன. சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். வாள்களும் வேல்களும் மோதின! ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன!

அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான்.

சற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான்.

நந்தினி சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள்.

நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, "நான் இதைக் கையில் எடுக்கலாமா?" என்று கேட்டான்.

"சற்றுப் பொறு, என் கண்மணி!" என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். "சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?" என்று கேட்டாள்.

"இல்லை, தேவி!" என்றான் சோமன் சாம்பவன்.

ரவிதாஸனைப் பார்த்து நந்தினி "சேநாதிபதி!..." என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான்.

"இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!"

"தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்."

"ஐயா! நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது."

"தேவி! சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்" என்றான்.

"ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்" என்றாள் நந்தினி.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்:

"உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம்.

"தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்."

"ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா?"

"முடியவில்லை. ராணி!"

"அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா...சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?"

இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை.

"தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார்? எப்படி? எப்போது?" என்றான்.

"அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!..."

அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் 'ஆஹா' காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின.

ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான்.

"தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?" என்று கேட்டான்.

"அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?"

ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது.

ரவிதாஸன் கூறினான்:"தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம்."

பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து "என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு!" என்றாள்.

ரவிதாஸன் சற்று அருகில் வந்து "சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!" என்றான்.

சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் "என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!" என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின.

ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் "என்னிடம் கொடுங்கள்!" என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன.

சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான்.

அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். "எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.

சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும் சேர்த்து மார்புடன் அணைத்துத் தழுவிக் கொண்டாள். அவளுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது.

மற்றவர்கள் சற்று நேரம் வரை இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள். ரவிதாஸன் முதலில் திகைப்பு நீங்கப்பெற்றுக் கூறினான்.

"தேவி! சக்கரவர்த்தி நம்முடைய கோரிக்கையை நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளாமல் தங்களிடம் வாளைக் கொடுத்து விட்டார். மறுபடியும் விளக்கமாகச் சொல்லி..."

நந்தினி அவனைத் தடுத்து நிறுத்தினாள்; தழுதழுத்த குரலில் கூறினாள். "இல்லை, ஐயா இல்லை! சக்கரவர்த்தி நன்றாய்ப் புரிந்து கொண்டுதான் வாளை என்னிடம் கொடுத்தார். என் கண்ணீரைப் பார்த்து நீங்கள் கலங்க வேண்டாம். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் படுகொலைக்குப் பழி வாங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்துக் களிப்பு மிகுதியினால் கண்ணீர் விடுகிறேன்!"

"தேவி! யோசித்துப் பாருங்கள்! நாங்கள், இத்தனை பேர் ஆபத்துதவிப் படையினர் உயிரோடிருக்கும்போது..." என்று சோமன் சாம்பவன் தொடங்கியதை நந்தினி தடுத்து நிறுத்தினாள்.

"யோசிக்க வேண்டியதே இல்லை, அந்தப் பொறுப்பு என்னுடையதுதான். உங்களுக்கும் வேலையில்லாமற் போகவில்லை. உங்களில் பாதி பேர் சக்கரவர்த்தியைப் பத்திரமாகப் பஞ்ச பாண்டவர் மலைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள். மற்றவர்கள் கடம்பூருக்கு வாருங்கள். சம்புவரையன் மாளிகைக்குள் வரக்கூடியவர்கள் வாருங்கள் மற்றவர்கள் வெளியில் சித்தமாகக் காத்திருங்கள். வேகமாகச் செல்லக்கூடிய குதிரைகளுடன் காத்திருங்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பின் கூடுமானால் எல்லாரும் உயிருடன் தப்பித்துச் செல்ல வேண்டும் அல்லவா?" என்றாள் நந்தினி.

ரவிதாஸன் முன் வந்து, "அம்மணி! ஒரு விஷயம் சொல்ல மறந்து போய்விட்டது; அதைச் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்றான்.

"சொல்லுங்கள், ஐயா! சீக்கிரம் சொல்லுங்கள்! பழுவேட்டரையர் கொள்ளிடக்கரையில் நடக்கும் காலாமுகர்களின் மகா சங்கத்துக்குப் போயிருக்கிறார். அவர் திரும்பி வந்து விடுவதற்குள்ளே நான் அரண்மனை போய்ச் சேரவேண்டும்!" என்றாள் நந்தினி.

"நமது முதற் பகைவன் ஆதித்த கரிகாலன் கடம்பூர் சம்புவரையன் மாளிகைக்கு வந்து சேருவான் என்று சொன்னீர்கள் அல்லவா? அது அவ்வளவு நிச்சயமில்லை" என்றான்.

"எந்தக் காரணத்தைக் கொண்டு அவ்விதம் சொல்கிறீர்?"

"தகுந்த காரணத்தைக் கொண்டுதான் சொல்கிறேன் கடம்பூர் மாளிகைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வரவேண்டாம் என்று ஆதித்த கரிகாலனுக்கு ஓலை போகிறது. பழையாறை இளைய பிராட்டியும், முதன் மந்திரி அநிருத்தரும் அவ்விதம் செய்தி அனுப்பியிருக்கிறார்கள்..."

"அந்த விவரம் எனக்குத் தெரியாது என்றா நினைத்தீர்?"

"தெரிந்திருந்தும் அவன் கடம்பூருக்கு வருவான் என்று எதிர்பார்க்கிறீர்களா?"

"ஆம்; அவசியம் எதிர்பார்க்கிறேன். ஆதித்த கரிகாலருடைய இயல்பு அந்தப் பழையாறைப் பெண் பாம்புக்குத் தெரியாது; அன்பில் பிரம்மராட்சதனுக்கும் தெரியாது; மாய மந்திர வித்தைகளில் தேர்ந்த உமக்குங்கூடத் தெரியவில்லை. எந்தக் காரியத்தையாவது செய்யவேண்டாம் என்று யாரேனும் தடுத்தால், அதைத்தான் ஆதித்த கரிகாலர் கட்டாயமாகச் செய்வார். அது எனக்குத் தெரியும்; நிச்சயமாகத் தெரியும். ஆதித்த கரிகாலர் அருள்மொழிவர்மனைப் போன்ற எடுப்பார் கைப்பிள்ளை அல்ல. மதுராந்தகனைப் போன்ற பயங்கொள்ளிப் பேதை அல்ல. கடம்பூருக்கு வரவேண்டாமென்று தமக்கையும் முதன் மந்திரியும் செய்தி அனுப்பியிருப்பதனாலேயே கட்டாயம் ஆதித்த கரிகாலர் கடம்பூருக்கு வந்து சேருவார்!" என்றாள் நந்தினி.