Sunday, November 11, 2012

84. தியாக சிகரம்



அருள்மொழிவர்மர் தொடர்ந்து புலவரைப் பார்த்துக் கூறினார்: "ஐயா! தங்களை இன்னும் ஒன்று கேட்கிறேன். சிபிச் சக்கரவர்த்தி முதல் சிவஞான கண்டராதித்தர் வரையில் எங்கள் சோழ குலத்து மன்னர்களின் புகழைத் தாங்கள் விரித்துரைத்தீர்கள். அவையெல்லாம் இந்தப் புராதன குலத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்ற எனக்கு எவ்வளவு பொருத்தமோ, அவ்வளவு என் சிறிய தந்தையும் மகான் கண்டராதித்த சோழரின் உத்தமத் திருப்புதல்வருமான மதுராந்தகத் தேவருக்கும் பொருத்தமாகுமல்லவா?"

புலவர் "ஆம்" என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். சபையிலிருந்தவர்கள் அத்தனை பேரின் கண்களும் சுந்தர சோழரின் மறு பக்கத்தில் அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகத்தேவரின் மீது திரும்பின. இப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் மதுராந்தகரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். முன்னமே மிக்க கூச்சத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகர் இப்போது மேலும் சங்கோசம் அடைந்தவராகி குனிந்த தலை நிமிராமலிருந்தார்.

அருள்மொழிவர்மர் தொடர்ந்து சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பி நின்று அவர் கம்பீரமான குரலில் கூறலுற்றார்:
"தந்தையே! தங்களிடத்தும் இங்கே விஜயம் செய்திருக்கும் பெரியோர்களுக்கும் மறக் குலத்தவர்களுக்கும் விண்ணப்பம் ஒன்று செய்து கொள்ள விரும்புகிறேன். நம் குலத்து முன்னோர்கள் அனைவரும் போர்க்களத்தில் புறமுதுகிடாத வீரர்கள் என்று புகழ் பெற்றது போலவே, நீதி நெறியிலிருந்து அணுவளவும் தவறாதவர்கள் என்ற புகழையும் அடைந்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வழியில் வந்தவனாகிய நான் நீதி நெறிக்கு மாறாக நடக்கலாகுமா? இன்னொருவருக்கு நியாயமாக உரிய பொருளையோ, பதவியையோ அபகரிக்கலாமா? நம் ஆஸ்தானப் புலவர் நம் குல முன்னோர்களைப் பற்றி அழகான சந்தக்கவியில் பாடி வந்தபோது அவர்கள் அனைவரும் என் மனக் கண்முன்னால் வந்து தரிசனம் அளித்தார்கள். இராஜ கேசரிகளும், பரகேசரிகளும் என்னைக் கருணை ததும்பும் கண்களால் நோக்கி 'எங்கள் குலத்தில் உதித்த மகனே! இந்தச் சிங்காதனம் உனக்கு உரியதா என்று சிந்தித்துப் பார்!' என்றார்கள். 'குமாரா! நீ இந்தச் சிங்காதனத்தில் ஏறுவதற்கு உரியவனாக என்ன வீரச் செயல் புரிந்தாய்? சொல்?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு மறுமொழி சொல்லத் தயங்கினேன். பின்னர் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவர்களைக் கைகூப்பி வணங்கி விண்ணப்பித்துக் கொண்டேன். 'சோழ குலத்து முதல்வர்களே! நீங்கள் செய்த அரும்பெரும் செயல்களில் ஆயிரத்தில் ஒன்றுகூட நான் செய்யவில்லை. ஆனால் உங்கள் ஆசியுடன் இனிமேல்தான் அத்தகைய காரியங்களைச் செய்யப் போகிறேன். நீங்கள் நிலைநாட்டிய சோழ குலத்துப் புகழ் மேலும் வளர்ந்தோங்கி நீடூழி நிலைத்திருக்கும்படியான காரியங்களைச் செய்யப் போகிறேன். செயற்கரிய செயல்களைச் செய்யப் போகிறேன். உலகம் வியக்கும் செயல்கள் புரியப் போகிறேன். வீராதி வீரர்களாகிய நீங்களே பார்த்து மெச்சும்படியான தீரச் செயல்களைப் புரிந்து உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களையும் பெறப்போகிறேன்!' என்று இவ்விதம் என்னுடைய குலத்து முன்னோர்களிடம் நான் தெரிவித்தேன். அவர்களும் முகமலர்ந்து எனக்கு அன்புடன் ஆசி கூறினார்கள்...."

