Sunday, November 11, 2012

51. 'நந்தி மண்டபம்'




யானை கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தது. யானைமேல் அம்பாரி ஆடி அசைந்து கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவற்படைகள் போய்க்கொண்டிருந்தன. பெய்த மழை சிறு தூறலாயிற்று, பிறகு தூறலும் நின்றது. வானத்தில் மேகக் கூட்டங்கள் சிதறிக் கலைந்தன. நட்சத்திரங்கள் எட்டிப் பார்த்தன. வானதி யானையின் அம்பாரிக் கூரை வழியாக மேலே வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தாள். வானவெளியில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களுக்கும், பூலோகத்தில் வாழும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்க முடியுமா என்று அதிசயப்பட்டாள். வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதோ உற்பாதத்துக்கு அறிகுறி என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களே, அது எவ்வளவு தூரம் நிஜமாயிருக்கும்?

அப்படி என்ன உற்பாதம் நடக்கும்? பொன்னியின் செல்வர் கடலில் முழுகியதுதான் அந்த உற்பாதமா? அக்கா கொண்டுள்ள நம்பிக்கையின்படி அவர் திரும்பி வருவாரா? அப்படியானால், வேறு என்ன உற்பாதம் நடக்கக் கூடும்!...

இம்மாதிரியெல்லாம் வெகு நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்த பிறகு வானதி இலேசாகக் கண்ணயர்ந்தாள். அவள் கண்விழித்துப் பார்த்தபோது, பொழுது புலர்ந்திருந்தது. புள்ளினங்கள் உதய கீதம் பாடின. இளைய பிராட்டியும் விழித்துக் கொண்டிருந்தாள். அம்பாரியின் பட்டுத் திரையை விலக்கிகொண்டு வெளியே பார்த்து, "இதோ ஆனைமங்கலம் வந்து விட்டோம். சோழ மாளிகையின் வாசலுக்கே வந்து விட்டோம்" என்றாள்.

இரு இளவரசிகளும் யானை மீதிருந்து இறங்கினார்கள். மாளிகைக்குள்ளே பிரவேசித்தார்கள். அங்கே ஆயத்தமாயிருந்த அரண்மனைத் தாதிமார்கள் இளவரசிகள் இருவரையும் மாளிகையின் எல்லாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். கடைசியில், மாளிகையின் கீழ்ப்புறத்துக்கு வந்து, அங்கிருந்த அலங்கார முன்றின் முகப்பில் நின்றபடி கடலுடன் கலந்த கால்வாயைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

"அக்கா! இளவரசரைத் தேடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னீர்களே? என்ன செய்திருக்கிறீர்கள்?" என்றாள் கொடும்பாளூர் இளவரசி.

"ஆமாடி வானதி! தேடுவதற்கு ஏற்பாடு ஆரம்பமாகி விட்டது. அதோபார், ஒரு படகு வருகிறது! அதில் வருகிறவர்கள் ஒருவேளை ஏதேனும் செய்தி கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்!" என்றாள் குந்தவை.

வானதி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தூரத்தில் மரக்கிளைகளின் இடைவெளியில் ஒரு சிறிய படகு வருவது தெரிந்தது.

படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது. படிகள் முடிந்து மண்டபம் தொடங்கும் இடத்தில் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நந்தி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிலைகளின் முக்கியம் பற்றியே அம்மண்டபத்துக்கு 'நந்தி மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டிருந்தது.

படகு மண்டபத்தை நெருங்கி வந்தபோது, இளையபிராட்டி குந்தவை படிகளில் இறங்கிக் கீழ்ப்படிக்கு வந்தாள். படித்துறை அருகில் வந்து படகு நின்றது. இளவரசன் இறங்குவதற்குப் படகிலிருந்தபடி சேந்தன் அமுதனும், படியில் நின்றபடி இளைய பிராட்டியும் உதவி செய்தார்கள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் படகைப் பின்னோக்கிச் செலுத்திக் கொண்டு போய்ச் சிறிது தூரத்தில் நிறுத்தினார்கள்.

