Sunday, November 11, 2012

63. தூமகேது மறைந்தது!



நெடு நேரத்துக்கு அப்பால் பழுவேட்டரையருக்குச் சிறிது நினைவு வந்தபோது, அவர் நினைவு இழந்து கொண்டிருந்த சமயத்தில் இலேசாகக் காதில் விழுந்த சம்பாஷணை ஞாபகத்துக்கு வந்தது.

"கிழவன் செத்துப் போய் விட்டான்!" என்றது ஒரு குரல்.

"நன்றாகப் பார்! பழுவேட்டரையனுடைய உயிர் ரொம்பக் கெட்டி யமன் கூட அவன் அருகில் வரப் பயப்படுவான்!" என்றது மற்றொரு குரல்.

"நல்ல சமயத்தில் நீ பிளந்த மண்டபத்தைத் தள்ளினாய். இல்லாவிடில் நான் அந்தக் கதியை அடைந்திருப்பேன். கிழவன் என்னைக் கொன்றிருப்பான்!"

"எங்கே? மண்டபத்தை நகர்த்த முடியுமா, பார்க்கலாம்!"

சற்றுப் பொறுத்து, "துளிகூட அசையவில்லை! ஒரு பகைவனுடைய பள்ளிப்படையைக் கொண்டு இன்னொருவனுக்கும் வீரக்கல் நாட்டி விட்டோம்" என்று கூறிவிட்டு மந்திரவாதி கலகலவென்று சிரித்தான்.

இந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டு பழுவேட்டரையர் தம்முடைய நிலை இன்னதென்பதை ஆராய்ந்தார். ஆம்; அவர்மீது பள்ளிப்படை மண்டபத்தின் ஒரு பாதி விழுந்து கிடந்தது. அதன் பெரிய பாரம் அவரை அமுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மூச்சுவிட முடிகிறதே, எப்படி?

நல்லவேளையாக, மண்டபத்தோடு விழுந்த மரம் அவர் தோளின் மீது படிந்து அதன் பேரில் மண்டபம் விழுந்திருந்தது. மண்டபத்தையொட்டியிருந்த மரந்தான் அவர் உயிரைக் காப்பாற்றியது. மண்டபம் நேரே அவர் மேல் விழுந்திருந்தால் மார்பும் தலையும் நொறுங்கிப் போயிருக்கும். கிழவனார் தம்முடைய உடம்பின் வலிமையை எண்ணித் தாமே ஆச்சரியப்பட்டார். அந்தப் பெரிய பாரத்தை இத்தனை நேரம் சுமந்தும் தம்முடைய உயிர் போகவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் இவ்வளவு கெட்டியான உயிரை இன்னமும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா?

ஆம்; எப்படியாவது காப்பாற்றிக் கொண்டேயாக வேண்டும். காப்பாற்றிக் கொண்டு சோழ குலத்துக்கு நேரவிருந்த அபாயத்தைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்காவிட்டால் அவருடைய குலத்துக்கு என்றும் அழியாத பழி இவ்வுலகில் ஏற்படுவது நிச்சயம். ஆகையால், எந்தப் பாடுபட்டாலும் இந்த மரத்தையும் மண்டபத்தையும் அப்புறப்படுத்தி எழுந்திருக்க வேண்டும். ஐயோ! எத்தனை நேரம் இங்கே இப்படி நினைவு இழந்து கிடந்தோமோ என்னமோ தெரியவில்லையே? இதற்குள் ஒரு வேளை நாம் தடுக்க விரும்பும் விபரீதங்கள் நேரிட்டிருக்குமோ?

பழுவேட்டரையர் தம் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து அவர்மீது விழுந்து கிடந்த மரத்தைத் தூக்க முயன்றார். மரம் சிறிது சிறிதாக உயர உயர, அதன் மேல் நின்ற மண்டபப் பாறை நகர்ந்து சரியத் தொடங்கியது. ஒரு யுகம் எனத் தோன்றிய ஒரு நாழிகை முயன்ற பிறகு அவரை அமுக்கிக் கொண்டிருந்த மரமும் மண்டபப் பாறையும் சிறிது அப்பால் நகர்ந்து அவரை விடுதலை செய்தன. அந்த முயற்சியினால் அவருக்கு ஏற்பட்ட சிரமம் காரணமாகச் சிறிது நேரம் அப்படியே கிடந்தார். பெரிய நெடுமூச்சுகள் விட்டார். ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மண்டபத்துக்குச் சமீபமாதலாலும், புயலில் மரங்கள் பல விழுந்து விட்டிருந்த படியாலும் வானவெளி நன்றாகத் தெரிந்தது. வைரப் பொரிகள் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் தெரிந்தன.

