Sunday, November 11, 2012

64. "யானைக்கு மதம் பிடித்தது"



நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள். திரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள்.

ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன? ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை.

இந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது எப்படியிருந்தாலும், காலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. "யானைப்பாகன் எங்கே?" என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் "யானைப்பாகன் எங்கே?" என்று எதிரொலி செய்தன.

இளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள்.

"முருகய்யா! யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு!" என்றார் இளவரசர்.

முருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, "இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்!" என்று பல குரல்கள் ஒலித்தன.

கையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள்.

பொன்னியின் செல்வரும் "நல்ல வேளை!" என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார். ஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.

யானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது! யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது.

"யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்!

இளவரசர் யானையை நெருங்கி வந்தவன் உண்மையான யானைப்பாகன் அல்ல, ஏதோ தீயநோக்கத்துடன் வந்தவன், அதனாலேதான் யானை அவனைத் தூக்கி எறிந்திருக்கிறது என்பதையும் ஒரு நொடியில் ஊகித்துக்கொண்டார். வந்தவன் யார், எதற்காக வந்தான் என்பதையெல்லாம் அச்சமயம் கண்டுபிடிக்க முயன்றால், கிடைத்த சந்தர்ப்பம் தவறிபோய்விடும். "யானைக்கு மதம் பிடித்துவிட்டது!" என்ற கூச்சலினால் மக்களிடையே உண்டான குழப்பத்தைப் பின்னர் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அந்த ஜனக்கூட்டத்தினிடையிலிருந்து தப்பிச் சென்று கூடிய விரைவில் தஞ்சையை அடைவது அச்சமயம் அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைக் காட்டிலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

ஆதலின், முருகய்யனைத் தம் அருகில் அழைத்து, அவன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு, அவன் தோள்மீது ஏறி யானையின் மீது தாவினார். அப்படித் தாவும்போதே யானை மேலிருந்த அம்பாரியைத் தட்டிவிட்டார். அம்பாரி கீழே விழுந்து உருண்டது. பின்னர், யானையிடத்திலும் அதன் பாஷையில் ஏதோ சொன்னார். உடனே யானை பிய்த்துக் கொண்டு கிளம்பியது. முன்போல, பயங்கரமான குரலில் பிளிறிக் கொண்டே விரைவாக நடந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஓடவே தொடங்கிவிட்டது.

அதே சமயத்தில் முருகய்யன், "ஐயோ! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள்! உடனே ஓடுங்கள்" என்று பெருங்கூச்சலிட்டான்.

ஜனங்கள் முன்னைக் காட்டிலும் அதிக பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அக்கம் பக்கத்திலிருந்து குறுக்கு வீதிகளிலும் சந்துகளிலும் புகுந்து ஓடினார்கள். திறந்திருந்த வீடுகளுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டார்கள்.

திரு ஆரூர் நகரத்தைத் தாண்டியதும் இளவரசர் யானையை நேரே தஞ்சாவூர்ச் சாலையில் செலுத்துவதற்குப் பதிலாக, வடமேற்குத் திசையை நோக்கித் திருப்பினார். தஞ்சைச் சாலையில் சென்றால் மக்கள் தம்மை விடாமல் தொடர்ந்து வரக்கூடும். வழியில்லாத வழியில் யானை போய்விட்டால், ஜனங்கள் தொடர்ந்து வரமுடியாது! இவ்விதம் அதி விரைவில் சிந்தித்து முடிவுசெய்து, யானையை வடமேற்குத் திசையில் குறுக்கு வழியில் செலுத்தினார். வயல்கள், வரப்புகள், வாய்க்கால்கள், நதிகள், அவற்றின் உடைப்புகள் - இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் யானை ஜாம் ஜாம் என்று மனம் போன போக்கில் சென்றது. இளவரசரின் உள்ளமும் இனந்தெரியாத உற்சாகத்தை அடைந்து, கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போல் ஆகாச வெளியில் வட்டமிட்டுத் திரிந்தது. தம்முடைய வாழ்நாளில் ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் உள்ளுணர்ச்சியிலிருந்து உற்சாகமும் பரபரப்பும் பொங்கிக் கொண்டிருந்தன.