"தம்பி! எப்படி மெலிந்து விட்டாய்!" என்று குந்தவை கூறியபோது, அவளுடைய கனிந்த குரலிலே கண்ணீர் கலந்து தொனித்தது.

பொன்னியின் செல்வன் உட்காரும் போது தமக்கையில் பாதங்களைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டான். குந்தவை அவனுடைய தலையைக் கரத்தினால் தொட்டு, உச்சி முகர்ந்தாள். அவளுடைய கண்ணில் மேலும் கண்ணீர் ததும்பியது.

இருவரும் உட்கார்ந்த பிறகு குந்தவை, "தம்பி! உன்னை இன்றைக்கு நான் இங்கு வருவித்திருக்கவே கூடாது. சூடாமணி விஹாரத்தின் தலைவர் உனக்கு உடம்பு நன்றாகக் குணமாகி விட்டது என்று செய்தி அனுப்பினார். அது சரியல்ல; சுரம் உன்னை வாட்டி எடுத்திருக்கிறது. ஆனால் உன்னைப் பார்க்காமலிருக்கவும் என்னால் முடியவில்லை" என்றாள்.

"அக்கா! என்னை இங்கு வருவித்தது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மட்டும் படகு அனுப்பாமலிருந்தால் நான் இத்தனை நேரம் பழையாறைக்கே புறப்பட்டிருப்பேன். கடுமையான சுரத்திலேயுங்கூட உன்னுடைய ஓலைதான் என் மனதை வருத்திக் கொண்டிருந்தது."

"தம்பி! தற்சமயம் இந்தச் சோழ நாட்டைப் பேரபாயம் சூழ்ந்திருக்கிறது. உட்பகைவர்களாலும் வெளிப்பகைவர்களாலும், சிநேகிதர்கள் போல் நடிக்கும் பகைவர்களாலும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீயும் நானும் யோசித்து முயற்சி செய்துதான் அத்தகைய அபாயம் இந்நாட்டுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்!" என்றாள் இளைய பிராட்டி.

"அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?" என்று அருள்மொழிவர்மன் கேட்டான்.

"இது என்ன கேள்வி, தம்பி! எப்படி அதை நான் மறந்து விடமுடியும்? 'பொன்னியின் செல்வன்' என்று உன்னை அழைத்து வருவதே அந்தச் சம்பவத்தின் காரணமாகத் தானே?" என்றாள் குந்தவை.

"என்னைக் காப்பாற்றிய காவேரித் தாயை இலங்கையில் நான் கண்டேன், அக்கா!.. என்ன, பேசாதிருக்கிறாயே? உனக்கு ஆச்சரியமாயில்லை?"

"ஆச்சரியமில்லை, தம்பி. ஆனால் ஆர்வம் நிறைய இருக்கிறது. அவளைப் பற்றி எல்லா விவரங்களையும் சொல்!"

"காவேரி வெள்ளத்திலிருந்து என்னை அவள் காப்பாற்றியது மட்டுமல்ல; இலங்கையில் பல தடவை என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறாள். உயிரைக் காப்பாற்றியது பெரிதல்ல, அக்கா! அவள் என்னிடத்தில் வைத்துள்ள அன்பு இருக்கிறதே, அதற்கு நீ என்னிடம் வைத்துள்ள அன்பைக் கூட அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்!"

"அதைச் சொல்வதற்கு நீ தயங்க வேண்டாம். அந்த ஊமைச் செவிட்டு ஸ்திரீ, நம்முடைய தந்தையிடம் இருபது வருஷங்களுக்கு மேலாக அவள் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அத்தனை அன்பையும் உன் பேரிலே சொரிந்திருக்கிறாள். அதற்குப் பதினாலு உலகமும் இணையில்லைதான்!"

"உனக்கு அது எப்படி தெரிந்தது, அக்கா?"

"தந்தை சொன்னதிலிருந்து ஊகித்துக் கொண்டேன், அந்த ஊமை ஸ்திரீ வீற்றிருக்க வேண்டிய சிங்காசனத்தில் நம் தாயார் வீற்றிருக்கிறாள். அது தெரிந்திருந்தும் அவள் உன்னிடம் அத்தனை அன்பு வைத்திருந்தால், அது மிக்க விசேஷமல்லவா?"