ஆவேச உணர்ச்சி ததும்புமாறு பொன்னியின் செல்வர் கூறி வந்த சொற்களைக் கேட்டுக்கொண்டு இருந்த அச்சபையில் உள்ளோர் எல்லாரும் ரோமாஞ்சனம் அடைந்தார்கள். அவர்களில் ஒருவர் "வீரவேல்! வெற்றி வேல்!" என்று முழங்கிய ஒலி பட்டாபிஷேக மண்டபத்துக்கு வெளியிலும் கேட்டது. அங்கே கூடியிருந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

பொன்னியின் செல்வர் எல்லாருடனும் சேர்ந்து தாமும் "வெற்றி வேல்! வீர வேல்!" என்று முழங்கினார். முழக்கம் அடங்கியதும் கூறினார்: "தந்தையே! தங்கள் ஆசி நிறைவேறி நான் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், முதலில் என் உள்ளத்தில் நிம்மதி ஏற்பட வேண்டும். 'நேர்மையற்ற காரியம் எதையும் நான் செய்யவில்லை, என் குலத்து முன்னோர்கள் அங்கீகரிக்க முடியாத செயல் எதுவும் நான் புரியவில்லை, பிறருக்கு உரியதை நான் ஆசையினால் அபகரித்துக்கொண்டு விடவில்லை' என்ற உறுதியை நான் அடையவேண்டும். குல தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை இங்கே நான் செய்துவிட்டுப் புறப்பட்டேனானால், என் உள்ளம் என்னை வருத்திக் கொண்டேயிருக்கும். பகைவர்களிடம் போரிட்டு எப்படி வெற்றி கொள்வேன்? தர்மத்தை நிலைநாட்டப் போராடுகிறோம் என்ற நம்பிக்கை என் மனத்தில் எப்படி ஏற்படும்? நான் இப்போது இன்னொருவருக்கு உரிமையாக வேண்டிய சிங்காதனத்தை அபகரித்துக்கொண்டேனென்றால், அதனால் இந்தச் சோழ குலத்துக்கு எத்தனை அபகீர்த்தி உண்டாகும்? என் வாழ்நாளெல்லாம் அதைப்பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பேன். வேறு எந்தப் பெரிய காரியத்திலும் மனத்தைச் செலுத்த முடியாது, உற்சாகமாகச் செய்யவும் முடியாது..."

வெகு நேரம் குனிந்த தலை நிமிராமலிருந்த மதுராந்தகத்தேவர் இப்போது பொன்னியின் செல்வரை அண்ணாந்து பார்த்து ஏதோ சொல்வதற்குப் பிரயத்தனப்பட்டார். பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனைப் பார்த்துச் சமிக்ஞை செய்யவே அவ்வீரன் மதுராந்தகத்தேவர் பக்கத்தில் போய் நின்று கொண்டான். மதுராந்தகர் பொன்னியின் செல்வரைப் பார்த்த போது அவர் சோழ குலத்தின் புராதன மணி மகுடத்தை தமது கரங்களில் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

"தந்தையே! விஜயாலய சோழர் முதல் நம் முன்னோர்கள் அணிந்து வந்த இந்த மணிமகுடத்தை தாங்கள் எனக்கு அளிக்க உவந்தீர்கள். சாமந்தர்கள், தளபதிகள், கோட்டத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் அதை அங்கீகரித்தார்கள். ஆகையால், இந்தக் கிரீடம் இப்போது என் உடைமை அகிவிட்டது. என் உடைமையை நான் என் இஷ்டம் போல் உபயோகிக்கும் உரிமையும் உண்டு அல்லவா! என்னை விட இந்தக் கிரீடத்தை அணியத் தகுந்தவர் இங்கே இருக்கிறார். என்னை விட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ இராஜ்யத்துக்கு என்னை விட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக இங்கு வந்திருக்கிறார். இந்த மணி மகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்!"

இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக் கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரசில் கிரீடத்தை வைத்தார். மகுடத்தை வைக்குங்கால் மதுராந்தகர் அதைத் தடுக்காமலிருக்கும் பொருட்டு வந்தியத்தேவன் முன் ஜாக்கிரதையாக அவர் பின்னால் நின்று அவருடைய தோள்கள் இரண்டையும் நட்புரிமையுடன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் மதுராந்தகரோ அப்படி ஒன்றும் செய்ய முயலவில்லை. அவர் மெய்மறந்து தன் வசமிழந்து உண்மையிலேயே பித்துப்பிடித்தவர் போல் நாலுபுறமும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மணி மகுடத்தைச் சூட்டியதும் பொன்னியின் செல்வர் "கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழ தேவர் வாழ்க!" என்று முழங்கினார்.

"சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உத்தமச் சோழர் வாழ்க!" என்று வந்தியத்தேவன் பெருங்குரலில் கூவினான்.

இத்தனை நேரமும் பிரமித்துப் போய் நின்ற முதன்மந்திரி அநிருத்தர் முதலியவர்கள் அனைவரும் இப்போது "கோப்பரகேசரி மதுராந்தக சோழர் வாழ்க!" என்று முழங்கினார்கள்.

சுந்தர சோழர் சக்கரவர்த்தி உணர்ச்சி மிகுதியால் பேசும் சக்தியை அடியோடு இழந்திருந்தபடியால் தம் கையிலிருந்த பல நிற மலர்களை மதுராந்தக உத்தமச் சோழர் மீது தூவினார்.

