Sunday, November 11, 2012

81. மணிமேகலையைக் காப்பாற்று



வந்தியத்தேவன் மிக்க மனச் சோர்வு அடைந்திருந்தான். வீர தீரச் செயல்கள் புரிந்து உலகத்தையே பிரமிக்க வைக்க வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டிருந்தவனுக்குப் பலரும் தன்னைப் பார்த்துப் பரிதாபம் கொள்ளும்படியான நிலையில் இருந்தது சிறிதும் பிடிக்கவில்லை. பாதாளச் சிறையைக் காட்டிலும் அரண்மனை அந்தபுரத்துச் சிறை கொடியதாக அவனுக்குத் தோன்றியது. பொன்னியின் செல்வரின் தயவினால் அவன் பேரில் கரிகாலரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்தாமலும், அதற்காகத் தண்டனை அளிக்காமலும் ஒருவேளை விட்டு விடுவார்கள். ஆனால் அரண்மனையில் உள்ளவர்களுக்கெல்லாம் அவனைப் பற்றி ஒரு சந்தேகம் இருந்து கொண்டுதானிருக்கும். அவனைக் களங்கம் உள்ளவனாகவே கருதுவார்கள். இளைய பிராட்டி அவனிடம் காட்டும் இரக்கமும் அனுதாபமும் அவ்வளவுடன் நின்றுவிடும். சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகும் பொன்னியின் செல்வரின் திருத்தமக்கையாரைக் கைப்பிடித்து மணந்து கொள்வது கனவிலும் நடவாத காரியம். அரண்மனைப் பெண்கள் அவனை ஏதோ குற்றம் செய்து மன்னிப்புப் பெற்ற சேவகனாகவே மதித்து நடத்துவார்கள். அமைச்சர்களும் தளபதிகளும் அவனை அருவருப்புடன் நோக்குவார்கள். அரச குலத்தினரின் சித்தம் அடிக்கடி மாறக் கூடியது. இளவரசர் அருள்மொழிவர்மர் தான் அவன் மீது எத்தனை நாள் அபிமானம் காட்டி வருவார் என்பது யாருக்குத் தெரியும்? இங்கே இந்த அரண்மனை அந்தப்புர அறையில் ஒளிந்து உயிர் வாழ்வதில் என்ன பயன்?

இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு வந்தியத்தேவன் அந்த அறையில் அங்குமிங்கும் வட்டமிட்டு உலாவிக் கொண்டிருந்தான். அடிக்கடி அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் இருந்த பலகணியின் ஓரமாக வந்து நின்று ஆவலுடன் வெளியே பார்த்தான். அரண்மனையின் ஒரு கோடியில் இருந்த மேல் மாடத்து அறையில் அவன் இருந்து வந்தான். அதையொட்டி வடவாறு சென்று கொண்டிருந்தது. அங்கே அரண்மனையின் வெளிச் சுவரே தஞ்சைபுரிக் கோட்டையின் வெளிச் சுவராகவும் அமைந்திருந்தது. அந்தப் பலகணி வழியாக கீழே குதித்தால் வடவாறு வெள்ளத்தில் குதித்து விடலாம். அல்லது செங்குத்தான சுவரின் வழியே சிறிது பிரயத்தனத்துடன் இறங்கியும் வடவாற்று வெள்ளத்தை அடையலாம். அந்த மேன்மாடத்துக்குக் கீழே அரண்மனைப் பெண்டிர் நதியில் இறங்கிக் குளிப்பதற்காக வாசலும் படித்துறையும் இருந்ததாகத் தோன்றியது. மேன்மாடத்திலிருந்து கீழே சென்று அந்த வாசலை அடைவதற்கு வழி எப்படி என்று தெரியவில்லை. அந்தப்புரத் தாதிமார்களுக்கும் அரசிளங் குமரிகளுக்கும் அது தெரிந்திருக்கும். அவன் தப்பிச் செல்வதாயிருந்தால் அவர்கள் அறியாமல் அல்லவா செல்ல வேண்டும்...? பலகணி ஓரத்தில் நின்று அவன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது.

அவன் இருந்த அரண்மனைக்கு அடுத்த அரண்மனைத் தோட்டத்தில் ஒரு பெண் தலைவிரிகோலமாகப் பித்துப் பிடித்தவள்போல ஓடிக்கொண்டிருந்தாள். ஆகா! அது பெரிய பழுவேட்டரையரின் அரண்மனைத் தோட்டம் போல் அல்லவா இருக்கிறது! ஆம், ஆம்! அந்தத் தோட்டந்தான்! அதில் பித்துப் பிடித்தவள் போல் ஓடுகிற பெண் யார்? மணிமேகலை போல் அல்லவா இருக்கிறது? அவளுக்கு என்ன நேர்ந்து விட்டது? எதற்காக அப்படி ஓடுகிறாள்?  அவளுக்குப் பின்னால், அவளைத் தொடர்ந்து பிடிப்பதற்காக ஓடுகிறவர்களைப் போல் இன்னும் இரு முதிய ஸ்திரீகள் ஓடினார்கள். ஆனால் அவர்கள் வரவரப் பின் தங்கி வந்தார்கள். மணிமேகலையை அவர்கள் பிடிப்பது இயலாத காரியம்! அதோ அவள் வெளி மதில் சுவரண்டை வந்து விட்டாள். சுவர் ஓரமாக வளர்ந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு மதில் சுவரில் ஏறிவிட்டாள்! ஐயோ! என்ன காரியம் செய்கிறாள்? கடவுளே! மதிள் சுவரிலிருந்து தலை குப்புற நதியின் வெள்ளத்தில் விழுந்து விட்டாளே! அதற்கு மேலே அவனால் சும்மா நிற்க முடியவில்லை. அரண்மனை மேல் மாடத்திலிருந்து பலகணியின் வழியாக வெளி வந்து ஆற்று வெள்ளத்தில் குதித்தான்.

