Sunday, November 11, 2012

67. "போய் விடுங்கள்!"



அல்லிக் குளத்தின் கரையிலிருந்த பளிங்குக்கல் மேடையில் மணிமேகலை உட்கார்ந்திருந்தாள். மேகங்கள் சூழ்ந்திருந்த வானத்தில் ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் சுடர் விட்டு ஒளிர்ந்தது போல் அல்லிக் குளத்திலும் அடர்த்தியாகப் படர்ந்திருந்த இலைகளுக்கு மத்தியில் மலர்கள் தலை தூக்கி நின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலை தனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மிகச் சமீபத்தில் வந்திருந்த உருவத்தைக் கண்டு அவசரமாக எழுந்தபோது கால் தடுமாறிப் பின்னாலிருந்த குளத்தில் விழப் போனாள்.

"ராஜகுமாரி! நான்தான்!" என்று கூறிக் கொண்டே வந்தியத்தேவன் மணிமேகலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

ஐயா! தயவுசெய்து தாங்கள் என்னுடன் வாருங்கள். பழுவூர் ராணி தங்களை ஏதோ ஓர் அவசர காரியமாகப் பார்க்க வேண்டுமாம்."

"அந்த அவசரமான காரியம் என்னவென்பது தங்களுக்குத் தெரியும் அல்லவா?"

"தெரியும்; பழுவேட்டரையர் கொள்ளிடத்தைத் தாண்டும் போது படகு கவிழ்ந்து போய்விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..."

"நானும் கேள்விப்பட்டேன்!"

"தாங்கள் உடனே போய் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டு வரவேண்டுமாம். அவ்விதம் தங்களிடம் பழுவூர் ராணி நேரில் கேட்டுக் கொள்ளப் போகிறார்."

வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "இதையெல்லாம் என்னிடம் முன்னால் கூற வேண்டாம் என்று பழுவூர் ராணி எச்சரிக்கவில்லையா?" என்றான்.

"ஆமாம்!"

"பின் ஏன் இதைப்பற்றி என்னிடம் சொன்னீர்கள்?"

சற்று முன்னால் நந்தினி தேவி தங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பினார். உடனே, ஏதோ அவரிடம் கேட்பதற்காகத் திரும்பிப் போனேன். கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தார். உள்ளே, வேட்டை மண்டபத்திலிருந்து பேச்சுக் குரல்கள் இலேசாகக் கேட்டன. ஐயா! என் சந்தேகத்தைத் தங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். வேட்டை மண்டபத்தில் யாரோ ஆள்கள் வந்து ஒளிந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுக்கும் பழுவூர் ராணிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கிறேன்."

வந்தியத்தேவன் இப்போதுதான் நிலைமையின் முக்கியத்தை நன்கு உணர்ந்தான். இன்று ஏதோ விபரீத சம்பவம் நிகழப்போகிறது என்பதாக அவன் உள்ளுணர்ச்சி அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தது. மணிமேகலை கூறிய செய்திகள் அவன் உள்ளுணர்ச்சியை உறுதிப்படுத்தின.

"இளவரசி! எனக்குத் தாங்கள் ஓர் உதவி அவசியம் செய்யவேண்டும்!"

"என்னவென்று சொல்லுங்கள்!"

"இளவரசி! வேட்டை மண்டபத்துக்கு வெளியிலிருந்து சுரங்கப் பாதை மூலமாக வரும் வழி ஒன்றிருக்கிறது. இப்போது நந்தினி தேவி இருக்கும் அறை வழியாகப் போவதற்கும் ஒரு வாசல் இருக்கிறது. இவற்றைத் தவிர மூன்றாவது வழி ஒன்று இருக்கிறதல்லவா? அந்த வழியாக என்னை இப்போதே வேட்டை மண்டபத்துக்கு அழைத்துப் போங்கள்!"

