Sunday, November 11, 2012

83. பட்டாபிஷேகம்



பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள்.

ஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும் இராஜ்ய உரிமை சம்பந்தமான சச்சரவுகள் ஒரு மாதிரி தீர்ந்து போய் அருள்மொழிவர்மருக்கு முடிசூட்டுவதைச் சிற்றரசர் பொதுமக்கள் அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தது அவருடைய நொந்து போன உள்ளத்துக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வந்தது.

தை மாதம் பிறந்தவுடனே நல்ல நாள் குறிப்பிட்டுப் பொன்னியின் செல்வரின் தலையில் சாம்ராஜ்ய பாரத்தைச் சுமத்தி விட்டுக் காஞ்சிக்குப் புறப்பட்டுச் செல்லச் சக்கரவர்த்தி முடிவு செய்திருந்தார். அங்கே தமது வீரப் புதல்வன் கரிகாலன் தமக்கென்று நிர்மாணித்த பொன் மாளிகையிலே மிச்சமுள்ள தம் வாழ்நாளைக் கழித்து விடவும் தீர்மானித்திருந்தார்.

அருள்மொழிவர்மருக்குத் திருமுடி சூட்டு விழா நெருங்க நெருங்க, சோழ நாடு முழுவதும் ஒரே கோலாகலமாகி வந்தது. பொன்னியின் செல்வருக்குப் பொன் முடி சூடுவது குறித்து மக்களிடையில் மாறுபட்ட அபிப்பிராயமே காணப்படவில்லை.

மதுராந்தகத்தேவர் விஷயத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்னும் விவரம் பொதுமக்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அரச குடும்பத்தினரையும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் தவிர வேறு யாருக்கும் அந்தச் செய்தி தெரியாது. பழைய மதுராந்தகர் பெரும்பாலும் அரண்மனைக்குள்ளேயே பொழுதைக் கழித்தார். மிக அபூர்வமாகவே வெளிப்புறப்பட்டார். அந்தச் சந்தர்ப்பங்களிலும் அவர் பொதுமக்களுடன் கலந்து பழகுவதில்லை. அவருக்கு முடிசூட்டும் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது மூடுபல்லக்கில் வைத்து அவரை அழைத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. அவருடைய அங்க அடையாளங்களைக் கூர்ந்து கவனிக்கப் பொது ஜனங்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆகையால் பழைய மதுராந்தகர் போய்ப் புதிய மதுராந்தகர் வந்துள்ள விவரமே மிகப் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமலிருந்தது.

முடிசூட்டு விழாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னாலிருந்து சோழ நாட்டின் நானா திசைகளிலிருந்தும் ஜனங்கள் தஞ்சையை நோக்கி வரத் தொடங்கிவிட்டார்கள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே ஒரே ஜனசமுத்திரமாகக் காட்சி அளித்தது. கோட்டையின் வாசற் கதவுகள் திறந்து விடப்பட்டன. கோட்டைக்குள் போவதற்கும் வெளியே வருவதற்கும் முன்னம் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. முடிசூட்டு நாளைத் தள்ளி வைத்துக்கொண்டால் சமாளிக்க முடியாத கூட்டம் சேர்ந்து விடும் என்றுதான் தை பிறந்தவுடனே நாள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மகுடாபிஷேகத்துக்குரிய வேளை வருவதற்கு வெகு நேரம் முன்னதாகவே, பட்டாபிஷேக மண்டபத்தின் வாசலில் ஜனத்திரள் சேர ஆரம்பித்து விட்டது. மகுடாபிஷேக மண்டபத்துக்குள் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தனியான பின்புறப் பாதை இருந்தது. அதன் வழியாகச் சுந்தர சோழரும், வானமாதேவியும் அவர்களைத் தொடர்ந்து செம்பியன்மாதேவி, மதுராந்தகர், பூங்குழலி, குந்தவைப் பிராட்டி, வானதி ஆகியவர்களும் வந்து சேர்ந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், சின்னப் பழுவேட்டரையர், சம்புவரையர், சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி, மலையமான் மிலாடுடையார், மற்றும் சிற்றரசர்கள், சாமந்தகர்கள், வர்த்தக கணத்தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், பெருந்தர அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், விண்ணகர பட்டர்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள் ஆகியோர் வாசலில் கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தில் புகுந்து முண்டியடித்துக்கொண்டு உள்ளே வந்து சேர்ந்தார்கள். கடைசியில் பொன்னியின் செல்வரும், வல்லவரையன் வந்தியத்தேவனும் தாமரை மலர் போல் அமைந்த திறந்த தங்கரதத்தில் அமர்ந்து மகுடாபிஷேக மண்டபத்தின் வாசலை அடைந்தபோது, பூரண சந்திரனைக் கண்ட அலைகடலைப் போல் அந்த ஜனசமுத்திரம் கரகோஷம் முழக்கி ஆரவாரம் செய்தது.