சில கண நேரம் மூச்சுத் திணறிப் பின்னர் சமாளித்துக் கொண்டு நாலாபுறமும் பார்த்தான். ஆம்; அவன் குதித்த இடத்துக்கு அருகில் படித்துறை மண்டபமும் அதற்கு உள்ளிருந்து வரும் வாசலும் காணப்பட்டன. அதற்கு எதிர்த் திசையிலேதான் சற்றுத் தூரத்தில் மணிமேகலை மதில் மேலிருந்து கீழே குதித்தாள். நல்லவேளையாக, ஆற்று வெள்ளம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. மணிமேகலையும் வெள்ளத்தில் மிதந்து வந்தால், அவனை நோக்கித்தான் வரவேண்டும்.

தட்டுத்தடுமாறி நதியின் கரையோரத்தை வந்தியத்தேவன் அடைந்தான். ஆற்று வெள்ளத்தை எதிரிட்டுக் கொண்டு விரைவாக நடந்து சென்றான். ஆகா! அதோ மணிமேகலை மிதந்து வருகிறாள்? அவள் உடம்பில் உயிர் இருக்கிறதா? வெள்ளத்திலே பாய்ந்து சென்று மணிமேகலையை இரு கரங்களினாலும் தூக்கி எடுத்துக் கொண்டான். மணிமேகலையைப் படித்துறையில் கொண்டுவந்து சேர்த்தான். நீரில் மூழ்கியதனால் கனத்திருந்த மணிமேகலையைத் தூக்கிக் கொண்டு நதியில் நடந்த போது அவனுக்கு மூச்சு வாங்கியது. அவளை மேலும் தூக்கிக் கொண்டு நடப்பது இயலாத காரியமாகத் தோன்றியது. எனவே, படித்துறையின் மேல்படி அகலமாக இருந்ததைப் பார்த்து அதன் பேரில் மணிமேகலையைப் படுக்க வைத்தான். பின்னர் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான்.  அவளை மூர்ச்சை தெளிவித்து உயிர்ப்பிக்கும் காரியம் தன்னால் ஆகக் கூடியதில்லை. உடனே யாராவது ஒரு பெண்ணின் உதவி தேவை. அரண்மனைக்குள் சென்று அங்கிருந்து யாரையாவது அழைத்து வரவேண்டும்.

படித்துறைக்கு அரண்மனைக்குள்ளேயிருந்து வருவதற்காக அமைந்த வாசல் அவன் கண்முன் காணப்பட்டது. அதன் அருகில் சென்று சாத்தியிருந்த கதவின் பேரில் தன் உடம்பில் மிச்சமிருந்த பலம் முழுவதையும் பிரயோகித்து மோதினான். அதிர்ஷ்டவசமாகக் கதவின் உட்புறத் தாழ்ப்பாள் தகர்ந்து கதவு திறந்து கொண்டது. திறந்த கதவின் வழியாகப் புகுந்து ஓடினான். சிறிது தூரம் அது குறுகிய பாதையாகவே இருந்தது. பின்னர் தாழ்வாரங்களும் முற்றங்களும் வந்தன. அங்கேயெல்லாம் யாரையும் காணவில்லை. "இங்கே யாரும் இல்லையா? ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லையா?" என்று அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். கடைசியாக ஒரு பெரிய மண்டபத்தின் வாசலில் சேவகர்கள் இருவர் அவனை வழி மடக்கி நிறுத்த முயன்றார்கள். அவர்களை மீறி தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தான். அங்கே சக்கரவர்த்தி உன்னதமான சிங்காதனத்தில் அமர்ந்திருப்பதையும் ஆடவர்கள், பெண்டிர்கள் பலர் சூழ்ந்து நிற்பதையும் கண்டு திகைத்துப் போனான். முதலில் அவன் கண்களில் எதிர்பட்ட பெண்மணி பூங்குழலி என்று தெரிந்து கொண்டதும், அவனுக்குச் சிறிது தைரியம் உண்டாயிற்று. "சமுத்திரகுமாரி! சமுத்திரகுமாரி! மணிமேகலை ஆற்றில் விழுந்து விட்டாள். உடனே வந்து காப்பாற்று!" என்று அலறினான்.