Sunday, November 11, 2012

68. காரிருள் சூழ்ந்தது!



மணிமேகலை கட்டிலின் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்த மறுகணத்தில் கரிகாலன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நந்தினியை நெருங்கினான். நந்தினிக்கு அருகில் வந்ததும் தரையிலே கிடந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்த வாளைப் பார்த்தான். பின்னர், நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தான். நந்தினியின் நெஞ்சை ஊடுருவிய அந்தப் பார்வையின் தீட்சண்யத்தைப் பொறுக்க மாட்டாமல் வாளை எடுக்கும் பாவனையாக அவள் குனிந்தாள். நந்தினியின் நோக்கத்தை அறிந்து அவளை முந்திக்கொண்டு கரிகாலன் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான்.

பின்னர் நந்தினியை நோக்கி, "தேவி! வரும்போது கேட்ட சத்தம் இந்த வாளின் சத்தந்தான் போலிருக்கிறது. தங்கள் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்திருக்கிறது! என்னை வரவேற்பதற்குக் கையில் வாளேந்தி ஆயத்தமானது போலத் தோன்றுகிறது" என்றான்.

"வீரம் மிக்க இளம் புலிகளையும் தீரத்திற் சிறந்த வாலிப சிங்கங்களையும் வரவேற்பதற்குரிய முறை அதுவேயல்லவா?" என்றாள் நந்தினி.

"உண்மையைச் சொல்! என் உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் தீயை மேலும் வளர்க்க வேண்டாம்! என்னை எதற்காக இந்தக் கடம்பூர் அரண்மனைக்கு வரச் சொன்னாய்? சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து வைப்பதற்காகவோ, எனக்கும் மணிமேகலைக்கும் திருமணம் செய்வித்துக் கண்டு களிப்பதற்காகவோ இத்தனை முயற்சியும் செய்ததாகச் சொல்லாதே! அந்தக் கதைகளையெல்லாம் நான் நம்பமாட்டேன். நம்பியிருந்தால், இங்கு வந்திருக்கவும் மாட்டேன்..."

"பின் எதற்காக இங்கு வந்தீர்கள், கோமகனே! என்ன நம்பிக்கையுடன் இந்த இடத்துக்கு வந்தீர்கள்?"

"நம்பிக்கையா? எனக்கு ஒருவித நம்பிக்கையும் கிடையாது. என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையுந்தான். ஒரு சமயம் என்னிடம் நீ ஒரு வரம் கோரினாய். காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டாய். என் ஆத்திரத்தினாலும் மூர்க்கத்தனத்தினாலும் நீ கோரியதை நான் கொடுக்கவில்லை. பிறகு ஒவ்வொரு கணமும் அதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டானால் அதைச் செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நந்தினி! சொல்! எந்த விதத்திலாவது அதற்கு நான் பரிகாரம் செய்யமுடியும் என்றால், சொல்!"

இவ்வாறு இரக்கம் ததும்பும் குரலில் கூறிய கரிகாலனைப் பார்த்து நந்தினி, "கோமகனே! அதற்குப் பரிகாரம் ஒன்றும் கிடையாது. இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்! இறந்தவர்களைப் பிழைக்கச் செய்யும் சக்தி இந்த உலகில் யாருக்கும் கிடையாது" என்றாள்.

"இறந்தவர்களைப் பிழைக்கச் செய்ய முடியாது. அது உண்மைதான்! ஆனால் உயிருக்கு உயிர் கொடுத்துப் பரிகாரம் தேடலாம் அல்லவா?... இதோபார்! என்னிடம் இனியும் மறைக்க வேண்டாம். இங்கு நீ எதற்காக வந்தாய், என்னை எதற்காக வரச் சொன்னாய் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்று எண்ணாதே! வீர பாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழி முடிக்கும் நோக்கத்துடனேயே நீ இவ்விடத்துக்கு வந்திருக்கிறாய். அந்த உன்னுடைய நோக்கத்தை தடையின்றி நிறைவேற்றிக்கொள்! இதோ! இந்த வாளைப் பெற்றுக் கொள்!" என்று கூறிக் கரிகாலன் வாளை நீட்டினான்.

நந்தினி வாளை வாங்கிக் கொண்டாள். வாளைப் பிடித்த அவளுடைய கைகள் நடுங்கின. பின்னர் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. கண்களில் கண்ணீர் ததும்பியது. இதயத்தைப் பிளக்கும் சோகக் குரலில் விம்மலும் தேம்பலும் கலந்து வந்தன.

