Sunday, November 11, 2012

65. தெய்வம் ஆயினாள்!



யானை அரண்மனை வாசலில் வந்து நின்றது.

வாசற் காவலனை அழைத்துச் சின்னப் பழுவேட்டரையர் ஏதோ கூறினார். அவன் அரண்மனையின் முன் வாசலைத் திறந்து விட்டான். அரண்மனை வாசலில் ஒரு பக்கத்தில் எப்போதும் ஆயத்தமாயிருந்த தம் ஆட்களைச் சமிக்ஞையால் அழைத்தார். அவர்களிடம் கோட்டையின் உட்பக்கம் முழுவதும் நன்றாய்த் தேடிச் சந்தேகாஸ்பதமாக யார் தென்பட்டாலும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

பிறகு, வேளக்காரப் படையாரிடம் அன்றிரவு முழுவதும் தூங்காமலே அரண்மனையையும் சுற்றுப்புறங்களையும் காவல் புரியவேண்டுமென்று சொல்ல எண்ணி, அவர்களுடைய தலைவனை அனுப்பும்படி ஆக்ஞாபித்த வண்ணம் திரும்பிப் பார்த்தார். அப்போது அரண்மனை முன்புறத்து நிலா முற்றத்தைத் தாண்டி முதல் வாசற்படிக்கு அருகிலே இவன் யார்? தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது! ஆகா! அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை? சக்கரவர்த்தியிடந்தான் அவனுக்கு என்ன காரியம்?

மிகப் பயங்கரமான ஓர் எண்ணம் அவர் மனத்தில் மின்னலைப் போல் தோன்றிச் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கியது. கோபக்கனலை எழுப்பியது. இவன் சதிகாரனோ? யானைப்பாகனைப் போல் வந்திருக்கிறானோ? தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்தவன் அரண்மனைக்குள்ளே போகிறதாவது? காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா?

நாலே எட்டில் நிலா முற்றத்தைக் காலாந்தக கண்டர் கடந்து சென்று யானைப்பாகன் சமீபம் அடைந்தார். "அடே! நில் இங்கே!" என்று ஒரு கர்ஜனை செய்தார்.

"நீ ஏன் உள்ளே போகிறாய்? யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை?" என்று கூறிக்கொண்டே, அவனுடைய ஒரு கரத்தைத் தமது வஜ்ராயுதம் போன்ற கை முஷ்டியினால் பிடித்துக் கொண்டார். பிடித்த பிடியை இன்னும் சிறிது கெட்டியாக்கிக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் "அடா!" உண்மையைச் சொல்! நீ யார்? யானைப்பாகன்தானா? அல்லது சதிகாரனா? " என்று சொல்லிக் கொண்டே, பிடித்த பிடியை விடாமல் 'யானைப்பாகன்' முகத்தைத் தம்மை நோக்கித் திருப்பினார்.

அரண்மனையின் முன் மண்டபத்தில் எரிந்த தீபங்களின் வெளிச்சம் லேசாக அந்த 'யானைப்பாகனின்' கம்பீரமான முகத்தில் விழுந்தது.

"தளபதி! நான் யானைப்பாகன் கூடத்தான்" என்றான் யானைப்பாகன்.

காலாந்தக கண்டர் அந்த முகத்தைப் பார்த்தார். அந்தக் குரலைக் கேட்டார். திகைத்துச் சித்திரப் பதுமைபோல் நின்று விட்டார். கைப்பிடி அதுவாகத் தளர்ந்து இளவரசர் அருள்மொழிவர்மரை விடுதலை செய்தது.

அஞ்சா நெஞ்சமும், அளவிலா மனோதிடமும் வாய்ந்தவரான காலாந்தக கண்டரின் கை கால்கள் அந்தக் கணத்தில் வெடவெடத்து விட்டன. இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தியவாறு, "பொன்னியின் செல்வா! இது என்ன கோலம்? இது என்ன காரியம்? சற்றுமுன் நான் செய்த பிழையைப் பொறுத்துக் கருணை புரிய வேண்டும்" என்று நாத் தழுதழுக்கக் குரல் நடுங்கக் கூறினார்.

