Sunday, November 11, 2012

82. நெடுமரம் சாய்ந்தது!



ஆஸ்தான மண்டபத்துக்குள் அந்தப்புரப் பெண்கள் வருவதற்கென்று ஏற்பட்ட வாசல் வழியாக வந்தியத்தேவன் புகுந்தான். அதனால் அவன் முதலில் அங்கிருந்த பெண்களைப் பார்க்கும்படி நேர்ந்தது. அவர்களில் எல்லாருக்கும் பின்னால் ஒதுங்கி நின்ற பூங்குழலி ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, வந்தியத்தேவன் ஈரத்துணிகளுடன் அலங்கோலமாக உட்புகுந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளைப் பார்த்தவுடனேதான் வந்தியத்தேவனும் மணிமேகலைக்கு நேர்ந்த விபத்தைப் பற்றிக் கூறினான். அது அவளுடைய காதில் விழுந்தது. அவள் அருகில் இருந்த இளைய பிராட்டி குந்தவை வானதி இவர்கள் காதிலும் விழுந்தது. அவர்கள் மூவரும் வந்தியத்தேவன் புகுந்த வாசல் வழியாக விரைந்து சென்றார்கள். தண்ணீர் சொட்டியிருந்த அடையாளத்தைக் கொண்டு அவன் வந்த வழியைக் கண்டு பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த சேவகர்கள் பரபரப்புடன் உள்ளே புகுந்து "சக்கரவர்த்தி! மன்னிக்கவேண்டும். இந்தப் பைத்தியக்காரன் அரண்மனைப் படித்துறைக் கதவு வழியாகப் புகுந்து ஓடி வந்தான். நாங்கள் தடுத்தும் கேட்கவில்லை!" என்று அச்சேவகர்கள் சொல்லிவிட்டு, வந்தியத்தேவனைத் தங்களுடன் இழுத்துச் செல்ல முயன்றார்கள்.

பார்த்திபேந்திரன் சக்கரவர்த்தியின் சந்நிதானம் என்பதையும் மறந்து பாய்ந்து சென்று வந்தியத்தேவனுடைய தோள்களில் ஒன்றைப் பலமாகப் பற்றிக் கொண்டான்.

"இவன் பைத்தியக்காரன் அல்ல. கொலைகாரன்! ஆதித்த கரிகாலரைக் கொன்ற வஞ்சகத் துரோகி!" என்று கூறிக் கொண்டே, அவனைப் பிடித்து இழுக்க முயன்ற சேவகர்களை ஜாடையினால் அப்புறப்படுத்தினான்.

பார்த்திபேந்திரனைப் பின்தொடர்ந்து கந்தமாறனும் ஓடிச் சென்று வந்தியத்தேவனுடைய இன்னொரு தோளையும் இறுகப் பிடித்துக்கொண்டான். இருவருமாக அவனை இழுத்துக் கொண்டு வந்து சுந்தர சோழ சக்கரவர்த்தி அமர்ந்திருந்த தர்ம பீடத்துக்கு எதிரில் நிறுத்தினார்கள்.

சக்கரவர்த்தி வந்தியத்தேவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "பால் வடியும் முகமுள்ள இந்தப் பிள்ளையா என் மகனைக் கொன்றதாகச் சொல்கிறீர்கள்? என்னால் நம்ப முடியவில்லையே? இவன் தானே ஆதித்த கரிகாலனிடமிருந்து எனக்கு ஓலை கொண்டு வந்தான்?" என்றார்.

"ஆம்; ஐயா! இவன்தான் ஓலை கொண்டு வந்தான்! இவன் தான் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே மூடுபல்லக்கில் வந்த நந்தினி தேவியைச் சந்தித்து இரகசியம் பேசினான். இவனேதான் இக்கோட்டையிலிருந்து முன்னொரு தடவை தப்பி ஓடினான். இப்போதும் பாதாளச் சிறையிலிருந்து தப்பித்து ஓடினான்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

பொன்னியின் செல்வர் இத்தனை நேரமும் செயலற்று நின்றார். பிறகு கம்பீரமாக நடந்து முன்னால் வந்து வந்தியத்தேவன் அருகில் நின்றார்.

"தந்தையே! இந்த வல்லத்து இளவரசர் என் உயிருக்குயிரான நண்பர். இலங்கையிலும் நடுக்கடலிலும் எனக்கு நேர்ந்த அபாயங்களில் என்னைக் காப்பாற்றியவர். இவர் மீது குற்றம் சுமத்துவது என் மீது குற்றம் சுமத்துவது போலாகும்!" என்றார்.