நந்தினி பொங்கிவந்த விம்மலை அடக்கிக்கொண்டு, "கோமகனே! தங்களிடம் நான் எதையும் மறைக்கவும் இல்லை. மறைக்க விரும்பவும் இல்லை. நான் இங்கு வந்ததின் நோக்கம் பற்றித் தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். தங்களை இங்கு வரச் சொன்னதின் நோக்கமும் அதுதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் என் கைகளில் வலிவு இல்லை; என் நெஞ்சிலும் தைரியம் இல்லை. தாங்கள் என்னைத் தேடிவரும் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே என் கையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. இதோ பாருங்கள்! வாளைப் பிடித்திருக்கும் என் கரங்கள் நடுங்குவதை!" என்றாள்.

"கோமகனே! வீரபாண்டியனுடைய மரணத்துக்குப் பழி வாங்குவதாக நான் சபதம் செய்தது உண்மைதான். மீன் சின்னம் பொறித்த இந்தப் பாண்டிய குலத்து வாளினால் ஒன்று தங்களை கொல்லுவேன், அல்லது என்னை நானே கொன்று கொண்டு மாய்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டேன்.

என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விடுகிறேன். அதைக்கேட்ட பிறகு என்னைத் தங்கள் கையினாலேயே கொன்றுவிடுங்கள்! என் வாழ்க்கையின் முடிவு, என் துன்பங்களுக்கு விமோசனம், - மரணம் ஒன்றுதான் என்பதையும் தெரியப்படுத்தும். ஐயா! என் தந்தை யார் என்பதைத் தங்களுக்குச் சொல்லப் போகிறேன்."

இவ்விதம் பலமான பூர்வ பீடிகை போட்டுக்கொண்டு நந்தினி ஆதித்த கரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை... தான்!" என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

ஆதித்த கரிகாலன் ஆயிரம் தேள் கொட்டியவனைப் போல் ஒரு கணம் துடிதுடித்துத் துள்ளினான்.

"இல்லை, இல்லை, இல்லை! ஒரு நாளும் இல்லை! நீ சொல்லுவது பொய், பொய் பெரும் பொய்!" என்று உரக்கக் கத்தினான்.

மறுகணமே அவனுடைய ஆவேசம் அடங்கியது. வேதனை மிகுந்த குரலில், "ஆம் நந்தினி, ஆம். நீ கூறியது உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது. உன் மனத்திலே நிகழ்ந்திருக்கக் கூடிய போராட்டத்தைப் பற்றிய உண்மையும் தெரிகிறது. நீ எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. உன் குழப்பத்துக்கும், தயக்கத்துக்கும் உன் பயங்கரமான வேண்டுகோளுக்கும் காரணம் தெரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடியபோது, நான் உன் வேண்டுகோளை மறுத்தது எவ்வளவு பெரிய கொடுமை என்று தெரிகிறது! ஐயோ! இந்தப் பெரும் பாரத்தை இத்தனை நாள் எப்படி உன் மனத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தாய்? எப்படி இந்தப் பாதகன் இப்பூமியில் உயிர் வாழ்வதைச் சகித்துக் கொண்டிருந்தாய்? நல்லது! இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!"

யாழ்க் களஞ்சியத்திலேயிருந்து வந்தியத்தேவன் மேற்கூறிய சம்பாஷணைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். இடையிடையே கரிகாலரின் வெறி மூர்த்தண்யமாகிக் கொண்டிருந்த போது அவன் அவர்களுக்கிடையே போக எண்ணினான். பிறகு அதனால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று தயங்கினான். கடைசியாக ஆதித்த கரிகாலர் அடங்கிய மெல்லிய தழதழத்த குரலில், நந்தினி கூறியதை ஒப்புக் கொள்ளும் முறையில் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவனுடைய ஆர்வமும் கட்டுக் காவலைக் கடந்தது. அவர் உரக்கச் சத்தமிட்டுக் கொண்டிருந்த வரையில் அவன் அவ்வளவாகப் பயப்படவில்லை. இப்போதுதான் அதிகமாக அஞ்சினான். என்ன செய்யப் போகிறாரோ என்ற பெருங் கவலையினால், யாழ்க் களஞ்சியத்திலிருந்து சிறிது தலையை நீட்டிப் பார்த்தான். பார்வைக்கு இலக்கான இடத்தில் நந்தினியும் கரிகாலரும் இல்லை. ஆனால் வேறொரு காட்சியைக் கண்டான். சுவரில் பதிந்திருந்த நிலைக் கண்ணாடியில் அந்தக் காட்சி தெரிந்தது. வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு துவாரத்தின் வழியாக ஒரு கோரமான முகம் தெரிந்தது. மந்திரவாதி ரவிதாஸனுடைய முகந்தான்! அடுத்த கணத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு மெதுவாகத் திறப்பதை வந்தியத்தேவன் கண்டான். உடனே, யாழ்க் களஞ்சியத்தின் மறைவிலிருந்து தாவி வெளியில் பாய்ந்து செல்ல முயன்றான்.