"அவளால் பேச முடியாது; மனதில் உள்ளதைச் சொல்ல முடியாது. ஏதோ சித்திரங்கள் எழுதிக் காட்டியதைக் கொண்டு எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ, அவ்வளவு தெரிந்து கொண்டேன். என்னிடம் அவளுடைய அன்பு இருக்கட்டும்; நம் தந்தையிடம் அவள் எத்தகைய அன்பு வைத்திருக்க வேண்டும் என்பதை நினைத்தால் என் நெஞ்சு உடனே உருகிவிடுகிறது. அக்கா! என்னுடைய பிராயத்தில் அப்பா என்னைப் போல இருப்பாரா?"

"இல்லை, தம்பி, இல்லை! உன்னுடைய பிராயத்தில் நம் தந்தை மன்மதனைத் தோற்கடிக்கும் அழகுடன் விளங்கினார். நம்முடைய சோழ குலம் வீரத்துக்குப் பெயர் போனதே தவிர அழகுக்குப் பெயர் போனதல்ல. நம் பாட்டனார் அரிஞ்சய தேவர் அழகில் நிகரற்ற வைதும்பராயன் குலத்தில் பிறந்த கல்யாணியை மணந்தார். கல்யாணியை அரிஞ்சயர் மணந்த போது அவள் பத்தரை மாற்றுப் பசும் பொன்னொத்த மேனியும், பூரண சந்திரனை யொத்த முகமும் கொண்ட புவன மோஹினியாக விளங்கினாள். தற்சமயம் இத்தனை வயதான பிறகும் கல்யாணிப்பாட்டி எவ்வளவு அழகாயிருக்கிறாள் என்பதை நீயே பார்த்திருக்கிறாய். அதனால் நமது தந்தையும் அவ்வளவு அழகுடன் இருந்தார். 'சுந்தரசோழர்' என்ற பட்டப் பெயரும் பெற்றார். நாம் நம்முடைய தாயாரைக் கொண்டு பிறந்திருக்கிறோம். திருக்கோவலூர் மலையமான் வம்சத்தில் பிறந்தவர்கள் அழகை வெறுப்பவர்கள்; அழகு வீரத்துக்குச் சத்துரு என்று நினைப்பவர்கள்..."

"அக்கா! இவ்வுலகில் ஒருவரைப்போல் இன்னொருவர் தத்ரூபமாக இருப்பதென்பது சாத்தியமா, அக்கா?"

"ஏன் சாத்தியமில்லை? இரட்டைப் பிள்ளைகளாயிருந்தால் அது சாத்தியம், அல்லது தாயும் மகளும் ஒரு பிராயத்தில் ஒரே மாதிரி இருப்பது சாத்தியம்தான். அபூர்வமாகச் சில சமயம் ஒரே மாதிரி இருப்பதும் உண்டு."

"பழுவூர் இளையராணியும், இலங்கையில் நான் பார்த்த நம் பெரியன்னையும் ஒரே மாதிரி இருப்பதாக வந்தியத்தேவர் சொல்வது உண்மையாயிருக்க முடியுமா?"

"நான் பழுவூர் ராணியைப் பார்த்திருக்கிறேனே தவிர, நம் பெரியம்மாவைப் பார்த்ததில்லை. ஆனால் வந்தியத்தேவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். தந்தை கூறிய வரலாற்றிலிருந்து அதைத் தெரிந்து கொண்டேன், தம்பி!"

"தந்தையே கூறினாரா, உன்னிடம்? என்ன கூறினார்? எப்போது கூறினார்?"