அவருடைய குரலில் தொனித்த அதிகார தோரணை எல்லாரையும் சிறிது நேரம் மௌனமாக இருக்கச் செய்தது.

பின்னர் முதன்மந்திரி அநிருத்தர், "பொன்னியின் செல்வ! சிறிது யோசித்துப் பாருங்கள்! அவர் மீது குற்றம் என்னமோ ஏற்கனவே சாட்டி விட்டார்கள். ஆகையால் விசாரித்து உண்மையைத் தெளிவாக்கி விடுவது நல்லதல்லவா?" என்றார்.

பார்த்திபேந்திரன், "ஆம், ஐயா! தாங்கள் நாளைச் சோழ சிங்காதனத்தில் ஏறப் போகிறவர்கள். எப்பேர்ப்பட்ட குற்றவாளியானாலும் தண்டிக்கவோ மன்னிக்கவோ தங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் விசாரணையே வேண்டாம் என்று சொல்லுவது உசிதமா? வீண் சந்தேகங்களுக்கு இடம் தருமல்லவா?" என்றான்.

"அத்துடன் நம் இளங்கோ இன்னொரு விஷயத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளவரசர் தாம் சிங்காதனம் ஏறுவதற்காக இந்த வந்தியத்தேவனை அனுப்பித் தம் தமையனைக் கொல்லச் சதி செய்ததாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதற்கு இடந்தரக் கூடாது அல்லவா?" என்றான் கந்தமாறன்.

இதைக் கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் பயங்கரமடைந்து நின்றார்கள். சம்புவரையர் மட்டும் முன் வந்து கந்தமாறனைக் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து, "அடே மூடா! உன்னால் நமது பழமையான வம்சமே நிர்மூலம் ஆகிவிடும் போலிருக்கிறதே! சமய சந்தர்ப்பம் தெரியாமல் உளறுவதில் உனக்கு நிகர் வேறு யாரும் இல்லை?" என்று கோபமாகச் சொன்னார்.

கந்தமாறன் அவனுடைய தந்தையை வெறித்து நோக்கினான். அவனுடைய உதடுகள் துடித்தன. அடுத்த நிமிஷம் அவன் என்ன செய்திருப்பானோ, என்ன சொல்லியிருப்பானோ, தெரியாது! நல்லவேளையாக அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் ஓர் அடி முன் வந்து சம்புவரையரைப் பிடித்துக் கொண்டார். தொண்டையை முன்போல் கனைத்துக் கொண்டு, "சம்புவரையரே! கொஞ்சம் பொறுங்கள்! அவன் மீது சீற்றங்கொள்ள வேண்டாம்!" என்று சொல்லிக்கொண்டே சம்புவரையரைப் பிடித்து இழுத்துச் சிறிது அப்பால் கொண்டுபோய் நிறுத்தினார்.

இந்த வார்த்தைகளினால் ஏற்பட்ட வியப்பும் திகைப்பும் தீர்வதற்குள் அந்த முதுபெரும் கிழவர் மேலும் கூறினார்: "சக்கரவர்த்தி! அடியேனுடைய கடைசி வார்த்தைகளைச் சிறிது செவி கொடுத்துக் கேளுங்கள்! தூமகேது தன்னுடைய தீய காரியத்தைச் செய்துவிட்டு மறைந்துவிட்டது. தங்கள் தீரப் புதல்வர் ஆதித்த கரிகாலரும் மறைந்துவிட்டார். ஆனாலும் தங்கள் குலத்து முன்னோர்களும் என் குலத்து முன்னோர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யத்துக்கு நல்ல காலம் இருக்கிறது. இன்னும் நெடு நாள் இந்தச் சாம்ராஜ்யம் நிலைத்திருக்கப்போகிறது. விரிந்து பரவி மகோந்நத நிலையை அடையப்போகிறது. ஆகையினாலேயே, கதைகளிலே கூட கேட்டறியாத பெரிய விபத்திலிருந்து இந்தச் சோழ குலமும் சாம்ராஜ்யமும் தப்பியது. அவ்விதம் தப்புவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன், இந்த வாணர் குல வீரன் வந்தியத்தேவன்தான்!"