மேலும் இதே முறையில் பேசப் போனவரை இளவரசர் தடுத்து, "தளபதி! இது என்ன? தாங்களாவது, குற்றம் செய்யவாவது?" தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் கடமையைச் செய்தீர்கள். தவறு என்னுடையது. முதலில் என் தந்தையைப் பார்த்து விட்டு, பிறகு..."

"தெரிகிறது, அரசே! தாங்கள் தயவு செய்து விரைந்து உள்ளே செல்லுங்கள்!" என்றார் காலாந்தக கண்டர்.

அரண்மனையில் அப்போது இளவரசரின் வரவு காரணமாக ஒரே கோலாகலமாயிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகப் பெண்கள் போவதும் வருவதுமாயிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்து சக்கரவர்த்தி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்து விட்டுப்போன வண்ணமிருந்தார்கள்.

சக்கரவர்த்தி சாய்ந்து படுத்த வண்ணம் தமது அருமைக் குமாரன் அருள்மொழியின் கைகளைத் தமது கைகளால் பிடித்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவருக்கும் முன்னால் மந்தாகினி, ஒரு பக்கத்தில் வானதியும், அவளை மருமகளாகப் பெறுவதற்கிருந்த மலையமான் மகளும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆனால், மேல் மண்டபத்தின் முகப்பிலிருந்து பாய்ந்து வந்த கூரிய வேலை அவர்களில் யாரும் கவனிக்கவில்லை. பூங்குழலி தன் அத்தையை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்றாள்.

பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்து எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. 'வீல்' என்று பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள்.

பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள். அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.

அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சூழ்ந்தது. பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது. திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.

"விளக்கு! விளக்கு!" என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.

"ஆகா! ஐயோ!" என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின. இத்தனை குழப்பத்துக்கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

இதயத்தைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் விம்மும் குரலும், அழுகைக் குரலும் சேர்ந்து அவள் காதில் விழுந்தன.

வாசற்படிக்கருகில் "யாரடா அவன்? ஓடாதே! நில்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கூச்சலிட்டார். அச்சமயம் இரண்டு தாதிப் பெண்கள் தீபங்களுடன் வந்து அந்த அறையில் பிரவேசித்தார்கள்.

தீப வெளிச்சத்தில் தோன்றிய காட்சி யாருமே எதிர்பார்க்க முடியாத அதிசயக் காட்சியாயிருந்தது. மூன்று வருஷங்களாகக் காலை ஊன்றி நடந்தறியாமலிருந்த சக்கரவர்த்தி, கால்களின் சக்தியை அடியோடு இழந்து விட்டிருந்த சுந்தரசோழ மன்னன், தாம் படுத்திருந்த கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வந்து, மந்தாகினியின் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் இளவரசரும் இருந்தார். மந்தாகினியின் விலாவில் ஒரு பக்கத்தில் பாய்ந்து இன்னொரு பக்கம் வெளி வந்திருந்த வேலின் முனையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டிலின் அருகில் மலையமான் மகள் வானமாதேவி காணப்பட்டாள். அவளுக்கு அருகில் சக்கரவர்த்தி தலை வைத்துச் சாய்ந்திருந்த தலையணையில் ஒரு கூரிய கத்தி செருகப்பட்டிருந்தது.

விளக்கு வந்ததும் மகாராணி கட்டிலை வெறிக்கப் பார்த்துவிட்டு, கரை காணாத அதிசயம் ததும்பிய கண்களினால் சக்கரவர்த்தி கீழே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அப்போது பொன்னியின் செல்வர் மந்தாகினியின் தலையை மெள்ளத் தூக்கிச் சக்கரவர்த்தியின் மடியில் வைத்தார். இளவரசர் அருள்மொழிவர்மரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. சக்கரவர்த்தியோ விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.