நந்தவனத்தைக் கடந்து வந்தியத்தேவனை மணிமேகலை அழைத்துச் சென்றாள். பிறகு, மாளிகையின் ஓரமாகச் சுவர்களின் கரிய நிழல் அடர்ந்திருந்த இடங்களின் வழியாக அழைத்துச் சென்றாள். பிறகு மாளிகையில் புகுந்து ஜன சஞ்சாரம் இல்லாத தாழ்வாரங்கள், நடைபாதைகள் வழியாக அழைத்துச் சென்றாள். பின்னர், கதவு சாத்தப்பட்டிருந்த ஒரு வாசற்படியின் அருகில் வந்தாள். அங்கேயே வந்தியத்தேவனை நிற்கச் செய்துவிட்டு விரைந்து சென்று ஒரு கை விளக்கை எடுத்து வந்தாள். கதவைத் திறந்து உள்ளே விளக்கைத் தூக்கிக் காட்டியபோது வரிசையாகப் படிக்கட்டுக்கள் அமைந்த குறுகிய நடைபாதை காணப்பட்டது. இருவரும் அப்படிகளில் இறங்கிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு முன்னால், சென்ற மணிமேகலை சட்டென்று நின்று, மெல்லிய குரலில், "நில்லுங்கள்! ஏதோ காலடிச் சத்தம் போலிருக்கிறது, தங்களுக்குக் கேட்கிறதா?" என்றாள்.

அச்சமயம் நந்தினி தேவியின் படுக்கை அறைக்கதவு நன்றாகத் திறந்தது. வேட்டை மண்டபத்துக்குள் வெளிச்சம் புகுந்து பிரகாசப்படுத்தியது.

மறுகணம் நந்தினி தேவியும் வேட்டை மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தாள்.

வேட்டை மண்டபத்துக்குள் வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் பார்த்துவிட்டு நந்தினியும் சிறிது திகைத்துப் போனாள்.

"ஓஹோ! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டாள்.

"தேவி! தங்கள் கட்டளை என்று தங்கள் தோழி கூறியபடியால் வந்தேன்" என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி தனக்கு முதலில் உண்டான திகைப்பைச் சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்.

"மணிமேகலை? இந்த வழியில் எதற்காக இவரை அழைத்துக் கொண்டு வந்தாய்?"

"அக்கா! சற்று முன் என் தமையன் கந்தமாறன் தங்களைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கண்ணில் படவேண்டாம் என்பதற்காக இந்த வழியில் அழைத்து வந்தேன்."

பிறகு, நந்தினியும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் நந்தினியின் அறைக்குள்ளே பிரவேசித்தார்கள். கதவும் உடனே அடைத்துக் கொண்டது.

"தங்காய்! நீ மிக்க புத்திசாலி! இவரை வேட்டை மண்டப வழியாக அழைத்து வந்தது நல்லதாய்ப் போயிற்று உன் தமையன் இப்போதுதான் இங்கிருந்து போகிறான். ஆதித்த கரிகாலரை அழைத்து வருவதாகச் சொல்லிப் போயிருக்கிறான். அதற்குள் உங்களை நான் அனுப்பிவிட வேண்டும்" என்றாள் நந்தினி.

"அக்கா! தங்கள் கணவரைப் பற்றி உண்மையை அறிந்து வர இவரை அனுப்பப் போவதாக சொன்னீர்கள்?" என்றாள் மணிமேகலை.

"ராணி! நான் போகச் சித்தமாயிருக்கிறேன். தங்களிடம் உள்ள ஒரு பொருளை யாசிக்கிறேன். மீன் அடையாளம் பொறித்த வாள் ஒன்று தங்களிடம் இருக்கிறது. அதைக் கொடுத்தால் போய்விடுகிறேன்" என்றான் வந்தியத்தேவன்.

"ஐயா! வேட்டை மண்டபத்தில் எத்தனையோ வாள்களும், வேல்களும் இருக்கின்றன. வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு தாங்கள் இந்தக் கணமே புறப்படலாமே? நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கும் அந்த ஒரே ஆயுதத்தை ஏன் கேட்க வேண்டும்?"

"தேவி தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுந்தானா அந்த வாளை வைத்துப் பூஜை செய்து வருகிறீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! வீர பாண்டியருடைய மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகவும் இருக்கலாம் அல்லவா?"

"மணிமேகலை இருக்கும்போது நீர் அந்தப் பேச்சை எடுக்கமாட்டீர் என்று நினைத்தேன். நானும் இனி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்காய்! நீயும் தெரிந்துகொள். நான் இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வந்ததின் நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்!"