"இடும்பன்காரி சம்புவரையர் அரண்மனையில் சேவகனாகயிருந்தான். மதுரை ஆபத்துதவிகளுக்கும் அவன் ஒற்றனாக உதவி வந்தான். அவனைப் பயமுறுத்தி, அச்சமயம் கடம்பூர் அரண்மனையின் வேட்டை அறையில் மதுரை ஆபத்துதவிகள் இருப்பதை அறிந்தேன். ஆதித்த கரிகாலர் நந்தினியின் அறைக்குச் சென்றிருப்பதையும், மணிமேகலையும், வந்தியத்தேவனும் அங்கேயே ஒளிந்து கொண்டிருப்பதையும் அறிந்தேன். நந்தினிக்கும், கரிகாலருக்கும் நடக்கும் சம்பாஷணையை ஒட்டுக்கேட்டு அவர்களுடைய இரகசியத்தை அறியும் ஆசை என் உறுதியைக் குலைத்துவிட்டது. நந்தினியின் அறைக்குப் போக யாழ்க் களஞ்சியத்தின் மூலம் ஓர் இரகசிய வழி இருக்கிறதென்பதை அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன். நல்ல சமயத்திலேதான் போய்ச் சேர்ந்தேன். நந்தினியைப் பற்றிய உண்மையை அவள் வாயாலேயே சொல்லக்கேட்டு அறிந்தேன். நந்தினியும் அவளைச் சேர்ந்தவர்களும் வீரபாண்டியனுடைய சாவைப் பழி வாங்குவதற்கு எவ்வளவு பயங்கரமான திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். அந்தச் சதி வெற்றி பெறாமல் தடுக்க முயன்றேன். ஆனால் விதியை என்னால் வெல்ல முடியவில்லை. கரிகாலர் என் கண் முன்னாலேயே உயிரற்றுக் கீழே விழுந்ததைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் பெற்றேன்...."

இவ்விதம் கூறிவிட்டுப் பெரிய பழுவேட்டரையர் தம் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விம்மினார். அந்த விம்மலின் ஒலி, புயல் அடிக்கும்போது அலை கடலில் எழும் பேரோசையை ஒத்திருந்தது. யாரும் அச்சமயம் வாய் திறந்து பேசத் துணியவில்லை. அனைவருடைய உள்ளமும் அந்த வீரப்பெரும் கிழவரின் மாபெரும் துயரத்தைக் கண்டு இளகிப் போயிருந்தன.

பெரிய பழுவேட்டரையர் மேலும் மேலும் பொங்கி வந்த விம்மலைத் தமது வைரம் பாய்ந்த இரும்பு நெஞ்சின் உதவியால் அடக்கிக் கொண்டார். முகத்திலிருந்து கையை எடுத்து விட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். "விதி வசத்தினால் ஆதித்த கரிகாலர் இறந்துவிட்டார். ஆனால் துர்க்கா பரமேசுவரியின் கருணையினால், அதே சமயத்தில் பேராபத்துக்குள்ளான பொன்னியின் செல்வர் விதியையும் மதியினால் வென்று உயிர் தப்பினார். பிரபு! சக்கரவர்த்தி! பிரம்மராயரே! என் அருமைத் தோழர்களான சிற்றரசர்களே! சோழ சிங்காதனத்தில் அருள்மொழிவர்மரை ஏற்றி வைத்து முடிசூட்டுங்கள்! அவர் மூலமாக இந்தச் சாம்ராஜ்யம் மகோந்நதத்தை அடையப் போகிறது!" என்றார்.

முதன்மந்திரி அநிருத்தர், "ஐயா! தங்கள் விருப்பம் நிறைவேறத்தான் போகிறது. ஆனால் கரிகாலர் எப்படி இறந்தார் என்று தாங்கள் கூறவில்லையே?" என்றார்.

"அதைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? கொன்ற கை யார் கையாயிருந்தால் என்ன? உண்மையில் அவருடைய மரணம் விதியினால் நேர்ந்தது!" என்றார் அந்த வீரக் கிழவர் நடுங்கிய குரலில்.

"அது தெரியாவிட்டால், இதோ குற்றம் சுமத்தப்பட்டு நிற்கும் வாலிபன் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகம் நீங்காது. கரிகாலன் மரணத்துக்காக இவனைத் தண்டிக்கும்படி நேரிடும்?" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

"கத்தியை எறிந்து கரிகாலரைக் கொன்றவன் எவன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும்!"

"யார்? யார்?"

"ஆம், ஆம்! அதைச் சொல்லிவிட வேண்டியதுதான். சொல்லாவிட்டால் உங்கள் சந்தேகம் தீராது. எல்லாரும் கேளுங்கள், இந்த வாலிபன் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். நான் அதன் வழியாக இறங்கி வந்தேன். இவன் என்னைப் பார்த்துச் சத்தமிடக்கூடாது என்பதற்காகப் பின்னாலிருந்து இவன் கழுத்தைப் பிடித்து நெருக்கினேன். இவன் விழி பிதுங்கி, உணர்விழந்து கீழே விழுந்து விட்டான். ஆதித்த கரிகாலரைக் கொன்றது யார் என்பது இவனுக்கு அச்சமயம் தெரிந்து கூட இருக்க முடியாது."