அரண்மனைப் பெண்மணிகளும் சக்கரவர்த்தியைப் பின்பற்றி மதுராந்தகர் மீது மலர் மாரி பொழிந்தார்கள். மதுராந்தகர் சிறிது திகைப்பு நீங்கியதும் எழுந்து நேரே செம்பியன் மாதேவியிடம் சென்று கும்பிட்டு நின்றார். அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போலப் பொங்கிப் பொழிந்து கொண்டிருந்தது.

"மகனே! இறைவனுடைய திருவுள்ளம் இவ்வாறு இருக்கிறது! நீயும் நானும் அதற்கு எதிராக நடப்பது எப்படிச் சாத்தியம்?" என்றார்.

பொன்னியின் செல்வர், சபையில் கூடியிருந்த மற்றப் புலவர் பெருமக்கள், பட்டர்கள், பிக்ஷுக்கள் ஆகியவர்களைப் பார்த்து, "நீங்கள் இனி உங்கள் வாழ்த்துக் கவிதைகளை உசிதப்படி மாற்றிக் கொண்டு சொல்லுங்கள்!" என்றார்.

அவர்களும் அவசர அவசரமாக வாழ்த்துக் கவிதைகளை மாற்றி அமைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார்கள்.

மதுராந்தக உத்தமச் சோழருக்கு மணி மகுடம் சூட்டப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளே அந்தச் செய்தி தஞ்சை வீதிகளில் கூடியிருந்த மக்களிடையில் பரவி விட்டது. அது விரைவாகப் பரவுவதற்கு வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் பெரிதும் காரணமாக இருந்தார்கள். பொன்னியின் செல்வர் கட்டளைபடி அவர்கள் வீதிகளில் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தியிருந்தார்கள். அவர்களிடமெல்லாம் அவசரமாகச் சென்று சொல்லி, "கோப்பரகேசரி உத்தமச் சோழர் தேவர் வாழ்க!" என்று முழங்கச் செய்தார்கள். இளவரசர் அருள்மொழிவர்மர் தமக்கு அளிக்கப்பட்ட இராஜ்யத்தைத் தம் சிறிய தந்தை மதுராந்தகருக்கு அளித்து விட்டார் என்று செய்தி மக்களிடையே விரைந்து பரவிக் கொண்டிருந்தது. பொன்னியின் செல்வரின் பெருங்குணத்தைக்கு இது உகந்ததே என்று அவர்கள் கருதினார்கள். ஏககாலத்தில் பலவாறு பேசிய பதினாயிரக்கணக்கான குரல்களும், "வாழ்க! வாழ்க!" என்னும் முழக்கங்களும் சேர்ந்து புயற்காற்று அடிக்கும்போது அலைகடலில் கிளம்பும் பேரொலியைப் போல் ஒலித்தன.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மீது அமைத்த பொன்மயமான அம்பாரியில் அமர்ந்து மதுராந்தக உத்தமச் சோழர் பவனி கிளம்பியதும் எல்லாச் சந்தேகங்களும் மக்களுக்குத் தீர்ந்துவிட்டன. யானையின் கழுத்தில் யானைப்பாகனுடைய பீடத்தில் அமர்ந்திருப்பவர் பொன்னியின் செல்வர் என்பதைக் கண்டதும் மக்களுடைய உற்சாகம் எல்லை கடந்ததாயிற்று. "கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழர் வாழ்க!" என்று மக்களின் குரல்கள் முழங்கின. ஆனால் அவர்களுடைய உள்ளங்களில் பொன்னியின் செல்வரின் செயற்கருஞ் செயலே குடிகொண்டிருந்தது. அதை எண்ணியதனால் அவர்களுடைய அகங்களைப்போல் முகங்களும் மலர்ந்திருந்தன. பொன்னியின் செல்வர் மணி மகுடம் சூட்டிக்கொண்டு, பவனி வந்தால் மக்கள் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பார்களோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமான குதூகலத்தை இப்போது வெளியிட்டார்கள்.

இமயமலைச் சிகரத்தில் புலி இலச்சினையைப் பொறித்த கரிகால் பெருவளத்தானைப் பொன்னியின் செல்வர் மிஞ்சிவிட்டார் என்றும், தியாக சிகரத்தில் இவர் தமது இலச்சினையை என்றும் அழியாத வண்ணம் பொறித்து விட்டார் என்றும் அறிஞர்கள் மகிழ்ந்தார்கள். சாதாரண மக்களோ, அப்படியெல்லாம் அணி அலங்காரங்களையும், உபமான உபமேயங்களையும் தேடிக் கொண்டிருக்கவில்லை. மதுராந்தகர் தலையில் மணி மகுடத்தைச் சூட்டி விட்டுப் பொன்னியின் செல்வர் பட்டத்து யானையை ஓட்டிக்கொண்டு செல்லும் காட்சி அவர்கள் உள்ளத்தைப் பரவசப்படுத்தி விட்டது. ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், வாழ்த்திக் கொண்டும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டும், மலர்களைத் தூவிக் கொண்டும், மஞ்சள் நிற அட்சதையை வாரி இறைத்துக் கொண்டும் மக்கள் ஒரே கோலாகலத்தில் தங்களை மறந்து ஆழ்ந்திருந்தார்கள்.