Sunday, November 11, 2012

59. மக்கள் குதூகலம்



மறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன. நாகைப்பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தான். புயலினாலும் வெள்ளத்தினாலும் நேர்ந்திருந்த அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள்.

இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் முருகய்யனின் மனையாள்தான். அவள் ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை வைத்துச் சமிக்ஞை செய்தான். 'உஷ், உஷ்' என்று எச்சரித்தான். ஒன்றும் பயன்படவில்லை.

"சக்கரவர்த்தித் திருமகனே! வீராதி வீரனே! பொன்னியின் செல்வா! சோழ நாட்டின் தவப் புதல்வா! சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா? என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன!" என்று கூச்சலிட்டாள்.

வீதியில் அச்சமயம் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின.

ஓடக்கார முருகய்யன் தன் மனைவி போட்ட கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திகைத்தான். மறுபடியும் அவளைப் பார்த்துக் கையினால் சமிக்ஞைகள் செய்து கொண்டே "பெண்ணே! என்ன உளறுகிறாய்? உனக்குப் பைத்தியமா?" என்றான்.

இளவரசர் குறுக்கிட்டு, "பெண்ணே! நீ என்னை யார் என்றோ தவறாக நினைத்துக்கொண்டாய். நான் ஈழநாட்டிலிருந்து வந்த வியாபாரி. நான்தான் இவனை என்னுடன் வழி காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்! வீண் கூச்சல் போடாதே!" என்றார்.

இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அவர்களைச் சுற்றிலும் ஜனங்கள் கூடிவிட்டார்கள். கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வந்தவர்கள் எல்லாரும் இளவரசரை உற்றுப் பார்க்கலானார்கள்.

அதுவரையில் அடங்காத வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், "பொன்னியின் செல்வர் வாழ்க! ஈழம் கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்று ஒரு பெரிய கோஷத்தைக் கிளப்பினார்கள். அதைக் கேட்டுவிட்டு மேலும் பல மக்கள் திரண்டு வந்து அங்கே கூடினார்கள். அப்படி வந்தவர்களிலே நாகைப்பட்டினம் நகரத்தின் எண்பேராயத் தலைவர் ஒருவரும் இருந்தார். அவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்து "கோமகனே! தாங்கள் இந்த நகரின் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதாகக் கேள்விப்பட்டோம். அந்த வதந்தியை நாங்கள் நம்பவில்லை, இப்போது உண்மை அறிந்தோம். நேற்று அடித்த பெரும் புயல் இந்த நகரத்தில் எத்தனையோ நாசங்களை விளைவித்திருக்கிறது. ஆனாலும் தங்களைப் புத்த விஹாரத்திலிருந்து பத்திரமாய் வெளிக்கொணர்ந்ததே, அதை முன்னிட்டுப் புயலின் கொடுமைகளையெல்லாம் மறந்து விடுகிறோம். இந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்!" என்று கூறினார்.

இளவரசர் இனிமேல் தன்னை மறைத்துக்கொள்ளப் பார்ப்பதில் பயனில்லை என்று கண்டு கொண்டார். "ஐயா! தங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி, இந்த நகர மாந்தரின் அன்பு என்னைப் பரவசப்படுத்துகிறது. ஆனால் வெகு முக்கியமான காரியமாக நான் தஞ்சாவூருக்கு அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. பிரயாணம் தடைப்படக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி வியாபாரியின் வேடம் பூண்டு புறப்பட்டேன். எனக்கு விடை கொடுங்கள்!" என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் கிளம்பியது. "கூடாது கூடாது! இளவரசர் இங்கே ஒரு நாளாவது தங்கி எங்களின் உபசாரத்தைப் பெற்றுக்கொண்டுதான் புறப்படவேண்டும்" என்று உரக்கச் சத்தமிட்டுக் கூறியது அக்குரல்.

