Sunday, November 11, 2012

50. சுரம் தெளிந்தது




நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷுவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது; பெரும்பாலும் சுயப் பிரக்ஞையே இல்லாமலிருந்தது. இந்த நாட்களில் பிக்ஷுக்கள் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள். வேளைக்கு வேளை மருந்து கொடுத்து வந்தார்கள். அடிக்கடி வாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள்.

நாலாம் நாள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது போல எழுந்து, பூரண சுய நினைவு பெற்றான். உடம்பு பலவீனமாய்த் தானிருந்தது; ஆனால் உள்ளம் தெளிவாக இருந்தது. அச்சமயம் புத்த பிக்ஷு ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். வழக்கம்போல் கையில் கிண்ணத்துடன் வந்தார்! இளவரசன் அருகில் வந்ததும் பிக்ஷு அவனை உற்றுப் பார்த்தார்! இளவரசன் கையை நீட்டிக் கிண்ணத்தை வாங்கி அதில் இருப்பது என்னவென்று பார்த்தான். அது மருந்து அல்லது மருந்து கலந்த பால் என்று தெரிந்து கொண்டான். பிக்ஷுவை நோக்கி, "சுவாமி! இது என்ன இடம்? தாங்கள் யார்? எத்தனை நாளாக நான் இங்கே இப்படிப் படுத்திருக்கிறேன்?" என்று கேட்டான்.

பிக்ஷு அதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லாமல் திரும்பிச் சென்றார். அடுத்த அறைக்கு அவர் சென்று, "ஆச்சாரியாரே! சுரம் நன்றாய்த் தெளிந்துவிட்டது. நினைவு பூரணமாக வந்து விட்டது!" என்று கூறியது இளவரசன் காதில் விழுந்தது.

சிறிது நேரத்துக்கெல்லாம் வயது முதிர்ந்த பிக்ஷு ஒருவர் பொன்னியின் செல்வன் இருந்த அறைக்குள் வந்தார். கட்டிலின் அருகில் வந்து அவரும் இளவரசனை உற்றுப் பார்த்தார். பிறகு மலர்ந்த முகத்துடன், "பொன்னியின் செல்வ! தாங்கள் இருக்குமிடம் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம். கடுமையான ஜுரத்துடன் தாங்கள் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆயின. தங்களுக்கு இந்தச் சேவை செய்வதற்குக் கொடுத்து வைத்திருந்தோம். நாங்கள் பாக்கியசாலிகள்!" என்றார்.

இளவரசன் மருந்தைச் சாப்பிட்டு விட்டு, "ஐயா! என் விஷயத்தில் தாங்கள் எவ்வளவோ சிரத்தை எடுத்துச் சிகிச்சை செய்வித்திருக்கிறீர்கள். ஆனால் இதற்காகத் தங்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை" என்றான்.

ஆச்சாரிய பிக்ஷு புன்னகை புரிந்து, "இளவரசே தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வது பரமோத்தம தர்மம் என்று புத்த பகவான் அருளியிருக்கிறார். நோய்ப்பட்ட பிராணிகளுக்குக் கூடச் சிகிச்சை செய்யும்படி புத்த தர்மம் கட்டளையிடுகிறது. தங்களுக்குச் சிகிச்சை செய்ததில் அதிக விசேஷம் ஒன்றுமில்லை. சோழகுலத்துக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள். தங்கள் தந்தையார் சுந்தர சோழ சக்கரவர்த்தியும், தங்கள் திருத்தமக்கையார் இளைய பிராட்டியும் புத்த தர்மத்துக்கு எவ்வளவோ ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கை அநுராதபுரத்தில் புத்த விஹாரங்களைப் புதுப்பித்துக் கட்ட நீங்கள் ஏற்பாடு செய்ததும் எங்களுக்குத் தெரிந்ததே. அப்படியிருக்கும் போது, நாங்கள் செய்த இந்தச் சிறிய உதவிக்காகத் தங்களிடம் நன்றி எதிர்பார்க்கவில்லை...."