அச்சமயம் பின்னாலிருந்து அவனுடைய கழுத்தில் வஜ்ராயுதத்தை யொத்த ஒரு கை சுற்றி வளைத்துக்கொண்டது. அண்ணாந்து நோக்கினான்; ஓர் ஆஜானுபாகுவான உருவம் கண் முன்னே தெரிந்தது. ஆகா! இவன் யார்? இங்கு எப்படி வந்தான்! இது என்ன இரும்புப் பிடி? கழுத்து நெரிகிறதே! மூச்சுத்திணறுகிறதே; விழி பிதுங்குகிறதே! இன்னும் சில கண நேரம் போனால், உயிரே போய்விடுமே...! வந்தியத்தேவன் ஒரு பெரு முயற்சி செய்து அந்த இரும்புக் கையின் பிடியைத் திமிறித் தளர்த்திக்கொண்டு வெளியில் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் தரையில் விழுந்தான். தலையிலே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டதுபோல் இருந்தது. ஒருகணம் அவன் கண்களின் முன் கோடி சூரியர்கள் கோடானுகோடி கிரணங்களைப் பரப்பிக் கொண்டு பிரகாசித்தார்கள். அடுத்த கணத்தில் அவ்வளவு சூரியர்களும் மறைந்தார்கள். நாலாபுறமும் இருண்டு வந்தது. வந்தியத்தேவன் அக்கணமே நினைவை இழந்தான்.

யாழ்க் களஞ்சியத்திலிருந்து, அதன் வாசலில் கிடந்த வந்தியத்தேவனுடைய உடலை மிதித்துத் தாண்டிக்கொண்டு, ஒரு பயங்கரமான உருவம் வெளிப்பட்டது. யாழ்க் களஞ்சியத்தின் அருகில் தடால் என்ற சத்தத்தைக் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தாள். அந்த உருவம் கையில் கத்தியை உருவிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டாள். விழிகள் பிதுங்கும்படியாக வியப்புடன் அந்த உருவத்தை நோக்கினாள். அவள் வயிற்றிலிருந்த குடல்கள் மேலே ஏறி மார்பையும், தொண்டையையும் அடைத்துக்கொண்டதாகத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு, எதிரே பார்த்தாள். கரிகாலன் கீழே விழுந்து கிடக்கக் கண்டாள். அவன் உடலில் வீர பாண்டியனுடைய வாள் பாய்ந்திருந்ததையும் கண்டாள்.

"அடி பாதகி! சண்டாளி! உன் பழியை நிறைவேற்றி விட்டயா?" என்று கூறிக்கொண்டே உருவம் அவளை மேலும் நெருங்கி வந்தது.

அதே சமயத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவின் வழியாக ரவிதாஸனும் பிரவேசித்தான். அந்த அறைக்கு இலேசாக வெளிச்சம் தந்து கொண்டிருந்த விளக்கு அறுந்து விழுந்தது. அது அணைவதற்கு முன்னால் ஒரு கண நேரம் மணிமேகலையின் பயப்பிராந்தி கொண்ட முகத்தைக் காட்டியது. 'கிறீச்' சென்று கூவிக் கொண்டே மணிமேகலை அங்கிருந்து ஓடினாள்.அறையில் காரிருள் சூழ்ந்தது. அந்தக் காரிருளில் சோகந் ததும்பிய விம்மல் குரலும், வெறி கொண்ட சிரிப்பின் ஒலியும், மரணத் தறுவாயில் கேட்கும் முனகல் ஓசையும் மனிதர்கள் விரைந்து அங்குமிங்கும் ஓடும் காலடிச் சத்தமும் கலந்து கேட்டன.