"சில நாளுக்கு முன்பு நானும் வானதியும் தஞ்சைக்குப் போயிருந்தோம். அப்போது தம் இளம் பிராயத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினார். இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் தாம் தனியாக ஒதுக்கப்பட்டதையும், அத்தீவில் ஒரு ஊமைப் பெண் தம்மிடம் காட்டிய அன்பைப் பற்றியும் கூறினார். பராந்தகர் அனுப்பிய ஆட்கள் தம்மை அத்தீவில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைப் பற்றிச் சொன்னார். தமக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய அன்று அரண்மனையின் வாசலில் நின்ற கூட்டத்தில் அவளைப் பார்த்தாராம். அடுத்த கணம் அவள் மறைந்து விட்டாளாம். அவளைத் தேடி அழைத்துவர முதன் மந்திரி அநிருத்தரையே அனுப்பினாராம். ஆனால் அந்தப் பெண் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து கடலில் குதித்து இறந்து விட்டாள் என்று அநிருத்தர் வந்து கூறினாராம். இந்தச் சம்பவம் நம் தந்தையின் உள்ளத்தில் இருபத்து நாலு வருஷங்களாக இருந்து அல்லும் பகலும் வேதனை அளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தேன். அவள் இறந்துவிட்டதாகவே தந்தை நினைத்துக் கொண்டிருக்கிறார். தம்மால், தமது குற்றத்தால், அவள் மனம் புண்பட்டு உயிரை விட்டுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார். தம்பி! நீயும், நானுமாக முயன்று நம் தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. நீ எப்படியாவது இலங்கையிலிருந்து அந்த மாதரசியைத் தஞ்சைக்கு அழைத்து வர வேண்டும். தந்தையிடம் அவள் இறந்துவிடவில்லை; உயிரோடிருக்கிறாள் என்பதை நேரில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், நம் தந்தைக்கு இந்த ஜன்மத்திலும் மனச்சாந்தி இல்லை!"

"தம்பி! இருந்தாலும், நீ ரொம்பப் பொல்லாதவன், தம்பி! சோழர்குலத்தின் பண்பாட்டையே மறந்துவிட்டாய்! கொடும்பாளூர் இளவரசியிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை! சௌக்கியமாக இருக்கிறாயா என்று கேட்கக்கூட இல்லையே? மகாவீரரான சிறிய வேளாரின் புதல்விக்கு நீ செய்யும் மரியாதை இதுதானா? அழகாயிருக்கிறது! வானதி! இங்கே வா! உன்னை இளவரசன் நன்றாய்ப் பார்க்க வேண்டுமாம்!" என்றாள் குந்தவை. வானதி அருகில் வந்தாள்.

"தென்திசைச் சேனாதிபதி என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவளைப் பற்றி விசாரிப்பார். நீயோ இவளைப் பற்றி ஒன்றுமே சொல்லி அனுப்புவதில்லை. ஆகையால், நான் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவேன்" என்றான் இளவரசன்.

"தம்பி! இரண்டு நாளில் தஞ்சைக்கு நான் புறப்படுகிறேன். ஆனால் இந்தச் சூடாமணி விஹாரத்தில்தான் நீ இன்னும் சில காலம் இருக்கவேண்டும்."

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? தந்தையின் கட்டளையை மீறி என்னை இங்கே இன்னமும் ஒளிந்து, மறைந்து வாழச் சொல்கிறாயா?"

"ஆம்! நீ இப்போது தஞ்சைக்கு வந்தால் நாடெங்கும் ஒரே குழப்பமாகிவிடும். மக்கள் மதுராந்தகர் மீதும், பழுவேட்டரையர்கள் மீதும் ஒரே கோபமாயிருக்கிறார்கள். உன்னைச் சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னதற்காகச் சக்கரவர்த்தி மீதுகூட ஜனங்கள் கோபமாயிருக்கிறார்கள். உன்னை இப்போது கண்டால் மக்களின் உணர்ச்சி வெள்ளம் பொங்கிப் பெருகும். அதன் விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது. உடனே உனக்குப் பட்டம் கட்டவேண்டும் என்று ஜனங்கள் கூச்சல் போட்டாலும் போடுவார்கள். தஞ்சைக் கோட்டையையும், அரண்மனையையும் முற்றுகை போடுவார்கள். ஏற்கெனவே மனம் புண்பட்டிருக்கும் தந்தையின் உள்ளம் மேலும் புண்ணாகும். தம்பி! இராஜ்யத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது என்று உன்னை நான் வரச்சொல்லி ஓலை எழுதினேன். அதே காரணத்துக்காக இப்போது நீ திரும்பி இலங்கைக்குப் போய்விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்..."