"ஆச்சாரியரே! நன்றி செலுத்துவது பற்றி அந்த முறையில் நான் கூறவில்லை. எனக்கு எப்பேர்ப்பட்ட கடும் ஜுரம் வந்திருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இலங்கையில் இந்த ஜுரத்தினால் பீடிக்கப்பட்டவர்களின் கதியை நான் பார்த்திருக்கிறேன். நியாயமாக இதற்குள் நான் வானவர் உலகத்துக்குப் போயிருக்க வேண்டும். அதைத் தாங்கள் கெடுத்து விட்டீர்கள்! வானுலகத்தில் வாசல் வரையில் சென்ற என்னைத் திரும்ப இந்தத் துன்பம் நிறைந்த மண்ணுலகத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்கள். ஆதலின் எனக்குத் தாங்கள் நன்மை செய்ததாகவே நான் எண்ணவில்லை. ஆகையால்தான் தங்களுக்கு நன்றி செலுத்தப் போவதில்லை என்று கூறினேன்!"

"பொன்னியின் செல்வ! தாங்கள் வானுலகத்துக்குப் போக வேண்டிய காலம் வரும். ஆனால் அந்தக் காலம் இன்னும் நெடுந் தூரத்தில் இருக்கிறது. இந்த மண்ணுலகில் தாங்கள் செய்ய வேண்டிய அரும்பெரும் காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன! அவற்றை முடித்து விட்டல்லவா வானுலகம் செல்வது பற்றி யோசிக்க வேண்டும்?" என்றார்.

இதுகாறும் சாய்ந்து படுத்திருந்த பொன்னியின் செல்வன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய திருமுகத்தில் அபூர்வமான களை பொலிந்தது. "ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்தை ஒரு சமயம் வெளியிலிருந்து பார்த்தேன். அநுராதபுரத்திலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்தேன். அங்கேயுள்ள அபயங்கிரி விஹாரத்தைப் போலப் பெரிதாக இந்தச் சூடாமணி விஹாரத்தைப் புனர் நிர்மாணம் செய்யப் போகிறேன். அநுராதபுரத்தில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளைப் போன்ற சிலைகளை இந்த விஹாரத்திலும் அமைத்துப் பார்க்கப் போகிறேன், இன்னும் இந்தச் சோழ நாட்டிலுள்ள சிவாலயங்களை அம்மாதிரி புதுப்பித்துக் கட்டப் போகிறேன். இலங்கையிலுள்ள ஸ்தூபங்களையும் விஹாரங்களையும் பார்த்து விட்டு இச்சோழ நாட்டிலுள்ள ஆலயங்களையும் நினைத்துப் பார்த்தால் எனக்கு உடலும் உள்ளமும் குன்றுகின்றன. வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன். ஆச்சாரியரே! இந்தச் சோழ நன்னாட்டில் புத்த ஸ்தூபங்களும், சிவாலயங்களின் கோபுரங்களும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மேக மண்டலத்தை எட்டப் போகின்றன. ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ் நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்...."

இவ்வாறு ஆவேசம் கொண்டவன்போல் பேசி வந்த இளவரசன் உடலில் போதிய பலமில்லாமையால் கட்டிலில் சாய்ந்தான். உடனே ஆச்சாரிய பிக்ஷு அவனுடைய தோள்களைப் பிடித்துக் கொண்டு, கட்டிலில் தலை அடிபடாமல் மெள்ள மெள்ள அவனைப் படுக்க வைத்தார். நெற்றியில் கையினால் தடவிக் கொடுத்து, "இளவரசே! தாங்கள் உத்தேசித்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் காலா காலத்தில் செய்து முடிப்பீர்கள். முதலில், உடம்பு பூரணமாய்க் குணமடைய வேண்டும். சற்று அமைதியாயிருங்கள்!" என்றார்.