Sunday, November 11, 2012

69. "நான் கொல்லவில்லை!"



ஆதித்த கரிகாலன் மரணமுற்றுக் கிடந்த கடம்பூர் அரண்மனையின் அறையில் காரிருள் சூழ்ந்திருந்தது. கழுத்து நெறிபட்டுத் தரையில் தடாலென்று தள்ளப்பட்ட வல்லவரையனுடைய உள்ளத்திலும் அவ்வாறே சிறிது நேரம் இருள் குடிகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வரத் தொடங்கியபோது, அவன் கண்களும் விழித்தன. ஆனால் அவனைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளின் காரணத்தினால் அவன் எங்கே இருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதும் அவன் உள்ளத்தில் புலப்படவில்லை.

இரண்டு கைகளையும் நீட்டித் துழாவிப் பார்த்தான். ஒரு பொருள் கைக்குத் தட்டுப்பட்டது. அது என்ன? கத்திபோல் அல்லவா இருக்கிறது? ஆம்; கத்திதான்! திருகுமடல் உள்ள கத்தி! சாதாரணக் கத்திகளைவிட, மிகச் சக்தி வாய்ந்தது! எவன் பேரிலாவது பாய்ந்தால், அவன் செத்தான்!

சரி; இனி உட்கார்ந்திருப்பதிலோ காத்திருப்பதிலோ பயனில்லை. எழுந்து நடந்து எங்கே இருக்கிறோம் என்று சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். எழுந்து நின்றான்; கால்கள் தள்ளாடின. ஆயினும் சமாளித்துக் கொண்டு நடந்தான். இருட்டில் தடுமாறிக்கொண்டு நடந்தான். ஏதோ காலில் தடுக்கவே மறுபடியும் தடால் என்று விழுந்தான். தடுமாறி விழுந்தபோது கையிலிருந்த கத்தி நழுவி விட்டது. அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வதற்காகக் கையை நீட்டித் துழாவினான். கையில் மிருதுவாக ஏதோ தட்டுப்பட்டது. வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் நடுங்கியது. நெஞ்சில் பீதி குடி கொண்டது.

'அப்படியும் இருக்க முடியுமா?' என்று எண்ணிக் கொண்டே மறுபடியும் தடவிப் பார்த்தான். ஆம்; அது ஒரு மனித உடல்தான்! அவன் கையில் தட்டுப்பட்டது அந்த மனிதனின் உள்ளங்கை! உற்றுப் பார்த்தான், ஐயோ! இளவரசர் ஆதித்த கரிகாலர் அல்லவா கிடக்கிறார்? அவர் அல்ல! அவருடைய உயிர் அற்ற உடல்தான் கிடக்கிறது! வந்தியத்தேவனுடைய நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் ததும்பியது! நடு நடுங்கிய கைகளினால் கரிகாலருடைய உடம்பின் பல பகுதிகளையும் தொட்டுப் பார்த்தான். சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லை. உயிர் சென்றுவிட்ட வெறுங்கூடுதான்!

அந்த உயிரற்ற உடம்பின் விலாப் பக்கத்திலிருந்து பெருகிப் பக்கத்தில் வழிந்திருந்த இரத்தம் அவனுடைய கைகளை நனைத்தது. அச்சமயம் அவனுக்குக் குந்தவைப் பிராட்டியின் நினைவு உண்டாயிற்று. அந்த மாதரசி அவனை எதற்காக அனுப்பி வைத்தாளோ, அந்தக் காரியத்தில் அவன் வெற்றி அடையவில்லை, முழுத் தோல்வி அடைந்தான்! அவனால் எவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் பயன்படவில்லை, விதி வென்றுவிட்டது! இளவரசரின் உயிரற்ற உடலை எடுத்து தன்னுடைய மடியிலே போட்டுக் கொண்டான். மேலே என்ன செய்வது என்று, தெரியவில்லை. சிந்திக்கும் சக்தியையே இழந்துவிட்டான். சத்தம்போட்டு அலறுவதற்குத் தொண்டையிலும் சக்தி இல்லாமற் போய்விட்டது.

"இளவரசர் இறந்துவிட்டார்; ஒப்புக்கொண்ட காரியத்தில் நாம் வெற்றி பெறவில்லை; குந்தவையின் முகத்தில் இனி விழிக்க முடியாது!" என்னும் இந்த எண்ணங்களே திரும்பத் திரும்ப அவன் மனத்தில் வந்து கொண்டிருந்தன. இவ்வாறு எண்ணிக் கொண்டு அவன் எத்தனை நேரம் அங்கே உட்கார்ந்திருந்தான் என்பது அவனுக்கே தெரியாது. தீவர்த்தி வெளிச்சத்துடன் மனிதர்கள் சிலர் அந்த அறையை நெருங்கி வருகிறார்கள் என்பதைக் கண்ட பிறகுதான் அவனுக்கு ஓரளவு சுய நினைவு வந்தது.