அதைப் பின்பற்றி இன்னும் ஆயிரமாயிரம் குரல்கள் "கூடவே கூடாது! இளவரசர் ஒரு நாளாவது இங்கே தங்கி இளைப்பாறி விட்டுத்தான் போகவேண்டும்!" என்று கூச்சலிட்டன.

எண் பேராயத்தின் தலைவர் அப்போது "கோமகனே! என் நகர மக்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்த்தீர்களா? எங்கள் உபசாரத்தைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு ஒருவேளையாவது எங்கள் விருந்தாளியாக இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்! இளவரசே! இங்கே தங்குவதினால் ஏற்படும் தாமதத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். தாங்களோ கால் நடையாகப் புறப்பட்டிருக்கிறீர்கள். புயல் மழை காரணமாகச் சோழ நாட்டுச் சாலைகள் எல்லாம் தடைப்பட்டுக் கிடக்கின்றன. நதிகளிலெல்லாம் பூரண வெள்ளம் போகிறது. கால்நடையாகச் சென்று எப்போது போய்ச் சேர்வீர்கள்? தங்களை யானைமீது வைத்து ஊர்வலமாக அனுப்புகிறோம். தங்களுடன் நாங்கள் அனைவரும் வந்து தஞ்சாவூருக்கே கொண்டுவிட்டு வருகிறோம்" என்றார் எண்பேராயத்தின் தலைவர். அவர் பேசிக் கொண்டிருக்கையில் ஜனங்களின் கூட்டம் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அரைப் பகல் நேரமாவது இங்கே தங்கிவிட்டுத்தான் புறப்பட வேண்டும் என்று இளவரசர் முடிவு செய்தார். எண்பேராயத்தின் தலைவரைப் பார்த்து, "ஐயா! இவ்வளவு மக்களின் அன்பையும் புறக்கணித்துவிட்டு நான் போக விரும்பவில்லை. பிற்பகல் வரையில் இங்கே இருந்துவிட்டு மாலையில் புறப்படுகிறேன். அதற்காவது அனுமதி கொடுப்பீர்கள் அல்லவா?" என்றார்.

இளவரசர் தங்கிச் செல்லச் சம்மதித்து விட்டார் என்ற செய்தி பரவியதும் ஜனக்கூட்டத்தின் உற்சாகம் எல்லை கடந்து விட்டது. இதற்கிடையில் நாகைப்பட்டினம் நகரின் ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். இளவரசருக்கு விருந்து அளிக்கப் பெருந்தர ஏற்பாடுகள் நடந்தன. இளவரசரைப் பார்க்க வந்த ஜனத்திரளுக்கு உணவளிக்கும் ஏற்பாடுகளும் நடந்தன. விருந்துகள் முடிந்து, புறப்பட வேண்டிய சமயம் நெருங்கிற்று. இளவரசர் சோழ மாளிகையின் மேன்மாடத்து முகப்பில் வந்து கைகூப்பிக் கொண்டு நின்றார். வீதியில் ஒரு பெரிய கோலாகலமான ஊர்வலம் புறப்படுவதற்கு எல்லாம் ஆயத்தமாயிருந்தன. இளவரசர் ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று வந்து நின்றது. முன்னாலும் பின்னாலும் குதிரைகள், ரிஷபங்கள் முதலியவை நின்றன. திருச்சின்னங்களும், கொடிகளும் ஏந்தியவர்களும், பலவித வாத்தியக்காரர்களும் அணிவகுத்து நின்றார்கள். மக்களோ நேற்று மாலை பொங்கி எழுந்த கடலைப்போல் ஆரவாரித்துக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் நின்றார்கள்.

சிறிது நேரத்துக் கெல்லாம் இளவரசர் யானைமீது ஏறிக் கொண்டு பிரயாணப்பட்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய ஒரு மாபெரும் ஊர்வலம் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. போகப் போக இளவரசருடன் தொடர்ந்த ஊர்வலம் பெரிதாகிக் கொண்டிருந்தது.