இவ்வாறு சொல்லிய வண்ணம் நந்தினி தேவி பக்கத்தில் கட்டிலின் மீது வைத்திருந்த மீன் அடையாளமிட்ட வாளைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

"சோழ சாம்ராஜ்யத்தின் உட் கலகத்தைத் தீர்த்து வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. மதுராந்தகத் தேவருக்கும், ஆதித்த கரிகாலருக்கும் இராஜ்யப் பிரிவினை செய்து வைப்பதற்காகவும் நான் இங்கே வரவில்லை. கடம்பூர் அரண்மனையில் விருந்துண்டு களிப்பதற்காகவும் வரவில்லை! தங்காய்! உனக்குத் திருமணம் முடித்து வைப்பதற்காகவும் வரவில்லை. வீரபாண்டியரின் தலையைக் கொய்த பாதகனைப் பழிக்குப்பழி வாங்கவே வந்தேன். இது பாண்டிய குலத்து வாள்! இதன் மேல் ஆணையிட்டு நான் சபதம் செய்திருக்கிறேன். அந்தச் சபதத்தை முடிக்கவே வந்தேன். இன்றிரவு ஒன்று என் சபதத்தை முடிப்பேன்; அல்லது என் உயிரை முடிப்பேன்!" என்று நந்தினி ஆவேசம் வந்தவள் போல் பேசி நிறுத்தினாள்.

"அதற்கு நான் தடையாக இருப்பேன் என்றுதானே என்னைப் போகச் சொல்லுகிறீர்கள்?" என்றான் வந்தியத்தேவன்.

"ஆகா! என் பழியை முடிப்பதற்கு நீர் தடை செய்யப்போகிறீரா? நல்ல காரியம்! யார் வேண்டாம் என்றார்கள்? உம்முடைய நண்பரிடம் சென்று இதையெல்லாம் சொல்லி இங்கே அவரை வராமல் தடுத்து விடுவதுதானே?"

"தேவி அவரிடம் சொல்லித் தடை செய்ய முடியாது என்றுதான் தங்களிடம் வந்தேன். தங்களுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாவது தங்களை இந்தப் பாவ காரியம் செய்யாமல் தடுப்பதற்கு வந்தேன்..."

அப்போது மணிமேகலை, "ஐயோ அவர் வருகிறார் போலிருக்கிறதே!" என்று திடுக்கிட்டுக் கூறினாள்.

மற்ற இருவரும் உற்றுக் கேட்டார்கள். ஆம்; அப்போது அரண்மனை முன்கட்டிலிருந்து அந்த அறைக்குள் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது.

"ஐயா! சீக்கிரம் வேட்டை மண்டபத்துக்குள் போய் விடுங்கள்!" என்றாள் நந்தினி.

"மறைந்துகொள்ள எனக்கு வேறு ஒரு நல்ல இடம் இருக்கிறது. தேவி! அந்த வாளை இப்படிக் கொடுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

நந்தினி அவனிடம் வாளைக் கொடுப்பதற்காக அதை முன்னால் நீட்டினாள். அப்போது அவளுடைய கைதவறி, வாள் தரையில் விழுந்து ஜணஜண கண கணவென்னும் ஒலியை எழுப்பியது.

வாள் தவறித் தரையில் விழுந்தபோது எழுந்த ஒலியுடன் நந்தினியின் சோகம் ததும்பிய மெல்லிய சிரிப்பின் ஒலியும் கலந்தது.

அவள் பரபரப்புடன், "ஐயா! தெய்வத்தின் சித்தம் வேறு விதமாயிருக்கிறது. வாள் இங்கேயே கிடக்கட்டும். தாங்கள் உடனே போய் மறைந்து கொள்ளுங்கள்!" என்றாள்.

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் குனிந்து வாளை எடுக்கப் போனான். அதன் கூரிய நுனிப் பகுதியைப் பிடித்துத் தூக்க முயன்றான். அதே சமயத்தில் அந்த வாளின் பிடியை ஒரு காலினால் மிதித்துக் கொண்டாள் நந்தினி.

"வேண்டாம்! இளவரசர் காதில் வாள் விழுந்த சத்தம் கேட்டிருக்கும். இங்கே வாள் இல்லாவிட்டால் அவர் மனத்தில் சந்தேகம் உண்டாகும். போய் விடுங்கள்! மறைந்து போய் விடுங்கள்!" என்றாள்.

வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக யாழ்க்கருவிகளின் களஞ்சியத்தை நோக்கி விரைந்து சென்றான். களஞ்சியத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று மறைந்தான். காலடிச் சத்தம் வெகு சமீபத்தில், வாசற்படிக்கருகில் கேட்டது.

மணிமேகலையைப் பார்த்து, "தங்காய்! நீயும் மறைந்து கொள்! கட்டிலின் திரைகளுக்குப் பின்னால் மறைந்து கொள்! நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தெரியாமல் இங்கிருந்து போய்விடு!" என்றாள் நந்தினி.