சட்டென்று வானத்தில் வடதிசையில் தோன்றிய ஒரு விசித்திரமான நட்சத்திரம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அடடா! சில நாளைக்கு முன்பு அவ்வளவு நீளமான வாலைப் பெற்றிருந்த தூமகேதுவா இப்போது இவ்வளவு குறுகிப் போயிருக்கிறது?

திடீரென்று வானமும் பூமியும் அந்த வனப்பிரதேசம் முழுவதும் ஒளி மயமாயின. பழுவேட்டரையரின் கண்கள் கூசின. அது மின்னல் அல்ல, வேறு என்னவாயிருக்கக் கூடும்? வானத்தைக் நோக்கினார். ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த ஒரு தீப்பந்தம் வான வட்டத்திலே ஒரு கோணத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கக் கண்டார். அதன் பிரகாசம் அவருடைய கண்களைக் கூசச் செய்தது. கண்ணை ஒரு கணம் மூடிவிட்டுத் திறந்து பார்த்தார். அந்தத் தீப்பந்தம் சிறிதாகிப் போயிருந்தது; வர வர ஒளி குறைந்து வந்தது; திடீரென்று அது மறைந்தேவிட்டது. பழையபடி இருள் சூழ்ந்தது.

இந்த அதிசயம் என்னவாயிருக்கும் என்று பழுவேட்டரையர் சிந்தித்துக் கொண்டே மீண்டும் வானத்தை நோக்கினார். குறுகிய தூமகேது சற்றுமுன் இருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அதைக் காணவில்லை. ஆகா! தூமகேதுதான் விழுந்து விட்டது! இதன் கருத்து என்ன? ராஜகுடும்பத்தினர் யாருக்காவது விபத்து நேரிடுவதற்கு அடையாளம். வால் நட்சத்திரம் மறையும்போது அரச குலத்தைச் சேர்ந்த யாரேனும் மரணம் அடைவார்கள். இது வெகுகாலமாக மக்களிடையே பரவியிருக்கும் நம்பிக்கை.

அதோ கீழ் வானம் வெளுத்துவிட்டது! பொழுது புலரப் போகிறது! இன்று இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று விபரீத பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும். அவை நடக்கப்போகும் விவரம் நமக்கு மட்டும் தெரியும். அவற்றைத் தடுக்கும் சக்தியும் நமக்குத்தான் உண்டு. சோழர் குலத்தைச் சேர்ந்த மூவரையும் காப்பாற்றியேயாக வேண்டும்.

தமது முதல் கடமை - மிக முக்கியமான கடமை ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றுவதுதான்! அவனுக்கு விபத்து வந்தால் அதன் பழி தன் தலையில் நேராக விழும். ஆகையால் கொள்ளிடத்தைத் தாண்டிக் கடம்பூருக்கு உடனே போய்ச் சேரவேண்டும். அதற்கு முன்னால், குடந்தைக்குச் சென்று, தஞ்சைக்கும், நாகைக்கும் எச்சரிக்கை அனுப்பிவிட்டுப் போவது நல்லது. பின்னர், விதிவசம் போல் நடந்துவிட்டுப் போகிறது. தாம் செய்யக்கூடியது அவ்வளவு தான்!

பழுவேட்டரையர் எழுந்திருக்க முயன்றார். உடம்பெல்லாம் ரணமாக வலித்தது. மரம் விழுந்திருந்த இடம் மார்பில் பொறுக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. ஒரு கால் முறிந்து விட்டது போல் தோன்றியது. தேகம் முழுவதும் பல்வேறு காயங்கள் பட்டிருந்தன.

அவற்றையெல்லாம் அந்த வீரக் கிழவர் பொருட்படுத்தவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பெரும் முயற்சி செய்து எழுந்து நின்றார்; குடந்தை நகரம் அங்கிருந்து எந்தத் திசையில் இருக்கலாம் என்பதை ஒருவாறு நிர்ணயித்துக் கொண்டு புறப்பட்டார். திடமாகக் கால்களை ஊன்றி வைத்து நடக்கத் தொடங்கினார். யாரையாவது பிடித்து தஞ்சைக்கும் நாகைக்கும் ஓலை அனுப்ப வேண்டும். பிறகு ஒரு வாகனம் சம்பாதித்துக் கொண்டு கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும், துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள ஜோதிடர் ஞாபகம் அவருக்கு வந்தது. ஜோதிடர் தகுந்த மனிதர்; இனிய இயல்பு படைத்த மனிதர். இராஜ குடும்பத்துக்கும் முதன் மந்திரிக்கும் வேண்டியவர். இராஜ குடும்பத்துக்கு வேண்டியவராகயிருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் செய்வார்.