இவ்வளவையும் பூங்குழலி ஒரு கணநேரப் பார்வையில் பார்த்தாள். மறுகணத்திலேயே அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள். மேலேயிருந்து வேலை எறிந்தவன், அதை ஊமை ராணி தடைசெய்து விட்டதைக் கவனித்திருக்கிறான். உடனே மேலேயிருந்த தட்டு முட்டுச் சாமான்களை எடுத்தெறிந்து விளக்கை அணைத்து விட்டிருக்கிறான்.

அப்போது ஏற்பட்ட இருட்டில் கீழே குதித்து இறங்கிக் கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருப்பதாக எண்ணிக் கத்தியினால் குத்திவிட்டு ஓடியிருக்கிறான். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று அறிந்து கட்டிலின் அருகில் ஓடிய மகாராணியைத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் மகாராணி "ஐயோ" என்று கதறியிருக்கிறாள். பின்னர் அச்சதிகாரன் வாசற்படியின் பக்கம் ஓடி அங்கே அச்சமயம் பிரவேசித்துக் கொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரையும் தள்ளி விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும். இவ்வளவையும் பூங்குழலி ஊகித்துத் தெரிந்து கொண்டாள். இந்தப் பாதகச் செயலைச் செய்து தப்பி ஓடியவனைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் ஒரு பக்கத்தில் உதயமாயிற்று. அதைக் காட்டிலும் தன் அத்தையின் இறுதி நெருங்கி விட்டது என்ற நினைவு அவள் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஆகையால் மந்தாகினி சக்கரவர்த்தியின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து "அத்தை! அத்தை!" என்று கதறினாள்.ஆனால் மந்தாகினியோ அவள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய கண்கள் சக்கரவர்த்தியின் திருமுகத்தை ஆவலுடன் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தன.

"சமுத்திர குமாரி! உன் அத்தை இன்று எவ்வளவு மகத்தான புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் என்பதை எண்ணிப் பார்! சதிகாரனுடைய கொலை வேல் என் தந்தையின் மேல் படாமல் காப்பாற்றினாள்! அந்த வேலைத் தன் உடம்பில் பாயும்படியும் செய்து கொண்டாள்! தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினாள்! ஒருமுறையல்ல. இருமுறை அவரைக் காப்பாற்றினாள்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததைக் கண்டதும் மூன்று வருஷமாகச் சக்தி இழந்திருந்த என் தந்தையின் கால்களில் மீண்டும் சக்தி வந்தது. அவர் கட்டிலிருந்து எழுந்து வந்தார். அதனால் மறுபடியும் அவர் உயிர் தப்பியது. சதிகாரன் அவனுடைய குறி தப்பிவிட்டதாக எண்ணி விளக்கை அணைத்து விட்டுக் கீழே குதித்து வந்து மீண்டும் அவனுடைய பாதகத் தொழிலைச் செய்யப் பார்த்தான். ஆனால் சக்கரவர்த்தி எழுந்து வந்துவிட்டதால் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை. சமுத்திரகுமாரி! உன் அத்தை இந்தச் சோழ குலத்துக்கும், சோழ நாட்டுக்கும் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறாள். சோழ நாட்டுக்கே பெரும் விபத்து நேராமல் காப்பாற்றினாள். சோழ வம்சத்துக்கே குல தெய்வம் ஆனாள். பூங்குழலி! உன் அத்தைக்காக இனி நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடப்போவதில்லை. அவளுக்காக நீயும் அழ வேண்டியதில்லை. வேறு யாரும் துக்கப்படவேண்டியதில்லை! இத்தகைய தெய்வ மரணம் யாருக்குக் கிடைக்கும்? முப்பது வருஷங்களாகப் பிரிந்திருந்த பதிக்காக உயிரைக் கொடுக்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? அவருடைய மடியிலே தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக உயிரைவிடும் பேறு யாருக்குக் கிடைக்கும்?" என்று இளவரசர் கூறினார்.