மகுடாபிஷேகத்துக்குரிய வைதிகச் சடங்குகள் எல்லாம் நடந்தேறின. சோழ குலத்து மன்னர்கள் வழி வழியாகப் பட்டாபிஷேக தினத்தன்று சிரசில் சூட்டிக்கொள்ளும் மணி மகுடம், மார்பில் அணியும் நவரத்தின மாலை, இடையில் தரிக்கும் உடைவாள், கையில் ஏந்தும் செங்கோல் ஆகியவற்றை ஒரு பெரிய சித்திரத் தாம்பாளத்தில் வைத்துச் சபையில் பெரியவர்கள் முன்னாலெல்லாம் கொண்டு போனார்கள். அவர்கள் அத்தாம்பாளத்தைத் தொட்டு ஆசி கூறினார்கள். பின்னர், ஆஸ்தானப் புலவராகிய நல்லன் சாத்தனார் எழுந்து நின்றார். அவருக்குப் பின்னால் கையில் யாழ் பிடித்த மங்கை ஒருத்தி நின்று, யாழின் நரம்புகளை மீட்டி இனிய சுருதியை எழுப்பினாள். புலவர் நல்லன் சாத்தனார் சோழ குலத்தின் தொல் பெருமையையும், அக்குலத்தில் பரம்பரையாக வந்து புகழ் பெற்ற வீர மன்னர்களின் வரலாற்றையும் இசையுடன் கலந்த சந்தப் பாடலாகப் பாடலுற்றார்.
"சூரிய வம்சத்திலே தோன்றிய மனுமாந்தாதவின் குலத்தில் சிபி என்னும் மன்னர் மன்னன் இருந்தான். அவன் ஒரு புறாவுக்குத் தான் அளித்த வாக்கை நிறைவேற்றி அதன் உயிரைக் காப்பதற்காகத் தன் உடலின் சதையை அறுத்துக் கொடுத்தான். அத்தகைய சிபியின் வம்சத்தில், அவனுக்குப் பின் தோன்றியவர்கள் 'செம்பியன்' என்று குலப்பெயர் சூட்டிக்கொண்டு பெருமையடைந்தார்கள். செம்பியர் குலத்தில் இராஜ கேசரி என்று ஒரு பேரரசன் தோன்றினான். அவன் மகன் பரகேசரி என்று புகழ் பெற்றான். இவர்களுக்குப்பின் தோன்றிய மன்னர்கள் கோஇராஜ கேசரி என்றும், கோப்பரகேசரி என்றும் மாற்றி மாற்றிப் பட்டம் சூட்டிக் கொண்டு வந்தார்கள். பசுவுக்கு நீதி வழங்குவதற்குத் தன் அருமைப் புதல்வனைப் பலி கொடுத்த சோழ மன்னர் மனுநீதிச் சோழன் என்று பெயர் பெற்றான். இவனுக்குப் பிற்காலத்தில் பூம்புகார் நகரில் கரிகால் பெருவளத்தான் என்னும் மன்னன் மூவுலகங்களிலும் தன் புகழைப் பரப்பி விளங்கினான். அவன் சோழ நாட்டுப் பெரும்படையுடன் வடக்கே இமயமலை வரையில் படையெடுத்துச் சென்று, அம்மலையின் பனி மூடிய சிகரத்தில் சோழ குலத்துப் புலி இலச்சினையைப் பொறித்தான். இவன் வழியில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சியக்கிள்ளி வளவன், சிவபெருமானுடைய பரம பக்தனாகிய கோப்பெருஞ்சோழன் ஆகியவர்கள் இப்புராதன குலத்துக்குப் பெயரும் புகழும் அளித்துச் சிவபதம் அடைந்தார்கள்."