"யார்? யார்? கொன்றது யார்?"

"கத்தியை வீசி எறிந்தவன் நானேதான்! இந்த என்னுடைய வலது கரந்தான்! சோழ சக்கரவர்த்திகளுக்கு முடிசூட்டிய பரம்பரையில் வந்த இந்தக் கரந்தான் கத்தியை எறிந்தது. ஆனால் இளவரசர் கரிகாலர் மீது எறியவில்லை. நந்தினியின் பேரில் எறிந்தேன். என்னை மோகவலையில் ஆழ்த்தித் துரோகப் படுகுழியில் வீழ்த்திய அந்த மாயப் பிசாசைக் கொன்றுவிட எண்ணி எறிந்தேன். குறி தவறிக் கரிகாலர் மீது விழுந்தது!..."

"ஐயையோ!" "ஆஹாஹா!" என்ற குரல்கள் பல அச்சபையில் எழுந்தன.

"நூறு ஆண்டு காலமாகப் பழுவூர்க் குலம் சோழ குலத்துக்குச் செய்திருக்கும் தொண்டுகளுக்கெல்லாம் களங்கம் உண்டு பண்ணி விட்டேன். அந்தக் களங்கத்தை எப்படி நீக்கப் போகிறேனோ, தெரியவில்லை!"

"அண்ணா! இதோ அந்தக் களங்கத்தை நான் போக்குகிறேன்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜித்துவிட்டுத் தமது கத்தியை உருவிக்கொண்டு அண்ணன் அருகில் விரைந்து வந்தான்.

"சோழ குலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் பழி வாங்குவதாக நீயும் நானும் சபதம் ஏற்றிருக்கிறோம். அந்தச் சபதத்தை இப்போது நானே நிறைவேற்றுவேன். உன்னை இந்தக் கணமே கொன்று நம் குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பேன்!" என்று சின்னப் பழுவேட்டரையர் கத்தியை ஓங்கினார்.

இளவரசர் அருள்மொழிவர்மரும், முதன்மந்திரி அநிருத்தரும் பாய்ந்து சென்று சின்னப் பழுவேட்டரையரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள்.

அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் கூறினார்: "தம்பி! நம் குலத்துக்கு என்னால் சேர்ந்த பழியைத் துடைக்கும் வேலையை உனக்கு வைக்க மாட்டேன். அத்துடன் 'தமையனைக் கொன்ற தம்பி' என்ற பழியை உனக்கும் ஏற்படுத்த மாட்டேன். இதோ துர்க்கா பரமேஸ்வரிக்கு என் சபதத்தை நிறைவேற்றுவேன்!" என்று கூறிக்கொண்டே தம் கையிலிருந்து சிறிய திருகுக் கத்தியைத் தமது மார்பை நோக்கி ஓங்கினார்.

"ஐயா! வேண்டாம்!" என்று அருள்மொழிவர்மர் கூவிக்கொண்டு அவர் அருகில் பாய்ந்து வருவதற்குள் பெரியப் பழுவேட்டரையர் தம் உத்தேசத்தை நிறைவேற்றி விட்டார்.

நெடுங்காலம் வேர் விட்டு நெடிது வளர்ந்திருந்த தேவதாரு மரம் வேருடன் பெயர்ந்து கப்பும் கிளையுமாகக் கீழே விழுவது போலத் தரையில் சாய்ந்தார்.

"ஹா ஹா!" "அடடா!" என்பவை போன்ற குரல்கள் அச்சபையில் ஒலிக்கத் தொடங்கின.

விழுந்த பெரிய பழுவேட்டரையரை நோக்கிச் சிலர் ஓடி வந்தார்கள்.

அதே சமயத்தில் கண்களை மூடிக் கொண்டு சிங்காசனத்தில் சாய்ந்த சுந்தர சோழர் சக்கரவர்த்தியை நோக்கி இன்னும் சிலர் ஓடினார்கள். மந்திராலோசனை சபை கலைந்தது.