"அக்கா! அது ஒருநாளும் இயலாத காரியம். நம் தந்தையைப் பார்க்காமல் நான் திரும்பிப் போகமாட்டேன். தஞ்சைக்கு நான் இரகசியமாக வருவது நல்லது என்று நினைத்தால் அப்படியே செய்கிறேன். ஆனால் சக்கரவர்த்தியை நான் பார்த்தேயாக வேண்டும்."

"நீ வந்துதான் தீரவேண்டுமா? உன் இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் இன்னும் ஒரு வாரகாலம் சூடாமணி விஹாரத்தில் இரு. நான் முன்னதாகத் தஞ்சைக்குப் போகிறேன். நீ வந்திருப்பதாகத் தந்தையிடம் அறிவித்துவிட்டுச் செய்தி அனுப்புகிறேன்."

நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவை தேவியும் பேசிக்கொண்டிருந்தபோது கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கும், சேந்தன்அமுதனுக்கும் முக்கியமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.

"அமுதா! ஒன்று உன்னை நான் கேட்கப் போகிறேன். உண்மையாகப் பதில் சொல்வாயா?" என்றாள் பூங்குழலி. "இளவரசருக்கு ஓலை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் போனானே, அந்த வந்தியத்தேவன் உன்னைப் பற்றி அவன் ஒன்று சொன்னான். அது உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..."

"என்னைப் பற்றி அவன் உண்மையில்லாததைச் சொல்வதற்குக் காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும், அவன் சொன்னது என்னவென்று சொல்!"

"நீ என்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியதாகச் சொன்னான். "நீ என்னிடம் ஆசை வைத்திருப்பதாகச் சொன்னான், என்னை நீ மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னான்...."

"அவ்விதம் உண்மையில் அவன் சொன்னானா?"

"ஆம், அமுதா!"

"அவனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். நானே உன்னிடம் என் மனதைத் திறந்து தெரிவித்திருக்க மாட்டேன்; அவ்வளவு தைரியம் எனக்கு வந்திராது. எனக்காக உன்னிடம் தூது சொன்னான் அல்லவா? அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்."

"அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா?"

"உண்மைதான் பூங்குழலி! அதில் சந்தேகமில்லை."

"அமுதா! நீ உத்தமன், என் பெரிய அத்தையின் குணத்தைக் கொண்டு பிறந்திருக்கிறாய்..."

"அது என்ன விஷயம்? திடீரென்று புதிதாக ஏதோ சொல்கிறாயே?"

"என் பெரிய அத்தை இறந்துபோய் விட்டதாக நம் குடும்பத்தார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?"

"யாரைச் சொல்கிறாய்? என் தாய்க்கும், உன் தந்தைக்கும் உடன் பிறந்த மூத்த சகோதரியைத் தானே".

"ஆம்! அவள் உண்மையில் இறந்து விடவில்லை. அவள் இலங்கைத் தீவில் இன்றைக்கும் பைத்தியக்காரியைப் போல அலைந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்று பைத்தியக்காரியைப் போல் அலைவதற்கு சோழகுலத்தைச் சேர்ந்த ஒருவனின் நம்பிக்கைத் துரோகம்தான் அதற்குக் காரணம். இளம்பிராயத்தில், என் அத்தை இலங்கைக்கு அருகில் ஒரு தீவில் வசித்து வந்தாள். அவளைச் சோழ ராஜகுமாரன் ஒருவன் காதலிப்பதாகப் பாசாங்கு செய்தான், அவள் நம்பிவிட்டாள். பிறகு அந்த இராஜகுமாரன் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டதும் அவளை நிராகரித்து விட்டான்...."

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது, பூங்குழலி?"

"என் ஊமை அத்தையின் சமிக்ஞை பாஷை மூலமாகவே தெரிந்து கொண்டேன். அவள், தனக்குத் துரோகம் செய்தவனை மன்னித்ததுமில்லாமல், அவனுக்கு இன்னொரு மனைவி மூலம் பிறந்த பிள்ளையைப் பல தடவை காப்பாற்றினாள் என்று அறிந்தேன்."