கரிகாலருடைய உடலைத் தன்னுடைய மடியிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான். பத்துப் பன்னிரண்டு ஆள்கள் முன்வாசற் பக்கமிருந்து வந்தார்கள். அவர்களில் இருவர் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் வேல் ஏந்திக்கொண்டு வந்தார்கள். எல்லாருக்கும் முன்னால் கந்தமாறனும், அவனுக்கு அடுத்தாற் போல் பெரிய சம்புவரையரும் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாருடைய முகங்களும் பயப்பிராந்தியைக் காட்டின. தீவர்த்தி வெளிச்சத்தில் பேயடித்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.

சம்புவரையர் கீழே கிடந்த ஆதித்த கரிகாலனுடைய உடலை அணுகினார். அதன் தலைமாட்டில் உட்கார்ந்து, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, "ஐயோ! விதியே! இது என் வீட்டிலா நேர வேண்டும்? விருந்துக்கு என்று அழைத்து வேந்தனைக் கொன்ற பழி என் தலையிலா விடிய வேண்டும்?" என்று புலம்பிக் கொண்டே தமது தலையில் படார், படார் என்று அடித்துக்கொண்டு புலம்பினார்.

கந்தமாறன் "தந்தையே! நம் குலத்துக்கு அந்தப் பழி ஒரு நாளும் வராது! இதோ கொலைக்காரனைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிறோம்! இவன் இளவரசரைக் கொல்வதற்கு உபயோகித்த கத்தி அதோ கிடப்பதைப் பாருங்கள்! அதில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் பாருங்கள்! இப்பேர்ப்பட்ட மகா பாதகனுக்கு என்ன தண்டனை கொடுப்பது? எது கொடுத்தாலும் போதாதே?" என்று கந்தமாறன் பேசிக் கொண்டே போனான்.

வந்தியத்தேவன் தொண்டை நெறித்து பேச முடியாதவனாயிருந்தான்.  கந்தமாறனுடைய வார்த்தைகள் அவனைத் திக்பிரமை கொள்ளச் செய்தன. தன்னைப் பிறர் கொலைகாரனாகக் கருதக் கூடிய நிலையில்தான் இருப்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிய வந்தது. இளவரசனைக் குத்திக் கொன்ற குற்றத்தையல்லவா இந்தக் கந்தமாறன் தன்மீது சுமத்துகிறான்?

இவ்வாறு எண்ணமிட்ட வந்தியத்தேவன் சிந்தனை சட்டென்று இன்னொரு பக்கம் திரும்பியது! ஆதித்த கரிகாலரைத் தான் கொல்லவில்லையென்பது நிச்சயம். ஆனால் வேறு யார் கொன்றிருப்பார்கள்? நந்தினியா? அல்லது ரவிதாஸனா? அல்லது பயங்கரத் தோற்றங் கொண்ட நெடிதுயர்ந்த உருவமா? அல்லது இடும்பன்காரியாக இருக்குமோ?

கந்தமாறன், தன் பக்கத்தில் நின்ற ஆட்களைப் பார்த்து, "தடியர்களே! ஏன் சும்மா நிற்கிறீர்கள்? இந்தக் கொலைகாரனைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று கத்தியதுந்தான் வந்தியத்தேவனுக்குத் தனது இக்கட்டான நிலைமை மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது.

கந்தமாறனை அவன் இரக்கமும், துயரமும் ததும்பிய கண்களினால் பார்த்தான். ஒரு பெரு முயற்சி செய்து தொண்டையில் ஜீவனைத் தருவித்துக்கொண்டு, "கந்தமாறா! சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் இளவரசரைக் கொல்லவில்லை. அவர் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பைப் பழையாறை இளைய பிராட்டியிடம் நான் ஏற்றுக்கொண்டு வந்தேன்..."

"இவ்விதம் சொல்லித்தான் இளவரசரை ஏமாற்றினாய்! பிறகு வஞ்சகம் செய்து குத்திக் கொன்றாய்! இல்லாவிட்டால், இந்த அறைக்குள் எப்படி வந்து சேர்ந்தாய்? எதற்காக வந்தாய்?"

"கந்தமாறா! இளவரசருக்கு ஆபத்து வரப்போவதையறிந்து அவரைப் பாதுகாக்க வந்தேன். அந்த முயற்சியில் தோற்றுப் போனேன்."

"அடே! நீ சொல்லுவது உண்மையானால், கரிகாலர் கொலை செய்யப்படும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாயா?" என்றார் சம்புவரையர்.

"ஐயா? பழுவூர் ராணியும் கரிகாலரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று, கொலைகாரர்கள் பிரவேசித்தார்கள். அவர்களைத் தடுக்க நான் யத்தனித்தபோது பயங்கரமான தோற்றமுடைய ஒருவன் என் கழுத்தைப் பிடித்து நெறித்தான், நான் நினைவிழந்துவிட்டேன். மறுபடியும் நினைவு வந்தபோது ஆதித்த கரிகாலர் உயிரற்று விழுந்து கிடப்பதைக் கண்டேன்!" என்றான் வந்தியத்தேவன்.

ஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டார்கள். ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.

ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன. ஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.