Sunday, November 11, 2012

66. "வேளை வந்து விட்டது!"



கடம்பூர் அரண்மனையில் நந்தினி அவளுடைய அந்தப்புர அறையில் தனியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பரபரப்பை அவளுடைய முகத்தோற்றம் காட்டியது. அந்த அறைக்குள்ளே வருவதற்கு அமைந்திருந்த பல வழிகளையும் அவள் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வழிகளில் ஏதாவது காலடிச் சத்தம் கேட்கிறதா என்று அவளுடைய செவிகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. "வேளை நெருங்கி விட்டது!" என்று அவளுடைய உதடுகள் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

நந்தினி படுப்பதற்காக அமைந்திருந்த பஞ்சணை மெத்தை விரித்த கட்டிலில் நாலு பக்கமும் திரைச்சீலைகள் தொங்கின.  நந்தினி ஒரு பக்கத்துத் திரைச் சீலையை மெதுவாகத் தூக்கினாள். படுக்கையில் நீளவாட்டில் வைத்திருந்த கொலை வாளைப் பார்த்தாள். நந்தினி அந்த வாளைக் கையில் தூக்கிப் பிடித்தாள். தீபத்தின் ஒளியில் அதை இன்னும் நன்றாக மின்னிடும்படி செய்து பார்த்து உவந்தாள். பிறகு, அதைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டாள் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு முத்தமிட்டாள். பக்கத்திலிருந்த வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவை யாரோ தட்டுவது போன்ற சத்தம் கேட்டது.

நந்தினி இரகசியக் கதவின் அருகில் சென்று, அதன் உட்கதவைத் திறந்தாள்.

இருட்டில் ஒரு கோரமான முகம் இலேசாகத் தெரிந்தது.

"மந்திரவாதி! வந்துவிட்டாயா?" என்றாள் நந்தினி.

"வந்துவிட்டேன், ராணி! வேளையும் வந்துவிட்டது" என்றான் ரவிதாஸன்.

"இன்று இல்லாவிட்டால் என்றைக்கும் இல்லை. தேவி! என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"இந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரும் இங்கு வராதிருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்..."

"சபதம் முடிந்த பிறகு தங்களைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டால்  அதற்கும் தயாராயிருப்போம். எந்த நிமிஷமும் தாங்கள் எங்களை உதவிக்கு அழைக்கலாம்."

"என்னை எப்படி அழைத்துக் கொண்டு போவீர்கள்?"

"இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் ஐயனார் கோவில் இருக்கிறது. அதன் அருகில் உள்ள காட்டில் பல்லக்கைத் தயாராக வைத்திருக்கிறோம். வீர பாண்டியனின் தலையைக் கொய்தவனைப் பழிவாங்கிய தேவியை நாங்களே பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வோம். பொழுது விடிவதற்குள் கொல்லிமலைக்குப் போய் விடுவோம்."