"உலகத்துக்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவானைக் கூட மாரிக்காலத்து மேகங்கள் மறைத்து விடுவது போல், சூரியனுடைய பரம்பரையில் வந்த சோழர் குலத்தைச் சில காலம் பல்லவ பாண்டியப் பகை மேகங்கள் மறைந்திருந்தன. அந்த மேகங்களைச் சிதற அடிக்கும் வஜ்ராயுதம் ஏந்திய தேவேந்திரனுக்கு இணையாக விஜயாலயச் சோழர் தோன்றினார். அந்தச் சோழர் குலப் புலியைக் கண்டதும் பெரும் பிடுகுமுத்தரையன் என்னும் எலி பீதி கொண்டு மாண்டு மறைந்தது. பல்லவர்களும் பாண்டியர்களும் மற்றும் பல அரசர்களும் விஜயாலயச் சோழரின் நட்பைக் கோரி அனுப்பிய தூதுவர்கள் சதா காலமும் அந்த மன்னரின் அரண்மனை முற்றத்தில் காத்திருந்தார்கள். அவ்விதம் உதவி கோரி வந்த அரசர்களுக்கு அபயம் அளித்து உதவி செய்யும் பொருட்டு விஜயாலயச் சோழர் பற்பல போர்க்களங்களுக்குச் சென்று போர் புரிந்து தமது திருமேனியில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவரானார்."

"விஜயாலயச் சோழரின் திருக்குமாரர் ஆதித்த சோழர் திருப்புறம்பயம் போர்க்களத்தில் பல்லவன் அபராஜிதன் பாண்டியனால் முறியடிக்கப்படும் தறுவாயில் இருந்தபோது, ஆதித்த சோழர் முயற்கூட்டதில் புலி புகுவதைப் போல் புகுந்து பாண்டிய சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்தார். பின்னர், தாம் செய்த உதவியை மதிக்காமல் சிநேகத் துரோகம் செய்த பல்லவனுக்குப் புத்தி புகட்டும் பொருட்டு தொண்டை நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அபராஜிதனை அவன் இருந்த யானை மேல் பாய்ந்து வீர சொர்க்கத்துக்கு அனுப்பினார். தமது முன்னோனாகிய கோச்செங்கணானைப் பின்பற்றி, காவேரி நதி உற்பத்தியாகும் சையபர்வதத்திலிருந்து பூம்புகார் நகரம் வரையில் எண்பத்திரண்டு சிவாலயங்களை எடுப்பித்தார். ஆதித்த சோழரின் புதல்வராகிய பராந்தக சோழர் வெள்ளூரில் பாண்டியனைப் புறங்கண்ட அம்மன்னர், மதுரையும் ஈழமும் கொண்டதுடன், சேர நாட்டு வேழப்படைக்கு ஒரு சிங்கமாக விளங்கினார். வடக்கே துங்கபத்திரை நதிக்கு அப்பால் இருந்த சளுக்கர்களும் வேங்கி மண்டலத்தாரும் பராந்தக சோழருடைய பெயரைக் கேட்டு சிம்ம சொப்பனம் கண்டவர்கள் போல் நடுநடுங்கினார்கள். அவருடைய புகழைக் கேட்டுப் பொறுக்காமல் பொறாமை கொண்ட இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு பராந்தக சக்கரவர்த்தியைப் போரில் புறங்காண வந்தான். பராந்தகரின் மூத்த புதல்வராகிய இராஜாதித்த தேவர் தக்கோலப் போர்க்களத்தில் கன்னர தேவனையும் அவனுடைய மாபெரும் கடல் போன்ற சேனையையும் முறியடித்துச் சின்னாபின்னம் செய்த பிறகு யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் எய்தினார்."