அன்றிரவு பெரிய பழுவேட்டரையர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தபோது பலர் வந்து அவரைப் பார்த்து விட்டுச் சென்றார்கள். சக்கரவர்த்தியும், அருள்மொழிவர்மரும், அநிருத்தரும், இளைய பிராட்டி குந்தவையும்கூட வந்திருந்தார்கள். சோழ குலத்துக்கும் சாம்ராஜ்யத்துக்கும் பெரிய பழுவேட்டரையர் செய்திருக்கும் சேவைகளைப் பற்றிச் சக்கரவர்த்தியும் மற்றவர்களும் பாராட்டிப் பேசினார்கள். அவர் இளம் பிராயத்தில் எத்தனையோ போர்க்களங்களில் செய்த தீரச் செயல்களைப் பற்றிக் கூறினார்கள். தக்கோலத்தில் தோல்வியடைந்து சிதறி ஓடிய சோழ சைன்யத்தை அவர் திரட்டி அமைத்துத் தோல்வியை வெற்றியாக மாற்றிய செயலை வியந்து பாராட்டினார்கள். சோழ நாட்டின் தனாதிகாரியாக இருந்து திறமையாக நிர்வாகம் நடத்தியதைப் புகழ்ந்தார்கள்.

சென்ற மூன்று வருஷத்துச் சம்பவங்களைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் விடைபெற்றுப் புறப்பட்டார்கள்.

பின்னர் அவர்கள் நால்வரும், பெரிய பழுவேட்டரையர் படுத்திருந்த அறைக்குள்ளேயே அவர் பார்க்க முடியாத இடங்களில் மறைந்து நின்று கொண்டார்கள்.

அச்சமயம், சின்னப் பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானை அழைத்துக்கொண்டு வந்தார். பெரிய பழுவேட்டரையருக்கு எதிரில் கொண்டு வந்து அவனை உட்கார வைத்து விட்டுத் தாமும் அருகில் அமர்ந்தார்.

பார்வை விரைவாக மங்கி வந்த கண்களினால் பெரிய பழுவேட்டரையர் ஆழ்வார்க்கடியானைப் பாத்துவிட்டு, "ஆகா! இந்த வைஷ்ணவன் இங்கு எதற்காக வந்தான்?" என்றார்.

"ஐயா! நான் என் சகோதரியிடமிருந்து செய்தி கொண்டு வந்தேன்."

"அது யார் உன் சகோதரி?"

"என்னுடன் பல நாள் வளர்ந்த சகோதரி, நந்தினியைச் சொல்லுகிறேன். ஐயா! நந்தினி தங்களுக்கு அவளுடைய நன்றியைத் தெரியப்படுத்தும்படி என்னை அனுப்பினாள். கரிகாலரைக் கொன்ற பழி அவள் பேரில் விழாதிருக்கும் பொருட்டுத் தாங்கள் அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்க சொன்னாள். எத்தனை ஜன்மம் எடுத்தாலும் தங்கள் அன்பை மறக்க முடியாது என்று தெரிவிக்கும்படி சொன்னாள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆகா! அவள் இன்னும் அப்படி நினைக்கிறாளா! நினைத்துக் கொண்டு சந்தோஷப்படட்டும். எவ்வளவுதான் அவள் வஞ்சகம் செய்து எனக்குத் தீங்கு புரிந்தாலும், அவளை என்னால் மறக்க முடியவில்லை. தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றிய  உத்தமியின் புதல்வி அல்லவா அவள்?" என்றார் பழுவேட்டரையர்.

ஏற்கனவே மரணத்தின் சாயை படர்ந்திருந்த அவருடைய முகத்தில் இப்போது இலேசான புன்னகை தோன்றியது.

"வைஷ்ணவனே! யாராவது ஒருவரிடம் என் உண்மையைச் சொல்ல வேண்டும் உன்னிடம் சொல்லுகிறேன். நான் எறிந்த கத்தி இளவரசர் பேரில் விழவில்லை. அதற்கு முன்பே அவர் விழுந்து விட்டார். நானே இளவரசரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டதற்குக் காரணம் நந்தினியின் பேரில் பழி விழாமல் தடுப்பதற்கு மட்டுமல்ல; அதைவிட நூறு மடங்கு முக்கியமான காரணம் உண்டு. அருகில் வா! சொல்லுகிறேன்! உன் சிநேகிதன் வந்தியத்தேவன் இருக்கிறானே, அவன் அருமையான பிள்ளை! அவனுக்குச் சோழ குலம் ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறது. இளைய பிராட்டியின் உள்ளத்தை அவன் கவர்ந்து விட்டான். குற்றத்தை நான் ஒப்புக்கொண்டு என்னை பலி கொடுத்திராவிட்டால், வந்தியத்தேவன் பேரில் யாராவது களங்கம் கற்பித்துக் கொண்டே இருப்பார்கள். இனி ஒருவரும் அவ்வாறு பேசத் துணியமாட்டார்கள்."

வரவர மெலித்து கொண்டு வந்த பெரிய பழுவேட்டரையரின் குரல் அடியோடு மங்கி நின்றது. அந்தத் தீரப் பெருங் கிழவரின் உயிர்ச் சுடரும் அணைந்தது.