Sunday, November 11, 2012

58. கடல் பொங்கியது!




" கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்" என்றார்  ஆச்சார்ய பிக்ஷு.

"ஆகா! அப்படிப்பட்ட படகோட்டி யார்? அவன் பெயர் என்னவென்று தெரியுமா?" என்றார் இளவரசர்.

"ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்..."

"படகோட்டி முருகய்யனை அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு வந்து அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ மாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்!" என்றார் இளவரசர்.

இளம் பிக்ஷு படகோட்டி முருகய்யனை அழைத்துக் கொண்டு பொன்னியின் செல்வர் இருந்த இடத்தை அணுகினார். முருகய்யன் இளவரசர் கூறுவதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்டான்.

"முருகா! இன்றிரவு நீ திரும்பி வந்து என்னைப் படகில் ஏற்றி ஆனைமங்கலத்துக்கு அழைத்துப்போக வேண்டும்" என்று இளவரசர் கூறினார்.

ஆச்சார்ய பிக்ஷு, "இளவரசே! இரவு வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்கள் இப்போதே புறப்பட்டுப் போகலாம்" என்று சொன்னார்.

உண்மை என்னவென்றால் பொங்கி வரும் கடல் அந்த சூடாமணி விஹாரத்தை சிறிது நேரத்துக்கெல்லாம் முழுக அடித்து விடும் என்று பிக்ஷுவின் உள்ளத்தில் ஒரு பீதி உண்டாகியிருந்தது. ஆகையால் இளவரசரை அவசரமாக வெளியேற்ற விரும்பினார். ஆனைமங்கலம் கடற்கரையிலிருந்து கிழக்கே சற்றுத் தூரத்தில் இருந்தது. ஆகையினால் பொங்கி வரும் கடல் அவ்வளவு தூரம் போய் எட்ட முடியாது. எட்டினாலும் அங்குள்ள மிகப் பெரிய சோழ மாளிகை மூழ்கிவிடாது.

இளவரசர் பிக்ஷுவின் கருத்தை ஏற்றுக் கொண்டார். உடனே படகு கொண்டு வருமாறு கட்டளை பிறந்தது. இதற்கிடையில் அங்கே கூடியிருந்த புத்த பிக்ஷுக்களைப் பார்த்து ஆச்சாரிய பிக்ஷு, "நாம் கருணையே வடிவமான புத்த பகவானைச் சேர்ந்தவர்கள். இப்போது நாகைப்பட்டினத்து மக்களுக்குப் பெரும் சோதனை நேரிட்டிருக்கிறது. கடல் பொங்கி நகரத்துக்குள் வேகமாக புகுவதைக் கண்டேன். புயலின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் சிதறிப் பறக்கின்றன. மரங்கள் தடதடவென்று முறிந்து விழுகின்றன. நாகைப்பட்டினத்திலும், அக்கம் பக்கத்திலும் வசிக்கும் மக்களில் வயோதிகர்களும் குழந்தைகளும் எத்தனையோ பேர் தப்பிக்கும் வகை அறியாது தவித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைவரும் நாலாபுறமும் சென்று உங்கள் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். குழந்தைகளையும் வயோதிகர்களையும் முதலில் கவனியுங்கள்." என்றார்.

இதைக் கேட்டதும் பிக்ஷுக்கள் அங்கிருந்து அகன்று சென்றார்கள். கால்வாயில் படகு வந்து சேர்ந்தது. இளவரசர் ஆச்சாரிய பிக்ஷுவுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்று அதில் ஏறிக் கொண்டார். முருகய்யனும் ஏறிப் படகு தள்ளத் தொடங்கினான். படகு கண்ணுக்கு மறையும் வரையில் பிக்ஷு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

"முருகையா! படகை ஆனைமங்கலம் அரண்மனைக்கு விடு!" என்று பொன்னியின் செல்வர் உரத்த குரலில் கூவினார். அச்சமயம் உச்சநிலையை அடைந்திருந்த புயற்காற்றும், புயலில் பொங்கி வந்த கடலும் போட்ட இரைச்சலினால் அவர் கூறியது முருகய்யன் காதில் விழவில்லை. ஆயினும் இளவரசரின் முகத்தோற்றத்திலிருந்து அவருடைய விருப்பத்தை அறிந்து கொண்ட முருகய்யன் படகைச் செலுத்தத் தொடங்கினான். சூடாமணி விஹாரத்தின் முழுகிக் கொண்டிருந்த மண்டபச் சிகரங்களின் மீதும் புத்தர் சிலைகளின் மீதும் மோதாமல் படகைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருந்தது. முருகையன் பெரும் புயலிலும் சுழிக் காற்றிலும் நடுக் கடலில் படகு செலுத்திப் பழக்கப்பட்டவனாதலால் வெகு லாவகமாகச் செலுத்திக் கொண்டு போனான். அதைப் பார்த்து இளவரசர் வியந்தார்.

பெரிய பெரிய மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களில் சில மிதந்து மிதந்து சென்றன. ஆடு மாடுகள் வெள்ளத்தில் அலறிக்கொண்டு மிதந்து சென்றன. முருகய்யன் அப்பால் இப்பால் பார்க்காமல் படகை சர்வ ஜாக்கிரதையாகச் செலுத்திக்கொண்டு சென்றான். சூடாமணி விஹாரம் நாகைப்பட்டினத்தில் கடற்கரையோரமாக இருந்தது. அங்கிருந்து கால்வாய் சிறிது தூரம் வரையில் தெற்குத் திசையை நோக்கிச் சென்றது. பிறகு தென்மேற்காக அரைக்காதம் வரையில் சென்று, அங்கிருந்து மீண்டும் திரும்பித் தென் திசையில் நேராகச் சென்றது. இந்த இரண்டாவது திருப்பத்தின் முனையிலேதான் ஆனை மங்கலம் அரண்மனை இருந்தது.

இருட்டுகிற சமயத்தில் படகு ஆனைமங்கலத்திலிருந்த சோழ மாளிகையை அணுகியது. பொங்கி வந்த கடல் அந்த மாளிகையை எட்டவில்லை. அரண்மனைக்கருகில் அமைந்திருந்த அலங்காரப் படித்துறையில் கொண்டுபோய் முருகய்யன் படகை நிறுத்தினான். அவர்கள் அரண்மனைக்குள் பிரவேசித்ததும் புயல் காற்றோடு பெருமழையும் சேர்ந்து 'சோ' என்று கொட்டத் தொடங்கியதும் சரியாயிருந்தன.