"பராந்தக சோழர் தில்லைச் சிதம்பரத்து நடராஜப் பெருமான் ஆலயத்தில் பொன் மண்டபம் கட்டிய பின்னர் அப்பெருமானுடைய இணையடிகளை அடைந்தார்! அவருடைய புதல்வர் சிவஞான கண்டராதித்த தேவர் சிவாலயப் பணிகள் செய்வதில் ஈடுபட்டிருந்து சிவ பதத்தை அடைந்தார். அவருடைய காலத்தில் தொண்டை மண்டலத்தைப் பகைவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து சீட்புலி நாடு வரையில் புலிக் கொடியை நிலைநாட்டியவரான அரிஞ்சயத் தேவரும் தமது தமையனைப் பிரிந்து அதிக காலம் இருக்க மனமின்றி விண்ணுலகம் எய்தினார். அவருடைய திருப் புதல்வர் சுந்தர சோழ சக்கரவர்த்தி பின்னர் சோழ சிங்காதனம் ஏறினார். தான் ஒளிந்திருந்த பொந்திலிருந்து வெளியில் தலை காட்டிய பாண்டிய நரியின் மீது பாய்ந்து அதை மீண்டும் பொந்துக்குள் ஒளிந்துகொள்ளும்படி செய்தார்! சுந்தர சோழ சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடை நிழலில் மூன்று உலகமும் சிறிதும் கவலையின்றி நிர்ப்பயமாக வாழ்ந்து வருகின்றன."

"இவ்வாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரப் புகழ் பெற்று விளங்கும் குலத்தில் வந்த பொன்னியின் செல்வரை எம்மொழிகளால் யாம் போற்ற முடியும்? அவருடைய புகழைச் சொல்வதற்குக் கலைமகளே பிறந்து வந்தால் ஒருவேளை சாத்தியமாகக் கூடும். எம்மைப்போன்ற மிகச் சாதாரண புலவர்களால் இயம்பத் தரமன்று..."

இவ்விதம் நல்லன் சாத்தனார் சோழ குலப் பெருமையைப் பாடி முடித்தார். அவருக்குப் பிறகு வடமொழிப் புலவர்களும், புத்தபிக்ஷுக்களும், சிவாச்சாரியார்களும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும் வாழ்த்துக் கூறுவதற்குக் காத்திருந்தார்கள். இவர்களை எப்படிச் சுருக்கமாக முடிக்கச் செய்வது என்பது பட்டாபிஷேக முகூர்த்தம் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் கவலையாகப் போய்விட்டது.

இதைக் கவனித்தார் பொன்னியின் செல்வர், நல்லன் சாத்தனார் சோழர் குலப் பெருமைக் கூறி வந்தபோதெல்லாம் கைகூப்பி நின்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு வந்தவர், இப்போது அந்தப் புலவரை நோக்கி, "ஐயா! புலவரே! இத்தனை நேரமும் தாங்கள் கூறி வந்த புகழெல்லாம் என் முன்னோரைப் பற்றியவை அல்லவோ? இந்தப் புராதனப் பெருமை வாய்ந்த சிங்காதனத்தில் அமர்ந்து மணி மகுடம் சூட்டி கொள்வதற்குத் தகுதியுள்ளவனாக நான் என்ன காரியம் செய்திருக்கிறேன்? அதைப் பற்றிக் கூறுவதற்குக் கலைமகள் இங்கே இப்போது பிரசன்னமாவது சாத்தியமில்லையாதலால் தங்களால் இயன்ற வரையில் சற்று எடுத்து இயம்பலாமே?" என்றார்.

புலவர் திகைத்து நின்றதைப் பார்த்த பொன்னியின் செல்வர், "ஐயா! தாங்கள் திகைத்து நிற்பது இயல்பே, தங்கள் பேரில் குற்றம் இல்லை. அவ்வாறு என்னுடைய புகழைப் பாட்டில் அமைத்துப் பாடும்படியாக நான் இன்னமும் ஒரு காரியமும் செய்யவில்லை. இன்றுதான் தொடங்கப் போகிறேன்!" என்றார்.