பழுவேட்டரையர் ஜோதிடர் வீட்டு வாசலில் பிரவேசித்த போது, ஜோதிடரின் சீடன் அவரைத் தடுத்து நிறுத்தினான். பழுவேட்டரையர் அப்போதிருந்த கோலத்தில் அவரை அவனால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. ஆகையினாலேயே "நில்!" என்று அதட்டும் குரலில் கூறிவிட்டுத் தடுத்தான். பழுவேட்டரையர் ஒருமுறை ஹுங்காரம் செய்துவிட்டு அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். சீடன் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு போய் வீதியில் விழுந்தான். பழுவேட்டரையர் மதயானையைப் போல் பூமி அதிர நடந்து ஜோதிடரின் வீட்டுக்குள் புகுந்தார்.

பழுவேட்டரையர் உள்ளே பிரவேசித்தார். பரபரப்புடன் எழுந்து நின்று கும்பிட்ட ஜோதிடரை உற்றுப் பார்த்துவிட்டுச் சுற்று முற்றும் நோக்கினார். "ஜோதிடரே! நான் யார் தெரிகிறதா? தனாதிகாரி பெரிய பழுவேட்டரையனே தான்! ஏன் இவ்வாறு பேந்த விழிக்கிறீர்? அவ்வளவு உருமாறிப் போயிருக்கிறேனா? உம்மால் எனக்கு ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது! ஒரு பெரிய உதவி நீ எனக்குச் செய்ய வேண்டும்" என்றார்.

"ஐயா! இந்த ஏழை எளியவனால் தங்களுக்கு என்ன பெரிய உதவி தேவையாயிருக்க முடியும்? தங்களைப் பார்த்தவுடனே திடுக்கிட்டுப் போனேன். அதனால் தங்களைத் தக்கபடி வரவேற்று உபசரிப்பதற்குத் தவறிவிட்டேன். பெரிய மனது செய்து அந்தப் பலகையிலே உட்கார வேண்டும்" என்று பலகைகளைச் சுட்டிக் காட்டினார்.

"ஜோதிடரே! இல்லை; எனக்கு உட்கார நேரமில்லை.சில காலமாக வானத்தில் தோன்றிக் கொண்டிருந்த தூமகேது இன்று காலையில் வானத்திலிருந்து பூமியில் விழுந்து மறைந்ததே, அது உமக்குத் தெரியுமா? தெரிந்தால், அதன் பொருள் என்ன என்று சொல்லக் கூடுமா? அது ஏதேனும் பெரிய உற்பாதத்தைக் குறிப்பிடுகிறதா? சக்கரவர்த்திக்கோ, அவருடைய மக்களுக்கோ நேரப் போகிற விபத்தைக் குறிப்பிடுகிறதா?"

"தனாதிபதி! இராஜாங்க சம்பந்தமான காரியங்களில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது எங்கள் தொழிலின் பரம்பரை மரபு. தூமகேது தோன்றுவதும் விழுவதும் அரசகுலத்தினர்க்கு அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். ஆனால் அது ஜோதிட சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல. ஜனங்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது."

"ஜோதிடரே, நீர் ஜோதிடம் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்கள் இருவருக்கும் இன்றைக்குப் பெரிய கண்டம் காத்திருக்கிறது. யமதர்மன் அவர்களை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். சக்கரவர்த்தியின் யமன் பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் மறைந்திருக்கிறான். அருள்மொழியின் யமன் யானைப் பாகனுடைய அங்குசத்திலே ஒளிந்திருக்கிறான். அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச்சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வனையும் காப்பாற்றுவது உம்முடைய பொறுப்பு. என் முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு உம் சீடன் தஞ்சைக்குப் போகட்டும். நீர் திருவாரூர் சென்று இளவரசருக்கு எச்சரிக்க வேண்டும், செய்வீரா? உடனே புறப்படுவீரா?"

"துர்க்கா பரமேசுவரியின் அருளினால் தங்களுடைய கட்டளையை என்னால் இயன்றவரை நிறைவேற்றி வைப்பேன்."

"ஆகா! இனி, நான் கடம்பூருக்குத் திரும்பலாம், இதோ புறப்படுகிறேன்...."